Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இதுதான் காதலா?

 

நிலைக் கண்ணாடி முன் நின்று தலை சீவி, பவுடர் பூசி, மடிப்புக் கலையாத உடையணிந்துகொண்டிருந்த பரிதியின் பார்வை வாசல் பக்கம் இருந்தது. டாடா சுமோ எழுப்பும் ஒலி காதில் விழுகிறதா என்பதில் அவனது கவனம் இருந்தது. அவனுக்குப் பின்னால் சந்தடியின்றி தங்கை பொன்மணி வந்து நிற்பதை அவன் கவனிக்கவில்லை.

“”இன்னிக்கி சனிக்கிழமை. உன்னோட பாங்க் திறந்திருக்கலாம். காலேஜ் திறந்திருக்காது. டாடா சுமோவும் வராது” என்ற தங்கையின் குரல் காதில் விழ வெட்கத்தை வெளிப்படுத்தாதிருக்க,”"உன்னோட ஃபிரண்டு தேன்மொழிக்காக இல்லே. போஸ்ட்மேன் இன்னும் காணோமேனுதான்” என்று இழுத்தான். அவளுக்குச் சிரிப்பு!

“”போஸ்ட் வர்ற நேரமா இது? என்னாச்சு உனக்கு…” என்றாள் கேலியாக. கூச்சத்தால் அவள் பக்கம் திரும்பாமலே,”"சாயங்காலம் வந்து பேசிக்கிறேன்” என்று சமாளித்தான். வெளியில் நின்றுகொண்டிருந்த டூ வீலரை உசுப்பிவிட அவனைச் சுமந்துகொண்டு சீறிப் பாய்ந்து மறைந்தது.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தந்தை சாலை விபத்து ஒன்றில் இறந்துபோக அம்மாவுக்குக் கிடைத்த ஓய்வூதியத்தில் குடும்பம் பிழைத்திருந்தது. பட்டப் படிப்பு முடித்திருந்த பரிதிக்கு பொதுத்துறை வங்கி ஒன்றில் வேலை கிடைக்க, தாய், தங்கையுடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தது குடும்பம். மகனுக்கு மணம் முடித்துப் பார்க்க அம்மா ஆசைப்பட்டபோது, “”தங்கச்சி படிப்பு முடிஞ்சு இன்னொரு வீட்டுக்குப் போகட்டும்” என்று சட்டமே போட்டிருந்தான் பரிதி.

பொன்மணிக்கு இது முதுநிலை இறுதிஆண்டு. அவளது வகுப்புத் தோழி தேன்மொழி. செல்வந்தர் வீட்டுப் பெண்ணான அவள் டாடா சுமோவில் வருவாள். வழியில் பொன்மணியை அழைத்துச் செல்வாள். கல்லூரி வரை அரட்டை அரங்கம்தான்!

அன்று ஒருமுறைக்கு மேல் சுமோ அலறியும் பொன்மணி வரவில்லை. காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் நுழைந்தவளை ஓடிவந்து வரவேற்றாள் பொன்மணி.

“”இதோ ரெடியாகிட்டேன். அம்மாவுக்கு லேசா உடம்பு சரியில்லே. அதான்…” என்று வழிந்தாள். அக்கணம் அங்கே வந்த பரிதியை அறிமுகப்படுத்தினாள். இதற்கு முன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதேயில்லை. “”என்னோட அண்ணன், பாங்கில வேலை. எனக்குச் சோறு போடுறது, படிக்க வைக்கிறது, பாதுகாக்கிறது…”

“”உனக்கு மாப்பிள்ளை தேடி அலையப் போறது…” என்று குறிக்கிட்ட தேன்மொழி, “”அண்ணன் சரி…அண்ணி?” என்று நிறுத்தினாள். “”கலியாணம் ஆயிடுச்சா” என்று கேட்பதற்குப் பதிலாக.

“”அண்ணி வரணும்னா தங்கச்சி போகணும்” என்றாள் பொன்மணி. “”எம்.ஏ. முடிச்சதும் ஐ.ஏ.எஸ். பண்ணலாம்னு இருக்கேன்” என்றாள் கண் சிமிட்டியபடி.

“”பாவம்டி. உன் கல்யாணத்தப்ப நிறைய டை தேவைப்படும். தலை, மீசையைக் கறுப்பாக்க” என்று தேன்மொழி சொல்ல சில்லறை சிதறியது போல் சிரிப்பொலி எழுந்தது.

“”இன்னும் நேரமாகலையா?” என்ற குரலுடன் அம்மா அங்கே வரவும் அரக்கப் பரக்க இடத்தைக் காலி செய்துவிட்டு அவர்கள் ஓட வேண்டியதாயிற்று.
கல்லூரி நாள்களில் மட்டுமல்ல, விடுமுறையிலும் பொன்மணியின் வீட்டுக்கு வந்து போவதை வழக்கப்படுத்திக் கொண்டாள் தேன்மொழி. காரோட்டியைத் தவிர்க்க, மினி கார் ஒன்று வேண்டும் என பெற்றோர்களிடம் கேட்க, மறுநாளே புத்தம் புது நானோ காரின் சாவி அவள் கைக்கு வந்து சேர்ந்தது.

சில விஷயங்கள் கால நேரம் பார்ப்பதும் இல்லை. காத்திருப்பதும் இல்லை. பருவம் அப்படித்தான். காற்றைக் கடந்து போவது போல் எதிர்ப்படுகிற எல்லா சந்தர்ப்பங்களையும் எளிதில் தட்டிக் கழித்துவிட முடியாது. பரிதியால் மட்டும் இயலுமா என்ன? தனக்குள் துளிர்விடும் ஏதோ ஒன்றைத்தான் காதல் என்கிறார்களோ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். பெண் தேடும் பொறுப்பிலிருந்து அம்மாவை விடுவித்தது போலவும் இருக்கும்.

தேன்மொழியிடம் “ஐ லவ் யூ’ சொல்லிவிட வேண்டியதுதான் எனத் தீர்மானித்தபோது பெரிய இடத்துப் பெண் என்ற நினைப்பும் குறுக்கே வந்து நின்றது. அம்மாவிடம் ஆசையைச் சொல்லலாம்தான். “”தங்கச்சி ஒருத்தி இருக்கிறதை மறந்துட்டியா” என்ற பந்து திரும்பி வரும். தங்கைதான், உடன் பிறந்தவள்தான் என்றாலும் “கல்வியில் கவனம் வை’ என்று மட்டுமே அவனால் சொல்ல முடியுமே தவிர, “என் காதலுக்கு உதவி செய்’ என்று எப்படி கேட்டுக்கொள்ள முடியும்? ஆசை வெட்கம் அறியாது. குழப்பத்திலும் சகோதரியைச் சரணடைவதே சரியெனப்பட்டது.

இரவு மணி ஏழைக் கடந்திருந்தது. தனது அறையில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள் பொன்மணி. வேலை விட்டு வந்த பரிதி கைலிக்கு மாறியிருந்தான். பாத்ரூம் வரை போனவன் முகம், கை, கால்களைத் துடைத்தபடி அங்கே வந்தான். தனக்கு முன்னே அண்ணன் வந்து நிற்பதை அறிந்து படிப்பதை நிறுத்திவிட்டு தலை நிமிர்ந்தாள்.

“”அம்மா எங்கே போனாங்க?” என்றான் சற்றுத் தயங்கியபடி.

“”எனக்குப் படிக்கிறதுக்கு இடைஞ்சலா இருக்கும்னு பக்கத்து வீட்டு பாட்டியோட பேசிக்கிட்டிருக்காங்க”

“”காபி சாப்பிட்டாச்சா?”

“”காபி என்ன, சாப்பாடே ஆயிடுச்சு. உனக்கு காபி போட்டுத் தரட்டுமா?”

“”அம்மா வரட்டும்”

நாற்காலியை இழுத்துப்போட்டு எதிரே அமர்ந்தான். இதுபோல் ஒருபோதும் அவன் நடந்துகொண்டவன் இல்லை. அண்ணன் ஏதோ சொல்ல வந்திருக்கிறான் என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. உதட்டசைவுக்காக அவனை நேரிட்டபோது, “”உன்னோட நண்பி தேன்மொழி படிப்பெல்லாம் எப்படி?” என்றான் பீடிகையுடன்.

“”சூப்பர், பிரிலியண்ட்…படு சுறுசுறுப்பு”

“”அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணுன்னு நினைக்கிறேன்”

“”அட பரவாயில்லையே. கரெக்டா சொல்லிட்டியே”

“”எம்.ஏ. முடிச்சுட்டு என்ன பண்றதா உத்தேசம்?”

“”எதுக்குண்ணே சுத்தி வளைச்சுகிட்டு, “வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ’ன்னு எப்ப பாடப்போறன்னு கேட்டுற வேண்டியது தானே” என்றாள் அண்ணனின் மனதிலிருந்து பூனைக்குட்டி ஒன்று துள்ளி விழப்போவதை அறிந்தவளாக.

“”மணப்பந்தல்ல உட்காரப் போற மாப்பிள்ளை யாருன்னு பேசியிருப்பீங்க…”

“”அப்படி வா வழிக்கு…இதுவரை பேசிக்கலே. இனிமே பேசிட வேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

“”அப்படியெல்லாம் பேச வேண்டாம். படிப்பைக் கவனி…”

“”நான் ஒண்ணும் ட்யூப் லைட் இல்லே. புரிஞ்சுதான் பேசறேன். எனக்கு எவ்வளவோ செய்திருக்கே. இதைச் செய்றதுக்கு என்ன. அழகுச் சிலை ஒருத்தி மருமகளா வந்தா அம்மாவுக்கு கசக்கவா போகுது. ஆனா ஒண்ணு. நம்ம தரத்துக்கும், அவங்க தரத்துக்கும் சரிப்பட்டு வருமானு தெரியலே. எப்படியோ இன்னொரு கனமான ஏ.டி.எம். கார்டுக்கு ஆசைப்பட்டுட்டே” என்று புன்னகைத்தாள். அம்மா வந்து கொண்டிருக்கும் அரவம் கேட்டு மின்தடை ஏற்பட்டது போல பேச்சு நின்று போனது.

நாட்கள் சில கடந்திருந்தன. மயக்கும் மாலைப்பொழுது. கல்லூரி விட்டு வெளியில் வந்த சிநேகிதிகள் இருவரையும் சுமந்துகொண்டு கடற்கரை நோக்கிப் பறந்தது நானோ கார். பார்க்கிங் பக்கம் காரை நிறுத்திவிட்டு வங்கக் கடல் அருகில் மணற்பரப்பில் உட்கார்ந்தார்கள். தொட்டுப் பேச வருவதுபோல் வந்து வந்து போகும் அலைகளின் இசையை ரசித்துக் கொண்டிருந்த இனிய வேளையில் மெல்ல வாய் திறந்தாள் தேன்மொழி.

“”என்னமோ சொல்லணும்னு கூட்டி வந்தே. கம்னு இருக்க”

“”சொல்லத்தான் நினைக்கிறேன்…”

“”பரவாயில்லையே. பழைய சினிமாப் பேரையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்க”

“”தப்பா எடுத்துக்கமாட்டியே?”

“”நீ தப்பா சொல்லிட மாட்டியே. இவ்வளவு நாள் பழகி என்னதான் புரிஞ்சுகிட்டியோ…” சில மணித்துளிகள் மெüனம் நிலவியது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டவளாய்,”"என் அண்ணன் பரிதிய பார்த்திருக்க, பேசியிருக்க, அவனைப் பத்தி என்ன நினைக்கிற?”என்று கேட்டுவிட்டாள் பொன்மணி.

“”தலையைச் சுத்தி மூக்கத் தொடணுமா? பரிதியை பிடிச்சு இருக்கான்னு கேட்டுற வேண்டியதுதானே” என்று சட்டென பதில் வந்தது.

“”கரெக்ட் அதேதான்…”

“”தேன்மொழின்னு கூப்பிட்டு அலுத்துப் போச்சு உனக்கு. அண்ணின்னு கூப்பிட ஆசைப்படுறே. சரியா?”

“”ஆமா அண்ணி…இல்லே தேன்மொழி” என்று குழறினாள்.

“”நானே சொல்லிடலாம்னு நினைச்சேன்”

“”ஆகா பரிதி நீ ரொம்பக் கொடுத்து வச்சவன்டா” என்ற பொன்மணி மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாய் அவளை இறுகப்பற்றி நெற்றியில் முத்தமிட்டாள்.

எதிர்பாராத அரவணைப்பில் சிலிர்த்துப் போன தேன்மொழி,”"ஏய்…ஏய்…நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்தத் துள்ளு துள்ளுறே. அவசரப்படாமக் கேளு. எனக்குள்ளேயும் அப்படி ஒரு நினைப்பு துளிர்விட்டுச்சு. படிப்பு முடியட்டும். வீட்டுல சொல்லலாம்னு இருந்தேன். அதனாலேயே என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன். நானே ஓட்டிட்டுப் போறாப்ல சின்னக் கார் வேணும்னு அப்பாகிட்ட சொன்னேன். இருப்பது நாலு மணி நேரத்துல இந்தக் கார் சாவி என் கைக்கு வந்தது. யார் என்ன சொன்னாங்களோ, அவங்களே எடுத்த முடிவா தெரியலே. மாப்பிள்ளை தேடுற வேலையில பிஸி ஆயிட்டாங்க. அமெரிக்கா டாக்டர், இந்த வாரம் என்னை நிச்சயம் பண்ண வராங்க. என்ன அவசரம்னு கேட்க எனக்குத் தோணல. ஏன் தெரியுமா? என்னைப் பெத்து வளர்த்து, சீராட்டி படிக்க வெச்சு, நான் பிரியப்பட்டு கேட்டதெல்லாம் வாங்கித் தந்து, என் எதிர்காலம் பிரைட்டா இருக்கணும்னு நகை, நட்டு, நிலம், நீச்சுன்னு நிறைய சொத்து சேர்த்து வச்சிருக்காங்க. இப்ப போயி, “இது என்னோட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. என்னோட உரிமையில தலையிடுறதை அனுமதிக்க மாட்டேன்’னு வீம்பு பண்ணி சண்டை போட்டு என்னோட சொந்த விருப்பு வெறுப்புகளை அவங்க மேல திணிக்கிறது நல்லா இல்லேன்னு பட்டுச்சு. நம்ம மேல நமக்கு அக்கறை இருக்கோ இல்லையோ அவங்களுக்கு இருக்கும். காதல் கல்யாணம் பண்ணிக்கிறது. நல்லா அமையலேன்னா சீரழிஞ்ச பொழப்புத்தான் பொம்பளைக்கு. பெத்தவங்களை பகைச்சுப் போனவளுக்கு திரும்ப அவங்களைத் தேடி வர்றதுக்கு யோக்கியதை இல்லாமல் போயிடுது. பெத்தவங்க விரும்பி சேர்த்துக்கிட்டாலும் விரிசல் விழுந்தது விழுந்ததுதான். என்ன பொன்மணி பேச்சையேக் காணோம்” என்று நிறுத்தினாள்.

மணலைக் கிளறியபடி தேன்மொழியின் தெளிந்த பேச்சை அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்த பொன்மணி சுயநினைவு வந்தவளாய்த் தலை நிமிர்ந்தாள். “”ஆல் ரைட். நான் ரொம்ப மலிவா நெனச்சுட்டேன் போல. ஒளிக்காம கொள்ளாம வெள்ளந்தியா உன் மனசுல பட்டதைக் கொட்டிட்டே” பொன்மணியின் குரலில் இறுக்கமும், விரக்தியும் விரவியிருந்தன.

“காதல் என்பது பிரிவு வரை’ என்ற முடிவுக்கு வந்தவர்களாக அவர்கள் இருவரும் காரை நோக்கி நடந்தபோது வழக்கமான சிரிப்பும், கலகலப்பும் அவர்களிடம் காணாமல் போயிருந்தது.

- டிசம்பர் 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்தக் குழந்தை
வாழ்க்கையில் இரண்டு துன்பங்கள் உண்டு. ஒன்று, தான் விரும்பியதை அடையாமல் போவது; இரண்டு, தான் விரும்பியதை அடைவது என்று தனது நாடகம் ஒன்றில் எழுதியவர் அறிஞர் பெர்னாட்ஷா! விரும்புகிற வாழ்வை உருவாக்கிக்கொள்வது எல்லோருக்கும் எளிதல்ல. கிடைக்கின்ற வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சுலபமில்லை. ...
மேலும் கதையை படிக்க...
அந்தக் குழந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)