எப்படி கேட்பது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 38,222 
 

அவளிடம் இதை எப்படி சொல்வது.. எப்படி கேட்பது என்பதில் அவனுக்கு நிறைய தயக்கம் இருந்தது. பிரம்மன் ஓவர்டைம் செய்து அவளை உருவாக்கியிருப்பான் போலிருக்கிறது. கயல்விழி என்ற பெயரைவிட அவளுக்கு பொருத்தமான ஒரு பெயரை அவளது அப்பனால் தேர்வு செய்திருக்கவே முடியாது. அவளது விழிகள் அலெக்சாண்டரின் போர்வாள் போல கூர்மையானது. பார்வையால் ஒரு வெட்டு வெட்டினாள் என்றால் எப்படிப்பட்ட ஆணும் இதயம் அறுந்து உயிரிழந்துவிடுவான்.

அவள் வேலை பார்த்த கவுண்டரில் இருந்த எல்லாப் பெண்களுமே கொள்ளை அழகு தான். இருந்தாலும் நிலவோடு நட்சத்திரங்கள் போட்டியிட முடியுமா? அவளுடைய உயிர்த்தோழி ஒருத்தி டைட்டானிக் கேட் வின்ஸ்லட் மாதிரியே இருப்பாள், நல்ல கலர், செம்ம கட்டை. அவள் இவளை ‘கைல்’ என்று அழைப்பதே ஸ்டைலாக இருக்கும். அவளிடம் தான் முதலில் ‘இதை’ கேட்க நினைத்தான். ஆனாலும் கயலைப் பார்த்த பின் வேறு எந்தப் பெண்ணிடமும் ‘இதை’ கேட்க வேண்டுமென்று அவனுக்கு தோன்றவில்லை.

யதேச்சையாக ஒரு நாள் கர்ச்சிப்பை மறந்துவைத்து விட்ட தினத்தில் தான் அந்த கடைக்கு கர்ச்சிப் வாங்க வந்தான் அவன். அப்போது தான் அவளைப் பார்த்தான். தினமும் அவள் வேலை செய்யும் துணிக்கடையை தாண்டிப் போகும்போதெல்லாம் அவளிடம் வெட்கத்தை விட்டு இதை கேட்டுவிட வேண்டும் என்று நினைப்பான். ஒரு நாகரிகமான பணியில் இருக்கும் கணவானான அவன் இதை நாலு பேர் எதிரில் கேட்டு அவள் ஏதாவது சொல்லி.. பொது இடத்தில் பிரச்சினை ஏதாவது வந்துவிடுமோ என்று அச்சப்பட்டான். கடைமுதலாளி வேறு பயில்வான் ரங்கநாதன் மாதிரி க்ரிப்பாக இருந்தார்.

அந்த பிரச்சினைகளை எல்லாம் பார்த்தால் ‘இதை’ தள்ளிப் போட்டுக் கொண்டே போகவேண்டும். எப்படியிருந்தாலும் இதை வேறு யாரிடமாவது கேட்கத்தான் போகிறோம், இவளிடமே கேட்டு விட்டாலென்ன? ‘அதை’ அவளிடம் கேட்க ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தை குறித்துக் கொண்டான். காலண்டரில் நல்ல நேரம் பார்த்தான். மனதுக்குள் ‘தில்’லை லிட்டர் லிட்டராக ரொப்பிக் கொண்டான். அவனுக்கு பிடித்த கருப்பு – சிவப்பு டீஷர்ட்டை அணிந்துகொண்டான். பெண்கள் மையல் கொள்வார்கள் என்று சொல்லி விளம்பரப்படுத்தப்பட்ட நறுமண வஸ்துவை தாராளமாக உடலுக்கு உபயோகித்தான்.

அவன் குறித்து வைத்திருந்த நல்ல நேரத்திற்கு இன்னமும் அரைமணி நேரம் இருந்தது. டென்ஷனாக இருந்ததால் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். ஐந்து நிமிடத்தில் முடியும் கிங்ஸ், இவன் டென்ஷனில் உறிஞ்சு உறிஞ்சுவென்று உறிஞ்சியதால் மூன்றே நிமிடத்தில் காலியானது. ஸ்மெல் தெரியக்கூடாது என்று ஒரு மாணிக்சந்தையும் ஒரு பாஸ்பாஸ் பாக்கையும் வாங்கி மிக்ஸ் செய்து வாயில் நிரப்பிக் கொண்டான்.

நேராக கயல் வேலை பார்த்த அந்த துணிக்கடைக்கு போனான். நல்லவேளையாக பயில்வான் ரங்கநாதன் முதலாளி இல்லை. அன்று கடையிலும் கூட்டம் குறைவு. நேராக கயல் இருந்த கவுண்டருக்கு போனான். கயலுக்கு பின்னால் கண்ணாடி அடுக்குகளில் அடுக்கப்பட்டிருந்த ‘அந்த’ துணிவகைகளை வெறித்துப் பார்த்தான். கயலின் அந்த கேட்வின்ஸ்லட் தோழி குறும்பாக பார்த்தாள். கயலிடம் மெதுவாக ”ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தொலைவுக்கு நகர்ந்தாள்.

கயலின் முகமும் லேசாக நாணத்தால் சிவந்திருந்தது போல தெரிந்தது.

“என்ன சார் வேணும்?” கோல்டன்பிஷ் வாய் திறந்து பேசினால் கயல் பேசியது போலவே இருக்கும்.

“ம்ம்… வந்து.. வந்து”

“சொல்லுங்க சார்!”

“கயல்.. என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா?”

– ஆகஸ்ட் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *