பசுமாட்டு உருவில் பூமா தேவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 14,049 
 

“பாரத தேசத்தவரான நாம் பசுமாட்டினை தாயாக வணங்கும் கலாசாரம் கொண்டுள்ளோம். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. விஞ்ஞானம் கூட கோமாதாவின் சிறப்பினை பல விதங்களில் நிரூபித்துள்ளது.

பசுவின் பால், தயிர், நெய் சிறுநீர், சாணம் இவற்றை ‘யக்ய திரவியங்களாக’ உபயோகிக்கிறோம். ‘பஞ்ச கவ்யம்’ ஏற்பது சிறந்த சுத்திகரிப்பு செயலாக கடைபிடிக்கப்படுகிறது. சிறப்பான மருத்துவ குணம் கொண்டுள்ள இவற்றின் தனிப்பட்ட விசேஷ சக்தியை சமீபத்தில் மேல்நாட்டு விஞ்ஞானிகள் கூட சோதனை செய்து நிரூபித்துள்ளார்கள்.

அதிலும் சிறப்பாக நம் நாட்டிற்கு சொந்தமான ‘தேசிய பசு’ மாட்டு இனத்தின் சிறப்புகள் பல புராதன நூல்களில் விளக்கப் பட்டுள்ளன.

‘கோ’ என்ற சொல் வேத வாக்கியங்களுக்கும், சூரிய கிரணங்களுக்கும், பூமிக்கும், பிராண சக்திக்கும், பசு மாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவையனைத்திற்கும் பரஸ்பர தொடர்பு உள்ளதென்று இச்சொல்லின் பொருளே தெரிவிக்கிறது.

சூரிய கிரணங்களுள் ‘கோ’ வடிவ கிரணங்களை பசுக்களும் பூமியும் கிரகிக்கின்றனவென்று வேதம் கூறுகிறது. இந்த ‘கோ’ வடிவ கிரணங்களை பசுவின் ‘மூபுரம்’ எனப்படும் ‘திமிலில்’ உள்ள சுவர்ண நாடி கிரகிக்கிறது. அதனால் தான் பசும்பாலில் வீரியம் மிகுந்த உத்தம மருத்துவ குணங்கள் உள்ளனவென்று ஆயுர்வேதம் போன்ற மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன.

ஒருமுறை பரீட்சித்து மகாராஜா தர்மத்தைப் பாதுகாப்பதற்காக தேசத்தில் யாத்திரை செய்கையில் ஓரிடத்தில் பூமாதேவி பசுமாட்டு உருவிலும், தர்ம தேவர் காளை மாட்டு உருவிலும் காணப்பட்டனர். இவ்விரண்டும் ஒன்றோடொன்று உரையாடிக் கொண்டிருந்ததை பரீட்சித்து கவனித்தான்.

ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் நிகழ்ந்த நல்ல நிகழ்சிகளைப் பற்றி பேசியபடி, பகவான் அவதார காரியத்தை முடித்துக் கொண்டதற்காக வருந்தி ஒன்றுக்கொன்று சமாதானபடுத்திகொண்டிருந்தன. அச்சமயத்தில் கலி புருஷன் அங்கு வந்து காளை மாட்டைக் காலால் உதைத்தான்.

கோமாதா வேதனையுற்றது. பசுமாட்டை துன்புறுத்துகையில் பார்த்துக் கொன்டு சகித்திருப்பது கூட பாவமே. அதிலும் அரசனானவன் கோ ஹிம்சை செய்பவனை தண்டிக்க வேண்டுமென்பதால் பரீட்சித்து கலி புருஷனைத் தடுத்தான்.

இது பாகவதத்தில் காணப்படும் செய்தி. இங்கு பூமியை பசுவாகவும் தர்மத்தை காளையாகவும் குறிப்பாக கூறியுள்ளதில் சிறப்பு உள்ளது. காளை மாட்டின் மூலம் பசு பேறு பெறுகிறது. பால் அளிக்கிறது. அதே போல் தர்மத்தின் மூலமே பூமி பேறு பெறுகிறது. பூமியில் வசிப்போருக்கு பயிர்களை விளைவித்து உணவளிக்கிறது.

பூமியையும் பசுவையும் அன்னை வடிவங்களாக வழிபடும் தெய்வீக கலாசாரம் கொண்டது நம் நாடு. பூமி தன் மீது அதர்மத்தின் பளு அதிகரித்த போது பசு மாட்டின் வடிவெடுத்து வைகுண்டத்திற்கு சென்று நாராயணனிடம் முறையிட்டதாக புராணம் விவரிக்கிறது.

பசுவை சித்ரவதை செய்தால் பூமியில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்றும் பசுவை உதைத்தால் பெரும் பாதகம் ஏற்படும் என்றும் ராமாயணம் போன்ற நூல்கள் கூறுகின்றன.

ஜகன்மாதா முதலில் கோமாதாவாக ‘சுரபி’ என்ற பெயரில் தோன்றினாள் என்று புராணம் சொல்கிறது. ‘ஸ்ரீ சுரப்யை நமஹ’ என்ற மந்திரத்தை ஜபம் செய்தால் நினைத்த நற்செயல்கள் அனைத்தும் நிறைவேறும்.

பசுக்களின் திவ்ய உலகமான ‘கோலோகம்’ மேலே பிரகாசித்தபடி உள்ளதென்றும் அங்கு நாராயணன் ஸ்ரீகிருஷ்ண வடிவத்தில் ராதா தேவியுடன் சேர்ந்து நித்திய வாசம் செய்கிறான் என்றும், அந்த கோலோக தத்துவத்தையே தன் கிருஷ்ணாவதாரத்தில் பிருந்தாவனத்தில் நிகழ்த்திக் காட்டினான் என்றும் புராணங்கள் விவரிக்கின்றன.

பசுவின் உடலில் கொம்புகள் முதல் வால் நுனிவரை சர்வ தேவதைகளும் வசிக்கிறார்கள். பசுவின் சாணத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மி நித்திய நிவாசம் செய்கிறாள்.

”யக்யத்தில் வழிபடும் தேவதைகளுக்கு எதை சமர்பிப்பது?” என்ற கேள்வி ரிஷிகளிடையே எழுந்தது. அமிர்தத்தை அருந்தும் தேவதைகளுக்கு பூமியில் வசிக்கும் மானுடர்கள் அமிர்தத்தை எவ்வாறு அளிக்க முடியும்?

அப்போது தேவதைகளே ரிஷிகளுக்கு பதிலளித்தார்கள். “பூலோகத்தில் கிடைக்கும் அமிர்தம் பசுவின் பால். அதோடு கூட பாலிலிருந்து கிடைக்கும் தயிரும் நெய்யும் கூட அமிர்த சொருபங்களே”

அக்காரணத்தால்தான் பசு மட்டுமே தரும் அமிர்தமாக உள்ள பசு நெய்யை யக்ய அக்னியில் சமர்பிக்கிறோம். தெய்வத்திற்கு நெய்வேத்யம் செய்யும் உணவு பதார்த்தங்களில் பசு நெய்யாகிய அமிர்தத்தை தெளிப்பதால் ‘அன்ன சுத்தி’ கிடைக்கிறது. தெய்வத்திற்கு படைப்பதற்கு தகுதியுடையதாகிறது.

வைகுண்டத்திலும், யோகிகளின் இதயத்திலும் சஞ்சரிக்கும் நாராயணன், கோபாலர்களின் இடையில் விளையாடி மாட்டுச் சாணம் பாதங்களில் ஒட்டிக் கொள்ள, மாடுகளின் கால் குளம்புகளால் பறக்கும் தூசியை சந்தனப் பொடி போல் உடலில் பூசி, கோபால கிருஷ்ணனாக ஆனான். கோவிந்தனாக வழிபடப்படுகிறான்.

திலீப சக்ரவர்த்தி தன் மனைவி சுதக்ஷிணாவுடன் சேர்ந்து வசிஷ்டரின் ஆசிரமத்தில் தீக்ஷை வகித்து ‘நந்தினி’ என்ற பசுவினை வழிபட்டு சேவை செய்து குழந்தைப் பேறு பெற்றதாக ‘ரகுவம்சம்’ விவரிக்கிறது.

”கோஸ்து மாத்ரா ந வித்யதே’ -‘பசுவிற்கு சமானமானது வேறில்லை’ என்பது யஜுர் வேத மந்திரம். ‘விஸ்வத்தின் ஆதார சக்தியாக’ கோமாதாவை வேதம் துதிக்கிறது.

“காவை பஸ்யாம் யஹம் நித்யம் காவ: பச்யந்து மாம் சதா”

– “நாங்கள் எப்போதும் பசுக்கக்ளைப் பார்த்திருப்போமாக! பசுக்களும் எங்களைப் பார்த்திருக்குமாக! நாங்கள் பசுவுக்களுக்கும் பசுக்கள் எங்களுக்கும் தொடர்புடையவர்கள். எங்களுக்கு முன்னும் பின்னும் எல்லா பக்கங்களிலும் பசுக்கள் இருக்க வேண்டும். நித்தியம் பசுக்களின் நடுவில் நான் வசிக்க வேண்டும்” என்ற பிரார்த்தனையை மகாபாரதம் உபதேசிக்கிறது.

சுபமஸ்து.

-‘இது நம் சனாதன தர்மம்’ என்ற நூலிலிருந்து –
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – திருமதி ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *