அங்கீகாரம்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 12,364 
 

பிரபாகரன் சங்கடமாக உணர்ந்தான். அறை வாசலை “உள்நோக்கத்துடன்தான்’ திறந்து வைத்திருந்தான். ஓர் இணை இயக்குநர் படத்தின் நாயகிக்கு வசனமும், காட்சியின் அழுத்தமும் சொல்லிக்கொடுப்பது வழக்கம். என்றாலும், அவுட்டோர் வந்த இடத்தில் இரவு நேரத்தில் தங்கியிருக்கும் லாட்ஜின் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு டயலாக் சொல்லிக்கொடுப்பது யூகத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்திருந்தான். அதனால்தான் கதவை திறந்து வைத்தான். ஆனால் அதற்கு அர்த்தம் இல்லாதது போலிருந்தது நாயகி ராகினியின் பார்வை.

அங்கீகாரம்அவனைத்தின்று விடுவது போல பார்த்தாள். கண்களில் கள்ளம். கையில் இருந்த பேப்பரை கீழே வைத்துவிட்டு அவளை முறைத்தான் பிரபாகரன். இது கோபப்படும் தருணம் அல்ல.

நிதானமாகப் பேசினான்.

“”ராகினி நாளைக்கு க்ளைமாக்ஸ். நாலு பக்க டயலாக் பேசணும். அதப்பத்தி நீ அலட்டிக்கிட்ட மாதிரி எனக்குத் தோணல. ஷூட்டிங்ல சொதப்பின டைரக்டர் என்னை தொலைச்சிடுவார். ப்ளீஸ் இங்க கவனம் வை” என்றான் கெஞ்சலாக.

படப்பிடிப்புத் தொடங்கிய இந்த ஆறு மாதங்களில் ராகினிக்குத் தன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருப்பதையும் அதை அவள் சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதையும் உணர்ந்தே இருந்தான். ஆனால் அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது குறித்து அவன் சிந்தித்தது கூட இல்லை.

நடிகையைக் காதலித்து கைப்பிடிப்பதற்காக அவன் கும்பகோணத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வரவில்லை. அவனுக்கென்று லட்சியம் இருந்தது. வெறி இருந்தது. சாதிக்கும் எண்ணம் இருந்தது. தமிழ் சினிமா குறித்தான ஒரு பார்வையும், திரைப்படம் குறித்தான வித்யாசமான ஒரு கோணமும் இருந்தது. அதன் காரணமாகத்தான் ராகினியின் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் விலகி இருந்தான். இன்னும் இரண்டு நாள் படிப்பிடிப்பு முடியப் போகிறது. அதற்குள் ராகினி அசட்டுத்தனமாக ஏதாவது அவனிடம் தன்னை வெளிப்படுத்துவாள் என்பதை எதிர்பார்த்திருந்தான்.

அதற்கான தனிமை சூழ்நிலைதான் இன்றைய தினம் என்பதை உள்ளுணர்வு உணர்த்திற்று.

“”எப்ப என்னை புரிஞ்சுக்கப் போறீங்க பிரபாகர்?”

கேட்டே விட்டாள்.

“”நான் எதுக்கு உன்னைப் புரிஞ்சுக்கணும்?”

ஏதும் புரியாதவன் போல கேட்டான்.

ராகினி சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவன் வயதை ஏதோ பண்ணிற்று. அற்புதமான சிரிப்பு. ஓர் இணை இயக்குநராக ஒரு படைப்பாளியாக ராகினியை அவனால் புறக்கணிக்க முடியாது. அப்படி ஓர் அழகி. அதற்கு இணையாக நடிப்பு. கேரளாவில் இருந்து புகைப்படம் வந்தபோதும் பிற்பாடு இயக்குநரோடு நேரடியாகப் பார்த்தபோதும் மனதுக்குள் இருந்த நம்பிக்கையை முதல் நாள் படப்பிடிப்பிலேயே சிதறடித்தாள். முகத்தின் ஒவ்வொரு அங்குலமும் நடிப்பை வெளிப்படுத்திற்று. காலங்காலமாக நடிப்பவள் போன்ற உணர்வை அவளின் உடல்மொழி தெரியப்படுத்திற்று.

“”என்ன சிரிப்பு?”

“”நம்ம உறவு,சினிமா மாதிரியே இருக்கு பிரபா”

“”என்ன உறவு?”

“”தெரியாத மாதிரி கேட்காதீங்க. புரியலையா? இன்னைக்கு ஒரு முடிவு தெரியணும் பிரபா… இல்லேன்னா நாளைக்கு ஷூட்டிங் வர மாட்டேன்…”

தழுதழுத்த குரலில் பேசினாள்.

வார்த்தை தொண்டைக்குழியில் சிக்கிற்று.

எதிர்பார்த்ததைவிட, அதிகமாக காதல் அவளைப்

படுத்துவதை பிரபாகர் உணர்ந்தான். பக்குவமற்ற வயது. தன்னை உணராத நிலை. இந்தப் படத்திற்குப் பிறகு அவளுக்கான பிரமாண்ட இடத்தை அவளால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் இணை இயக்குநர் மீது காதல். இப்போது இவளைச் சமாளிக்க வேண்டும். ஏதும் சர்ச்சை எழுந்திடாத வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். இயக்குநரிடம் இருக்கும் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். படப்பிடிப்பை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். நல்ல நடிகை. காதல் மாயையிலிருந்து இவளை மீட்க வேண்டும்.

பிரபாகரனின் மனதுக்குள் எண்ணங்கள் ஓடிற்று. சட்டென அந்த ஐடியா வந்தது.

“”ராகினி”

“”ம்”

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

தலையணையை நகர்த்தி வைத்துவிட்டு அவன் முகம் பார்த்தாள்.

“”உன்னோட எண்ணம் எனக்குப் புரியுது. இதுல அவசரப்பட்டு ஏதும் முடிவெடுக்க முடியாது. நிறைய யோசிக்கணும். நமக்குள்ள ஒரு சின்ன அக்ரிமெண்ட்…”

“”சொல்லுங்க பிரபா…”

“”படப்பிடிப்பு நாளைக்கு முடியுது. ரெண்டு மாசத்துல படம் ரீலிஸ். படம் நிச்சயம் ஹிட். வெற்றி செய்தி காதுக்கு வந்த அடுத்த நிமிடம் நீ என்னைத் தேடி வர்ற. இல்லேன்னா நான் உன்னைத்தேடி வர்றேன்…ஓகே…? அதுக்குள்ள நானும் படம் கமிட் ஆயிடுவேன். நாம கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி முடிவு பண்ணலாம். அதுவரைக்கும் அமைதியா இருப்போம். அதான் ரெண்டு பேருக்கும் நல்லது. ஓகே?”

அவனையே உற்றுப் பார்த்தவள் இதுவரை இப்படி ஏதும் ஆசை வார்த்தைகளை அவன் உதடு உச்சரிக்காததால், அவன் முற்றிலும் எதிர்பார்க்காத விநாடியில் பச்சென கன்னத்தில் முத்தமிட்டாள்.

“”இப்ப டயலாக் பார்க்கலாம்” என்றாள் உற்சாகமாக.

பிரபாகர் எதிர்பார்த்தது நடந்தது. படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் இருந்தது. இரண்டாவது படத்திலும் ஹிட் அடித்து இயக்குநர் ஒரு கோடி சம்பளத்திற்கு உயர்ந்தார். படப்பிடிப்பு முடிந்து பலமுறை ராகினி அவனை அலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் பேசுவதைத் தவிர்த்தான். படம் வெளியான பிறகு நிச்சயம் தேடி வருவாள் என்பதை உணர்ந்திருந்தவன், தங்கியிருந்த அறையை மாற்றினான். அலைபேசி நம்பரை மாற்றினான்.

நான்கு படங்களுக்குக் கையில் அட்வான்ஸþடன் தயாரிப்பாளர்கள் அலைந்தபோதும், ராகினி அதைப் பொருட்படுத்தாமல் பிரபாகரைத் தேடினாள். அவன் தங்கியிருந்த அறையைக் கண்டுபிடித்து வந்தபோது அது பூட்டப்பட்டிருப்பதையும், பிரபாகர் அறை மாறி விட்டதயும் அதோடு அலைபேசி நம்பரை மாற்றி விட்டதையும் அறிந்தவள் தனிமையில் அழுதாள்.

ஒரு வருடம் நகர்ந்தது.

ஹைதராபாத்.

உதவியாளன் வேகமாக உள்ளே வந்தான். பிரபாகர் அவன் வேகத்தை உணர்ந்து முகத்தைப் பார்த்தான்.

“”ஸôர்… ராகினி உங்களைத் தேடி வந்திருக்காங்க…”

பிரபாகருக்குச் சிறிது அதிர்ச்சி. ஆனாலும் சமாளித்துக் கொண்டான்.

“”வாசல்ல வெயிட் பண்றாங்க… அவங்க உங்களத் தேடி வந்திருக்கிற தகவல் போயி புரொட்யூஸர் ஆபிஸþக்கு வந்துகிட்டு இருக்காரு சார்…”

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருத்தி. பூஜை போட்ட அன்றே வியாபாரத்துக்கு உறுதி. அவள் தன்னைத் தேடி ஹைதராபாத்துக்கு…

“”வரச்சொல்லு… நீங்கள்லாம் கொஞ்சம் வெளில இருங்க”

உதவியாளர்கள் வெளியேறிய உடன் ராகினி உள்ளே வந்தாள்.

“”ஹாய்” என்றான்.

அவனையே உற்றுப் பார்த்தாள்.

“”கண்டுபிடிச்சி வந்திட்டேன் பார்த்தியா? இந்தியாவுல நீ எங்கே போனாலும் விடமாட்டேன்”.

“”ஒ.கே. ஆல் த பெஸ்ட். தமிழ் தெலுங்குன்னு கலக்கிட்டு இருக்கே. இந்தில கூட பண்ணப் போறாதா கேள்விப்பட்டேன்”.

“”ஆனா நிம்மதி இல்ல.”

“”நீதான் அமைச்சுக்கணும்.”

“”எனக்கு நீ வேணும்.”

“”விளையாடாதே. இன்னும் நாலு வருஷத்துக்குக் கைல படம் இருக்கு. ஹிந்தில கூப்பிடறாங்க. இப்பப் போயி காதல் கீதல்ன்னு மனச குழப்பிக்காத”

“”எனக்குப் பணம் முக்கியமில்ல. மனசுக்குப் பிடிச்சவரோட வாழணும்”

“”ஒரு வருஷமாச்சு. நீ இன்னும் மனசை மாத்திக்கலையா?”

“”எத்தினி வருஷமானாலும் மாத்திக்க மாட்டேன். நைசா பேசி என்னை ஏமாத்திட்டதா நினைப்பா? பைத்தியமா உனக்கு? சென்னையில் இருந்து ஹைதராபாத் வந்து தெலுங்குப் படம் பண்ணப் போற. சொல்லு யாரு வேணும் உனக்கு? எந்த ஹீரோ வேணும் உனக்கு? எந்தப் புரொட்யூஸர்கிட்ட பேசணும்? அடுத்த வெள்ளிக்கிழமை பூஜை. நான் ஏற்பாடு பண்றேன்.

படபடத்தாள்.

பிரபாகரன் சிரித்தான்.

“”நான் வெளிப்படையா உண்மைய சொல்லிடறேன் ராகினி. மனசுக்குள்ள ஆசையையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கி வச்சிருக்கு… இனியும் மறைச்சா நல்லா இருக்காது. எனக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டு. முறைப்பொண்ணு. அடுத்த மாசம் ஆறாம் தேதி சிம்பிளா கும்பகோணத்துல கல்யாணம். நாளைக்குப் பத்திரிகை அடிச்சு வருது. முதல் பத்திரிகை உனக்குதான்.”

ராகினியின் முகம் பேயறைந்தது போலாகியது.

கண்களில் கண்ணீர் பொங்கிற்று. பிரபாகருக்குப் பாவமாக இருந்தது.

கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவனை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

சில விநாடிகளில் வாசலில் இருந்து கார் வேகமாகப் புறப்படும் சத்தம் கேட்டது.

உள்ளே வந்த இணை இயக்குநர் மூர்த்தி, “”சார் நான் ஓரளவு கேள்விப்பட்டு இருக்கேன். உங்களுக்குப் படம் கிடைச்சிட்டு. அவங்களும் நம்பர் ஒன் ஆர்டிஸ்ட். எனக்கு தெரிஞ்சு உங்களுக்கு அஃபையர் ஏதும் கிடையாது. அப்புறமென்ன? ராகினிய கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே? நடிகைங்கற தயக்கமா?”

இணை இயக்குநர் என்றாலும் பிரபாகர் நட்பு ரீதியாக அவனுடன் எண்ணவோட்டங்களைப் பகிர்ந்து கொள்வான். அந்த உரிமையில் பேசுகிறான்.

பிரபாகர் மூர்த்தியைப் பார்த்து சிரித்தான்.

“”பதினஞ்சு வருஷமாச்சு மூர்த்தி. அஸிஸ்டெண்ட் டைரக்டரா ஆவறதுக்காக நான் அலைஞ்சது மறக்காது மூர்த்தி. மழை நேரத்துல வாய்ப்பு கேட்கப் போயி புயல்ல மாட்டிகிட்டு வடபழனில ஒரு கடை வாசல்ல ஒன்றரை நாள் நின்னேன். அஸிஸ்டென்ட் டைரக்டரா பத்து வருஷத்துல எட்டுப் படம் முடிச்சிருக்கேன். முறையா வளர்ந்திருக்கேன். எங்கேயும் குறுக்கு வழி இல்ல.

எங்க டைரக்டரை விட்டு வெளிய வந்த இந்த ஒரு வருஷத்துல நான் கதை சொல்லாத தயாரிப்பாளர் கிடையாது. நடிகர் கிடையாது. இந்தக் கதைக்கு தெலுங்குலதான் மரியாதை கிடைச்சிருக்கு. என் உழைப்புக்கான, அலைச்சலுக்கான, முயற்சிக்கான அங்கீகாரம் எனக்கு வேணும் மூர்த்தி…”

அழுத்தமாகப் பேசிய பிரபாகரைக் குழப்பமாகப் பார்த்தான் மூர்த்தி.

“”ராகினி மேல எனக்கு சாஃப்ட் கார்னர் இருக்கு. இல்ல… அது வேற. ஆனா இன்னைக்கு நான் அவள கல்யாணம் பண்ணிகிட்டா என் உழைப்பு அடிபட்டுப் போயிடும். ஒரு நடிகையோட புருஷனா ரொம்ப சாதாரணமானவனா ஆயிடுவேன். என்னோட தனித்தன்மையை இழந்திடுவேன். இந்த வாய்ப்பு அவ வாங்கிக் கொடுத்ததுன்னு பேசிடுவாங்க. பத்து வருஷ முயற்சி அந்த ஒரு வார்த்தைல அடிபட்டுப் போயிடும் மூர்த்தி. நாளைக்கு இந்தப் படம் ஹிட் ஆகி நான் மீடியா முன்னால நிக்கிறப்ப என் உழைப்புக்கான உண்மையும் நேர்மையும் அவங்க முன்னாடி வெளிப்படணும்… ஒரு வெற்றி இயக்குநரா என்னை முன்னிலைப் படுத்திக்கணும். குற்ற உணர்ச்சியோட நிக்கக்கூடாது.”

மூர்த்தி வியப்பாக அவனைப் பார்த்தான்.

“”எல்லாமே ஒரு நேர்க்கோடுலதான் வருது மூர்த்தி. ராகினி அறிமுகம். அவளோட வெற்றி. என் மீதான அபிமானம்… இப்ப அவ என்னைத் தேடி வந்தது… எல்லாம்… இப்ப இந்தப் படம் ஹிட் ஆகி, ஒரு வெற்றி இயக்குநரா எனக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். என்னை நான் நிரூபிக்கலாம். அப்ப நான் ராகினிய தேடிக் கூட போகலாம். நாங்க கல்யாணம் கூட பண்ணிக்கலாம். ஆனா அதுக்கான சந்தர்ப்பம் இப்ப இல்ல. எந்த சூழ்நிலையிலும் என்னோட உழைப்ப, முயற்சிய நான் விட்டுக்கொடுக்கறதா இல்ல மூர்த்தி” என்றபடி சிரித்தான்.

நல்ல கிரியேட்டர், இயக்குநர் என்றெல்லாம் பிரபாகரைப் பற்றி இமேஜ் வைத்திருந்த மூர்த்திக்குப் பிரபாகரனின் நேர்மை ரொம்பவே பிடித்திருந்தது.

“”ஆல் த பெஸ்ட் சார்” என்றான் சிரிப்புடன், சிலிர்ப்புடன்.

– September 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *