அவளுக்கு ஒரு கடிதம்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 25,605 
 

அன்று காதலர் தினம். காலேஜ் இளசுகள் மனதிலே இருக்கும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நன்நாள். சுரேஷ_ம் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். எப்படியாவது அவளிடம் அந்த வேலன்டைன் கார்ட்டைக் கொடுத்து விடவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். அவனது நண்பர்கள் நேற்று அவனிடம் வேடிக்கையாகச் சொன்னது ஞாபகம் வந்தது.

Aval -2

‘மச்சி…….இலவு காத்த கிளி ஆகிவிடாதே!……..நீ தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வேறு யாராவது கொத்திக் கொண்டு போகத் தயாரா இருப்பாங்க…..நாளைக்குக் காதலர் தினம். சந்தர்ப்பத்தை நழுவவிடாதே! மனதைத் திறந்து அவளிடம் பயப்படாமல் சொல்லிவிடு..’

கல்லூரியில் நடக்கும் எல்லாப் போட்டிகளிலும் அவர்கள் இருவரும் முன்னணியில் நிற்பவர்கள். பல பரிசுகளைக் கல்லூரிக்குப் பெற்றுக் கொடுத்தவர்கள். போட்டிகளில் வெற்றி பெறும்போதெல்லாம் ஒருவருக் கொருவர் பாராட்டிக் கொள்வார்கள். எதையுமே ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்ளும் அவளது மனப்பக்குவம் அவனுக்குப் பிடித்திருந்தது.

அதனாலோ என்னவோ அவனை அறியாமலே அவனுக்கு அவள்மேல் ஒருவித ஈர்ப்பு வந்தது.

மனம் திறந்து அவளிடம் சொல்ல விருப்பம் தான், ஆனாலும் நேரே சொல்ல ஏனோ அவனால் முடியவில்லை. மனத்தில் இருந்ததை வேலன்டைன் கார்ட்டில் வடித்தான்.
‘நான் உன்னை விரும்புகின்றேன். நீயும் என்னை விரும்பினால் என்னைப் பார்த்து ஒரே ஒரு புன்னகை பூத்துவிடு. வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன் உனக்காக! -சுரேஷ்.’

காலையில் எப்படியோ சந்தர்ப்பம் கிடைத்த போது கார்டை அவளிடம் சேர்த்து விட்டு வகுப்பறையில் அவளின் பதிலுக்காகக் காத்திருந்தான். ஒரு அசட்டுத் துணிவில் கார்ட்டைக் கொடுத்தானே தவிர அவனது மனம் என்னாகுமோ என்று தவித்துக் கொண்டே இருந்தது.

அவள் வந்தாள். வானத்தில் ஒளி தரும் நட்சத்திரம் பூமியில் உலாவருமோ? ஆமாம் அவள் பெயர் அருந்ததி. தனது மேசை அருகே போய் நோட்டு புத்தகங்களை வைத்து விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் ஆவலோடு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் காதலின் ஏக்கம் தெரிந்தது. இதற்கு மேலும் அவனைத் தவிக்க வைக்க அவளால் முடியாமல் போகவே அவனைப் பார்த்து மெல்ல ஒரு மோகனப் புன்னகை பூத்தாள்.

அப்படியே உறைந்து போனான். அவனால் நம்பமுடியவில்லை. நிஜமா? இது நிஜமா? அம்மி மிதிக்காமல் அருந்ததி பார்க்கிறேனா? கற்பனை உலகில் மிதந்தவன் தற்செயலாகத் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணுக்குள் ஒரு மின்னல் வெட்டிமறைந்தது போல இருந்தது.

அன்று இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. கண்ணுக்குள் அவள் முகம் தான் மலர்ந்தது. அவளின் அந்தப் புன்னகை படமாய் மனதில் பதிந்தது. அவளிடம் அப்படி என்ன கவர்ச்சி? அலட்சியமாய் நீண்டு முன்னால் தொங்கும் ஒற்றைப் பின்னலா? எடுப்பான அந்த நீண்ட நாசியா? இல்லை மருண்டு பார்க்கும் அந்த மான் விழிகளா? துள்ளும் நடையா? அவனுக்கு எதுவென்று புரியவில்லை!

மறு நாள் கல்லூரிக்குப் போகுமுன் அதிக நேரம் கண்ணாடிக்கு முன்னால் செலவிட்டான். தலை லேசாகக் கலைந்திருந்தது. வாரி விட்டுக் கொண்டான். ஜீன்சும் அதற்குப் பொருத்தமாக ஷர்ட்டும் அணிந்து கொண்டான். நன்றாக உடை அணிந்திருக்கிறோம் என்ற நினைப்பே அவனுக்கு ஒருவித கம்பீரத்தைக் கொடுத்தது.

காலையில் நேரத்தோடு வந்து கல்லூரி வாசலில் அவளுக்காகக் காத்திருந்தான். தனது ஃபிரண்டோடு கதைத்துக் கொண்டு வந்த அருந்ததி இவன் அங்கே நிற்பதைக்கூடக் கவனிக்காமல் உள்ளே சென்றாள். தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் அவள் அப்படிப் போனது அவனுக்கு என்னவோ போல இருந்தது. அவளது கவனத்தைத் தன் பக்கம் திரும்பாமல் செய்த அவளது தோழிமேல் கோபம் வந்தது. வகுப்பறைக்குள் நுழையும் போது அவள் முகத்தைத் துணிந்து பார்த்தான். அவள் முகத்தில் இனம்புரியாத ஏதோ கலவரம் தெரிந்தது.

பாடம் நடந்து கொண்டிருக்கும் போது பியூன் வந்து அவனை அதிபர் அழைப்பதாகச் சொன்னான். ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதைப் புரிந்து கொண்டான். அதிபரின் அறைக்குள் நுழைந்த போது, அவர் அவனைப் பார்த்த பார்வை நல்லதாக இருக்க வில்லை. அவர் கையிலே அவன் முதல் நாள் அருந்ததியிடம் கொடுத்த வேலன்டைன் கார்டு இருந்தது.

‘என்ன இது?’ என்றார் கோபமாக.

அவனுக்கு வியர்த்து விறுவிறுத்தது. நெஞ்சுக்குள் டிக் டிக் சத்தம் பெரிதாகக் கேட்டது. சிரிச்சுச் சிரிச்சு இப்படி மாட்டி விட்டுவிட்டாளே! விருப்பமில்லை என்றால் பேசாமல் என்னிடமே சொல்லியிருக்கலாமே!

அதுவரை மனதிற்குள் ஹீரோவாய் வாழ்ந்து கொண்டிருந்தவன் திடீரென தலைகீழாய் பாதாளத்தில் தள்ளிவிடப்பட்டது போல உணர்ந்தான்.

‘என்ன தலைகுனிஞ்சு நிக்கிறாய்? நீ செய்தது தப்புனு தெரியுதில்லே!’

‘ஒரு பெண்ணை விரும்புவது தப்பா? மனதிலே இருக்கும் விருப்பத்தை அவளிடம் நாகரிகமான முறையில் சொல்வது தப்பா?’

அவனுக்குள் ஒரு உத்வேகம் எழுந்தது. அவள்மேல் அவன் வைத்திருந்த அதீத காதல் அவனைப் பேசவைத்தது. அவன் எதையும் எதிர் கொள்ளத் துணிந்தான்.

‘நான் செய்தது தப்பாசார்?’ என்றான் அலட்சியமாக.

‘காலேஜிற்கு வருவது படிப்பதற்கு! காதலிப்பதற்கு அல்ல! இந்தக் காலேஜில் படிப்பிலும் சரி விளையாட்டுப் போட்டியிலும் சரி கெட்டிக்காரன் என்ற பெயர் எடுத்திருக்கின்றாய். அந்த நல்ல பெயரை இப்படியான செய்கையினால் வீணாக்காதே!’

‘தெரியும் ஆனால் படிப்பிற்கும் இதற்கும் ஏன் வீணாக முடிச்சுப் போடுறீங்?’

‘இந்த வயசுல இதெல்லாம் இருக்கிறது எனக்குப் பிடிக்காது..’

‘இந்த வயசில் காதலிக்காமல் வேறு எப்போ காதலிப்பதாம்?’

‘நீ அதிகமா பேசறே.. இந்தா பாரு.. அவளுக்கும் உன்னைப் பிடிச்சிருந்தால் நன்றாகப் படித்து நல்ல வேலை ஒண்ணு தேடிக்கொள். அப்புறம் வந்து பெண்ணு கேளு. தர்றேன். இப்போ இல்லே! இதை நான் இந்த காலேஜ் பிரின்ஸ்பலா சொல்லலே……அருந்ததியோட அப்பாவாகச் சொல்கிறேன்.’

அதிபரின் அறையை விட்டு வெளியே வரும்போது அவனுக்கு அருந்ததி மேல் கோபம் தான் வந்தது. அவள் கல்லூரி முடிந்து வீட்டிற்குப் போகும் போது வழிமறித்தான்.
அவனைக் கண்டதும் அவள் தயங்கி நின்றாள். முகத்தில் மருட்சி தெரிந்தது. காட்டிக் கொடுத்துவிட்டோமோ என்கிற குற்ற உணர்வு அவளைத் தலைகுனிய வைத்தது.

‘உனக்கு விருப்பம் இல்லை என்றால் கடிதத்தைத் திருப்பி என்னிடம் தந்திருக்கலாம்.. அல்லது அதைக் கிழித்துப் போட்டிருக்கலாமே ஏன் என்னை இப்படி மாட்டி விட்டாய்?’
அவள் குனிந்ததலை நிமிராமல் மௌனமாய் நின்றாள். கால்விரலால் நிலத்தில் கோலம் போட்டாள்.

Aval-3

‘நீ ஒன்றும் சின்னப் பெண்ணில்லை. நீ செய்வது சரியா தவறா என்று முடிவெடுக்க உன்னாலே முடியும். இந்த வயதில் ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவது எனக்கொன்றும் தப்பாகப்படல்லே. நான் ஒன்றும் உன்னிடத்தில் தவறாக நடக்கவில்லையே? பிறகு ஏன் என்னை காட்டிக் கொடுத்தாய்? ஏன் மௌனமாக நிற்கிறாய்? நீ செய்தது தப்புனு தெரியுதா? உனக்கு என்னைப் பிடிகலை என்று சொல்லி இருந்தால் நான் என் வழியில் போயிருப்பேனே!’

‘நான் உங்களைப் பிடிக்கலை என்று சொன்னேனா?’ அவள் முகம் நிமிர்ந்த போது விழியோரம் நீர் விளிம்பு கட்டி நின்றது.

அவன் ஒன்னும் புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றான்.

‘அருந்ததி நீ என்ன சொல்றே?’ நம்பமுடியாமல் கேட்டான்.

‘உங்க கோபம் எனக்குப் புரியுது. என்னை ஒருவர் விரும்புகிறார் என்று அம்மாவிடம் மட்டுமே சொன்னேன். ஆனால் பொறுமையே இல்லாத அம்மா அப்பாவிடம் அதைச் சொல்லிவிட்டாள். ஐ’யாம் ஸோ ஸாரி… எதிர்பாராமல் நடந்துடுச்சு. அப்பா உங்களைத் திட்டினாரா?’

‘ஆமாம்’ என்று அவன் தலையாட்டினான் பரிதாபமாக.

‘என்ன சொன்னாரு?’ ஏக்கத்தோடு கேட்டாள்.

‘நல்லா படிச்சுட்டு வந்து என் பெண்ணைக் கேளு, அப்போ பெண்ணைத் தர்றேன் என்றார்’.

‘அவர் அப்படிக் கேட்டது தப்பா?’

‘பின்னே… இவர் என்ன பெண்ணுக்கு சுயம்வரமா வைக்கிறார்?’

‘ஏன்… நம்ம நன்மைக்குத்தானே அவர் அப்படிச் சொன்னாரு!’

‘நம்ம..’ என்ற அந்த உரிமை அவன் மனதைத் தொட்டது. அவளது அன்பு அவனுக்கு மட்டும்தான் என்று அவள் சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.

‘எனக்கு நீதான் வேண்டும்… அருந்ததி… நான் உனக்காக எதையும் தாங்குவேன்.’

அவள் இமைகளை உயர்த்தி ‘முடியுமா?’ என்பது போல அவனைப் பார்த்தாள். அந்த விரிந்த கண்களுக்குள் அவன் தன்னையே பார்த்தான். தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனையில் நினைத்தானோ அந்த உருவம் நிஜமாக கண்முன்னால் நின்றபோது அவன் தன்னை மறந்தான்.

‘நிச்சயமாக நான் நன்றாகப் படித்து ஒரு இஞ்ஜினீயராக வருவேன். எனக்காகக் காத்திருப்பாயா?’

‘நிச்சயமாகக் காத்திருப்பேன்… உங்களுக்காக!’ நீட்டிய அவனது கையில் தனது வலது கையைப் பதித்து ‘ப்ராமிஸ்’ என்றாள்.

‘அவ்வளவுதானா?’ என்றான் மென்மையான அந்தக் கையை ஆசையாகப் பற்றியபடி.
‘வேறு என்ன வேண்டுமாம்?’ என்றாள் அவள் செல்லமாக.

‘நம்முடைய இந்தக் கணத்தின் ஞாபகமாக, நீ விருப்பப்பட்டு எது கொடுத்தாலும் சரி..’

‘ஐ லவ்யூன்னு சொல்லணுமா? ஏக்கத்தோடு காதுக்குள் மௌ;ளக் கேட்டாள்.

‘ம்ஹ_ம்… நினைச்சுக்கிட்டே இருக்கிற மாதிரி ஏதாவது…!’

அவள் முகம் நாணத்தால் சிவக்க அக்கம்பக்கம் பார்த்துவிட்டு சட்டென்று அவனது புறங்கையில் ஒரு முத்தம் கொடுத்தாள்!

Print Friendly, PDF & Email

1 thought on “அவளுக்கு ஒரு கடிதம்

  1. ஒரு நேர்மறைச் சிந்தனைகளை உள்ளடக்கிய காதல் சிறுகதை.
    நல்ல நடையில் எழுதப்பட்ட மனதில் நிற்கும் சிறுகதை.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *