ஐ லவ் யூவும் ஏடாகூடமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 27,472 
 

கதிரவன் தன் கண்களை மூடிக்கொள்ளும் நேரத்தில்தான் , நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை நோக்கி பயணப்பட ஆரம்பித்திருந்தது. எனக்கு எதிரே முகத்திற்கு மெல்லிய வர்ணம் பூசிய 19 வயது வண்ணக்குயிலொன்று தன் தாய் தந்தையுடன் அமர்ந்திருந்தாள்.

ரயில் நகர எல்லையைத் தாண்டிய வேலையில், அவள் தந்தைதான் என்னிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.

“தம்பி தமிழா”

“ஆமா சார்”

“தம்பி பேரென்ன”

“அகிலன்”

“என்ன பண்றீங்க”

“எலெக்ட்ரிகல் எஞ்சினியர் சார். செர்விசிங் பீல்ட்ல இருக்கேன்”

நான் எலெக்ட்ரிகல் எஞ்சினியர் என்ற அடுத்தகணம், வண்ணக்குயில் நானும் எலெக்ட்ரிகல் தான். வேலை வாய்ப்பெல்லாம், கேர்ள்சுக்கு எப்படிங்க என்றாள். கல்லூரி பேராசிரியர் மற்றும் டிசைன் பீல்ட் தான் பெஸ்ட் என்றேன். அவள் பெயர் கவின் என்றாள். கவின் என்றால் அழகு. அழகிற்கு அழகு என்று பெயர் சூட்டியவளுக்கு வர்ணனை தேவையற்றதுதானே. இரண்டு மணி நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த சாப்பாட்டை, சாப்பிட சொல்லுமளவுக்கு நெருக்கமாகப் பழகிவிட்டேன்.

எல்லோரும் இரவுப் படுக்கைக்குச் சென்றவுடன், மெல்ல அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். ரயில் என்றோ, மற்றவர்கள் இருக்கிறார்கள் என்றோ இதற்கு முன் ஒருமுறையேனும் கவலைப்பட்டதில்லை. போர்வைக்குள்ளிருந்தபடியே, எனது கைகள் மெல்ல செயல்பட துவங்கியது. யாரும் பார்ப்பதற்குள் அந்த வேலையை செய்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக எனது கைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அவள் பார்த்து விட்டாள். பார்த்தவள், பார்க்காதது போல திரும்பி படுத்துக் கொண்டாள்.

அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தவுடன், எனக்கு என்னவோ போலாகி விட்டது. ச்சே…. யாரும் பாத்துடக்கூடாது குறிப்பாக அவள் பார்த்துறக் கூடாதுன்னு நெனைச்சேனே….நம்மை ரொம்பக் கேவலமா நினைச்சிருப்பாளோ என்ற குழப்பத்துடனேயே தூங்கி விட்டேன்.

மறுநாள் காலை. அவளைப் பார்ப்பதற்கே ரொம்ப சங்கோஜமாய் இருந்தது. அவள் பெற்றோர், பல் துலக்க சென்ற போது நானே மெல்ல பேச்சை ஆரம்பித்தேன். என்னை தப்பா எடுத்துக்காதிங்க… எனக்கு உள்ள ஒரே கெட்ட பழக்கம் அதுதான். நான் எப்போ பயணம் செய்தாலும், ரயிலில் எதையாவது எழுதிவைத்து விட்டு, என் பெயரை எழுதிவிடுவேங்க…. அதுல எனக்கு ஒரு நப்பாசைங்க… உங்களுக்கு என் மீது ஏதும் கோபமோ வருத்தமோ இல்லியே என்றேன்.

அட போங்கங்க.. உங்கள் மீது கோபமெல்லாம் இல்லிங்க… நீங்க செய்த செயல்தான்… எனக்கு ரொம்ப வருத்தத்தை தந்தது. பின்ன.. என்னங்க… “ஐ லவ் கவின் பை அகிலன்” என்று எழுதியிருப்பீங்கன்னு நினைச்சா, “ஐ லவ் இந்தியா பை அகிலன்னு” எழுதி வச்சிருக்கீங்க…. என்றாள். அவ்வளவுதான்… பின்ன என்ன… எனது முப்பத்தி ரெண்டு பற்களும் தெரியும் வண்ணம் அவள் முன்பாக வழிந்து கொண்டிருந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *