Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அன்றில்

 

எனக்கு தெரியும் அப்பொழுதே” என்றபடி தனது பொருட்களை சேகரித்துக் கொண்டு கிளம்பினாள் நந்தினி. அவள் பின்னாலேயே சென்று கெஞ்சத் துவங்கினாள் சைந்தவி.

“கொஞ்சம் பொறு. எல்லாமும் நல்ல படியாகப் போய் கொண்டிருக்கிறது. இது ஒரு சின்ன விஷயம். இதைக் கையாள்வது சுலபம். நான் பார்த்துக்கொள்கிறேன். சொன்னால் கேள். ”

சொன்ன படியே நந்தினியின் கையிலிருந்த ட்ராவல் பையை வாங்கிக்கொண்டு மறுபடியும் படிகளில் ஏறி அறைக்குள் வந்தாள் சைந்தவி. இந்த மாதிரி நடப்பது நந்தினிக்குப் புதிதல்ல. ஆகையினால் சைந்தவிக்கும் அது பழகி விட்டிருந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றத்துடனேயே தான் எதிர்கொள்வாள் சைந்தவி. நந்தினி கிளம்பும் பொழுதெல்லாம் அவள் எங்கே தன்னை விட்டு செல்லத்தான் முனைகின்றாளோ என்ற பதற்றம் அது. ஆனால் ஆத்திரம் எல்லாமும் அரை மணி நேரம் தான்.

மறுபடியும் வந்து விடுவாள் நந்தினி. சைந்தவியை கட்டி கொள்வாள். அவள் கழுத்தை தன் கைகளால் ஊஞ்சாலாக்கிகொண்ட படியே ரகசிய குரலில் வினவுவாள்.

“நான் அப்படியே போய் இருந்தால் என்ன செய்திருப்பாய். . ?”

“நானா. . ?ஒன்றும் செய்ய மாட்டேன். நீயாக போனாய். நீயாகவே வருவாய் எனத்தான் காத்திருப்பேன்”

“சைந்தவி… என் மேல் உனக்கு கோபமே வராதா. . ?”

“வரலாம். ஆனால் அது உன்னால் தாங்கக்கூடியதாக இருக்காது. தவிரவும் நான் என் கோபம் உள்ளிட்ட எல்லாவற்றையும் உன் மீதான பிடிவாதமான அன்பாக மாற்றிக்கொள்கிறேன் அல்லவா. . ?”

இதை கேட்டதும் நந்தினிக்கு அது வரை இருந்த சுய இரக்கமெல்லாமும் ஓடிப்போய் விடும். சைந்தவியை கட்டி தழுவுவாள். அவளுக்கு கணக்கற்ற முத்தங்களை கொடுத்து திணறடிப்பாள். எல்லாவற்றிலுமே நிலம் சைந்தவி. நெருப்பு நந்தினி.

இன்றைக்கு நான்கு வருடங்களாயிற்று. நந்தினியும் சைந்தவியும் சேர்ந்து வாழத்தொடங்கி. அவர்கள் இரண்டு பேருக்கும் அவர்கள் இருவருமே பெண்கள் என்பதல்ல ப்ரச்சினை. ஆனால், தங்கள் முன் நின்று கண் மறைக்கக் கூடிய குடும்ப உறவுகள் என்றாலும் சரி. அல்லது தங்களுக்கு முன்னால் தனித்தனி கோரிக்கைகளாக நீட்டப்பெற்ற காதல் கடிதங்களாக இருந்தாலும் சரி. இரண்டு பேரும் விவாதிக்காமல் எடுத்த முடிவெல்லாமும் காதல்களை புறக்கணி. குடும்பத்தை அறுத்தெறி என்பதாகத் தான் இருந்தது.

நந்தினி தான் முதலில் உணர்ந்தாள். சைந்தவி உடல் நிலை சரியில்லை என தொடர்ச்சியாக 10 மாதங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள். அவர்கள் இருவரும் ஒன்றாகவே படித்தவர்கள். ஒன்றாக தங்கி சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள். நோய்மை தனியாய் தானே வரும். . ?

சைந்தவி வாடினாள். ஆனால் அதைவிட நந்தினி துடிக்கவே செய்தாள். சைந்தவி கிளம்பி தனது சொந்த ஊருக்கு செல்ல முற்பட்டவளை தடுத்தாள். அவளது அன்பு மழையில் அப்பொழுது நனையத் தொடங்கிய சைந்தவி,என்ன காரணத்துக்காகவும் அவளை அந்த அன்பை விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை.

நிரம்பிய கல்வியும்,தீர்க்கமாய் யோசிக்க கூடிய அறிவும் ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள் அந்த தோழியர். ஆனால்… இரண்டு பெண்களின் நட்பும் தோழமையும் காற்றுக்குமிழிகளாய் தான் அனுமதிக்கப்படுகின்றன. இரண்டு மனங்களை இரண்டு சிறைகளுக்குள் பூட்டும் விதமாகவும், ஒழுங்கு என்பதன் குறியீட்டாக குடும்பம் என்ற அமைப்பு பெண்களுக்கு காலகாலமாக செய்யக்கூடிய திருமணம் என்ற ஒன்றுக்கு மாற்று என்னவாயிருக்க முடியுமென்ற திகைப்பு ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்தது.

நந்தினி தான் சொன்னாள்” எதெதெல்லாம் இந்த நட்பை உடைக்குமோ. . அவற்றையெல்லாம் நாமிருவரும் சேர்ந்தே வாழ்வதன் மூலமாய் உடைப்போம். என்னை ஒருத்தனிடம் ஒப்புவிக்கும் கைது நடவடிக்கையை என்னால் ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. எனக்கு நீ. உனக்கு நான். . நம் இருவரும் வாழலாம். . என்ன சொல்கிறாய் சைந்தவி. . ?”

ஆழ்ந்த யோசனைக்கு பின்னதான மௌனத்தை உடைத்த சைந்தவி,ஆமாம் நந்தினி… தவறு என்ற ஒன்று இல்லவே இல்லை. சரி என்பதன் எதிர்ப்பதம் தவறு என்பது கற்பிதம். இரண்டு சரிகளாய் நாம் ஒரு புறம் இருப்போம். நம்மை ஏற்காதவர்கள் குறித்த கவலை வேண்டாம். அவர்கள் அந்தப் புறம் செல்லட்டும். ”

அவர்களிருவரும் குடும்பத்தை எதிர்கொண்டார்கள். உறவுகள் அழுதன. கண்ணீரால் மிரட்டின. அசிங்கமென்றன. தலை முழுகப் போவதாய் பயமுறுத்தின. ஆனால்,இந்த உலகத்திலேயே உறுதியான எதுவும் இரண்டு பெண்களின் இறுகப் பிடித்த கைகளுக்கு முன் நிற்க முடியாதென நிரூபணம் செய்தார்கள்.

உறவுகள் மெல்ல விலகிக்கொண்டன. பேச்சுவார்த்தைகள் குறைந்து அற்றுப்போயின. ஆனால் அந்த நேரத்தில் நந்தினியும் சைந்தவியும் பாறைகளாக இறுகினர். தண்ணீராய்க் கலந்தனர். அவர்கள் இரண்டு பேரும் தங்கள் வீட்டை அலங்கரித்தனர். அவர்கள் வாழ்க்கை அவர்களை அலங்கரித்தது.

இத்தனை வருடங்களுக்கு பிறகு,மிகச் சமீபமாக சைந்தவி தன் ஊருக்கு சென்று தன் வீட்டாரை பார்க்க செல்வதாகச் சொன்ன பொழுது நந்தினி எதுவுமே சொல்லவில்லை. அவள் சென்று வந்த பிறகு அவளிடம் சின்ன சின்ன மாற்றங்களை அவள் கவனிக்காமலும் இல்லை. அவளது அண்ணன் அவளுக்கு தினமும் இரண்டு முறை அல்லது மூன்று முறை செல்லில் பேசுகிறான். அது அவள் இஷ்டம். என அந்த பேஸ்சில் கலந்து கொள்ளாமல் சற்று தள்ளி நின்று கவனித்தாள்.

சைந்தவி அவள் குடும்பத்தினர் தன்னை இந்த செயலுக்குப் பின்னர் ஏற்றுக்கொண்டதாகவும் இதைக் குறித்து இப்பொழுதைக்கு அவர்கள் எந்த குறையும் சொல்லவில்லை எனவும் முதலில் சொன்னாள்.

சாப்பிடும் பொழுது, “என் அண்ணா என் மேல் உயிரையே வைத்திருக்கிறான். “என்றாள். நந்தினி எதுவும் மொழியவில்லை.

இரவு உறங்கும் தருவாயில்”என் அம்மா என்னை வாரம் ஒரு முறை வர சொல்லி இருக்கிறாள்:” என்றாள்.

நந்தினி”அது உன்னிஷ்டம். உன்னைக் கட்டுப்படுத்த முயல மாட்டேன்”என்ற படி விளக்கை அணைத்து விட்டு உறங்க முயன்றாள். அன்றைக்கு எப்பொழுதும் போல தன் இடையில் தழுவிக்கொண்ட சைந்தவியின் கையை தூர விலக்கினாள்.

இருவரும் ஒன்ருமே பேசிக்கொள்ள வில்லை. மறுநாள் விடுமுறை. இரண்டு பேருமே எதுவுமே நடக்காதது போலவே எழுந்ததில் இருந்து வீட்டை சுத்தப் செய்தார்கள். பழைய பேப்பர்களை எடைக்கு போட எடுத்து சென்றாள் நந்தினி.

இறைச்சி வாங்கி வந்து அதை தயார் செய்தாள் சைந்தவி. க்ளீனரால் வீட்டை சுத்தம் செய்தாள் நந்தினி. உடைகளை வாஷரில் போட்டு எடுத்தாள் சைந்தவி.

வேலைகளை முடித்து விட்டு மதியம் உணவை முடித்து குட்டியாய் ஒரு தூக்கம் போட்டாள் நந்தினி. அவளது உறக்கம் கலைந்த பொழுது சைந்தவி அழுது கொண்டு இருப்பதை கவனித்தாள்.

போர்வையை விலக்காமல் கவனித்தாள். சைந்தவி தனது அண்ணனிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறாள். அதனூடே அழுகிறாள் என்று புரிந்தது. பிரிதொரு சமயமென்றாள் நந்தினி சைந்தவியை கட்டி அணைத்து அந்த அழுகையை நிறுத்தியிருப்பாள். அல்லது அதற்கு முயன்றுமிருப்பாள்.

ஆனாள் அன்றைக்கு வெறுமனே கவனிக்க துவங்கினாள். “இல்லை அண்ணா… . எனக்குப் புரிகிறது. எனக்கு நந்தினி யை விட்டுத்தரவே முடியாது… என்னை புரிந்துகொள்”

அதற்கு மறுமுனையில் அவள் அண்ணன் பேசியதன் பிறகு “அண்ணா… . நான் சமுதாயத்துக்குள் வரவில்லை. சமுதாயம் எனக்குள் வராது. ஆனாள் அதை நான் அமைப்பேன். அல்லது முயல்வேன். இந்த பேச்சை விட்டுவிடலாம். நான் உங்களை,அம்மாவை மறக்கவே மாட்டேன். ஆனால் எனக்கு எல்லாமே என் நந்தினிக்கு பிறகு தான்” என்றபடி வைத்து விட்டாள்.

அதன் பின் கொஞ்ச நேரம் கழித்து தான் நந்தினி தன் உறக்கத்தை கலைத்தவள் போல எழுந்தாள். எதுவுமே நடக்காத மாதிரி சைந்தவியும் நடந்து கொண்டாள். அதன் பின் இரண்டு பேருமே இயல்பாகவே தங்களுக்கு விருப்பமான நொறுக்குத்தீனிகளை கொறித்தபடி மெல்லிய இசையொன்றைக் கேட்கலானார்கள்.

அன்றைக்கு இரவு எதுவும் ப்ரச்சினையின்றி தூங்க துவங்கினர். இன்றைய தினம் காலையில் அலுவலகத்திற்கு கிளம்பிச்செல்கையில் வழக்கமாக சைந்தவி இறங்ககூடிய அவளது அலுவலக வாசலை தவிர்த்து விட்டு இரண்டு கிலோமீட்டர்கள் முன்னாலேயே இறங்கிக்கொண்டாள். நந்தினி ஏன் எனக் கேட்கவில்லை.

அன்றைக்கு மாலை திரும்பி வரும் வழியில் சைந்தவியின் அலுவலக வாசலில் காரை நிறுத்திய நந்தினி அவளது எண்ணை செல்லில் முயர்ச்சித்த பொழுது அது அணைக்கப்பட்டிருந்தது. மேலே சென்று அவளது அலுவலகத்தில் விசாரித்த பொழுது சைந்தவி இன்றைக்கு விடுமுறை என சொல்லப்பட்டது. அதையும் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நந்தினி அன்று வீடு திரும்பிய பின்னர் சைந்தவி தன்னிடம் அன்றைய விடுப்பை குறித்து எதாவது கூறலாம் என எதிர்பார்த்தவள் பொறுக்க மாட்டாமல் கேட்டே விட்டாள்.

“இன்னிக்கு ஏன் அலுவலகம் செல்லவில்லை. . ?”

“சும்மா தான் மனசு சரியில்லை… . செல்லவில்லை. ”

“சைந்தவி. . நீ வீட்டுக்கும் வரவில்லை. மனசு சரியில்லை என்கின்றாய்… என்ன ஆயிற்று. . ?”

“ஒன்றுமில்லை நந்தினி. . விடு. . ”

“எதை விட சொல்கிறாய். . ?நமக்குள் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ள நம் இருவருக்குமே பொதுவான உரிமை இருப்பதாகவே எண்ணுகிறேன். என்ன சொல்கிறாய்… ?”

“அய்யோ நந்தினி. . விடு என்றால் விடேன்… நான் என் குடும்பத்தாருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்றிருந்தேன். . சொன்னால் பரிகாசிப்பாய். . அதான் சொல்லவில்லை. . ”

“அப்படியா. . ?நல்லது. . குலதெய்வம் வரை செல்ல துவங்கிவிட்டாய்… நல்லது. . முதலில் உன் அண்ணன்… பிறகு உன் அம்மா… இப்பொழுது குலதெய்வம்… . நல்ல சேர்மானம் தான்… என்ன நடக்கிறது சைந்தவி. . ? ஒரு ஆணும் பெண்ணும் காதலித்தால் முன்னும் பின்னும் என்னென்ன குழிகளை இந்தச் சமூகம் வெட்டுமோ. . அதையே தான் நம்மிருவரின் இணைவாழ்க்கைக்கும் முன்னால் வெட்டி வைக்கிறது. என்னை விட உறுதியானவள் என இத்தனை நாள் நம்பியிருந்தேன் உன்னை. ஏன் இன்னும் சொல்லப் போனால்… உன் ஆரம்ப உறுதியின் மீது கட்டப்பட்டட்துதான் நம்மிருவரின் இந்த வாழ்க்கை… ஆணிவேரான அந்த உறுதி இப்பொழுது குலையத் தொடங்குகிறதா. . ?”

அமைதியாக இருந்தாள் சைந்தவி. .

“சைந்தவி… சற்று யோசி… மீறல் என்பதன் மீதான விருப்பம் அல்ல நாம் இணைந்தது. அது எத்தனை இயல்பாக நேர்ந்தது என எண்ணிப்பார்… இப்பொழுது உனக்கு வீடுதிரும்புதல் மீதான விருப்பம் மெல்லத் துளிர்விட்டிருக்கிறது என அறிகிறேன். அது உண்மையானால் அதை நான் எதிர்க்கவே மாட்டேன். ஆனால் நான் திரும்பிச் செல்ல வீடு என்ற ஒன்று இல்லை. அது எனக்குத் தேவையும் இல்லை. உன் இஷ்டங்களின் தொகுப்பாய் தான் நான் இருக்க விரும்புகிறேன். நம்மை,நமது நட்பிற்குப் பிறகான உறவை புரிந்து கொள்ள முடியாதவர்கள் மீது பரிதாபம் கொள்ள தொடங்கியிருக்கிறாய் சைந்தவி. . இந்தப் பரிதாபம் மெல்லக் கொன்று விடும் விஷம் என்பதை நீ அறியாமல் இருப்பது தான் வேடிக்கை. . என்ன செய்யப் போகிறாய். . ?சொல்லிவிட்டே செய்யலாம் நீ”

தன் கையிலிருந்த மறுதோன்றி கோலத்தினடியில் மறைந்திருந்த ரேகைகளைக் கண்டுபிடித்து விடும் உத்தேசத்தில் தனது கையையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள் சைந்தவி

“நந்தினி… என் குடும்பத்தார் என் மீது காட்டும் மீள் அன்பைப் புறந்தள்ள என்னால் முடியவில்லை. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்… ?உன்னை விடவே மாட்டேன். நீ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைக்கவே இயலவில்லை. அது வேறு. ஆனால் என் குடும்பத்தாரை என்னால் வெறுக்க இயலவில்லை நந்தினி. உன் குடும்பம் உன்னை வெறுக்கிறது என்பதற்காக. . ”

பேசிக்கொண்டிருக்கும் பொழுதே “எனக்குத் தெரியும் அப்பொழுதே என்றபடி தன் பொருட்களை சேகரித்துக் கொண்டு கிளம்பினாள் நந்தினி. அவள் பின்னாலேயே சென்று கெஞ்சத் துவங்கினாள் சைந்தவி.

இந்தக் கதை மிகச்சரியாக அந்த நேரம் அந்த இடத்தில் தான் தொடங்கியது. தனது கைப்பிடிக்குள் இறுகியிருந்த நந்தினியிடம் கிசுகிசுத்த குரலில் கேட்டாள் சைந்தவி.

“என்னை சந்தேகப்படுகின்றாயா… ?”

“இல்லை. என் சைந்தவி நீ. . ”

“பிறகென்ன… ?ஏன் இந்த கோபம். . ?”

“என் மீது நீ காட்டும் அன்பை யாரிடமும் நீ காட்டாதே… தயவு செய்து… ”

“நந்தினி… . நாம் இந்த இல்லத்துக்கு சில விருந்தாளிகளைக் கூட்டிக்கொண்டு வருவோமா. . ?”

“நீ சொன்னால் சரி. . அழைத்து வருவோம்… ஆமாம்… யாரை. . ?”

“அது சஸ்பென்ஸ்… “என்றாள் சைந்தவி. .

அதற்குப் பிறகு தான் அந்த இல்லத்தில் எங்களைக் கொண்டு வந்து குடியமர்த்தினார்கள் அவ்விருவரும். கூண்டுக்குள் நாங்கள் மொத்தம் 4 பேர் இருக்கிறொம். காதல் பறவைகள் என்று எங்களை அழைப்பர். எங்களைக் கொஞ்சுவதில் நந்தினிக்கு சற்றும் சளைத்தவளல்ல சைந்தவி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)