இதுவும் ஒரு காதல் கதை!

 

நான் பாரதி; வயது, 35. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், வெட்டியாக வீட்டில், ‘டிவி’ தொடர் பார்த்தோ, அக்கம் பக்கத்து வீடுகளில் வம்பளப்பவளோ அல்ல! ஐ.டி., நிறுவனத்தில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிகாரியாக வேலை பார்த்து வருபவள். நிறைய வேலை; அதிகப் பணம்; பல்வேறு ஊர் மற்றும் நாடுகளுக்கு விஜயம். சற்று நெருக்கடியாக இருந்தாலும், வாழ்க்கை எனக்கு சுவையாக தான் இருக்கிறது.

பின், ஏன் கல்யாணம் ஆகவில்லை என்கிறீர்களா?

எனக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான்! மாமா, சித்தப்பா போன்ற உறவினர்கள் உள்ளனர். ஆனால், அவரவர் குடும்பம் அவரவருக்கு! அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம், ‘என்ன பாரதி… எப்போ கல்யாணம் செய்துக்கறதா இருக்க…’ என்று ஒரு கேள்வியை விட்டெறிந்து, அதற்கு பதிலையும் எதிர்பார்க்காமல், அடுத்த விஷயத்திற்குப் போய் விடுவர்.

நானே ஏன் ஒரு துணையைத் தேடிக் கொள்ளவில்லை என்று நீங்கள் கேட்கலாம்!

அது என்னவோ தெரியவில்லை, இதுவரை எந்த ஆணிடமும், எனக்கு காதல் உணர்வே வரவில்லை.

காதல் என்றால், குறிப்பிட்ட நபரைப் பார்த்ததும் தோன்றும் அபரிமிதமான மகிழ்ச்சி, சிலிர்ப்பு, உற்சாகம், படபடப்பு, கிளர்ச்சி… ம்ஹும்… எதுவுமே எனக்கு தோன்றுவதில்லை.

பொதுவாக நான் அதிகம் பேச மாட்டேன்; அதுகூட காரணமாக இருக்கலாம். ஒருசிலர், ‘ஏன் பாரதி… உனக்கு யார் மேலும் ஒரு, ‘இது’வே வராதா…’ என்று கூட கேட்டுள்ளனர்.
இவைகளை எல்லாம் வைத்து, நான் பார்க்க ரொம்ப அசிங்கமாக இருப்பேன் என்று நினைத்து விடாதீர்கள்; நான் சாதாரணப் பெண். அழகுமில்லை; அசிங்கமும் இல்லை.

அத்துடன், என்னிடம் நெருங்கிப் பழகிய ஆண்களும் குறைவு; பழகியவர்களும் அப்படி ஒன்றும் என்னிடம் வழிந்ததில்லை. இதையெல்லாம் ஏன் இத்தனை விலாவாரியாக கூறுகிறேன் என்றால், எனக்கு ஒருவன் மீது காதல்… அவன் பெயர் ரகுராம்!

என்னுடன் வேலை பார்ப்பவன் தான். வேறோர் இடத்தில் வேலை பார்த்து, சமீபத்தில் தான், எங்கள் நிறுவனத்தில் வந்து சேர்ந்தான்.

அவனும் பெரிய ஹீரோ அல்ல, சாதாரணமானவன் தான். என்னை விடச் சற்று உயரம் கம்மி. வயதிலும் இளையவன். 30 வயதிலும், 20 வயது போல் இளமையாக இருப்பான். இருந்தாலும், எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

ரகு தானே வந்து என்னுடன் ஒட்டிக் கொண்டானா அல்லது நானாக அவனிடம் ஒட்டிக் கொண்டேனா என்று சொல்ல முடியவில்லை. அவனிடம் உள்ள மிக நல்ல குணம், எவரிடமும் எளிதில் நண்பனாகி விடுவான். அத்துடன், அதிகம் பொய் பேசவோ, ‘சீன்’ போடவோ மாட்டான்; யதார்த்தமாக இருப்பான்.

அவனது ஆங்கிலப் புலமை எனக்கு மிகவும் பிடிக்கும். சுவாரசியமாக பேசுவதுடன், நன்றாக எழுதவும் செய்வான். ஆங்கிலத்தில் அவன் எழுதிய பல கட்டுரைகள், பிரபல பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. தவிர, நாட்டு நடப்பையும், மனிதரின் குணங்கள், உறவுகள் பற்றி அழகாக பேசுவான். இது, அவன் வயதொத்த இளைஞர்களிடம் காணாத குணம் மற்றும் திறமை. அதனாலேயே எனக்கு அவன் மீது ஈர்ப்பு உண்டானது. அவனுக்கும் என்னிடம் இருந்த மொழித் திறமை பிடித்திருந்தது. என்னிடம், ‘பாரதி… நீங்க ஏன் எழுதக் கூடாது?’ என்று கூட கேட்டுள்ளான்.

நான் சிரித்தபடி, ‘பேசுவது வேறு; எழுதுவது வேறு. எனக்குப் பேசத்தான் வரும்; எழுத வராது…’ என்று கூறி, ‘உனக்குத் தான் ரெண்டும் அழகா வருது; கீப் இட் அப்…’ என்றேன்.

அதேபோன்று, திருமணம் பற்றிய அவனது கருத்தும், மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு இருந்தது. ஒருநாள், ‘பாரதி… நீங்க ஏன் கல்யாணம் செய்துக்கல…’ என்று கேட்டான்.

நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.

‘இதுதானா உங்க பதில்?’

‘என்ன பதில் சொன்னா, உனக்கு திருப்தியா இருக்கும்…’ என்றேன்.

புன்னகையுடன், ‘காதல் தோல்வியா…’ என்றான்.

அதைக் கேட்டதும், வாய்விட்டுச் சிரித்தபடி, ‘கல்யாணம் ஆகாதவங்க எல்லாம் காதல் தோல்வி அடைஞ்சவங்களா… அது சரி… நீ ஏன் இன்னும் திருமணம் செய்துக்கல; உனக்கு என்ன காதல் தோல்வியா…’ என்று விளையாட்டாக கேட்டேன்.

உடனே முகம் மாற, ‘ஆமாம்…’ என்றான்.

அப்போது நாங்கள் கேன்டீனில் காபி குடித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் அமர்ந்திருந்த மேஜைக்கருகில் இருந்த ஜன்னல் வழியாக, பெரிய மைதானம் தெரிந்தது. அங்கிருந்த மரத்தில், இரண்டு கிளிகள் பறந்து, கொஞ்சி விளையாடின. அதையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரகு.

நான் சங்கடத்துடன், ‘சாரி ரகு… நான் அந்தக் கேள்வியக் கேட்டிருக்கக் கூடாது…’ என்றேன்.

அவன் என்னைப் பார்த்து புன்னகைத்தான். சிரிக்கும் போது, அவன் முகம் மிகவும் அழகாக இருந்தது.

‘அதனால என்ன பரவாயில்ல… ஆனா, அது நிறைவேறல…’ என்றான்.

‘ஏன்…’

‘இன்னும் சில மனிதர்களும், குடும்பங்களும் பழமைவாதிகளாகத் தானே இருக்குறாங்க; அதனால் தான்…’ என்றான்.

பதில் கூறாமல் அமைதியாக இருந்தேன்.

‘அப்போ, எனக்கு வயசு, 23; அவளுக்கும் இதே வயசு தான். அதனால, எங்க ரெண்டு பேருக்குமே குடும்பத்தைப் பகைத்து, திருமணம் செய்யும் தைரியம் இல்ல. இப்போ, அவளுக்குக் கல்யாணம் ஆகி, ஒரு குழந்தை இருக்கு…’ என்றான் எந்தவித உணர்ச்சியுமின்றி!

‘நீ ஏன் இன்னும்…’ என்று இழுத்தேன்.

‘நான் கல்யாணத்திற்கு எதிரியில்ல; ஆனா, எனக்கு அந்த பந்தத்தை, சட்டென்று புதிய, அறிமுகமற்ற பெண்ணிடம் ஏற்படுத்திக்க முடியும்ன்னு தோணல…’ என்றான்.
‘உன் முதல் காதலுக்கு பின், எந்தப் பெண்ணுமே உன் மனசை தொடலயா?’ என்று கேட்டேன்.

இக்கேள்வியைக் கேட்கும் போது, என் மனதில் இதுநாள் வரை இல்லாத சலனமும், பதைப்பும் உண்டானது.

மெல்லச் சிரித்த ரகு, ‘இப்போ இல்ல… பின்னால ஒரு வேளை தோன்றலாம்…’ என்றான் மய்யமாக!

என் கண்கள் விரிந்தன.

‘யார் அந்த அதிர்ஷ்டசாலி…’

‘பொறுத்திருந்து பாருங்க…’ என்றான்.

வாழ்க்கையில் முதன் முறையாக, எனக்குள் பதற்றம் ஏற்பட, அமைதியாக இருந்தேன்.

‘ஹலோ… எந்த உலகத்தில இருக்கிறீங்க…’ என்று தன் வலது கரத்தை, என் முகத்திற்கு நேராக ஆட்டினான் ரகு.

திடுக்கிட்டு உணர்வு பெற்றவளாய், ‘ஓ சாரி… போகலாமா…’ என்றேன்.

சரி என்றவன், என் முகத்தை உற்றுப் பார்த்தபடி எழுந்து வந்தான்.

அன்று இரவு, எனக்கு தூக்கம் வரவில்லை. ரகுவிடம் ஏற்பட்டுள்ள ஈர்ப்புக்குக் காரணம், என்னவென்றும் புரியவில்லை.

இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ பேருடன் பழகியுள்ளேன். அவர்களிடம் ஏற்படாத உணர்வும், நெருக்கமும் இவனிடம் மட்டும் எப்படி ஏற்பட்டது என்பதும் விளங்கவில்லை.
காதலிக்கும் அனைவருமே இப்படித்தான் உணர்வார்களா… ஆனால், அது பரஸ்பர உணர்வாக இருந்தால் பிரச்னையில்லை. ரகுவின் விஷயத்தில், அது சிக்கலானதொன்றாக தோன்றியது. அவனுக்கு என்னிடம் பிரியமும், மரியாதையும் இருப்பது தெரியும். ஆனால் காதல்…

காதலுக்கு பாலுணர்வு ரீதியாகவும், பரஸ்பர ஈர்ப்பு வேண்டும்; அது எனக்கு முதல் முறையாக ரகுவிடம் தோன்றியிருப்பது, அதிர்ச்சியைத் தந்தது.

இது சாத்தியமா என்ற பயத்தை கொடுத்தது. நான் அவனை விட வயதில் மூத்தவள்; வேலையிலும் உயர்ந்த பதவியில் இருப்பவள். ஜாதி, மதம் எங்களிடையே எழாது என்றாலும், அவனுக்கும் என்னிடம் இதேபோன்றதொரு உணர்வு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனாலும்,’பேசிப் பழகி நெருக்கமானால், ஒருவேளை இந்த உணர்வு தோன்றக் கூடுமோ…’ என்ற ஆசை எழுந்தது.

அதற்குபின், ரகுவிடம் பேச பல்வேறு சந்தர்ப்பங்களை உருவாக்கி கொண்டேன். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், உள்ளே ஏதோவொரு அர்த்தம் புதைந்திருப்பதாக தோன்றியது.
இதுநாள் வரை அவனிடம் உண்டாகாத அக்கறையும், அவன் உடுத்தும் உடையிலிருந்து, அணியும் ஷூ வரை, ஒவ்வொன்றையும் கவனிக்கத் துவங்கியுள்ளேன்.

நாளை ரகுவின் பிறந்தநாள்; ஓர் அசாத்தியமான பரிசைத் தந்து, அவனை அசர செய்ய வேண்டும்.

அலுவலகத்தில், ரகுவின் பிறந்த நாளை, கேக் வெட்டி, பரிசு தந்து, அமர்க்களம் செய்தனர் அவனுடன் பணிபுரிவோர். நான் அங்கு செல்லாமல், தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறி, அவனை தனியாக என் அறைக்கு அழைத்தேன்.

கதவை தட்டி, மலர்ந்த முகத்துடன் அறைக்குள் வந்தான் ரகு. அவனை அமரச் சொல்லி, மேஜையில் வைத்திருந்த பிறந்தநாள் வாழ்த்து அட்டையையும், பரிசையும் கொடுத்தேன்.

பரிசைப் பிரித்துப் பார்த்து, ‘வாவ்… வொண்டர்புல்…’ என்றவன், ‘எனக்கு, ‘ஷீபர்’ பேனா பிடிக்கும்ன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது…’ என்றான் வியப்புடன்!

‘நீ தான், ஒருநா பேச்சோடு பேச்சா, உனக்கு, ‘ஷீபர்’ பேனா ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னே…’ என்றேன்.

‘தாங்க் யு ஸோ மச் பாரதி… ஐ லவ் யு…’ என்றான் புன்னகையுடன்!

இதைக் கேட்டதும், என் உடலில், சிலீரென்று மின்சாரம் பாய்ந்தது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. ஒரு விநாடி பேச்சிழந்து போன நான், சட்டென்று சமாளித்து, ‘மீ டூ…’ என்றேன்.

‘ஆங்கிலம், வசீகரமான பொது மொழி; அதனால, ஐ லவ் யு என்ற வார்த்தைக்கு வேற அர்த்தம் எடுத்துக்காத…’ என்று என் உள் மனது கூறியது. ஆனாலும், ஆசை, காதல் சிறகை, காற்றில் பிரித்து, வானவீதியில் திருட்டுத்தனமாகப் பறந்தது.

‘பாரதி… உங்களுக்கு நான் ஒரு இன்ப அதிர்ச்சி தரப் போறேன்…’ என்றான் ரகு.

என் இதயத்துடிப்பு எகிறியது.

‘நான் திருமணம் செய்துக்க போறேன்…’ என்றான் மகிழ்ச்சியுடன்!

நான் அயர்ந்து போனேன். அடுத்து, ‘உங்களத்தான்னு சொல்லப் போறானோ…’ என, மனசு படபடத்தது.

சட்டென்று வாசலை நோக்கி திரும்பி, ‘வா… ப்ரீதி…’ என்று அழைக்க, அவன் குழுவில் வேலை செய்யும் ப்ரீதி உள்ளே வந்தாள்.

‘ப்ரீதி… உனக்கு பாரதி மேடத்த தெரியுமில்ல…’ என்றவன், என்னை நோக்கி திரும்பி, ‘பாரதி… ஐ லவ் ப்ரீதி… இவளத் தான் திருமணம் செய்யப் போறேன்…’ என்றான்.

மின்னலே இல்லாமல், என் மனதில் இடி இறங்கியது.

உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன்.

பின், அவர்கள் என்னிடம் பேசியது எதுவுமே என் மனதில் பதியவில்லை.

என் அறையிலிருந்து அவர்கள் ஜோடியாக போவதை பார்த்தபடி எத்தனை நேரம் அமர்ந்திருந்தேனோ தெரியாது. சிறிது நேரத்தில், தொலைபேசி அலறி, என்னை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.

எனக்கு ஏற்பட்ட முதலும், முடிவுமான காதல், ரகுவுடன் துவங்கி, அவனுடனே முடிந்து விட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பின், ரகுவை சந்திப்பதைத் தவிர்த்தேன். அது, அவன் மீது கொண்ட ஏமாற்றத்தினாலோ, வெறுப்பினாலோ அல்ல; அவனைப் பார்க்கும் போது, என் தோல்வி, பெரிதாகத் தெரிவது போல் இருந்தது.

இன்று மதியம், என் அறைக்கு வந்த ரகு, பத்திரிகையில் வெளியாகி இருந்த கட்டுரையை என்னிடம் காட்டிப் பேசினான்; நானும், பட்டும் படாமலும் உரையாடினேன்.

என் பேச்சில் தென்பட்ட விட்டேற்றித்தனத்தை, உணர்ந்து, ”என்ன பாரதி… உடம்புக்கு முடியலயா?” என்றான் கவலையுடன்!

”இல்ல; நல்லாத் தான் இருக்கேன்,” என்றேன் செயற்கையான சிரிப்புடன்!

”இல்ல… நீங்க எதையோ என்கிட்ட மறைக்கிறீங்க…” என்றான்.

எனக்கு அழுகை வரும் போல் இருந்தது; முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.

”உங்க மனசுல ஏதோ இருக்கு; என்கிட்ட சொல்ல தயங்குறீங்க…” என்றான்.

பதில் கூறாமல் மவுனமாக அவனைப் பார்த்தேன்.

”அன்னைக்கு உங்களப் பாத்து பேசிட்டு போனபின், ப்ரீதி, என்கிட்ட, நான் உங்க கூட அதிகம் பழக வேணாம்ன்னு சொன்னா… ” என்றான்.

திடுக்கிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன்.

”நீங்க, என்னைப் பாக்குற பார்வை சரியில்லயாம்…”

”அப்படின்னா…”

”உங்க பார்வையில காதலும், ஏமாற்றமும் தெரிஞ்சதுன்னு சொன்னா; என்ன ஒரு முட்டாள்தனம்…” என்றான் கோபத்துடன்!

ஒரு பெண்ணால் தான், இன்னொரு பெண்ணையும், அவள் பார்வையையும் புரிந்து கொள்ள முடியும்; ஆண்களால் முடியாது!

என் காதல் தோல்வியையும் மறந்து, பெரிதாக சிரிக்க வேண்டும் போல் இருந்தது.

வாய்விட்டுச் சிரித்தேன்; ரகுவும் சேர்ந்து கொண்டான். பின், ”நான் சொன்னது சரிதானே…” என்றான்.

‘நீங்க ரெண்டு பேரும் சொன்னதும் சரி…’ என்று மனதில் நினைத்து, ”ரொம்பவும் சரி,” என்றேன்.

- ஜனவரி 2016 

தொடர்புடைய சிறுகதைகள்
மறுபக்கம்
"ரெசிடன்சி கிளப்'பின் அந்த அரை வெளிச்சமான, "பாரில்" அமர்ந்து, தனியாக உற்சாக பானம் பருகிக் கொண்டிருந்தார் விசுவம். ஆயிற்று... இன்றோடு அவர் வேலையிலிருந்தும் ஓய்வு பெற்று, ஆறு மாதங்கள் முடிந்து விட்டன. "ஒவ்வொரு சமயம், காலம் இறக்கை கட்டி பறக்கிறது; சில சமயங்களில், ...
மேலும் கதையை படிக்க...
சமீபத்தில் எனக்குப் பரிச்சயமாகி நண்பரான திருவாளர் விசுவம் என் கண்களுக்கு ஒரு விந்தையான மனிதராகத் தென்பட்டார். இளங்காலை நேரங்களில் நடைபயிலும் பெசன்ட் நகர் மேட்டுக்குடி மக்களின் கடற்கரைப் பகுதியில்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அறுபது வயதானாலே எது வருகிறதோ இல்லையோ சொல்லாமலே ...
மேலும் கதையை படிக்க...
மவுன மொழி!
மரங்கள், செடிகள், தோட்டம் இவற்றுடன், சாலையில் சந்தடிகளிலிருந்து விலகி உள்வாங்கி இருக்கும் வீடுகள், எங்கள் பகுதியில் பார்க்க முடியாதோ என்ற ஆயாசம் எழும் வகையில், தனியான பங்களாக்களும், வீடுகளும் இடிபட்டு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழும்புகின்றன. அவைகளின் சுற்றுச் சுவர்கள் வரை, குடியிருப்புகளின் ...
மேலும் கதையை படிக்க...
அந்த இளம் போலீஸ் அதிகாரியின் சிரமமான நீண்ட சொற்பொழிவின் இறுதியில் அந்த போலீஸ் அதிகாரியின் உயிர் பிரிவதுடன் படம் முடிந்தது. சோர்ந்து போன அவன் முகம் க்ளோஸ் அப்பில் வர 'இவன் போன்றோரின் பயணங்களுக்கு முடிவில்லை' என்ற வாசகத்துடன் திரை ஒளிர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
விக்ரமின் புத்தம் புதிய அந்த இரண்டு சக்கர வண்டி புயல் போல காம்பவுண்டுக்குள் நுழைந்து போர்டிகோவில் சட்டென்று ப்ரக் அடித்து நின்றது. அந்த வண்டியின் வந்த வேகமும், அதிலிருந்து விக்ரம் இறங்கி பங்களாவின் உள்ளே ஓடிய விரைவும் அந்த இளைஞனின் கோபத்தை ...
மேலும் கதையை படிக்க...
அக்னி
அவள் எழுந்து போன பிறகும் கூட, அவள் பேசி விட்டுச் சென்ற வார்த்தைகள் என்னை தகித்தன. என்ன பெண் இவள்... படித்து, பட்டம் பெற்று, கவுரவமான குடும்பத்தில் பிறந்து, நல்ல வேலையில், கை நிறையச் சம்பளமும் வாங்கிக் கொண்டு, இன்று காரும், ...
மேலும் கதையை படிக்க...
சோமநாதன், வயது 68, எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருந்த பாரில் அமர்ந்து அவருக்குப் பிடித்தமான ‘லாங்க் ஐலண்ட் ஐஸ் டீ’ என்ற காக்டெய்லை நிதானமாகக் குடித்துக் கொண்டிருந்தார். ‘ஜின்’, ‘டெகிலா’, ‘வோட்கா’, ‘ரம்’ எல்லாம் கலந்த அந்தப் பானம் அவர் மிகவும் ரசித்து ...
மேலும் கதையை படிக்க...
நான் அரங்கத்தின் 'பார்க்கிங்'கில் என் ‘டூ வீலரை’ நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த போது வெள்ளைச் சீருடை அணிந்த அந்த இயக்கத்தின் அங்கத்தினர் புன்னகை மின்னும் முகத்துடன் வரவேற்று வழிகாட்டி உள்ளே செலுத்தினர். அரங்கம் மிகப் பிரம்மாண்டமானதுதான். அதில் அரையளவு தான் நிரம்பி ...
மேலும் கதையை படிக்க...
தன் முன் இருந்த கணினியில் தான் செய்திருந்த ‘ப்ரோக்ராமி’ல் இருந்த பிழையைக் கண்டுபிடிக்க மிக மும்முரமாக ஆழ்ந்திருந்த ரிஷியின் கவனத்தைப் பக்கத்து ‘வொர்க் ஸ்டேஷனி’ல் இருந்த கீதா கலைத்தாள். “யேய்... ரிஷி... உன் மொபைல் இதோடு நான்கு தடவையாக தொடர்ந்து அடித்து விட்டது. ...
மேலும் கதையை படிக்க...
தினசரி படிக்க வந்து உட்கார்ந்த மகன் சேகரிடம், விசுவநாதன், “இதோ பார்... என்னுடைய கட்டுரை இன்றைய ஹிந்து பேப்பரின் ‘ஓபன் பேஜி’ல் வெளியாகி இருக்கிறது...” என்று உற்சாகத்துடன் தினசரியை நீட்டினார். அதை வாங்கி மேலோட்டமாகப் பார்த்த சேகர், “சரி... சரி... எப்போதும் போல ...
மேலும் கதையை படிக்க...
மறுபக்கம்
உறவின் நிறங்கள்
மவுன மொழி!
நாளை….
தண்டனை
அக்னி
பார்வைகள்
ஆத்மா
கல்யாணம்… இன்று
இடைவெளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)