உயர்வு நவிற்சி அணி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,842 
 

ரகுராம சுப்ரமணியனை நான் சந்தித்தது திட்டமிட்ட சதி என்று தான் சொல்லமுடியும். யார் திட்டமிட்டது என்றால், எனது டீம் லீடர் நடேஷ். சென்ற வெள்ளிக்கிழமை என்னை அழைத்த போது ஒரு டீபகிங் இல் மூழ்கி இருந்தேன்.

“ரொம்ப உளைக்காத செல்லம்…என் காபினுக்கு வர்றே. உண்ட்ட பேசனும் எனுக்கு”

நடேஷ் தஞ்சாவூர் பூர்வீகம் என்றாலும் வளர்ந்தது எல்லாம் அஹமதாபாத் என்பதால் தமிழ் திணறித் தான் வரும் .நாம் சிரித்தால் கண்டுபிடித்து விடுவான். அதனால் அந்தத் தமிழை இயல்பாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். எனக்குப் பழகிவிட்டது.

எதை கேட்கப் போகிறான் எனத் தெரியாமல் போய் எதிரில் அமர்ந்தேன்.

“நடேஷ் நான் ஒன் வீக் லீவ் யூ நோ?”என்றேன்.

“வாட்..? ஸ்டுபிட் ப்ராஜெக்ட் ரன்னிங் டாமிட்” என்றான்

“அது சரி…என் அக்கா கல்யாணம் நடேஷ். ஐ காட் லீவ் ஃப்ரம் ஹெச்.ஓ”

“ஓஹோ…அந்த மைதா மூட்டையிடம் லீவ் கேட்டிருக்கிறாய். இல்லையா..?” என்றான் ஆங்கிலத்தில்.

எந்த மூட்டை என கேட்கவில்லை. எனக்கே தெரியும். தீபா பண்டிட். நடேஷுக்கு மேல் அதிகாரி.

நான் சும்மா சிரித்தேன்.

அவன் எதுவும் பேசவில்லை.நான் எனது காபினுக்குள் வந்து அமர்ந்தேன்.

சாயங்காலம் மறுபடியும் அழைத்தான்.

“ஸோ, செல்லம் மூவ் தஞ்சாவூர் ஃபார் அக்கா மாரேஜ் ரைட்..?” என்றான்.

“யெஸ்.”

“நீ தப்ப முடியாது. அங்கே உனக்கொரு வேலை. இந்த முகவரியைப் பிடி. ஒரு மாலை நேரத்தை எனக்காக செலவிடு. இவன் பெயர் ரகு. ரகுராம சுப்ரமணியன். இவனுக்கும் எனது கஸின் அம்ரித்தாவுக்கும் கல்யாணம் நிச்சயமாயிருந்தது. இன்னும் 1 மாதத்தில் கல்யாணம். இப்பொழுது திடீரென இவர்கள் வீட்டில் இருந்து கல்யாணத்தை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள்.

அம்ரித்தா மிகவும் நொறுங்கியிருக்கிறாள். அவளை ஒருவழியாக சமாதானம் செய்தாயிற்று. இருந்தாலும் இதை ஒரு இன்சல்ட் ஆக எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். எனக்குத் தேவை… யு ஹவ் டு டாக் டு ஹிம். எனக்கு காரணம் தேவை. எதனால் ஒரு பெண்ணை.. ஒரு பேரழகியை பெண்பார்த்து, நிச்சயம் செய்து, இவன் தான் இவள் தான் என ஆக்கி,ஒரு நாள் எல்லா கனவுகளையும் உடைத்து…வெல், இதை என் நண்பனாக நீ செய்வாய் என நினைக்கிறேன்.”

“ஷ்யூர் நடேஷ், அவர்கள் தரப்பில் என்ன காரணம் சொன்னார்கள்..?”

“டாமிட் அவர்கள் முதலில் பார்த்த ஜோசியர் ஒரு ஃப்ராடாம். அடுத்துப் பார்த்த அவர்களது பரம்பரை ஜோசியர் இந்த திருமணம் நடக்கவே கூடாது என சொல்லிவிட்டாராம். அவர்தான் அவர்களுக்கு குருமகராஜ் என என்னென்னவோ சொல்லி…”

நடேஷ் இப்பொழுது ஒரு சிகரட்டை பற்ற வைக்க நான் அவன் நீட்டிய பாக்கெட்டிலிருந்து ஒன்றை உருவிக்கொண்டேன். அவன் மௌனமாக அவன் செல்ஃபோனை எடுத்து எதையோ அழுத்த.. என் மொபைலில் இரண்டு புகைப்படங்கள் வந்தன. அதைத் திறந்தேன்.

“முதலில் இருக்கும் அவன் அந்த ராஸ்கல். அடுத்தது அம்ரித்தா” என்றான். நான் ஒருமுறை மட்டும் அவைகளைப் பார்த்தேன். முகத்திலறையும் பேரழகு, அம்ரித்தா. அவன் நம்மைப் போல் ஒருவன். ரொம்ப சாதாரணமாக இருந்தான்.

“எனக்கு தேவை ஒரு ரீசன்…ட்யூட்….ஜஸ்ட் ய ரீசன்..” என்றான்.

“கண்டிப்பா நடேஷ்”என்றேன்.

அந்த கணம் முதல் எனக்கு அப்பொழுது தான் அறிமுகமாகி இருந்த ஒரு ஆடவனை வெறுக்கவும், ஒரு பெண்ணை நான் மிகவும் போற்றவும் தொடங்கியிருந்தேன். உலகின் அதி சிறந்த முட்டாளை நான் சந்திக்கப் போவதை மிகவும் விரும்பினேன். அந்த நாளும் வந்தது.

என் அக்கா கல்யாணம் எல்லாம் முடிந்து, இன்னும் இரண்டு தின விடுமுறைக்குப் பின் நடேஷை சந்திக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சி உந்தித்தள்ள.. கொடுக்கப்பட்ட விலாசத்தை அடைந்தேன்.

எஸ்.ரகுராம சுப்ரமணியன். டேஷ் தனியார்வங்கியின் முதுனிலை மேலாளர் என பெயர்ப்பலகை என்னை வரவேற்றது. அவனது அறைக்குள் நுழைந்தேன். யாரிடமோ டெலிஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். என்னை பார்வையாலேயே வரவேற்று, முன் இருக்கையை காட்டி உட்கார சொன்னான். நான் அமர்ந்தேன்.

சற்று மாநிறம். திருத்தமானவன் தான். நேரில் பார்க்கையில் அவனிடம் ஏதோ ஒரு வசீகரம் இருப்பதை உணர்ந்தேன். அவனது குரல். மிக அமைதியான அதே சமயத்தில் வார்த்தைகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து பேசக்கூடிய குரல். பேசி முடித்ததும் நிமிர்ந்தான்.

“யெஸ்… எனக்காக காத்திருக்கும் உங்களுக்கு நன்றி.. என்ன விஷயம் என்றான்”

நான் என் பெயர் சொல்லி, சொந்த விஷயமாக சந்திக்க வந்து இருப்பதாக சொன்னேன். மணி பார்த்தவன் என்னுடன் வந்தான்.

வெளியில் வந்து எதிர்ப்புறம் இருக்கக்கூடிய ஒரு டீ ஷாப்புக்கு வந்தோம். எதிரெதிரே அமர்ந்து, ஆளுக்கொரு சிகரட்டை பற்ற வைத்தோம்.

“சொல்லுங்க…..” என்றான்.

“எனக்கு பொய் சொல்லத் தெரியாது. நான் அம்ரித்தாவோட அண்ணனோட கலீக்.” என்றேன்.

அவன் ஆர்வமாக முகத்தை வைத்து கொண்டு “நான் என்ன செய்யணும்..?”

“ஜாதக பொருத்தமில்லைன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திருக்கீங்க”

“அதெல்லாம் சும்மா” என்றான்.

“அப்புறம் ஏன்..?”

“எங்கப்பா ஒரு பொழைக்கத் தெரியாத ஆள்‍னு நான் சொன்னா நீங்க என்ன நினைப்பீங்க..?”

“அவர் ஒரு அப்பாவி”னு.

“இல்லை தலைவா, அவர் செத்துட்டார்னு தானே நீங்க நெனைக்கணும்..?”

நான் அமைதியானேன். அவன் சொன்னான். அவங்க வீட்டுல அமைதியா விட்டுருக்கலாம். காரணம்.. காரணம் நா..? என்னத்தையாவது சொல்லணூம்ல..?”

நான் கேட்டேன்.. “உண்மைல என்ன காரணம்..? எங்கிட்டே சொல்லலாம்… நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்”

“யார் கிட்டேயும் சொல்லாதவருக்கு எதுக்கு ரகசியம்.? நான் உங்ககிட்டே சொல்ல மாட்டேன்..” என்றான் அமைதியான குரலில்.

எனக்கு லேசாக வியர்த்தது. என்ன பேச..? எப்படிப் பேச..?

“இப்ப்டி சொன்னா எப்டி சார்..? என்ன காரணம்னு..?”

அவன் டென்ஷனே ஆகாமல் சொன்னான்.

“நான் தான் நீட்ஷே சொல்ர அதிமனிதன். அல்லது எனக்கு கைலயும் கால்லயும் முப்பது விரல்கள். இது பிடிக்கலைன்னா…. எனக்குப் பெயர் தெரியாத ஒரு வியாதி. முந்தா நாள் நான் செத்துட்டேன்.இதுக்கப்புறமும் கேட்டா, இன்னொரு காரணம்.. நான் ஒரு மன நோயாளி. குடிகாரன் அல்லது எனக்கு காது கேட்காது.. போதுமா..? இன்னும் சொல்லவா.?”

எனக்கு பாலசந்தரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறேனோ என குழப்பம் வந்தது. நான் மிகப் பலமாக தாக்கப்பட்டேன். இது வரை நான் என்னை அறிவாளி பேச தெரிந்தவன் என நினைத்திருந்தேன். அந்த இடத்திலேயே தூக்கில் தொங்கலாமெங்கிற அளவுக்கு வெறுப்பில் இருந்தேன்.

“சரிங்க.. நான் கெளம்புரேங்க” என எழுந்தேன்.

“ரிலாக்ஸ்… கூல் சார்.. நீங்களும் நானும் இந்த நிமிஷம் தான் சந்திக்கிறோம்.. வெறுப்பை ஏற்படுத்த நான் விரும்பலை. அதுக்காக என் பெர்சனல் உள்ளே நீங்க வர்ரதை நான் விரும்பலை. இப்ப என்ன செய்யலாம்..?” என்றான்.

நான் அமைதியாக இருந்தேன். என்ன சொல்வதேன்றே எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் உண்மைகளை மறைக்காமல் சொன்னேன். எனக்கு மேலதிகாரி நடேஷ் எனவும் அவனது கசின் தான் அம்ரித்தா எனவும் சொன்னேன்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை… பட் உங்களுக்காக ஒரு சில வார்த்தைகள் நான் சொல்றேன்… உங்களோட முன்முடிவு தப்பு. புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க..” என்று வழியனுப்பி வைத்தான்.

நான் வந்து, நடேஷை சந்தித்து அவனிடம் ரகு என்னிடம் சொன்னவற்றை கொஞ்சம் உப்பு காரமெல்லாம் சேர்த்து சொல்லி… எல்லாம் முடிந்தது. ஐந்து மாதம் கழித்து நடேஷ் ஒரு இன்விடேஷனை என் கையில் திணித்தான். அம்ரித்தாவின் கல்யாண ரிசப்ஷன். நீ கண்டிப்பா வர்ரே செல்லம்” என்றான். சந்தோஷமாகவே இருந்தான்.

எனக்கு அந்த ரிசப்ஷனில் நடேஷைத் தவிர யாரையும் தெரியாது. நடேஷை யார் யாரோ இழுத்துச் செல்ல.. அவன் ஒருகட்டத்தில் என்னை மறந்தே விட்டான். தனியாக உட்கார்ந்து இருந்தேன். திடீரென என் காதருகில் “எனக்குத் தெரியும்..” என் குரல் கேட்க.. டக்கென திரும்பி பார்த்தேன். அட்டகாசமான குர்தா பைஜாமாவில் ரகு. ரகுராம சுப்ரமணியன்.

“என்னைத் தெரியலை..?” என சிரித்தான்.

“எனக்கு தெரியும்னு எதை சொன்னீங்க..?”

“அதுவா..? பைல்ஸ் வந்த நடிகர் யாருன்னு எனக்குத் தெரியும். ஒரு வேளை நீங்க அதைத் தான் யோசிக்கிறீங்கனு தான் அப்டி சொன்னேன்.”

நான் முறைத்தேன். அப்புறம் சிரித்தேன். “நல்லா இருக்கீங்களா..?” என்றேன் பொதுவாக.

“அதை நான் எப்படி சொல்ல முடியும்..? ஒரு ஃபுல் பாடி ஸ்கேன் வேண்டுமானால் பார்த்ததும் சொல்கிறேன்.”

“உங்களிடம் பேச முடியாது” என்றேன்..

“நீங்களும் முயற்சி செய்யுங்கள். நாம் இருவரும் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தமாஷாக இருக்கும்.”

நான் கொஞ்ச நேரம் கழித்து கேட்டேன் “நீங்க எப்படி இங்கே..?”

“என்ன ஈவிரக்கமில்லாமல் கேட்கிறீர்கள்.. அந்த மணப்பெண்ணுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் எனத் தெரியாதா உங்களுக்கு..?”

“அது சரி… உங்களை யார் அழைத்திருக்கக்கூடும் என தான் யோசிக்கிறேன்.”

“எந்த முன் முடிவுக்கும் வராதீர்கள்” எனச் சொல்லி சிரித்தான். இருவருமே பொதுக்கடமையான உணவருந்துதலை ஒன்றாகவே முடித்தோம். எனக்குள் அதே சிந்தனையாக இருந்தது. என்ன மனிதன் இவன்..? ஏன் என்னை இப்படி வதைக்கிறான்.?இதை விட்டால் வேறு உலகப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்ற கணக்கில் நான் ஏன் இவனைச் சுற்றியே என் எண்ணங்களைத் திரிய விடுகிறேன்..?

அவன் மேடை ஏறினான். கிட்டத்தட்ட அனைவருமே அவன் யார் என்பதை மறந்தவர்கள் போலத் தான் இயல்பாக நடந்து கொண்டார்கள். அதுவும் தவிர ரகு புதிதாக வைத்து இருந்த குறுந்தாடி கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மணமகனும் அம்ரித்தாவும் இயல்பாக இவன் நீட்டிய பரிசுப்பொருளை வாங்கிக் கொண்டு இவனுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்கள். இவனும் படியிறங்கி வந்து என் பக்கத்தில் அமர்ந்தான்.

நான் “கிளம்புறேன் ரகு” என்றேன். “அதுக்குள்ளயா..? இருந்து ஒரு ரெண்டு வருஷம் மணமக்கள் சந்தோஷமா வாழ்றதை பாத்துட்டுப் போகலாமே..?”

இதை அவன் சீரியஸாக சொன்னது தான் எனக்கு எரிச்சல் தந்தது.

“சார்.. நீங்க ஜீனியஸ் ஆ இருக்கலாம். எனக்குத் தான் அறிவு இல்லை. என்னை விட்றுங்க” என்றேன்.

“கூல்..கூல்…” என்றான்… “உங்களுக்கு என்ன தெரியணும்..? கேளுங்க… இந்த முறை கிண்டல் பண்ண மாட்டேன். சீரியஸ் ஆ உண்மை தான் சொல்வேன்.. சரியா..?வாங்க ஒரு தம் அடிப்போம்.”

நான் அவனுடன் வெளியே வந்து புகைக்கும் பொழுது அவன் முகத்தையே பார்த்தேன்.

“சோ…நீங்க மண்டையை உடைச்சுக்கிட்டிருந்த விஷயம் தெரிஞ்சா தான் உங்களால நிம்மதியா இருக்க முடியும்.. அப்பிடித்தானே..?” என்றான்.

நான் மெல்லிய குரலில் சொன்னேன்.. “எனக்கு எதுவும் புரியலை”

அவன் ஆழமாக புகையை வெளிவிட்டவாறு தொடர்ந்தான். “இந்த மனித வாழ்க்கையே அபத்தமானது தான். அன் எக்ஸ்பெக்டெட் தான் மிஸ்டர்…. எப்டின்னு கேட்குறீங்களா..?அந்த பொண்ணு அம்ரித்தா… அவளை நான் ஏன் நிச்சயம் செய்துட்டு ரிஜக்ட் செய்தேன்..? இது தான் உங்களோட கோபமும் கேள்வியும்..ரைட்…? முதல்ல ஒரு விஷயம்.. நான் ரிஜக்ட் பண்ணலை மிஸ்டர். அந்த மாதிரி செய்ய வைக்கப்பட்டேன். எனக்கு நிச்சயமான பொண்ணுங்கற அடிப்படைல தினமும் அரை மணி நேரம் அவ கூட பேசிட்டு இருப்பேன். என்னோட எண்ணங்கள், ரசனை, ஈடுபாடுன்னு. எனக்குக் கிடைத்த எனக்கான பெண்ணை கண்டடைந்திட்ட திருப்தில நான் பேசப் பேச, அம்ரித்தா என்னை அப்செர்வ் பண்ணீட்டே வந்தா… ரெண்டு வாரம் பேசினதுக்கப்புறம் அவ என்னை நேர்ல பாக்கணும்னு கூப்டப்போ நான் மிதந்தேன்…. சந்தோஷமா அவளை பார்க்கப் போனேன்.”

அவன் மெதுவான ஆழமான குரலில் என்னிடம் தொடர்ந்தான் “அவளுக்கு புக்ஸ், சி.டி.ஸ்,னு ஏகப்பட்ட பரிசுகளோட சந்திக்கப் போனேன். அவளும் எனக்கு ஒரு பரிசு வெச்சுருந்தா…”

அழுகிறானா..? இல்லை.. கலங்கி இருக்கிறான் எனத் தெரிந்தது.. ரகு இப்பொழுது இன்னுமொரு சிகரட்டை பற்றவைத்தபடி பேசினான் “அவள் என்னைப் பாக்க வந்தப்போ… ரொம்ப காஷுவலா சொல்ல ஆரம்பிச்சது என்ன தெரியுமா..?”

நான் மவுனித்தேன். கிட்டத்தட்ட எதையோ நான் யூகித்திருந்தேன் எனச் சொல்லலாம்.

“உனக்கும் எனக்கும் ஒத்து வராது. நீ ரொம்ப படிச்சு இருக்கே. நீ ஒரு ஜீனிய்ஸ். நாம கண்டிப்பா கஷ்டப்படுவோம்.”

“நான் அசந்து போனேன் மிஸ்டர்…. இது தான் காரணம். இதுக்கு மேல எதுவுமே பேசாம ரெண்டு பழைய நண்பர்கள் பேசிக்கிறா மாதிரி வலிக்காம பேசிட்டு இருந்தா.” இப்பொழுது நான் அவனை ஆர்வமாகப் பார்க்க தொடங்கினேன்.

“உன்னை நான் ரிஜெக்ட் பண்றது உனக்கு மரியாதை இல்லை ரகு… அதுனால நீயே எதாவது காரணம் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திறுன்னு சொன்னா.”

நாங்கள் இப்பொழுது எங்கள் வண்டிகளை அடைந்து இருந்தோம்.

“உங்களை என்ன சொல்லி பாராட்டறதுன்னு தெரியலை ரகு…. சச் அ நைஸ் மேன்” என புகழ ஆரம்பித்தேன். மண்டப வாசலில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டை ஒரு கணம் உற்றுப் பார்த்தோம். அதில் அம்ரித்தாவும் மணமகன் சஞ்சய்யும் சிரித்துக் கொண்டிருக்க.. “என்ன பாக்கறீங்க..?” என்றான் என்னிடம்.

நான் சொன்னேன்.. “உங்களை வேண்டாம்னு சொல்லிட்டு, தனக்கேத்த முட்டாளை பிடிச்சிட்டாங்க போல..” என்றேன்.

அவன் பெருமூச்சோடு சொன்னான். “முட்டாள்னு சொல்லாதீங்க ப்ளீஸ்.”

“ஏன்..?”

“அவன் ஜீனியஸ்.”

“எப்டி சொல்றீங்க..?”

“அவன் கூட நிச்சயமான பின்னாடி அம்ரித்தா அதே 15 நாள் பேசிருக்கா அவன் கிட்டேயும்.”

நான் ஆர்வம் தாங்காமல் கேட்டேன். “அவரை முன்னாடியே தெரியுமா உங்களுக்கு..?”

ரகு சிரித்தான். “நோ நோ… நிச்சயமானதுக்கு அப்புறம் நான் தான் காண்டாக்ட் பண்ணேன்.”

அவன் வண்டியை நகர்த்தியபடியே சொன்னான்.

“எதுக்குத் தெரியுமா..? கொஸ்டீன் பேப்பரை அவுட் பண்ணத்தான்…”

நான் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “உயர்வு நவிற்சி அணி

  1. ஓ ! எவ்வளவு அற்புதமான வார்த்தைத் திரட்டு. ஆசிரியர் நம் கையைப் பிடித்து கூட்டிச் செல்வது போன்ற ஒரு அழகான நடை. பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *