அது அந்தக்காலம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 16,594 
 

தேதி:2/01/1971

அன்புடையீர் வணக்கம்! இந்தக்கடிதம் கண்டவுடன் நீங்கள் யார் எழுதியது என குழம்பிக்கொள்ள வேண்டாம். போன வாரம் வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டிற்கு வந்து பஜ்ஜி, வடை, காப்பி சாப்பிட்டுவிட்டு காரம் கொஞ்சம் தூக்கல் என்று அந்தக் கூட்டத்தில் உமது அம்மையார் ஏதோ பெரிய விஞ்ஞானியைப்போல அறிவித்தார்களே அப்படி சத்தம் போட்டு சொல்லிவிட்டு என் அப்பாவிடம் ஏதோ இரகசியம் போல முணுமுணுத்துவிட்டு, உம்மையும் எழுப்பிவிட்டு கூட்டிசென்றார்களே, நீரும் செம்மறியாடு தலை குனிந்து போவது போல உம் அம்மையாரின் பின் சென்றீர்களே !

அந்த வீட்டில் கொலு பொம்மையாய் நின்று உமக்கும்,உம் அம்மையாருக்கும், மற்றும் சுற்றி உள்ள்வர்களுக்கும் என் முழங்கால் வலிக்க வணக்கம் தெரிவித்த இந்த பாக்கியலஷ்மி எழுதிய கடிதம் இது. ஒரு வாரமாய் பதிலொன்றும் சொல்லாமல் தேமே.. என்று இருக்கிறீர், என் வீட்டில் அடுத்த ஆளுக்கு என்னை மீண்டும் கொலு பொம்மையாக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ உம்மிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதாய் நினைத்து பிகு பண்ணாமல் உமது பதிலை விரைவில் தெரிவிப்பீராக..

இங்கனம்
உம்மிடம் பஜ்ஜி,சொஜ்ஜிக்கு காசு வாங்காத
பாக்யலஷ்மி.

தேதி:10/01/1971

உங்கள் கடிதம் கிடைத்தது, அன்று உங்கள் வீட்டில் வழங்கிய அந்த பஜ்ஜியின் விளைவால் எனது அம்மையார் மருத்துவமனைக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இப்படி எனது அம்மையார் உங்கள் வீட்டு பஜ்ஜியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் போது நான் உன்னை பிடித்திருப்பதாக்கூறினால் எனக்கு தினந்தோறும் வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து வகையான வசதிகளும் நிறுத்தப்பட்டுவிடும்.அதற்காக பஜ்ஜியை காரணம் காட்டி வீட்டுக்கு வரும் பாக்கியத்தை விட்டுவிட நான் தயாராக இல்லை.தயவு செய்து ஒரு வாரம் பொறுக்க.

குறிப்பு: அன்று உமது தந்தையிடம் எனது அம்மையார் முணுமுணுத்தது பெண்பார்க்க வரும் வண்டி செலவை அவரே ஏற்றுக்கொள்வதாக தரகா¢டம் சொல்லிவிட்டு தராமல் வாயை மூடிக்கொண்டிருந்ததால் எனது அம்மையார் அவரிடம் ஞாபகப்படுத்தினார்.

உமது தந்தையார் இப்படி சொல்லிவிட்டு செய்யாமல் இருந்தது என்ன நியாயம்?

இப்படிக்கு
உங்கள் வீட்டு பஜ்ஜியால் பர்ஸ் காலியான
நாராயணன்.

தேதி:18/01/1971

உமது கடிதம் கிடைத்தது. உங்கள் அம்மையாருக்கு உடல்நிலை சா¢யில்லாமல் போனதற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் எங்கள் வீட்டு பஜ்ஜியினால்தான் உங்கள் அம்மையாருக்கு உடல் நிலை கெட்டதாக கூறியிருக்கிறீர், அதுதான் எனக்கு புரியவில்லை. நீரும் உமது அம்மையாரும் ஒரு முறை நான் வேலை செய்யும் அலுவலகத்தில் உள்ள காண்டீனில் நான்கைந்து பஜ்ஜியை முழுங்கிக்கொண்டு என்னைப்பற்றி விசாரித்திருக்கிறீர்கள். அப்பொழுதெல்லாம் கெடாத உடம்பு அதே காண்டீனில் செய்த பஜ்ஜியை பெண்பார்க்கும் அன்று சாப்பிட்டு எப்படி உடம்பு கெட்டுப்போகும்?.

இப்படியெல்லாம் எங்கள் வீட்டின் மீது வீண் பழி சுமத்தாதீர்.

குறிப்பு: பெண் பிடித்திருக்கிறதா இல்லையா என தெரிவிக்க காலம் கடத்தும் நீர் எதற்காக நான் வேலை முடிந்து பஸ ஏறிச்செல்வது வரை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்?

இப்படிக்கு
உமது புகாரால் பாதிப்படைந்த
பாக்கியலஷ்மி.

தேதி:28/01/1971

நான் ஒளிந்திருந்து தங்களை பார்ப்பதாக ஏதோ நோ¢ல் பார்த்த்து போல் எழுதியுள்ள பெண்ணே ! நான் எனது நண்பனுக்காக அங்கு காத்திருந்தேன் என்று சொன்னால் நம்பவா போகிறாய் ! நேற்றே உங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லிவிட்டதாய் எனது அம்மையார் சொன்னார்கள். ஆகவே ஒளிந்திருந்து பார்க்கவேண்டிய அவசியம் இப்பொழுது எனக்கில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் அன்று என் நண்பணுக்காகத்தான் காத்திருந்தேன் என்று எங்கு வேண்டுமானாலும் வந்து சத்தியம் செய்கிறேன்.

வரும் பிப்ரவரியில் நீ எனது மனைவியாக ஆவதால் தற்பொழுது நான் தரும் அறிவுரை என்னவென்றால் பஜ்ஜியை உங்களது கேண்டீனில் வாங்கி வந்து எங்களுக்கு அளித்தது போல் மாப்பிள்ளை விருந்துக்கு வரும்போது அளிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளும்

உன்னை கட்டிக்கொள்ளப்போகும்
(அ)பாக்கியவான்.
நாராயணன்.

தேதி:02/02/1971

உமது கடிதம் கிடைத்தது. ஏதோ பஜ்ஜியினால் உமது குடும்பம் பாதித்தது போல் எழுதியிருக்கிறீர். கவலைப்படவேண்டாம், மாப்பிள்ளை விருந்துக்கு எங்கள் காண்டீன் பஜ்ஜி வைப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். ஆனால் அன்று எங்கள் கேண்டீனில் என்ன ஸ்பெசல் செய்திருந்தாலும் கண்டிப்பாய் உமது இலையில் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்னும் பத்து நாட்களுக்குள் நீர் எனது கணவனாக பதவி உயர்வு பெறுவதால் நாளை மறுநாள்(4/02/1971) எங்கள் அலுவலக நண்பர்களுக்கு எங்கள் காண்டீனில் செய்யப்பட்ட இனிப்பு வழங்க உத்தேசித்துள்ளேன், அச்சமயம் நீரும் இங்கு வந்து உமது புன்னகை முகத்தை என் நண்பர்களுக்கு காட்டிச்செல்லவும் என்று அன்புடன்
ஆணையிடும் உங்கள்…..

வெட்கத்துடன்
பாக்யலஷ்மி.

இன்று:

என்னடி பண்ணிட்டு இருக்கறாரு உன் அப்பா, பீரோவை நோண்டி பழைய கடிதாசியெல்லாம் படிச்சிட்டு உட்கார்ந்திருக்கறாரு ! பேத்திய பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு கொஞ்சமாவது படபடப்பு வேணாம்மா.. போய் வாசல்ல நின்னு வர்றவங்களை வாங்கன்னு கூப்பிடச்சொல்லு.

Print Friendly, PDF & Email

2 thoughts on “அது அந்தக்காலம்

  1. கதை . நல்ல விறுவிறுப்பாக இருக்கிறது. அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *