அணுகுதல்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 26,498 
 

மூத்த மகள் ராதிகாவின் ஆங்கில அகராதியை எடுத்து புரட்டியபோது, கீழே விழுந்த கடிதத்தை எடுத்துப் படித்தார் சுந்தரம்.

என் இனியவளுக்கு,

இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் ரகசியமாக குறுஞ்செய்திகளையும், கடிதங்களையும் பரிமாறிக் கொள்வது? எனக்கு நம் காதல் போரடிக்கிறது. சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ளலாம். உன்னுடைய அருகாமைக்காக என் மனசும், உடம்பும் தவிக்கிறது. நான் உன் தந்தையை நேரில் பார்த்து பேசட்டுமா?

கடந்த பவுர்ணமி இரவு டி.வி யில் தமிழ்ச் செய்திகள் முடிந்ததும், மொட்டை மாடிக்கு வந்து நிலாவையும், நட்சத்திரந்தளையும் பார்த்தாயா? நான் பார்த்தேன். நாம் எப்போது சேர்ந்து பார்ப்பது? நம் திருமணத்தின் மூலம் உன்னை முழுமையாக என் ஆளுமைக்கு
உட்படுத்திக்கொள்ள தவிக்கிறேன் ராது. நாளை உன்னை செல் போனில் அழைக்கிறேன்.

முத்தங்களுடன்,
என்றென்றும் உனக்கு
இனியவன்.

கடிதத்தை படிக்கும்போதே சுந்தரத்திற்கு உடம்பு பதறியது. என் அருமை மகள் ராதிகாவா இப்படி? இது எத்தனை நாட்களக நடக்கிறது? தான் இவளை மிகவும் நம்பியது தவறா? இன்னும் ஒரு வருடத்தில் ரிடையர்ட் ஆகப்போகும் தான், இதுகாறும் இவளுக்கு திருமணம் செய்து வைக்க முனையாதது ஏன்? இவளின் சம்பாத்தியம் தரும் சுகமா? அல்லது இவளுக்கு கீழே இருக்கும் இரண்டு தங்கைகளின் கல்லூரி படிப்புச் செலவிற்கான எதிர் பார்ப்பா? ஒருவேளை தன் இயலாமையா? என்கிற ரீதியில் மனம் வெதும்பினார்.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினாள் ராதிகா. சுந்தரம் தன் மகள் தனக்கு அன்னியமாகி விட்டதைப்போல் உணர்ந்தார்.

அவளருகே சென்று, தொண்டையைச் செருமிக்கொண்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“இத பாரும்மா, நான் உன் ஆங்கில அகராதியை இன்று காலை புரட்டியபோது, அதனுள் இருந்த இந்தக் கடிதத்தை படிக்க நேரிட்டது.”

கடிதத்தை அவளிடம் நீட்டினார். அதைப் பார்த்த ராதிகாவின் முகம் மாறியது.

“உனக்கு வயசு இருபத்தியேழு. இதுவரை உனக்கு திருமணம் செய்து வைக்காததும், நான் அது பற்றிய பேச்சையே எடுக்காததும் என் தவறுதான். ஆனா தயவுசெய்து இந்தக் காதல் கீதல்லாம் நம்ம குடும்பத்துகு வேண்டாம்மா. உங்களையெல்லாம் நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி, நல்ல இடங்களில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில்தான், உன் அம்மா இறந்த பிறகு நான் இன்னோரு திருமணம் செய்துகொள்ளவில்லை… என்னுடைய நம்பிக்கைகளையும், எதிர் பார்ப்புகளையும் பொய்யாக்கிவிடாதே ராதிகா, ப்ளீஸ்” கண்கள் கலங்க அவள் கைகளைப் பற்றிக் கொண்டார்.

அவளை தன் மனைவியின் புகைப் படத்திற்கு எதிரே நிற்க வைத்து, “நீ இனிமே அவன சந்திக்க மாட்டேன், அவனுக்கு கடிதம் எழுத மாட்டேன், காதல், கத்தரிக்கான்னு நம் குடும்பத்துக்கு எந்தவிதமான கெட்ட பெயரையும் உண்டாக்க மாட்டேன்…நான் பார்த்து முடிவு செய்யும் பையனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்னு உன் அம்மாவின் மீது எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு” கெஞ்சும் குரலில் வேண்டினார்.

நிலமையின் தாக்கத்தை ராதிகா உணர்ந்தாள். தன்னிடம் யாசிக்கும் தன் தந்தையை எண்ணி மனம் கூசினாள். ஒரு கணம் யோசித்தாள். அடுத்த கணம், காதலின் வேகம் அடிபட்டுப் போய், மிகுந்த வேதனையுடன் சத்தியம் செய்து கொடுத்தாள்.

மறு நாள். அலுவலகத்தில் இருந்த ராதிகாவை தொடர்பு கொண்டு பேசினான் அவளுக்கு இனியவன். ராதிகா முந்தைய தினம் தன் வீட்டில் நடந்தவற்றையும், தன் இயலாமையையும், தந்தையிடம் செய்து கொடுத்த சத்தியத்தையும் சொல்லி அழுதாள்.

இரண்டு வாரங்கள் சென்றன.

மகள் செய்து கொடுத்த சத்தியத்தினால் நிம்மதியடைந்த சுந்தரம், அவளுடைய திருமணத்திற்கான முழு மூச்சில் இறங்கினார். ஜாதகப் பரிமாறல்கள் வேகமாக நடந்தன.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை, ராகு காலம் முடிந்த பிறகு ராதிகாவைப் பெண் பார்க்க வந்தார்கள். ராதிகாவை அழகு செய்ய பக்கத்து வீட்டுப் பெண்கள் வந்தனர். சுந்தரம் படபடப்புடன் இருந்தார். இது மாதிரியான சந்தர்ப்பங்களில், மனைவி இல்லாததின் வெறுமையை வெகுவாக உணர்ந்தார்.

வந்தவர்கள், கல்யாணத்தை சிறப்பாக நடத்தினால் போதும், வேறு எதுவும் வேண்டாம் என்றார்கள். தாம்பூலம் மாற்றிக் கொண்டு திருமணத்திற்கு நல்ல நாள் குறித்துவிட்டுச் சென்றார்கள்.

அவர்கள் சென்ற பிறகு சுந்தரம், ராதிகாவின் கைகளைப் பற்றிக் கொண்டு, “ரொம்ப சந்தோஷம் ராதிகா, அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நீ மீறவில்லை… நீ இப்ப பார்த்த பையன் முரளி ரொம்ப நல்லவன்மா, நல்ல குடும்பம், போன வாரம் என்னோட அலுவலகத்துக்கே நேரில் வந்து என்னை சந்தித்து பேசினான்.” என்று நெகிழ்ந்தார்.

ராதிகாவின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது.

மாடியறையில் முதலிரவு.

ராதிகாவின் புதுக் கணவன் முரளி, “பார்த்தியா ராது, எல்லா பெற்றோர்களுக்கும் காதல் என்கிற வார்த்தையே கசக்கத்தான் செய்கிறது. உண்மையான காதலுக்கு அஸ்திவாரம் நேர்மையான அணுகுதல்தான். காதலிப்பது தப்பல்ல… அனால் அதை உடனே காதலர்கள் தன் பெற்றோர்களிடம் சொல்லி தங்கள் காதலைப் புரிய வைக்க வேண்டும். அவர்களின் புரிதலுக்கும், அனுமதிக்கும் காத்திருத்தல் வேண்டும். உண்மையான காதல் என்றைக்கும் தோல்வியடையாது. தன் மகளோ, மகனோ ஒரு நல்ல குடும்பத்தில் மணமுடிக்க வேண்டும், சிறப்பாக வாழ வேண்டும் என்பதுதான் பெற்றவர்களின் குறைந்த பட்ச எதிர் பார்ப்பு. அது மிகவும் நியாயமான எதிர் பார்ப்புதானே…

“…….”

“நான் முதலில் என் பெற்றோர்களிடம் பேசி சம்மதம் வாங்கினேன். பின்பு உன் அப்பாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, என்னுடைய படிப்பு, வேலை, குடும்பம் பற்றிய விவரங்களைச் சொல்லி உன்னை மணந்து கொள்ளும் ஆர்வத்தைச் சொன்னேன்.

என் அப்பாவும், அவரிடம் போனில் பேசி, ஞாயிற்றுக் கிழமை நாங்கள் அனைவரும் உன்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார். நாம் காதலர்கள் என்பதை மட்டும் உன் அப்பாவிடம் சொல்லாமல் அப்போது மறைத்து விட்டேன். நாளைக்கு நாம் அவரிடம் உண்மையைச் சொல்லிவிடலாம்.” சிரித்தான் அவளுக்கு இனியவன்.

“என்னுடைய வாழ்க்கையின் மிக மகிழ்ச்சிகரமான தருணம் இதுதான் முரளி” அவன் மார்பில் சாய்ந்து கொள்ள ஆயத்தமான ராதிகாவைத் தடுத்து, “அவசரப்படாத, முதல்ல நாம ரெண்டு பேரும் சேர்ந்து வானத்தில் நிலாவையும், நட்சத்திரங்களையும் சேர்ந்து பார்க்கலாம் வா.” என்றான்.

கதவைத் திறந்து கொண்டு இருவரும் பால்கனியில் நின்று வானத்தை நோக்கினார்கள்.

Print Friendly, PDF & Email

1 thought on “அணுகுதல்

  1. ஒரே நேர் கோட்டில் காதலின் சிறப்பைச் சொல்லும் அருமையான கதை.
    ஜனனி ராம்நாத், திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *