பாலன் யேசுவின் பரிசு

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 61,651 
 

“பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதித்துக் காப்பாற்றுவாராக”

“ஆமென்”

“இறை இயேசுவின் அன்பிலும், சமாதானத்திலும் சென்று வாருங்கள். திருப்பலி முடிந்தது”

“சர்வேசுரனுக்கு நன்றி”

ஞாயிறு திருப்பலியில் கலந்துகொண்டு, திருச்சிலுவை ஆலயத்தினின்று வெளியில் வர எத்தனித்தவளை “ஃப்ரைஸ் த லோட் ஷெரின்” என்ற ஒரு குரல் அழைக்க “ஹாய் ஜெசி, ஃப்ரைஸ் த லோட்” என சமாதானத்தைப் பகிர்ந்து கொண்டாள். “என்னடி எப்படியிருக்க, வீட்ல எல்லாரும் எப்படி? என்ன முகத்துல சிரிப்பையே காணல” எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போன ஜெசியைப் பார்த்து, “இறைவனோட புண்ணியத்தில இருக்கிறன். உன்னோட வீட்ட எல்லோரும் எப்படி?” என்ற ஷெரினுக்கு, “நாங்க எல்லாம் சுப்பரா இருக்கிறம். அப்புறம்’ இந்த முறை கிறிஸ்மஸ்லாம் ஷ்பெஷலா? இந்த முறையாவது எல்லாரையும் கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வாயேன்டி” என்றாள் ஜெசி. “இல்லடி அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. மனசே நல்லா இல்ல. கவலையா இருக்கு” கண்கள் பனிக்க சொன்னாள் ஷெரின். “கவலபடாதேடி. உன் நல்ல மனசுக்கு ஒரு குறையும் இறைவன் வைக்கமாட்டார். நான் ப்ரே பண்றன். மறக்காமல் நீயும் ப்ரே பண்ணு.

டைம் கிடைச்சா வீட்டுக்கு வாறேன். நானும் கொஞ்சம் முன்னாடி போகணும். ஒண்ணும் யோசிக்காதேடி. கோட் பிளஸ் யூ. வாறேன்” என விடைபெற்றுக்கொண்டாள் ஜெசி.

ஜெசி சென்றதும் தம் வேலைகளை முடித்துக் கொண்டு, ஞாயிறு தினகரன் வாரமஞ்சரியையும் வாங்கிக் கொண்டு பேருந்துக்கு விரைந்தாள் ஷெரின். அவளின் சிந்தனை எல்லாம் சுகவீனமுற்றிருந்த தன் தாய் மேரியின் மீதே இருந்தது. தன்னுடைய சிந்தனையைச் சற்று மாற்ற எண்ணி, கையிலிருந்த வாரமஞ்சரியில் பார்வையைச் செலுத்த, அதிலே தன் தாய்க்காக ஷெரின் எழுதியிருந்த ஒரு கவிதை வெளிவந்திருந்ததைக் கண்டவளுக்குத் தன்னையறியாமலேயே விழிகளை விஞ்சி நின்றது கண்ணீர்.

ஷெரின், வீட்டின் கடைக்குட்டி மட்டுமல்ல, ஓர் ஆசிரியை. சமூக சேவை செய்ய வேண்டுமென்பது அவளது இலட்சியம். எழுதுவது அவளைக் கவர்ந்த பொழுதுபோக்கு. எப்பொழுதும், முகத்தில் புன்முறுவலும் சுறுசுறுப்பும் அவளின் இலக்கணங்கள்.

எளிமையும் குழந்தைத் தனமும் கொண்ட ஷெரினுக்கு உலகம் என்றால் அவளின் தாய் மேரி தான். ஆசிரியையான அவளுக்குச் சிறிய வயது முதலே வாழ்க்கை நல்ல பாடங்களையும், அனுபவங்களையும் கொடுத்திருந்ததால், யாரிடமும் அவ்வளவு எளிதில் பேசிவிடுபவள் அல்லள். தமது ஐவர் அடங்கிய குடும்பத்தில் அண்ணனும் அக்காவும் திருமண வாழ்வில் இணைந்து விட்டபின், ஷெரின் தன் பெற்றோருடன் செல்லமாய் வாழ்பவள்.

தன்னுடைய தாய் மேரியைத் தவிர்ந்த வேறோர் உலகை ஷெரினால் சிந்திக்கவே முடிந்ததில்லை. மேரியும் ஷெரின் மீது உயிரையே வைத்திருந்தாள். அவளுக்கு விருப்பமானதைப் பார்த்துப் பார்த்து செய்வாள். வாழ்க்கை எத்தனை சுமையாய் இருந்தாலும், புன்னகை மாறாமல் மகளை அரவணைப்பவள். அவ்வூரில் யாரைக் கேட்டாலும் மேரியின் குணத்தையும் பண்பையும் அழகையும் சொல்லுமளவு வாழ்பவள்.

இப்படிப்பட்ட குணவதியின் உடல் நலம் கடுமையாய் பாதிக்கப்பட்டுக் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். இதயத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாகக் காப்பாற்ற மிக்க பிரயத்தனம் எடுக்க வேண்டியிருக்குமென வைத்தியர்கள் கூறியிருந்தனர்.

சிந்தனைக்குள் சிறைப்பட்டுப் போனவள், சட்டெனத் தான் இறங்க வேண்டுமென்ற சுயநினைவுக்கு வந்த வேகத்தில் இறங்கி, “இறைவா, மனங்களின் எண்ணத்திற்கு வாழ்வு அளிக்கும் வல்லவனே!, என் தாய்க்குச் சுகமளித்து என்னுயிரைக் காப்பாற்று” எனப் பிரார்த்தித்துக் கொண்டே வீட்டை அடைந்தாள்.

“அப்பப்பா…. என்ன வெயில், ரோட்ல நடக்கவே முடியல்ல. அம்மா ஷெரின் குடிக்கக் கொஞ்சம் தண்ணீ கொண்டு வாங்க…” என்ற முனங்கலுடனேயே வீடு நுழைந்தார் ஜோசப். “வாங்க… அப்பா, இண்டைக்கு என்னமோ, சரியான வெயிலாத்தானிருக்கு. இந்தாங்க.” என்று தண்ணீரை நீட்டிக்கொண்டு நின்றவளிடம் “ம்….ம்… எல்லாம் மாறிப் போச்சு.

கால நிலையை நம்பி ஒரு வேலையையும் இப்பல்லாம் செய்ய முடியுதில்ல….”என்றார் தண்ணீரை வாங்கி பருகிக் கொண்டே. ஷெரின் தன்னை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதைக் குறிப்பறிந்தவராய்” அம்மாவையும் பாத்திட்டு, டொக்டரைக் கண்டு பேசிட்டுத்தான்மா வாறேன்.

அம்மாவுக்கு ஒப்ரேஷன் ஒண்ணு உடனடியா பண்ணனுமாம். அம்மாக்கும் பேச்செல்லாம் குறைஞ்சிட்டு. உங்களத்தான் கேட்டுக்கிட்டே இருக்கா” என ஜோசப் கூறி முடிக்க, ஷெரீனுக்குப் “பகீர்” என்றிருந்தது. பேச நா எழவேயில்லை. மௌனமாய் வாசற் பக்கம் வெறித்து நின்றவளைப் பார்த்து ஜோசப், “நம்ம சித்தம் எதுவுமில்லம்மா. எல்லாமே இறைவன் தான்” எனக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

ஜோசப் கடின உழைப்பாளி. எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர். தன் மனைவி, பிள்ளைகளிடம் பாசமிருந்தாலும் கண்டிப்பானவர். ஆனால், அவரே இன்று கலங்கி நிற்பதை காண்கையில் ஷெரினுக்கு நிலைகொள்ளவில்லை. அன்பே வடிவான என் தாய்க்கு வந்த சோதனை என்ன? எதற்காக இந்த வேதனை? என் தாயை விட்டு ஒரு வாழ்வை எப்படி கனவில் கூட நினைக்க முடியுமா? தெய்வமே…. என்று எண்ணியெண்ணி நிம்மதியிழந்தாள்.

கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்கின்ற நிலையில், தமது வீட்டை சுத்தம் செய்து, வர்ணம் பூசி விழாவிற்கான ஏற்பாடுகளை ஜோசப் செய்தே வைத்திருந்தார். அதற்கான காரணமும் இருந்தது. தனது பேத்தி ஷவீனாவின் பிறந்த நாள் கொண்டாட்டமும் நத்தார் தினத்தன்றே இடம்பெறிருப்பதால், யாவற்றுக்கும் தயாராய் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வைத்தியசாலைக்கும் வீட்டிற்கும் ஓய்வில்லாமல் அலைந்துகொண்டிருந்தார். ஷெரினுக்குப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் மனம் செல்லவில்லை.

சென்ற வருடத்தில் மிக விமர்சையாகவே குடும்பத்தினருடன் கொண்டாடினாள் ஷெரின். தன் அக்காவின் மகள் ஷவீனாவின் முதலாவது பிறந்த நாளும் அன்றே என்றதால் தானும் ஒரு குழந்தையாகவே மாறி, நத்தாரை அமர்க்களப்படுத்தியிருந்தாள். நேரத்துக்கு ஒரு புத்தாடை, தின்பண்டம், பட்டாசு வெடி, கேளிக்கைகள், சுற்றுலா என அப்பப்பா…. ஆனால், இம்முறை எதனையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை மனம்.

தன்னுடைய எதிர்பார்ப்பு, ஏக்கம், பிரார்த்தனை எல்லாமே அம்மாவின் நலத்திலேயே வட்டமடித்தது. மனத்தைக் கொஞ்சம் இலேசாக்க வேண்டும் போலிருந்தது. கவிஞர் கண்ணதாசனின் “நெஞ்சுக்கு நிம்மதி” யை எடுத்துக்கொண்டு வீட்டுத் தோட்டத்தில் அமைந்திருந்த மர ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு எழுத்துக்களில் மூழ்கிப் போனாள்.

சூரியனின் சுந்தரத்தில் சொக்கிப் போயிருந்த வான மகள் நாணத்தால் சிவந்திருக்க, பறவைகளும், தம் இருப்பிடம் நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. நேரம் போனதே தெரியவில்லை. “தேங்யூ ஜீஸஸ். நேரம் ஆயிட்டே. அப்பா திட்டப் போறார்.” எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டு வீட்டை நெருங்கியவளை “வாங்க… அம்மு…. எங்கப்பா ஆளையே காணல,” என்றது ஓர் ஆண்குரல்.

“ஹலோ கெவின் அண்ணா, எப்போ வந்தீங்க. சித்தா எல்லாம் வரலயோ?” என்று பேசிக் கொண்டே நுழைந்தவள் திகைத்துப் போனாள் அங்கே தம் சித்தப்பா, சித்தியென உறவினர் பட்டாளமே வந்திருந்தனர். “வாங்க அப்பா, அம்மா…. எப்போ வந்தீங்க…. ஐயோ நேரம் போனதே தெரியல. டூ மினிட்ஸ்ல டீ ரெடி பண்ணி வாறேன்” என்றவளைத் தடுத்த சித்தி டயானா. “இரும்மா, நான் பண்றன் எல்லாம். நீ ரெஸ்டா இரு. இதெலாம் பெரிய வேலையில்லை” எனக் கூறி சென்றவளைப் பார்த்த அவள் கணவன் ரொபர்ட் “ம்… அதான் நானும் சொல்ல நினைச்சன்.

தம்பி கெவின் நீ ஷெரினோட பேசிட்டு இரு. அண்ணா வாங்க” என ஷெரினின் தந்தையுடன் வெளியில் சென்று விட “அம்மு இந்த முறை உங்க ஸ்கூல்ல எக்ஸேம் எப்படி? பிள்ளைகள் செய்திருக்காங்களா?” என வினவிய கெவின் அண்ணாவைப் பார்த்து “இனி என்ன அப்படி கூப்பிடாதீங்க. எனக்கு அம்மா ஞாபகம் தான் வருது. அம்மாவும், நீங்களும் மட்டும் தான் “அம்மு”னு என்னைக் கூப்பிடுறது” என்றவளை “சரி… சரி தங்கை ஷெரின். பெரியம்மா சுகமாகி வரத்தான் போறாங்க.

நீங்க பாக்கத்தான் போறீங்க” என்று ஆறுதலளித்தான். இரவு சாப்பாடு முடிந்தது. எல்லோரும் தனது அம்மா மேரியைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, ஷெரின் மௌனமாய் கேட்டுக் கொண்டிருந்தாள். சித்தப்பாவின் குடும்பம் நாளை வைத்தியசாலைக்குச் செல்லவிருப்பதாகப் பேச்சு நடந்து கொண்டிருக்க, சித்தி டயானா, “போன வருஷமெல்லாம் நல்ல சந்தோஷமா கிறிஸ்மஸ் கொண்டாடினாங்க. யார் கண் பட்டுச்சோ. நினைச்சாலே பதறுது.

நல்லவங்கள கடவுள் கைவிடமாட்டார். மாதாவே எங்களுக்காக மன்றாடும்… சரி… எல்லாரும் ப்ரே பண்ணுவம். அம்மா ஷெரின் நீயும் வரலாமே நாளைக்கு” என்ற சித்தியைப் பார்த்து “எனக்கு அம்மாவப் பாக்கணும் அதற்கு மேல் வார்த்தையெழவில்லை. குரல் தழுதழுக்க எழுந்து தன்னறைக்குச் சென்று விட்டாள்.

தூக்கமே இன்றி புரண்டு கிடந்த ஷெரினுக்குப் பொழுது புலர்ந்தது தாமதமாகவே தெரிந்தது. இருப்பினும், அதிகாலையிலேயே எழும்பி சகல வேலைகளையும் முடித்துக்கொண்டு தயாராகினாள். “கவலைப்படாதேம்மா. அம்மாவுக்கு ஒண்ணும் வராது. நோய் வந்தா எல்லாரும் அப்படித்தான். நாளைக்கு அவங்களுக்கு ஒப்ரேஷன் பண்ணப்போறங்க. அதான் இண்டைக்கு அவங்களப் பார்க்கப் போறம். நீ ஒண்ணும் யோசிக்காத. கொச்சிக்கடை அந்தோனியாருக்கு ஒரு நேர்த்தி வச்சுப்பம்.

என்ன?” என்று சித்தப்பாவின் வார்த்தையைக் கேட்டவளுக்கு இன்னும் பயம் அதிகரித்தது. “என் நற்கருணை நாதரே என் அம்மா எனக்கு வேணும். அவங்க அன்பு வேணும். அவங்க இல்லாத வாழ்வு எனக்கும் வேணாம். அவங்கதான் என் பெரிய சொத்து” ஷெரினின் மனம் இறைவனிடமே சரணடைய, கண்கள் கண்ணீரிடம் சரணடைந்தன.

அன்று வெள்ளிக்கிழமை புனிதமாய் புலர்ந்தது. இன்றுதான் தன் அன்னைக்கு இதயத்திலே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவிருந்தது. அதிகாலையிலேயே யாவரும் தயாராகி தேவாலயம் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வைத்தியசாலை செல்லத் தயாரானார்கள். முகம் வாடிப்போய் வாகனத்தில் அமர்ந்திருந்த ஷெரினுக்கு சித்தி டயானா ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள். வான் வைத்தியசாலைக்கு விரைந்தது. மனம் பதைபதைக்க, வைத்தியரின் அனுமதியுடன் தாயைச் சந்திக்க ஓடோடி சென்றாள் ஷெரின். அங்கே சத்திரசிகிச்சைக்காக தயார் நிலையில் தன் தாயாரை வைத்திருந்தனர்.

ஷெரினுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டுவர, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தன் அம்மாவின் கைகளைப் பற்றி இறைவனைப் பிரார்த்தனை செய்தாள். தாயின் பாதத்தைத் தொட்டு வணங்கினாள். மேரியின் கண்களில் கண்ணீரே வடிந்து கொண்டிருக்க, “அம்மா வாங்க… போகலாம்” என்று ஒரு வைத்தியர் மேரியைப் பார்த்துக் கூற ஜோசப்பும், ஷெரினும் கவலையுடன் வெளியில் வந்தனர்.

நத்தாருக்கு இன்னும் மூன்று தினங்களிருக்கின்ற நிலையில் சத்திரசிகிச்சை நன்றாக முடிய வேண்டும், என்பதே அனைவரின் பிரார்த்தனையாய் இருந்தது. நேரம் மாலை இரண்டை கடந்திருக்க, உறவினர்களும் – நண்பர்களும் வைத்தியசாலையின் பார்வையாளர் அறையில் பேசிக் கொண்டிருந்தனர். “ஏம்மா ஷெரின் ஒப்ரேஷனுக்குக் கூட்டிப்போய் எத்தன மணி நேரமிருக்கும்” சித்தி டயானாவின் கேள்விக்கு “இப்போ இரண்டையும் தாண்டிட்டு. சரியா செவன் ஹவர் இருக்கும் அம்மா” என்றாள். “சரி… அப்பாவ போய் கேட்கச் சொன்னா” என்ற பேச்சு முடிய முன் “மிஸ்டர் ஜோசப். உங்கள டொக்டர் கூப்பிடுறார்” என்று தகவல் வந்ததும் ஓடோடிச் சென்றார் ஜோசப்.

ஷெரின் உட்பட யாவருக்கும் பயமும், எதிர்பார்ப்பும் அதிகரிக்க ஜோசப்பின் பின்னாலே ஓடிச் சென்றனர். வைத்தியரின் அறைக்குச் சென்று வெளியில் வந்தார் ஜோசப். “என்ன அண்ணா டொக்டர் சொன்னார்” என ரொபர்ட் கேட்க “ஒப்ரேஷன் வெற்றிகரமா முடிஞ்சதாம். ஐ.சி.யூல இருக்காங்களாம். போய்ப்பார்க்கலாம்ணு சொன்னார்.” என்று ஜோசப் கூறி முடிக்க, ஷெரினின் கண்களிலும், அனைவரது கண்களிலும் மகிழ்ச்சி கண்ணீராய் பிரவாகித்தது. ஐ.சி.யூ.பக்கம் ஓடினாள் ஷெரின்.

தாயிருக்கும் கட்டிலின் அருகில் சென்றவள், உடல் நடுங்க, மனம் படபடக்க தாய் முகத்தைப் பார்த்தழுதாள். “அம்…மா” என்றவளை கண்கள் திறந்து பார்த்து மெதுவாக சிரித்தாள் மேரி. நெற்றியிலும், கைகளிலும் தன் தாய்க்கு மாறி, மாறி முத்தமிட்டாள் ஷெரின், அவளுக்குத் தன்னுயிர் மீள வந்தது போல உணர்வு ஏற்பட்டிருந்தது. அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு இறைவனுக்கு நன்றி கூறினாள். ஆனந்த கண்ணீருடன் வெளியில் வந்தவளை அனைவரும் விசாரித்து தமது சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டனர்.

சென்ற வருடத்தைப் போலவே இவ்வருடமும் கிறிஸ்மஸ் விசேடமாய் இரட்டிப்பாய் கொண்டாட வேண்டும் என மனதில் எண்ணிய ஷெரினுக்கு, மாட்டுக் கொட்டிலில், எளிமையின் உருவாய் பாவிகளை மீட்க வந்த அந்த இயேசு பாலனின் கள்ளம் கபடமில்லா சிரித்த முகம் தோன்றி மறைந்தது.

– வி.எம்.எலிசபெத் காசல்ரீ

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *