மரணத்தை வென்ற இல்லறத்தான்!

 

துரியோதனன் தர்மவான்; அன்பாளன்; இன்சொல் பேசுபவன்; பொறாமை இல்லாதவன்; இரக்க குணம் உள்ளவன்; புலன்களை வென்றவன்; தற்பெருமை பேசாதவன்; எவரையும் அவமதிக்காதவன்; விதிப்படி யாகங்களைச் செய்பவன்; புத்திமான்; வேதங்களை அறிந்தவன்; அந்தணர்களை மதிப்பவன்; வாக்கு தவறாதவன்; எல்லாவற்றுக்கும் மேலாக பராக்கிரமசாலி. இவனது ஆட்சியில் மழைக்கு பஞ்சமே இல்லை. ரத்தினங்கள், பசுக்கள், உணவு தானியங்கள், செல்வம் என எல்லாமே நிறைந்திருந்தன. கருமி, ஏழை, நோயாளி, உடல் இளைத்தவர் என்று ஒருவர் கூட இவனது தேசத்தில் இல்லை…

மரணத்தை வென்ற இல்லறத்தான்!1என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? பொறுங்கள்… இவன் வேறு துரியோதனன்!

குருசேத்திர போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் வீழ்ந்திருந்த பீஷ்மரிடம் பல கேள்விகளைக் கேட்டு உரிய விளக்கங்கள் பெற்றார் தருமர். அவரது கேள்வி களில், ”தர்மத்தின்படி நடந்து மரணத்தை வென்ற இல்லறத்தான் யார்?” என்பதும் ஒன்று.

இதற்கு பதிலளித்த பீஷ்மர், புகழ்பெற்ற ஒரு பரம் பரையையே மேற்கோள் காட்டி விவரித்தார்…

மனுவின் பிள்ளை இக்ஷ்வாகு. இவரின் பத்தாவது பிள்ளையான தசாச்வன், ‘மாஹிஷ்மதி’ நாட்டின் மன்னனாக இருந்தான். இவன் மகன் மதிராச்வன் சத்தியம், தானம், தவம் ஆகியவற்றில் விருப்பமும் வில் வித்தை, வேதம் ஆகியவற்றில் இடைவிடாத பயிற்சி யும் கொண்டிருந்தான். மதிராச்வனின் மகனான த்யுதி மான் பராக்கிரமமும் உடல் பலமும் நிறைந்தவன்.

த்யுதிமானின் மகன் ஸூவீரன், உலகம் முழுதும் புகழ் பெற்ற தர்மவான். எப்போதும் நிரம்பி வழியும் கஜானாவைப் பெற்றிருந்தான். இவன் மகன் துர்ஜயன், எவராலும் வெல்ல முடியாத பலசாலி. இந்த துர்ஜயனின் பிள்ளை துரியோதனன், ஒளிமிக்க உடல் கொண்டவன், மகாராஜா மற்றும் ராஜரிஷிகளில் தலைசிறந்தவன் (இவனது பெருமைகளையே கட்டுரையின் துவக்கத்தில் விவரிக்கிறார் பீஷ்மர். இவன் வேறு; கௌரவர்களில் மூத்தவனான அந்த துரியோதனன் வேறு).

இத்தனை புகழுக்குரிய துரியோதனனை, நர்மதா நதியின் அதிதேவதை, மானிடப் பெண்ணாக வந்து மணம் புரிந்தாள். இவர்களுக்குப் பிறந்தவளே சுதர்சனை; பேரழகி.

ஒரு நாள், தன் தந்தை துரியோதனனின் ஆணைக்கு இணங்க அக்னி ஹோத்திர சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தாள். அப்போது, அங்கே மானுட வடிவில் வந்த அக்னி பகவான், ‘நான் உன்னை மணக்க விரும்புகிறேன்’ என்றார் சுதர்சனையிடம்.

சுதர்சனை பதறிப் போனாள். பின்னர் வெட்கத்துடன், ”பெண்களை மணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோருக்கும் சுற்றத்தாருக்கும் மட்டுமே அதிகாரம் உண்டு. எனவே, என் தந்தையைக் கேளுங்கள்!” என்றாள்.

நாட்கள் ஓடின. ஒரு நாள், யாகம் செய்யும் பணியில் துரியோதன மன்னன் ஈடுபட்டிருந்தபோது, அங்கே அந்தண வடிவில் வந்த அக்னி பகவான், ”மன்னா! தங்கள் மகளை எனக்கு மணம் செய்து கொடுங்கள்!” என்று கேட்டார். ஆனால் துரியோதனன் மறுத்து விட்டார். பின்னர் யாகத்துக்கு உண்டான தீட்சையை மன்னர் எடுத்துக் கொண்டார். அப்போது ஹோமத்துக்கான யாக குண்டத்தில் இருந்த அக்னி திடீரென மறைந்தது!

அதிர்ச்சியான மன்னர் அருகில் இருந்த வேத வல்லுநர்களிடம், ”ஏன் திடீரென அக்னி மறைந்தது?” என்று குழப்பத்துடன் கேட்டார்.

உடனே, வேத வல்லுநர்கள் மந்திரங்களை உரக்க உச்சரித்தனர். அந்தப் பகுதியே வேத ஒலியால் நிறைந்தது. மறுகணம், ஜொலிக்கும் உருவத்துடன் அங்கு வந்த அக்னி பகவான், ”உங்கள் மன்னன் துரியோதனனின் மகளை நான் மணக்க விரும்புகிறேன்!” என்று வேத வல்லுநர்களிடம் தெரிவித்தார். தகவல் அறிந்து பெரிதும் மகிழ்ந்த துரியோதனன், ”எனக்குப் பெரிதும் மகிழ்ச்சி. ஆனால், ஒரு வேண்டுகோள்… அக்னி பகவான் இங்கேயே எப்போதும் இருக்க வேண்டும்!” என்றார்.

அன்று முதல் இன்று வரை அக்னி பகவானின் சாந்நித்தியம் மாஹிஷ்மதி நகரத்தில் விளங்கி வருகிறது. (இதை, திக்விஜய யாத்திரையின்போது சகாதேவன் கண்டான்). அடுத்து அக்னி பகவான்- சுதர்சனை ஆகியோரது திருமணம் இனிதே நடந்தது. இந்த தம்பதிக்கு சுதர்சனன் என்ற பிள்ளை பிறந்தான். சிறுவன் சுதர்சனன் வேதங்கள் முழுவதையும் கற்றறிந்தான். பின்னர் இவனுக்கும் ஓகவான் என்ற மன்னனின் மகளான ஓகவதிக்கும் திருமணம் நடந்தது.

இந்த சுதர்சனனே, தர்மத்தின்படி நடந்து மரணத்தை வென்ற இல்லறத்தான்!

சரி… சுதர்சனத்தைப் பற்றி சொல்ல வந்த பீஷ்மர், இவரது முன்னோர்களின் வரலாற்றை ஏன் விளக்க வேண்டும்? சுதர்சனத்தின் தகவலை மட்டும் சொல்லி இருக்கலாமே என்று தோன்றலாம். சுதர்சனன் உயர்ந்த நிலையை அடைந்ததற்கு, அவரின் முன்னோர்களது உயர்ந்த நற்குணங்களும் காரணம் என்பதை தர்மர் உள்ளிட்டோர் புரிந்து கொள்வதற்காகவே, பீஷ்மர் இவ்வாறு விளக்கியுள்ளார்.

சுதர்சனனும் ஓகவதியும் குருசேத் திரத்தில் இல்லறத்தைத் தொடங்கினர். ‘நான் இல்லறத்தில் இருந்தபடியே எமனை வெல்வேன்’ என்று சபதம் செய்தார் சுதர்சனன். மேலும் தன் மனைவியிடம், ”ஓகவதி! நமது வீட்டில், உணவு என்று கேட்டு வந்தவருக்கு எந்தக் குறையும் இல்லாமல் உணவளிக்க வேண்டும். எந்த வகையில் விருந்தாளி திருப்தி அடைவானோ, அதன்படி அவனை உபசரிக்க வேண்டும். வீட்டில் நான் இருந்தாலும் இல்லையென்றாலும் எதன் பொருட்டும் விருந்தாளியை அவமதிக்கக் கூடாது!” என்றார். ஓகவதியும் இதை ஏற்றுக் கொண்டாள். ஆனால், ‘இந்த நியமத்தில் சுதர்சனன் எப்படியும் தவறு செய்வான். அப்போது நாம் அவனைப் பிடித்துவிட வேண்டும்!’ என்ற எண்ணத்தில் அவன் பின்னாலேயே சுற்றி வந்தான் எமன்.

ஒரு நாள், சமித்துகள் சேகரிப்பதற்காக வெளியே சென்றிருந்தான் சுதர்சனன். அப்போது அழகிய வேதியன் ஒருவன், சுதர்சனனின் இல்லத்துக்கு வந்தான்.

அவனை வரவேற்று உபசரித்த ஓகவதி, ‘என்ன வேண்டும், சொல்லுங்கள்!’ என்றாள்.

வேதியன், ‘எனக்கு நீதான் வேண்டும்!’ என்றான்.

அதிர்ந்தாள் ஓகவதி. இதற்கு பதிலாக, விலை உயர்ந்த பொருட்களைத் தருவதாகச் சொன்னாள். ஆனால், வேதியன் மறுத்து விட்டான். செய்வ தறியாது தவித்தாள் ஓகவதி. அப்போது, கணவன் சொன்ன அறிவுரைகள் நினைவுக்கு வந்தன. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாக, ‘அப்படியே ஆகட்டும்!’ என்றபடி, வேதியனுக்கு அருகில் அமர்ந்தாள்.

இந்த நிலையில், ஆசிரமத்துக்குத் திரும்பினான் சுதர்சனன். வழக்கம் போல் எமனும் பின்னாலேயே வந்தான். வாசலில் நின்றபடி, ”ஓகவதி!” என்று உரக்க குரல் கொடுத்தான் சுதர்சனன். பதில் இல்லை. மறுபடியும் குரல் கொடுத்தான். அப்போது, ஆசிரமத்தின் உள்ளே இருந்த வேதியன் பதில் சொன்னான்: ”சுதர்சனா! விருந்தாளியாக வந்த எனக்கு, உன் மனைவி அனைத்து வித அதிதி பூஜைகளையும் செய்வதாகச் சொன்னாள். ஆனால் நானோ, அவளையே விரும்பினேன். எனவே, என்னுடன்தான் இருக்கிறாள்!”

‘இதோ… இதுவே தருணம்! இவன் தன் நியமத்தில் இருந்து பிறழப் போகிறான்’ என்று எமன் தன் கையில் இருந்த தடியைத் தயாராக வைத்து நின்றான்.

ஆனால், சுதர்சனத்தின் சொல், செயல், பார்வை மற்றும் நடவடிக்கை என்று எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சலனமே இன்றி பேசினான்: ”வேதியனே! அதிதிகளது மனம் மகிழும்படி பணிபுரியும் இல்லறத்தானுக்கு, இதை விட பெரிய தர்மம் வேறென்ன இருக்கிறது? என் உயிர், மனைவி, உடைமைகள் அனைத்தும் அதிதிகளுக்கு கொடுக்கத் தகுந்தவையே. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், புத்தி, ஆத்மா, மனம், காலம், திசை ஆகிய பத்தும் நம் உடலில் இருந்தபடியே, நாம் செய்யும் நல்வினை மற்றும் தீவினைகளைக் கவனித்து வருகின்றன. எனவே, எனது சபதத்தில் இருந்து விலக மாட்டேன். இதனால் தேவர்கள் என்னை எதுவும் செய்யட்டும்!” என்றான் சுதர்சனன். அப்போது நாலா திசைகளில் இருந்தும் ‘இது உண்மை! இது உண்மை!’ என்று ஒலித்தது.

அப்போது அந்த வேதியன், வாயு பகவானைப் போல ஆகாயம்- பூமி எங்கும் பரவி, பிரமாண்ட வடிவத்துடன் வெளிப்பட்டான். பிறகு சுதர்சனனிடம், ”குற்றமற்றவனே, நான் தர்மதேவதை. உன்னை சோதிக்கவே வந்தேன். உனது சபதத்தில் நீ வென்று விட்டாய். பதிவிரதையான உன் மனைவி ஓகவதியை எவராலும் வெல்ல முடியாது. இவள் சொல்வது பலிக்கும். உலக பாவங்களைப் போக்கும் விதமாக ஒரு பாதி உடலால் ஓகவதி என்னும் நதியாகவும், மறு பாதி உடலால் உன் மனைவியாகவும் இருப்பாள். உன் தவத்தால் கிடைக்கப் பெற்ற உலகங்களுக்கு இவளுடன் செல்வாய்! இந்த உடலுடன் அழிவில்லாத உலகங்களை அடைவாய். எமன் உன்னிடம் தோற்றான்; இல்லற ஒழுக்கத்தால் காமக் குரோதங்களை வென்றாய்” என்றது தர்மதேவதை. அப்போது ஆயிரம் வெள்ளை குதிரைகள் பூட்டிய ரதத்தில் அங்கு வந்தான் தேவேந்திரன்!

இங்கே கதையை முடித்த பீஷ்மர், இதன் தொடர்பாக சில தகவல்களையும் சொன்னார்: ”தேவேந்திரனே தேடி வரும் அளவுக்கு ஓர் உயர்ந்த நிலை, சுதர்சனனுக்குக் கிடைத்தது எப்படி? தகுதி வாய்ந்த அதிதி, மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்வதால் உண்டாகும் பலன், நூறு யாகங்கள் செய்தாலும் கிடைக்காது.

நல்ல விருந்தாளி ஒருவரை உபசரிக்காமல் போனால், நாம் செய்த தான- தர்மங்கள், நற்செயல்களுக்கான புண்ணிய பலன்கள் நம்மை விட்டு நீங்குவதுடன், பாவத்தையும் சேர்த்து விடும். தவிர, நமது புண்ணிய பலன்கள் நம்மால் அவமானப்படுத்தப்பட்ட விருந்தாளிக்குப் போய்விடும்.

சுதர்சனனின் கதையை தினமும் படிப்பவரும் கேட்ப வரும் புண்ணிய உலகங்களை அடைவர்” என்றார் பீஷ்மர்.

- மே 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
துவாரகை நகரம் உருவான கதை!
ஆகா... விட்டேனா பார்! கண்ணனைத் தொலைத்து விடுகிறேன். படைகளே... கிளம்புங்கள்!’’ எனக் கூச்சலிட்டான் ஜராசந்தன். படைகள் கிளம்பினவே தவிர, ஏதும் திரும்பவில்லை. ஜராசந்தன் மட்டுமே திரும்பினான். பதினேழு தடவை இப்படி நடந்தது. ஜராசந்தன் இழந்த படைகளின் கணக்கை இந்த இடத்தில் சுகாசார்யர் ...
மேலும் கதையை படிக்க...
கண்ணபிரான் யார் பக்கம்?
போருக்கு முன்னால் போட்டி... கண்ணபிரான் யார் பக்கம்? குருஷேத்திரப் போர் நடப்பது உறுதியானது. இதையடுத்து பாண்டவர்களும் கௌரவர் களும் தங்களது படைபலத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் அரசர்கள் பலரை சந்தித்து ஆதரவு திரட்டுவதிலும் தீவிரம் காட்டினர். இதன் பொருட்டு ஸ்ரீகிருஷ்ணரைச் சந்திக்க துவாரகைக்கு வந்தான் ...
மேலும் கதையை படிக்க...
திருமணம் பேச வந்தவர்கள் திகைத்து நின்றது ஏன்?
இயற்கை வளம் கொழித்துக் கிடந்தது. பச்சைப் பசேலென வயல்வெளிகள். பசுக் குலம் ‘அம்மா!’ என்று அழைப்பதும் அவற்றின் கழுத்து மணி ஓசைகளும் மென்மையாகக் கேட்டன. இடையர்களின் சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது தொண்டை நாட்டின் காரணை என்ற அந்தக் கிராமம். அங்கிருந்தவர்களின் தலைவர் ...
மேலும் கதையை படிக்க...
சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!
''அம்மா... சிவகாமி! உனது குறை என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், உன் மணி வயிற்றில் மகவு பிறக்க வாய்ப்பு இல்லை. அதோ மேற்கில் மலை மீது இருக்கும் முருகப் பெருமான்தான் உன் குழந்தை. இன்றே அவன் சந்நிதிக்குச் செல். இனி, அவனையும் ...
மேலும் கதையை படிக்க...
கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!
என்ன ஆயிற்று? ''பக்தர்களுக்கு வசப்பட்டவன் நான். அவர்களுக்கு வற்றாத அருளை வாரி வழங்கவே நான் இங்கு இருக்கிறேன்'' என்ற பரந்தாமன், கோயில் கொண்டிருக்கும் இடமே பண்டரிபுரம். இங்கு, வைராக்கிய சீலரான ராக்கா, தன் மனைவி பாக்கா மற்றும் மகள் பங்கை ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். ...
மேலும் கதையை படிக்க...
துவாரகை நகரம் உருவான கதை!
கண்ணபிரான் யார் பக்கம்?
திருமணம் பேச வந்தவர்கள் திகைத்து நின்றது ஏன்?
சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!
கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)