எச்சிப்பால் குடித்தவன்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 7,118 
 

கடற்கரையில் அருண் ரொம்ப நேரமாக தனியே அமர்ந்திருந்தான்.

அனுஜாவைக் காணவில்லை

‘ காதலில் காத்திருப்பது என்பது கடுமையான, ஒரு இனிமையான தவம் . அதுவே அதிகமாகிப் போனால் வெறுப்பு வரும் ! ‘ – இவனுக்கு வந்தது.

‘ சே..! சே..! – கை மணல் தட்டி எழுந்தான்.

தூரத்தில் அனுஜா வந்து கொண்டிருந்தாள் .

அவளைக் கண்ட அடுத்த வினாடி…இவன் மனதுக்குள் ஜிவ்வென்று புத்துணர்ச்சிப் பிறந்து உற்சாகம் கொப்பளித்தது.

” ஏன்.. லேட்டு ? என்று பொய்க் கோபம் காட்டி கோபித்து விளையாடலாமா..?! ‘ – மனசு குறுகுறுத்தது.

இடது கையைத் திருப்பி பார்த்தான். மணி 6.30 .

‘ இந்த விளையாட்டில் நேரம் போய்… அவள் முகம் சுண்டிவிட்டால்..? ! ‘ – நினைக்கப் பயமாக இருந்தது.

அதற்குள் அனுஜாவே அவன் பக்கத்தில் வந்து விட்டாள்.

” என்ன எழுந்திரிச்சிட்டீங்களா…? ! ” அவளாகவே கேட்டு மணலில் அமர்ந்தாள்.

” பேச மாட்டேன்..! ” நின்றான்.

” அய்யாவுக்குக் கோபமா.? ”

” இல்ல. சந்தோசம்..! ” விறைப்பாக நின்றான் .

” உங்களுக்கென்ன…? அலுவலகம் விட்டதும் நேரா இங்கே வந்துடுவீங்க. ஆனா… நான்..? அம்மாகிட்ட எவ்வளவு சாக்குப் போக்கு சொல்லிட்டு வரவேண்டி இருக்குது தெரியுமா..” – சொன்னாள் . – முகம் சுணங்கி தொண்டை கரகரத்தது.

‘ இதற்கு மேல் விளையாடினாள் ஆபத்து ! ‘ இவனுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது.

” சரி சரி . மூஞ்சியைத் தூக்கி வச்சுக்க வேணாம். நான் சும்மா விளையாட்டுக்கு அப்படி சொன்னேன் .” என்று பல்பு வாங்கி அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான் .

அவ்வளவுதான் !…

அனுஜா முகம் சட்டென்று பிரகாசித்து சமாதானக் கொடி பறந்தது.

சுண்டல் , முறுக்கு வாங்கி கொரித்துக்கொண்டு ஏதேதோ பேசினார்கள்.

” ம்ம்… ஒன்னு சொல்ல மறந்துட்டேன்… ” வாயில் சுண்டல் வைத்து திடீரென்று நினைத்துக் கொண்டவளாய்ச் சொன்னாள் .

” என்ன ? ”

” நான் சொல்றதைக் கொட்டு கோப படக் கூடாது. ! ”

” என்ன எச்சரிக்கை பலமா இருக்கு..? ”

” சேதி சொல்லனுமா வேண்டாமா..? ” இவள் முறுக்கினாள் .

” சொல்லு..? ”

” கோப பட மாட்டீங்களே..? ! ”

” மாட்டேன் . என்ன விசயம் .? ”

” சத்தியமா..? ”

” சத்தியமாய் ! ” அனுஜா தலையில் அடித்தான்.

” வ… வந்து…. வந்து.. உங்க தம்பி எனக்கு காதல் கடிதம் எழுதி இருக்கார். ”

” என்ன !! ” தேள் கொட்டியவனாய்த் திடுக்கிட்டான்.

” உண்மையாவா சொல்றே..?! ” நம்ப முடியாமல் கேட்டான்.

” ஆமாம். இதோ பாருங்க..” தன் கை பையிலிருந்து ஒரு கடிதம் எடுத்துக் காட்டினாள்.

வாங்கி பரபரப்புடன் பிரித்தான்

சத்தியமாகத் தம்பி சத்தியமூர்த்தி கையெழுத்து.! !! முகம் சிவந்தது.

‘ அண்ணன் காதலிக்குத் தம்பி காதல் கடிதம் ! ‘ எவனுக்குப் பொறுக்கும்.. !?

ஆத்திரம் வந்தது அடக்கிக் கொண்டான். மௌனமாகக் கடிதத்தை வெறித்தான்.

மனசுக்குள் ஏதேதோ யோசனைகள்.

” என்ன யோசனை…? ” உலுக்கினாள்.

” அவன் மேல தப்பா , உன் மேல தப்பா.. யோசனை ! ” என்றான்.

” என்ன உளர்றீங்க….? ” – துணுக்குற்றாள் .

” அவன் உனக்கு காதல் கடிதம் எழுதி இருக்கான்னா… நீ என்னிடம் பழகுற மாதிரி அவனோடு பழகி இருக்கணும்..”

” ச்சே.! ச்சே ..! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. மாமன் மகன் என்கிற உரிமையிலும், உங்க தம்பி என்கிற முறையிலும் நான் சாதாரணமாகத்தான் கலகலப்பா பேசினேன், பழகினேன். ”

‘[ உண்மை ! அனுஜா சொந்த அத்தை மகள் . இவனுக்கும் தம்பிக்கும் மூன்று வயதுகள்தான் வித்தியாசம் இவள் இவனிடம் கலகலப்பாகப் பேசி பழகுவது போல் அவனிடமும் பழகி இருக்கிறாள். அவன்தான்….. விசயம் புரியாமல் தவறாகப் புரிந்து கொண்டு… ‘ – அருணுக்குப் புரிந்தது.

‘ அவனின் இந்த தவறான எண்ணத்தைக் கிள்ளி எரிய வேண்டும் . கடிதம் விசயம் தனக்குத் தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டு கண்டித்தால் சரி படாது. இவளையே விட்டு சரி செய்தால்தான் சரிப்படும் ! ‘ – தோன்றியது .

” எப்படிக் கொடுத்தான்…? ” – கேட்டான்.

” நேரடியாவேக் கொடுத்தார் ! ” – சொன்னாள் .

” உடனே பிரிச்சிப் படிச்சி மூஞ்சியில் விட்டெறிய வேண்டியதுதானே.. ..? ”

” அதுக்கு வாய்ப்புக் கொடுக்கல. தனியே போய் படிச்சுப் பாருங்கன்னு சொல்லி விருக்குன்னு போயிட்டாப்போல .”

” பிரிச்சிப் படிச்சதும் உனக்கு அவன் மேல் ஆத்திரம் , கோபம் வரலையா …? ”

” சட்டுன்னு எல்லாம் வந்தது. கடைசியில அழறதா.. சிரிக்கிறதா நெனப்பு ! ”

ஆமாம் என்ன செய்ய முடியும்.. !? – அருணுக்குப் புரிந்தது.

” சரி. இதெல்லாம் தப்பு. சரி இல்லேன்னு அவனுக்குச் சொல்லிடு. இல்லே எழுதிடு.”

” அப்படியெல்லாம் செய்தா உங்க தம்பி உடைஞ்சிட மாட்டாரா ” இவள் திருப்பிக் கேட்டாள்.

இப்போது அருணுக்கே அனுஜா மீது சந்தேகம் வந்தது.

” நீ அவனைக் காதலிக்கிறீயா.. ? ” கேட்டான் .

” என்ன பேச்சு இது ? ” – அவள் முகத்தில் லேசாக கோபம் படர்ந்தது.

” சொல்லு….? ”

” இல்லே..”

” யாரைக் காதலிக்கிறே..? ”

” உங்களை.. ”

” அப்போ. இதுக்கு முடிவு..? என்ன செய்யலாம்…? ”

” நீங்களே கண்டிச்சுடுங்க.. ”

” நா.. நானா..?! நா.. ” – தடுமாறினான்.

” ஏன் ? என்ன..? ”

” சிக்கல் இருக்கு ! ”

” என்ன சிக்கல்..? ”

” சரி நானே கண்டிக்கிறேன் ! ” – எழுந்தான் .

வீட்டிற்குச் சென்றபோது சத்தியமூர்த்தி தனியே இருந்தான் .

கண்டிக்க சரியான தருணம் !

” தம்பி உன் கூட கொஞ்சம் பேசணும்… ”

” சொல்லு..? ”

” நம்ம அத்தை மகள் அனுஜாவுக்கு கடிதம் கொடுத்தியா. ? ” – நேரடியாகவே விசயத்திற்கு வந்தான்.

சத்தியமூர்த்தி ஆடவில்லை அதிரவில்லை.

” ஆமா …” சாதாரணமாகச் சொன்னான்.

” அது தப்பு . சரி இல்லே ! ”

” ஏன்… ? ”

” அவள் அதை விரும்பல…”

” காரணம்.. ??”

” வந்து ..வந்து …அவ என்னைக் காதலிக்க்கிறாள்!”

” நீங்க…? ”

” நா நானும்தான்… ”

” வெரிகுட் ! திருமணமாகி ரெண்டு புள்ளைங்களுக்குத் தகப்பனான உனக்கு காதல். ! இது சரியா. ? ”

” சத்தி ! ”

” ஆத்திரப்படாம பொறுமையாக் கேளு. நீ அண்ணிக்குத் துரோகம் செய்யிறது வருத்தமா இருக்கு. திருமணமானால்… கணவன் என்கிறவன் மனைவியைக் காதலிக்கனும். அடுத்தவளைக் காதலிக்க கூடாது. அனுஜா முறைப் பெண் உன்னிடம் கலகலப்பாய் பேசினதுனால அவளை மயக்கிட்டே. அவளும் மயங்கிட்டாள் . நாளைக்கு … கலியாணம் காட்சி ஒத்து வருமா..? . ரெண்டு பேர் எப்படி சரி வரும் ? ஒருவனுக்கு ஒருத்திதான் சரி. அதுதான் நம்ம கலாச்சாரம் பண்பாடு. என்னடா எச்சிப்பால் குடிச்சவன் உபதேசிக்கிறானேன்னு நினைக்காதே. துரோகம், வாழ்க்கையில் அடுத்தவளுக்குப் பங்கு எல்லாம் சரி படாது.

அனுஜா மேல எனக்கு காதல் கத்தரிக்காயெல்லாம் கிடையாது . அது உங்களுக்குப் புத்திமதி சொல்ல நான் எழுதிய நாடகம். வீண் சபலத்தால ரெண்டு பேர் வாழ்க்கையும் வீணாக வேணாம். அனுஜாவிடமும் உண்மையைச் சொல்லி திருத்து. இந்த விஷயம் எதுவும் அண்ணிக்குத் தெரியவேணாம். அண்ணி வருத்தப்படுவாங்க. ” நிறுத்தினான்.

அருணுக்கு விசயம் புரிய கூனி குறுக்கினான்.

எச்சிப்பால் குடித்த தம்பி சத்தியமூர்த்தி அவனுக்குள் போதி மரமாகச் தெரிந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *