பாபம் போக்கும் கிருஷ்ணா புஷ்கரம்

 

வாழ்க்கையின்​ ஆதாரம் நீர். நீர் தோன்றிய பின் தான் உயிர்கள் தோன்றின. உயர்ந்த நாகரீகங்கள் எல்லாம் நதிக் கரைகளில்தான் தோன்றி மலர்ந்தன. நீராடல் உத்தமச் செயல். அதிலும் நதி நீராடல் மிக உத்தமம். புஷ்கர சமயத்தில் நதி நீராடல் மிக மிக உத்தமச் செயல். புஷ்கரம் என்பது நதிகளின் திருவிழா.

நீரின் சக்திகள்:-
நீரில் இரண்டு சக்திகள் இருப்பதாக வேதம் போற்றுகிறது. ஒன்று தாகம் தீர்ப்பது. இரண்டாவது சுத்தம் செய்வது. இவ்விரண்டும் வெளிப்படையாகத் தெரிபவை. அந்தரங்கமாக மேத்யம், யஜனம் என்ற இரண்டு சக்திகளுள்ளன. மேத்யம் என்பது நதியில் இறங்கி மூன்று முறை முழுகி எழுந்தால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தையும் போக்கும் குணம். யஜனம் என்றால் நீரைத் தெளிப்பதால் (சம்ப்ரோக்ஷணம்) பூஜா திரவியங்கள் போன்றவற்றை பரிசுத்தமாக்குவது. நீர் நாராயண சொரூபம் ஆதலால் அவருடைய ஸ்பரிசத்தினால் பாவங்கள் தொலைந்து சுத்தமாகின்றன என்பது நம்பிக்கை.

புஷ்கரம் என்றால் நீர், வருணன், தாமரை, பன்னிரண்டு ஆண்டுகள் போன்ற பல பொருள்கள் உள்ளன. ஒவ்வொரு பன்னிரண்டு வருடங்களுக்கொரு முறை இந்தியாவின் பன்னிரண்டு முக்கிய நதிகளுக்கு புஷ்கரம் ஏற்படுகிறது.

பிருஹஸ்பதி எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த நதிக்கு புஷ்கரம் வருகிறது. ஒவ்வொரு நதிக்கும் ஒரு ராசி உண்டு. புஷ்கரம் என்பது சாதாரணமாக ஓராண்டு காலம் கொண்டாடப்படுகிறது. அதில் முதல் 12 நாட்கள் ஆதி புஷ்கரம் என்றும், கடைசி 12 நாட்கள் அந்திய புஷ்கரம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்விரண்டுமே முக்கிய நாட்கள்.

புஷ்கரனின் தோற்றம் :-

புண்ணிய நதிகளில் மக்கள் நீராடி தம் பாவங்களைத் தொலைக்கின்றனர். நதிகள் அவற்றை ஏற்று அசுத்தம் ஆகின்றன. மனிதர்களால் தமக்கு ஏற்பட்ட பாவங்களைச் சுமந்து கலக்கமுறும் நதிகள் புஷ்கர சமயத்தில் புனிதம் அடைகின்றன.

முன்னொரு காலத்தில் தர்மத்தோடு வாழ்ந்த தந்திலன் என்ற முனிவர் ஈஸ்வரனைக் குறித்து தவம் செய்து ஈஸ்வர சாக்ஷாத்காரம் பெற்றார். ஈஸ்வரனோடு நிலைத்திருக்கும் வரம் கோரினார். ஈஸ்வரன் மகிழ்ந்து தன் அஷ்ட மூர்த்திகளிள் ஒன்றான ஜல மூர்த்தியில் தந்திலனுக்கு சாஸ்வத ஸ்தானத்தை அளித்தான்.

அதன் மூலம் தந்திலன் மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்களுக்கு அதிகாரி ஆனார். இதனால் சகல ஜீவராசிகளையும் போஷிக்கும் சக்தி அவருக்குக் கிடைத்தது. ‘போஷிக்கும்’ சக்தியை வட மொழியில் ‘புஷ்கரம்’ என்பர். இவ்விதம் தந்திலன் புஷ்கரன் என்றானார்.

பிரம்ம தேவர் சிருஷ்டி தொழிலைச் செய்வதற்கு நீர் தேவை என்பதால் ஜல சாம்ராஜ்யத்திற்கு சக்ரவர்த்தியான புஷ்கரனைத் தனக்கு தரும்படி ஈஸ்வரனைக் கோரினார். ஈஸ்வரனின் அனுமதியோடு புஷ்கரன் பிரம்மாவின் கமண்டலத்தில் புகுந்தார். பிரம்மாவின் வேலை பூர்த்தியானவுடன், உயிர்களைக் காப்பதற்காக பிருகஸ்பதி, உயிர்களின் ஜீவாதாரமான நீரை அளிக்கும்படி பிரம்மாவை பிரார்த்தித்தார். ஆனால் புஷ்கரன், பிரம்மாவை விட்டு விலக இணங்கவில்லை. அப்போது பிருகஸ்பதி, பிரம்மா, புஷ்கரன் மூவரும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தனர். அதன்படி கிரக ரூபத்தில் உள்ள பிருகஸ்பதி மேஷம் முதலிய பன்னிரண்டு ராசிகளில் பிரவேசிக்கும் போது ஆண்டில் முதல் பன்னிரண்டு நாட்களில் முழுமையாகவும், மீதி உள்ள நாட்களில் மத்தியானம் இரண்டு முகூர்த்த காலம் மட்டும் புஷ்கரன் பிருகஸ்பதியோடு இருக்க வேண்டுமென்று தீர்மானமாயிற்று. அச்சமயத்தில் அனைத்து தேவதைகளும் பிரகஸ்பதி அதிதேவதையாக உள்ள நதிக்கு புஷ்கரனுடன் வருவார்கள். ஆதலால் புஷ்கர நதி நீராடல் புண்ணியமளிக்கக் கூடியது என்று புராணங்கள் விவரிக்கின்றன.

பிரம்மவால் அனுப்பப் பட்டவர் என்பதால் புஷ்கரர் நதிகளுக்கு வரும் போது சப்த ரிஷிகளும் அவருக்கு கௌரவமளித்து வரவேற்பளிப்பர் என்றும் அவர்களும் சூட்சும உருவில் நதிகளில் பிரவேசிப்பார்கள் என்றும் அவர்கள் வரும் காலம் பவித்திரமானதென்றும் பக்தர்களின் நம்பிக்கை.

குரு கிரகம் அதாவது பிருகஸ்பதி மேஷ ராசியில் பிரவேசிக்கையில் புஷ்கரன் கங்கா நதியிலும், கன்யா ராசிக்கு வரும் போது, கிருஷ்ணா நதியிலும், சிம்ம ராசிக்கு வரும்போது கோதாவரியிலும் வந்து சேருவார் என்பது ஐதீகம்.

மக்கள் நம்பிக்கை:-
ஒவ்வொரு புஷ்கர சமயத்திலும் அந்நதிக்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து நீராடிச் செல்வது வழக்கம். பித்ரு தேவதைகளை நினைத்து தர்பணமளிக்க இந்நாட்கள் மிக முக்கியமானவை.

புஷ்கரம் நிகழும் ஓராண்டில் அந்த நதிக்கு அருகில் வசிப்பவர்கள் திருமணம் போன்ற சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். வேறு வழியின்றிச் செய்ய நேர்ந்தால் வேறு தூர பிரதேசத்திற்குச் சென்று செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

முக்கரணங்களால் செய்த பாவங்களை புஷ்கர ஸ்நானம் போக்கி விடும் என்பதும், ஒருமுறை புஷ்கர நீராடினால் பன்னிரண்டு ஆண்டு காலம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்குமென்பதும், மோட்சத்தை அளிக்கக் கூடியதென்பதும், அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்குமென்பதும், நோய்கள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்மென்பதும் ரிஷிகளின் வாக்கு.

கிருஷ்ணா நதி:-
புண்ணிய நதிகளுள் ஒன்றான கிருஷ்ணா நதி இந்தியாவின் நான்காவது பெரிய நதி. இது 1300 கி.மீ. நீளம் கொண்டது. இது மேற்கு தொடர்ச்சி மலையில் மகாராஷ்டிராவின் மகாபலேஸ்வரில் உற்பத்தியாகி கர்நாடகா, தெலங்காணா வழியாக பாய்ந்து ஆந்திர பிரதேசத்தின் ‘ஹம்சலதீவி’ யில் வங்கக் கடலில் கலக்கிறது. இது பல உப நதிகளை கொண்டது அவற்றுள் முக்கியமானது துங்கபத்ரா நதி.

ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் பல புண்ணிய க்ஷேத்திரங்கள் உள்ளன. அவற்றுள் இந்திர நீலகிரி மலையில் அமைந்துள்ள விஜயவாடா கனகதுர்கா ஆலயம், ஸ்ரீசைலம் பிரமராம்பிகா மல்லிகார்ஜுன சுவாமி ஆலயம், குண்டூர் அமராவதியில் (ஆந்திர பிரதேஷ் தலைநகர்) உள்ள அமரேஸ்வரர் ஆலயம் முக்கியமானவை. இவற்றுள் விஜயவாடா நகரம் கிருஷ்ணா புஷ்கராலுவின் முக்கிய மையம்.

தெலங்காணாவில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள ஆலம்பூர், பீச்பல்லி, மட்டபல்லி போன்ற புனிதத் தலங்கள் புஷ்கரதிற்காக புதிய வனப்பு பெறுகின்றன.

புஷ்கர ஏற்பாடுகள் :-
கிருஷ்ணா நதியின் நீராடும் துறைகளை எல்லாம் சுத்தமாக அழகு படுத்தி அலங்கரிப்பதில் ஆந்திரப் பிரதேஷ் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கிருஷ்ணா நதியைச் சுற்றி உள்ள மூன்று மாவட்டங்களிலும் புஷ்கர ஏற்பாடுகளை மிக வேகமாக நிறைவேற்றி வருகிறது அரசு. புஷ்கரத்தின் முதல் நாளிலிருந்தே கிருஷ்ணா நதிக்கு நித்திய ஆரத்தி எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆணையிட்டுள்ளார்.

புதிதாக அமைக்கப் பட்டுள்ள தெலங்காணா மாநிலத்தின் முதல் கிருஷ்ணா புஷ்கரம் என்பதால் ஜோராக ஏற்பாடுகள் நடக்கின்றன. தெலங்காணாவில் சுமார் ரூபாய் 600 கோடிகள் கிருஷ்ணா புஷ்கரத்திற்காக செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. நல்கொண்டா மற்றும் மஹபூப் நகர் மாவட்டங்களில் 50 புதிய குளியல் துறைகள் அமைக்கப்பட்டு, பழைய துறைகள் செப்பனிடப்படுகின்றன.

முன்பு 1992, 2004 ஆம் ஆண்டுகளில் கிருஷ்ணா புஷ்கரம் நடைபெற்றது. தற்போது 2016இல் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 23 வரை பன்னிரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கிருஷ்ணா புஷ்கரத்திற்கு ஐந்து கோடி பேருக்கு மேல் மக்கள் வருவார்கள் என்று கணக்கிட்டுள்ள ஆந்திர பிரதேஷ் அரசு குண்டூர் மாவட்டத்தில் 96 நீராடு துறைகளையும், கிருஷ்ணா ஜில்லாவில் 118 நீராடு துறைகளையும் ஏற்பாடு செய்யவுள்ளது.

2015 ஜூலை யில் நடந்த கோதாவரி புஷ்கரத்தை விமரிசையாக நடத்தியதை விட மிக விமரிசையாகவும் வெற்றிகரமாகவும் கிருஷ்ணா புஷ்கரத்தை நடத்த தீர்மானித்து செயலில் இறங்கியுள்ளது அரசாங்கம். இம்முறை மழை மிகுதியாக இருக்குமென்பதால் கிருஷ்ணா நதியில் நீர் வரத்து மகிழ்ச்சியை அளிக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

சுற்றுச் சூழல்:-
நதிகளின் நிலையையும், அதன் சுற்றுச் சூழலையும் கவனித்து ஆவன செய்து பரிசுத்தமாக வைத்துக் கொள்ளும் நிமித்தம் இந்த புஷ்கரங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர, பூஜை செய்து நீராடுவதற்கு மட்டுமே அல்ல என்பது சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கருத்து. நதியில் எங்கு மேடிட்டுள்ளது? எங்கெங்கு மணல் அள்ளப்பட்டுள்ளது? நதிக்கரைகளில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளனவா? சாக்கடை அசுத்தங்களும் ஆலைக் கழிவுகளும் கலக்கின்றனவா? போன்றவற்றை ஆராய்ந்து இயற்கை அன்னை நமக்களித்துள்ள நதிச் செல்வங்களைச் சீரமைத்துப் போற்றிக் காக்க இந்த சந்தர்பங்களைப் பயன்படுத்தி நதிகளின் மேல் நம் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் தான் நம் முன்னோர் இத்தகைய நீராடும் திருவிழாக்களை ஏற்பாடு செய்துள்ளள்ளார்கள் என்பது திண்ணம்.

- தீபம், 20 ஆகஸ்ட், 2016ல் பிரசுரமானது. 

தொடர்புடைய சிறுகதைகள்
எனக்கு இதுதான் முதல் அனுபவம். அவருக்கும் அப்படித்தானாம். அப்பா சொன்னார். இத்தனை நாள் டியூஷன் இல்லாமலேயே படித்தேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு வந்து விட்டேன். இப்போது அப்பா புதிதாக பிரைவேட் டியூஷனுக்கு ஏற்பாடு செய்த போது கவனமாகப் படிக்க ...
மேலும் கதையை படிக்க...
படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிக்கையைச் சோர்வோடு மூடினாள் ராதிகா. சே! வெறும் அபத்தம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? கற்பனைக்கும் ஓர் அளவு வேண்டாம்? "என்ன? உனக்குள் நீயே முணுமுணுக்கற?" லேசாகப் புரண்டு அருகில் படுத்திருந்த மனைவியைக் கேட்டான் சதீஷ். அது ஒரு ஞாயிறு ...
மேலும் கதையை படிக்க...
புகழ் பெற்ற விதேக ராஜ்ஜியத்தின் அரசரான ஜனக மஹாராஜா உண்மை உணர்ந்த ஞானி. மிகப் புலமை வாய்ந்த மன்னரான அவர் அடிக்கடி தம் அரசவையில் தத்துவ விசாரணைகளை நடத்தி தர்க்கங்களையும் வாதங்களையும் ஊக்குவிப்பது வழக்கம். அதில் பங்கேற்கும் பண்டிதர்களுக்கு விலை உயர்ந்த ...
மேலும் கதையை படிக்க...
ராம - ராவண யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் ராவணன், சீதா தேவியின் முன்பாக ஒரு கபடமான யுக்தியைப் பிரயோகித்தான். மகா மாயாவியான ராவணன், 'வித்யுஜ்ஜிஹ்வன்' என்ற மந்திரவாதி அரக்கனை அழைத்து சீதையின் மனதை சிதற அடிப்பதற்காக ஒரு ஆலோசனை செய்தான். அதன்படி, "அரக்கனே! ...
மேலும் கதையை படிக்க...
கலாசாரம், தர்மம், விஞ்ஞானம் ​ ...​ இவையனைத்தும் பரம்பரையாக வரக்கூடியவை. ஒருவரிடமிருந்து ​மற்றவருக்குக் கிடைப்பவை. ஒரு காலத்தில் அல்பமாகத் தோன்றுவது பின்னால் வரும் வம்சாவளிக்கு அதிக பலத்துடன் கூடியதாகிறது. எனவே தான் ஒவ்வொரு பரம்பரையினரும் தம் பின் வரும் பரம்பரைகளுக்காகத் தகுந்த கவனம் செலுத்த ...
மேலும் கதையை படிக்க...
டியூஷன்
அவளுக்குப் புரிந்து விட்டது ….
ஜனகரின் அவையில் நடந்த சுவையான நிகழ்ச்சி
சீதையும் ஸ்ரீராமனும் செய்த சூரிய வழிபாடு
பரம்பரையின் மகத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)