மயில் வாஹணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 35,712 
 

வாழ்வில் மிகச் சிலருக்குத்தான் அவர்கள் விரும்பியபடி, விரும்பியவுடன் இறப்பு என்பது எதிர் பார்த்தபடி நல்லவிதமாக அமையும்.

எதிர்பார்த்தபடி அவ்விதம் நம்முடைய இறப்பு சுமுகமாக அமைவது இறைவனின் சித்தம். அவ்விதம் இறப்பவர்கள் தன் வாழ்நாளில் ஏற்கனவே தொடர்ந்து பல நல்ல காரியங்களைச் செய்தவர்களாக இருப்பர்.

இந்தியாவில் அப்படி ஏகப்பட்ட மஹான்கள் மக்களுக்கு சேவைசெய்து மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் இறப்பு முன்கூட்டியே தெரிந்துவிடும். அவ்விதம் நம்மிடையே வாழ்ந்து இறைவனை விரும்பியபடி போய்ச் சேர்ந்தது திருமுருக கிருபானந்தவாரியார் ஆவார்கள்.

கிருபானந்தவாரியார் எப்படி எவ்விதம் இறைவனடி போய்ச் சேர்ந்தார் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் புதைக்கப்பட்டாரா அல்லது எரிக்கப்பட்டாரா என்கிற உண்மை நான் கூகுளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு என்று ஒரு நினைவகம் மட்டும் வேலூர் மாவட்டம் காட்பாடியில் எழுப்பி இருக்கிறார்கள். அங்கு இன்றும் பலர் சென்று அவரை வணங்கி வருகின்றனர்.

கிருபானந்தவாரியார் விமானப் பயணத்தின்போது இறந்துவிட்டார் என்கிற செய்தி மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால் அவரின் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை அவருடன் விமானத்தில் பயணம் செய்யும்போது நேரில் பார்த்தவர்களின் அனுபவம் நமக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது; நெகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.

கிருபானந்தவாரியார் 1906 ம் வருடம் வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில் ஆகஸ்ட் 25 ம் தேதி பிறந்தார். மிகச் சிறிய வயதிலிருந்தே தன்னுடைய தந்தை வழியில் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்த ஆரம்பித்துவிட்டார்.

தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ்; தேவாரம்; திருவாசகம் முதலானவற்றை லயித்து இன்னிசையுடன் பாடினார். அவருடைய ஆன்மீக பிரசங்கங்கள் தமிழக மக்களைக் கட்டிப் போட்டன. தமிழகம் எங்கும் அவருக்கு திரளான கூட்டம் கூடியது.

தியாகராஜ பாகவதர் நடித்து 1943 ல் வெளியான ‘சிவகவி’ படத்துக்கு வசனகர்த்தா கிருபானந்தவாரியார்தான். அதன்பிறகு சினிமாவில் நாட்டமில்லாது ஆன்மீக சொற்பொழிவுகளில் மட்டுமே ஈடுபட்டிருந்தார் அவர் அப்போது சினிமாவில் இருந்து விலகியதால்தான் அப்போதைய பல கற்றுக்குட்டி அரசியல்வாதிகள் தமிழகத்தில் திரைப்பட கதை வசனங்கள் எழுதி காலூன்ற முடிந்தது. வாரியார் வாங்கிய பட்டங்கள் ஏராளம். வாரியார் பள்ளிக்கே சென்றதில்லை. தமிழகத்தின் பல பிரபல கோயில்கள் வாரியார் செய்த திருப்பணியால்தான் வளர்ந்தன. தமிழகத்தில் மிகவும் மரியாதைக்குரியவராக அவர் போற்றப்பட்டார்.

அவரின் புகழையும்; அவருக்கு கூடும் பெரும் கூட்டத்தையும் பார்த்த சாண்டோ சின்னப்பா தேவர் வாரியாரிடம் நைச்சியமாகப் பேசி அவரை தனது படங்களான துணைவன், தெய்வம் போன்றவைகளில் நடிக்க வைத்து செமத்தியாக கல்லா கட்டிக் கொண்டது தனிக்கதை.

அதன் பிறகு இறக்கும் வரை அதாவது தன்னுடைய 87 வது வயதுவரை ஆன்மீக சொற்பொழிவுகளில் மட்டுமே வாரியார் ஈடுபட்டிருந்தார்.

அவரின் நீங்காத புகழைக் கேள்விப்பட்ட லண்டன் வாழ் தமிழ் மக்கள் வாரியாரை 1993 ம் ஆண்டு லண்டன் அழைத்தனர். அவர்களின் அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்ட கிருபானந்தவாரியார் அதே வருடம் லண்டன் பயணமானார். அவரது ஆன்மீக உரைகளைக் கேட்ட லண்டன் வாழ் தமிழ் மக்கள் கிருபானந்தவாரியாரை தங்களது பண்பினாலும், அன்பினாலும், மரியாதையினாலும் திக்குமுக்காட வைத்தனர். தனது ஆன்மீக உபன்யாசத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 1993 ம் வருடம் நவம்பர் ஏழாம் தேதி அன்று லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் சென்னைக்கு கிருபானந்தவாரியார் கிளம்பினார்.

அந்த விமானம் 30,000 அடி உயரத்தில் மணிக்கு 650 கிமீ வேகத்தில் சீராகப் பறந்து கொண்டிருந்தது. அப்போது வாரியாருக்கு திடீரென ஒரு எண்ணம் ஏற்பட்டது…

‘முருகா முருகா என்று அவன் புகழ் பாடியே 87 வயதுவரை ஆன்மீகப் புகழுடன் வாழ்ந்தாகிவிட்டது. இனிமேல் எதற்கு இந்த மானுட வாழ்க்கை? இவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் நாம் கிட்டத்தட்ட முருகப் பெருமானின் அருகிலேயே வந்துவிட்டோம். இதுதான் நல்ல தருணம். தற்போது முருகப் பெருமானை அழைத்து, என்னை அவரிடம் கூட்டிச்செல்ல வேண்டுகோள் வைத்தால் என்ன?…’

வாரியார் உடனே செயல் பட்டார். மனமுருக அமைதியாக முருகப் பெருமானை வேண்டினார். என்னே அதிசயம்…!

சீராகச் சென்று கொண்டிருந்த விமானத்தின் கதவுகள் திடீரென ‘டப்’ என்ற சத்தத்துடன் திறந்து கொண்டன. உடனே பலத்த காற்று வேகமாக விமானத்தினுள் வீசியது. இதைப் பார்த்த பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் நம்ப முடியாமல் பயத்தில் உறைந்து விட்டனர். அவர்களால் வாயைத்திறக்க முடியவில்லை.

அடுத்த கணம் கம்பீரமாக ஒரு மயில் தன் அழகான தோகையை விரித்துக்கொண்டு திறந்திருந்த கதவின் வழியே கம்பீரமாக உள்ளே நுழைந்தது. மயில் உள்ளே நுழைந்ததும் விமானத்தின் கதவு தானாக மூடிக்கொண்டது.

அந்த அழகிய மயில் தன்னை சற்று நிதானித்துக்கொண்டு அதன்பிறகு பயணிகளின் இருக்கைகள் நடுவே அமைந்திருந்த பாதையில் மிடுக்காக நடந்துசென்று கிருபானந்தவாரியார் அமர்ந்திருந்த இருக்கையின் அருகே நின்று அவரைக் கனிவுடன் திரும்பிப் பார்த்தது. அய்ல் (aisle) சீட்டில் அமர்ந்திருந்த வாரியார் உடனே பக்திப் பரவசத்துடன் சற்றும் தாமதியாது சூட்சும சரீரமாக எழுந்து நின்றார். நீண்ட அந்த மயிலின் முதுகில் சற்று இடம்விட்டுப் பின்புறமாக அமர்ந்துகொண்டார். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பது அப்போது இதைப் பார்த்துக் கொண்டிருந்த பலருக்குப் புரிபடவில்லை.

கிருபானந்தவாரியார் மயிலின் அகண்ட முதுகில் பின்புறமாக வசதியாக அமர்ந்து கொண்டதும்; அந்த மயில் ‘தான் வந்த வேலை முடிந்தது’ என்பதுபோல் திரும்பி நின்றுகொண்டு வாரியாரைச் சுமந்தபடி விறுவிறுவென கதவை நோக்கிச் செல்ல, கதவு திறந்து கொண்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயினர்.

மயில் நிதானமாக வெளியேறி வாரியாரைச் சுமந்தபடி விண்வெளியில் தன் நீண்ட தோகைகளை விரித்துப் பறந்து செல்ல, கதவு மறுபடியும் மூடிக் கொண்டது. இதைப் பார்த்த விமானத்தின் வலதுபுறம் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் இடதுபுற ஜன்னல்களுக்கு விரைந்து வந்து ஆர்வத்துடன் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தனர்.

அங்கே அவர்கள் கண்டகாட்சி அவர்களை மெய் சிலிர்க்க வைத்தது. வாரியாரைச் சுமந்துகொண்டு பயணித்த மயிலின் அருகில், மற்றொரு மயில் முருகப்பெருமானை சுமந்துகொண்டு வந்து வானத்திலேயே நிற்க, அடுத்த நொடியில் முருகப்பெருமான் வாரியாரின் முன்புறம் காலியாக இருந்த இடத்தில் தாவி ஏறி அமர்ந்துகொள்ள, வாரியார் முருகப்பெருமானின் இடுப்பை இறுகப் பற்றிக்கொண்டார்.

மயில் இருவரையும் சுமந்துகொண்டு நீண்ட தூரம் மெதுவாகப் பறந்தபடி வானில் சென்று மறைந்தது.

பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனம் பக்தியில் நெகிழ்ந்தது….

கிருபானந்தவாரியார் அமர்ந்திருந்த சீட்டில் அவரது ஸ்தூல சரீரம் மாத்திரம் அலுங்காமல் வீற்றிருந்தது. அதைப் பார்த்த சக பயணிகள் விக்கித்துப் போயினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *