ஏமாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 3,433 
 

ஊர்மிளனும்,தர்ஷினியும் இருக்கமாகப் கைகளை கோர்த்துக்கொண்டு,தங்களையே மறந்து ஒரு ஒற்றையடிப் பாதையில் நடந்துக் கொண்டு இருந்தார்கள்,அவர்களுக்கு தேவைப்பட்டது தனிமை,எங்கே போகிறோம் என்று தெரியவில்லை,அந்தப் பாதையில் ஆள் நடமாற்றம் குறைவு,அந்த வயதில் அவர்களுக்கு அது தான் தேவைப்பட்டதும்,பதினாறு வயதுப் பருவப்பெண் தர்ஷினி,பத்தொன்பது வயது விடலைப் பையன் ஊர்மிளன்,இருவருக்கும் காதல்,அன்று சனி கிழமை இருவருக்கும் பாடசாலை இல்லை,பெற்றோர்கள் நம்பி பிள்ளைகளுக்கு பணம் செலவு செய்து,தனியார் வகுப்புகளுக்கு அனுப்பினால்,அதற்கு போகாமல் இப்படி காதல் என்று ஊர் சுற்றி திரியும் மாணவர்களில் ஊர்மிளனும்,தர்ஷினியும் ஒரு ஜோடி.

தர்ஷினி எப்போதும் பார்க்க அடக்கமான பொண்ணு,நெற்றியில் பொட்டு,திருநீறு,அடர்த்தியான முடியை இரட்டை பிண்ணல் பிண்ணி ரிபன் கட்டி குனிந்த தலை நிமிராமல் பாடசாலை போனவள் தான்,இன்று எந்த பயமும் மனதில் இல்லாமல்,எவனோ ஒருவனின் கைகளைப் பிடித்துக்கொண்டு தனிமையில் நடக்கும் அளவிற்கு தைரியத்தை கொடுத்துள்ளது காதல்,ஒரே பேருந்தில் இருவரும் பயணம் செய்ததாலும்,பார்த்து,கதைத்து சிரித்ததால் அதை காதல் என்று நம்பி,இருவரும் இவ்வளவு தூரம் தனிமையை தேடி வந்திருப்பது கவலைக்குறிய விடயம்.

அவர்களிடம் போய்,இது இல்லை காதல்,இது ஒரு இனக்கவர்ச்சி,பருவக் கோளாறு என்றால் சண்டைக்கு வந்துவிட மாட்டார்களா?எங்களை என்ன நினைத்தீர்கள்? மற்றக் காதலர்கள் மாதிரி நாங்கள் இல்லை,எங்களுடைய காதல் புனிதமானது,ஒரு நாளும் நாங்கள் பிரிய மாட்டோம்,கடைசி மட்டும் சேர்ந்து வாழ்வோம்,உங்களுக்கு காதல் என்றால் என்னவென்று தெரியுமா?என்று எங்களையே திருப்பி கேள்வி கேட்ப்பார்கள்,அவர்களின் வயது, பிடிவாதகுணம்,எதிலும் அனுபவம் இல்லாத்தனம் எதையும் பேச சொல்லும்.

ஊர்மிளனின் குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம்,ஊர்மிளனுக்கு நான்கு அண்ணன்கள்,அனைவரும் பாதியில் படிப்பை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கும் வேலைக்கும் ஓடியவர்கள்,அப்பா,அம்மா பெத்து வளர்த்து விட்டதோடு அவர்கள் கடமைகள் முடிந்துவிட்டது என்று நினைத்து விட்டார்கள்.அம்மா சரஸ்வதி அழகு கலை நிலையம் நடத்துபவர்,அப்பா மயில்வாகனம் வக்கீல் இருவரும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்க்கையின் குறுக்கோளாக கொண்டவர்கள் ஆண்சிங்கங்களை பெற்றெடுத்த பெருமைவேறு,பிள்ளைகளை சரியாக வளர்க்க தவறிய பெற்றோர்கள் என்று கூட கூறலாம்.

தர்ஷினி குடும்பம் சாதாரண குடும்பம் அப்பா,அம்மா,தங்கை என்று சிரிய குடும்பம்.தங்கை சுதர்ஷினி அவர்கள் ஊரில் உள்ள பாடசாலையில் படிக்கின்றாள்,அம்மா கௌரி ஒரு புடவை கடையில் வேலை செய்கிறாள்,அப்பா கிருஷணன் கட்டிட தொழிலாளி,இதில் வரும் வருமானத்தில்,தர்ஷினி கணித பாடம் கஷ்டமாக இருக்கு என்று சொன்னதால்,தனியார் வகுப்புக்கு அனுப்புகின்றார்கள் அவளின் பெற்றோர்கள்,தர்ஷினி ஆரம்பத்தில் நன்றாக படித்தவள் தான்.

காதல் வலையில் சிக்கி,வீட்டில் கணித வகுப்பிற்கு போவதாக பொய் கூறிவிட்டு என்று ஊர்மிளனுடன் ஊர் சுற்றத் தொடங்கினாளோ அன்றோடு தர்ஷினியின் படிப்பு மந்தமானது.ஊர்மிளன் கடமைக்காக பாடசாலை போகிறவன்,வீட்டில் பொழுது போகவில்லை என்பதற்காக பாடசாலைக்குப் போகிறவன்,பேருந்தில் போய்வரும் போது எல்லாம் தர்ஷினியை காணும் அவன்,மெதுவாக அவளிடம் பேச்சி கொடுக்க ஆரம்பித்தான்,அவளும் அவனுடன் பேச ஆரம்பித்தாள்.அது காதலாக மாறி,இன்று அவனை நம்பி தைரியமாக வெளியில் சுற்றும் அளவிற்கு வந்துவிட்டாள் தர்ஷினி.

பிறந்த நாள் பரிசு,காதலர்தின பரிசு என்று இருவரும் பரிமாறிக் கொண்டார்கள்,கையில் முத்தம் கொடுக்க ஆரம்பித்து உதட்டளவில் வந்து நிற்கின்றார்கள்,அத்துமீறல் தொடுகைகளும் இருக்கவே செய்தது,சிறுவயதில் இருந்து எவ்வளவு புத்திமதி சொல்லி வளர்த்தாலும்,ஒரு நிமிடம் உணர்ச்சிவசப் படுவதால் அனைத்தும் மறக்கவைப்பது தான் காதல் அதில் படிக்கும் வயதுப் பிள்ளைகள் மாட்டிக்கொள்வதும்,ஏமாறுவதும் அதிகம்.

நாட்கள் வேகமாக ஓடியது,அவர்களின் பரீட்சையும் வந்தது ஊர்மிளன்,தர்ஷினி இருவருமே அவர்கள் பரீட்சையில் ஒழுங்கான மதிப்பெண் எடுக்கவில்லை,மேலும் படிக்கும் நோக்கம் ஊர்மிளனுக்கு கிடையாது,தர்ஷினி இரண்டாவது தடவை பரீட்சை எழுதுவதற்காக பாடசாலைக்குப் போக ஆரம்பித்தாள்,அம்மா அப்பா இருவரும் கவலைப் பட்டார்கள் தர்ஷினிக்கு படிக்கமுடியவில்லை என்று,ஊர்மிளன் வீட்டில் அதை பெரிதுப் படுத்தவில்லை,கணித ஆசிரியர் ஓர் நாள் புடவை வாங்குவதற்கு கடைக்குப் வந்தவர் தர்ஷினியின் அம்மாவைப் பார்த்துவிட்டார் நீங்கள் தர்ஷினியின் அம்மா தானே என்று கௌரியிடம் உறுதிப் படுத்திக்கொண்டார்.

அவளும் ஆமாம் உங்களை எனக்கு ஞாபகம் இல்லையே என்றாள் அவள்,நான் தர்ஷினியின் கணித ஆசிரியர் தனியார் வகுப்பு நடத்துகிறேன்,நீங்கள் மகளை முதல் நாள் வகுப்பிற்கு அழைத்து வரும்போது கண்டு இருக்கிறேன்,ஏன் மகள் சரியாக வகுப்பிற்கு வருவதில்லை,ஆரம்பத்தில் நன்றாக படித்தவள்,பிறகு படிப்பது குறைந்துப் போய்விட்டது,முதல் வருடத்தில் அவள் நல்ல மதிப்பெண் எடுத்திருக்கலாம்,ஏன் வீட்டில் ஏதும் பிரச்சினையா?என்றதும் கௌரிக்கு தூக்கிவாரிப் போட்டது,அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சேர்,அவள் ஒவ்வொரு வாரமும் வகுப்பிற்கு வருவதற்கு வீட்டில் இருந்து புறப்பட்டு விடுகிறாள் என்றதும் தற்போது அவருக்கு சுருக்கென்றது.

அவர் விட்ட பிழை,வரவேண்டிய மாணவர்கள் வகுப்பிற்கு வரவில்லையென்றால் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்,யார் வந்தால் என்ன,வராவிட்டால் என்ன எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்ற மனப்போக்குடன் தனியார் வகுப்பு நடத்தும் இது போன்ற பல ஆசிரியர்களால் பல மாணவர்களின் வாழ்க்கை வீணாகிப்போவதற்கு காரணமாகி விடுகின்றார்கள்.தொலைப்பேசி வசதி இல்லை என்றால்,அவர்கள் கொண்டு வரும் நோட்டுப் புத்தகத்தில் திகதியைப் போட்டு பெற்றோர்களின் கையொப்பத்தை ஒவ்வொரு வாரமும் வாங்கிவரும் படி சொன்னாலாவது கொஞ்சம் சரி மாணவர்களுக்கு பயம் இருக்கும்,சரியம்மா கொஞ்சம் தேடிப் பாருங்கள் என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அவசரமாகப் நகர்ந்துவிட்டார் அவர்.அதன் பிறகு கௌரிக்கு வேலை செய்யும் மனமில்லை,எப்படியோ ஆறுமணிமட்டும் சமாளித்துவிட்டு அவசரமாக வீடு போய் சேர்ந்தாள் கௌரி.

என்னம்மா ஒரே பதட்டமாக இருக்க என்று சுதர்ஷனி கேட்டாள்,ஒன்னும் இல்லை கொஞ்சம் தலைவலி,எங்கே அக்கா என்று கேட்டாள் கௌரி,உள்ளே படிக்கின்றாள் என்றதும் சரி என்று கூறிவிட்டு,கிரிஷ்ணன் வரும் மட்டும் காத்திருந்தாள்,அவன் வந்தவுடன் விஷயத்தை சொன்னாள் கௌரி,அவன் ஆத்திரப் பட்டு கத்தினான்,வகுப்பிற்கு போகாமல் கழுதை எங்கே ஊர் சுற்றுகிறது,நாங்கள் இவ்வளவு கஷ்ட்டப் பட்டு படிக்க வைக்கிறோம்,கூப்பிடு அவளை என்றான் கோபமாக,உடனே கௌரி இது அவசரப்படும் விடயமோ,ஆத்திரப்படும் விடயமோ இல்லை,நிதானமாகப் புரியவைக்கும் நேரம்,ஏதோ தில்லு முல்லு வேலை செய்கிறாள்,அது மட்டும் தெரியுது,அதட்டி ஆர்பாட்டம் பன்னுவதால் எதுவும் நடக்கப் போவது இல்லை,நீங்கள் அமைதியாக இருங்கள்,நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள் கௌரி.அரைமனதோடு ஒத்துக்கொண்டான் கிருஷ்ணன்,பிறகு அறைக்குச் சென்று தர்ஷினி பக்கத்தில் உட்கார்ந்தாள் கௌரி.

படித்துக் கொண்டிருந்த தர்ஷினி,எதற்காக அப்பா கத்தினார்,என்னம்மா அதிசியமாக இருக்கு,அவசரமாக ஓடிகிட்டே இருப்ப,இப்ப மட்டும் என்றாள் தர்ஷினி,உன்னிடம் கதைப்பதற்கு எனக்கும் நேரம் கிடைக்கவே மாட்டேங்குது தர்ஷினி,நான் வேலைக்குப் போவதால் உனக்கு ஏதாவது பிரச்சினையா?என்றாள் கௌரி,நீங்கள் இருவரும் வேலைக்குப் சென்றுவிடுவதால் நானும்,சுதர்ஷினியும் எந்த நேரமும் வீட்டில் தனியாக இருப்பது போல் இருக்கு அம்மா,அவளும் படித்துக் கொண்டே இருப்பாள் என்னிடம் சரியாக பேசவும் மாட்டாள் என்று கவலையாக சொன்னாள் தர்ஷினி,கௌரிக்கு கவலையாக இருந்தது.

என்னம்மா செய்வது இரண்டு பேரும் வேலை செய்தால் தானே குடும்பத்தை ஓட்டலாம்,கொஞ்ச நாட்களில் நீ படித்து முடித்து வேலைக்குப் போய்விட்டால் பிறகு அவ்வளவு சிரம்மம் இருக்காது என்றாள் கௌரி,உன் கணக்கு வகுப்பு ஆசிரியர் இன்று கடைக்கு வந்தார்,நீ வகுப்பிற்கு சரியாக வருவது இல்லை என்று சொன்னார் என்றதும் பதட்டம் அடைந்தாள் தர்ஷினி,அது வந்து அம்மா…என்று இழுத்தாள் தர்ஷினி, ஏன் காதலில் சிக்கிகிட்டியா என்று சாதாரணமாக கேட்டாள் கௌரி.எப்படியம்மா கண்டுப் பிடித்த,என்று தர்ஷினி ஆச்சிரியமாக கேட்டாள்,இந்த வயதில் வேறு என்னம்மா வந்துவிடப் போகிறது,அந்த வயது எல்லாம் நானும் கடந்து வந்தவள் தான் என்று சிரித்தாள் கௌரி.

நான் காதலுக்கு விரோதி கிடையாது,இந்த வயதில் ஏற்படும் காதலை தான் ஏற்றுக் கொள்ளமுடியாது தர்ஷினி என்றாள் கௌரி,ஏன் அம்மா என்றாள் தர்ஷினி,இந்த வயது கொஞ்சம் சிக்கலான வயது,மனதளவில் காதல் இருக்காது,உன் வளர்ச்சியினால் உன் உடம்பை பார்த்து ஏற்படுவது,இந்த வயதில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்,உணர்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் வயது,எல்லோருக்கும் இந்த வயதில் இது ஏற்படும்,யாரும் ஜடம் கிடையாது,உரசல்களும் தொடுகைகளும் நன்றாக தான் இருக்கும்,இது காதல் இல்லை தர்ஷினி என்றாள் கௌரி.

யாரோ ஒருவனிடம் மட்டும் மனதை பறிகொடுக்கும் போது தானே இவ்வளவும் ஏற்படுகின்றது என்றாள் தர்ஷினி,அது உண்மை தான்,எவனோ ஒருவன் உங்களிடம் கதைக்கும் போதும்,உங்களை புகழும் போதும்,அழகு என்று வர்ணிக்கும் போதும்,உங்கள் மீது அக்கறையாக இருப்பது போல் நடந்துக் கொள்ளும் போது,அவன் தான் நம் உலகம் என்று நினைத்து காதலிக்க இது வயது இல்லை என்றாள் கௌரி.

என்றாவது உங்கள் எதிர்காலத்தைப் பற்றி கதைத்தது உண்டா?இருக்கவே இருக்காது,அன்று எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்பதை மட்டுமே யோசிக்கும் வயது,அது உன்னை சொல்லி குற்றம் இல்லை,உன் வயது அப்படி தர்ஷினி,படிக்கும் வயதில் காதல் என்று சுற்றி திரிந்து விட்டு,எதிர்காலத்தில் கவலைப் படுவதில் எந்த அர்த்தமும் இல்லை,தற்போது படிக்கும் வயது,அதை வீணாக்கிவிடாதே,நன்றாக படித்து வேலைக்கு போகும் மட்டும் கொஞ்சம் பொறுமையாக இருக்கனும் தர்ஷினி,இதற்கு மேலும் அவன் தான் வேண்டும் என்று நினைத்தால்,இருவரும் படித்து,ஒரு வேலைக்குப் போய் செட்டில் ஆகும் மட்டும்,வெளியில் எங்கும் ஊர் சுற்றி திரியாமல் இருக்க முடியுமா? உங்களால் என்றால் கௌரி உடனே முடியும் அம்மா என்றாள் தர்ஷினி,அப்ப சரி இருவரும் ஒழுங்காக படித்து,வேலைக்கு போகும் மட்டும் பொறுமையாக இருக்க முடியும் என்று இருவரும் உறுதியாக முடிவு எடுக்க நாங்கள் அவர்கள் வீட்டில் போய் கதைப்போம் என்றாள் கௌரி.

தர்ஷினிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை,அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டாள்,சந்தோஷம் அம்மா நாங்கள் இருவரும் எவ்வளவு நாட்கள் என்றாலும் காத்து இருப்போம்,அவன் எனக்காக எதையும் செய்வான்,அவன் நல்ல பையன் ஏமாற்ற மாட்டான் அம்மா என்றாள் தர்ஷினி.சரி இப்போது தூங்கு,நாளைக்கு நானும் நீயும் மட்டும் அவர்கள் வீட்டுக்குப் போய் கதைத்து விட்டு வந்து விடுவோம் என்றதும்,நாளைக்கா!என்றாள் தர்ஷினி,ஆமாம் நாளை சனி கிழமை தானே,உனக்கும் பாடசாலை இல்லை,எனக்கும் வேலை இல்லை,இந்த மாதிரி விடயங்களை தள்ளி போடக்கூடாது என்று கூறிவிட்டு படுக்கச் சென்றுவிட்டாள் கௌரி.

தர்ஷினிக்கு தூங்க முடியவில்லை எப்போது விடியும் என்று இருந்தது,ஊர்மிளன் இருக்கும் ஊர் மட்டுமே அவளுக்கு தெரியும்,அம்மாவும் பிள்ளையும் காலையில் புறப்பட்டு விட்டார்கள்,தர்ஷினி தன்னை மேலதிகமாகவே அழகுப் படுத்திக் கொண்டாள்,கிருஷ்ணனிடம் எதுவும் கூறவில்லை கௌரி,அவன் தலையிட்டால் பிரச்சினையில் முடியும் என்று தெரியும் கௌரிக்கு,அவனிடம் பிறகு கதைத்து புரியவைத்துக் கொள்ளலாம் என்று நினைத்ததால் அவள்.

வக்கில் மயில்வாகனம் வீட்டை கண்டுப்பிடிக்க இலகுவாகவே இருந்தது,ஆடம்பரமான வீடு,வாசல் பக்கம் அவர்கள் வாகனம் நிறுத்தப் பட்டிருந்தது,அவர்கள் வளர்க்கும் நாய் இவர்களை கண்டதும் கூட்டுக்குள் இருந்து குறைத்தது,இதை சன்னல் பக்கம் இருந்து கவனித்த யாரோ வந்து கதவை திறந்தார்கள் கையில் பழைய துணியுடன் நின்ற அவள் அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்மணி என்று எடுத்துக் காட்டியது,ஐயாவை பார்க்க வந்தீங்களா?உள்ளே தான் இருக்கார் உட்காருங்கள் என்று கூறிவிட்டு அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

சற்று தாமதமாகவே குளித்து முடித்து பளிச்சென்று வந்து நின்றார் மயில்வாகனம்,வணக்கம் அம்மா,அவர் நினைத்துக்கொண்டார் ஏதோ வழக்கு சம்பந்தமாக பேசவந்திருப்பதாக பிரச்சினையை சொல்லுங்கம்மா என்றார் அவர்,நான் வழக்கு சம்பந்தமாக பேசவரவில்லை இது குடும்ப விவகாரம் உங்கள் மனைவி வீட்டில் இல்லையா?என்றாள் கௌரி,இருக்காங்கள் சரஸ்வதி.. என்று குரல் கொடுத்தார்,அளவிற்கு அதிகமாகப் மேக்கப் போட்டு வந்து நின்றவளைப் பார்க்க பயமாக கூட இருந்தது,படங்களில் வில்லி கதாபாத்திரம் பொறுந்தும்.இவர்களை மேல் இருந்து கீழ் மட்டும் பார்த்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தாள் சரஸ்வதி.

வணக்கம் என் பெயர் கௌரி,இது என் மகள் தர்ஷினி,உங்கள் மகன் ஊர்மிளனும் இவளும் காதலிக்கின்றார்களாம் என்றதும்,அதிர்ந்துப் போனார்கள் அவர்கள்,என்னம்மா இது புது கதை சொல்லுறீங்கள்,எங்கள் மகன் அப்படி பட்டவன் இல்லை என்று இருவரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்,இல்லை அங்கில் ஊர்மிளன் என்னை காதலிக்கிறான் என்றாள் தர்ஷினி,அப்படியா இரு அவனையே கேட்டுவிடுவோம் என்று சத்தமாக ஊர்மிளனை அழைத்தார் மையில்வாகனம்,மாடியில் இருந்து இறங்கி வரும் போதே,இவர்களை கண்டதும் அவன் முகம் மாறுவதை கௌரி கவனித்தாள்.

கொழு கொழு என்று தான் இருந்தான்.அவன் வந்தவுடன் மையில்வாகனம்,என்னடா இவர்கள் நீ இந்தப் பெண்ணை காதலிப்பதாக சொல்கின்றார்கள் என்றதும்,அவன் முகம் வேர்த்து விட்டது,இல்லை அப்பா எனக்கு இந்த பெண்ணை யாரு என்று தெரியவே தெரியாதே என்றான் ஊர்மிளன்,இதை சற்றும் எதிர்பார்க்காத கௌரியும்,தர்ஷினியும் அதிர்ந்துப் போய்விட்டார்கள்,கௌரி எழுந்தே விட்டாள்,தம்பி அப்பா,அம்மாவிற்கு பயந்துக்கொண்டு பொய் சொல்லாதீங்கள்,தர்ஷினியை உங்களுக்கு தெரியாதா?என்றாள்.

எனக்கு யார் என்று இவளை தெரியாது அப்பா,இவர்கள் பொய் சொல்கின்றார்கள் என்றதும் தர்ஷினி அழுதே விட்டாள்,இருவரும் காலையில் வந்து நாடகம் போடுறீங்களா? ஏதாவதுப் பணம் தேவையென்றால் கேட்டு வாங்கிட்டுப் போங்கள்,இப்படி மகளை கூட்டிக்கிட்டு வந்து..வெட்க்கமாக இல்லை உங்களுக்கு என்றாள் சரஸ்வதி,அம்மா வார்த்தைகளை விடாதீங்கள்,பார்த்துப் பேசுங்கள் என்றாள் கௌரி,உங்களுக்கு மரியாதை வேறு கேட்க்குதா என்றார் மையில்வாகனம்.

என் மகன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு,இதற்கு மேல் ஏதாவது கதைத்தால் நடப்பதுவே வேறு என்று அதிகாரமாகவே சொன்னார் மயில்வாகனம்,காதலையே அப்பா,அம்மா முன்னுக்கு சொல்ல தைரியம் இல்லாத இவன் எல்லாம் ஒரு ஆள் என்று காதலித்து ஊர் சுற்றி பெயரை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம் என்று சத்தமாகவே கூறிவிட்டு,வா தர்ஷினி என்று அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறிவிட்டாள் கௌரி,அவளும் அழுத்துக் கொண்டே அம்மாவுடன் வந்தாள்,முதல் அழுவதை நிறுத்து என்று அதட்டினாள் கௌரி தர்ஷினியும் மௌனம் ஆனாள்.

இருவரும் அமைதியாக வீட்டுக்குப் வந்து சேர்ந்தார்கள்,தரஷினி போய் படுக்கையில் படுத்து அழுது தீர்த்தாள்,கௌரி சமாதானம் செய்யப் போகவில்லை,பகல் சாப்பிடவும் தர்ஷினி எழுந்து வரவில்லை,மாலையில் தர்ஷினி பக்கம் போய் உட்கார்ந்தாள் கௌரி,அவள் தலையை மெதுவாக தடவி விட்டாள்,அம்மாவை பார்த்ததும் பொங்கி எழுந்தது அழுகை தர்ஷினிக்கு,அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டாள் அவள்.அழுது முகம் வீங்கிப் போய் இருந்தது,தர்ஷினி எழுந்து முகத்தை கழுவிவிட்டு சாப்பிட வா,அப்பா வரும் நேரம் நீ இப்படி இருந்தால்,அவர் கோபபடுவார் என்றாள் கௌரி.

எனக்கு சாப்பாடு வேண்டாம் என்றாள் தர்ஷினி,எத்தனை நாட்கள் சாப்பிடாமல் இருப்பது தர்ஷினி,உடம்பில் தெம்பு வேண்டும்,அழுவதால் எதுவும் ஆகப் போவது இல்லை அதை முதலில் புரிந்துக்கொள் என்றாள் கௌரி,எப்படியம்மா அவன் அப்படி சொன்னான் என்றாள் தர்ஷினி,இது தான் இந்த வயது காதல்,பார்த்தது எல்லாம் ஆசைப் படும் வயது,மற்றவர்களின் புகழ்ச்சிக்கு ஏங்கும் வயது,எவனாவது வந்து நீ அழகு என்று சொன்னாலே மதிமயங்கி போய்விடும் உங்கள் வயது,இதை நன்கு அறிந்து வைத்திருக்கும் ஆண்கள் பெண்களை இலகுவில் காதல் வலையில் சிக்கவைத்து விடுகின்றார்கள்,இதை அறியாத நீங்கள்,அவனே உலகம் என்று நம்பி,ஏமாந்து அழுதுக்கிட்டு இருக்க வேண்டியது தான்,பட்டு தான் திருந்த வேண்டும் என்பதில்லை தர்ஷினி என்றாள் கௌரி.

இந்த வயது காதலுக்கு ஏற்ற வயது இல்லை,இனியும் எதிலும் தேவையில்லாமல் மாட்டிக் கொள்ளாதே,அவன் மறுப்படியும் ஏதாவது சமாதானமாக கதைத்து கொண்டு வந்தால்,பாவம் என்று மறுப்படியும் குப்பையில் போய் விழுந்து விடாதே,நடந்ததையெல்லாம் கனவுப் போல் தூக்கிப் போடு,கொஞ்ச நாட்களுக்கு கஷ்டமாக இருக்கும்,போக போக எல்லாம் சரியாகிவிடும்,முதலில் படி,வேலைக்குப் போ,பிறகு தானாகவே எல்லாம் அமையும்,நீ மட்டும் இல்லை இந்த வயதில் எல்லோரும் அப்படி தான்,அதைப் பற்றி கவலைப் படாதே இந்த வயதில் ஏமாறுவதும்,ஏமாற்றப் படுவதும் சகஜமாக போய்விட்டது தர்ஷினி என்றாள் பெருமூச்சுடன் கௌரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *