பசியால் வாடிய அருணகிரிநாதர்!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 14,002 
 

இளம் வயதிலேயே, அருணகிரிநாதர் படத்தைப் பலரிடம் தந்து வழிபடுவதற்கு வழிகாட்டியவர். தலைசிறந்த முருக பக்தர். அருணகிரிநாதரிடம் அளவில் லாத, அசைக்க முடியாத பக்தி கொண் டவர். இப்படிப்பட்டவர், தானே முன்னின்று வயலூர் முருகன் கோயில் ராஜ கோபுரத் திருப்பணியை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு நாள்… இந்த பக்தரும் அவர் நண்பரும் கோயிலி லேயே படுத்துக் கொண்டனர். விடியற்காலை ஐந்து மணி. பக்தருக்கு இனிமையான ஒரு கனவு. அதில் காங்கேயநல்லூர் முருகன் கோயிலில் அருணகிரி நாதர் விக்கிரகத்தின் முன் நின்று கைகூப்பி வழி படுகிறார் பக்தர். அப்போது அருணகிரிநாதர் வடிவம் முன்பக்கம் சற்றுச் சாய்ந்திருந்தது. ‘ஏன் இப்படி?’ என்று பக்தர் வருந்தினார். சட்டென்று அருணகிரிநாதர் விக்கிரகம் நிமிர்ந்து நின்றது. காவி உடையில் காட்சியளித்த அருணகிரிநாதர், தன் பக்தரை அருகே அழைத்து, ‘‘ரொம்ப பசியா இருக்கு. கொஞ்சம் சாதம் போடு!’’ என்றார்.

பசியால் வாடியபக்தர் தன் தம்பியை வீட்டிலிருந்து உணவு எடுத்து வரச் சொன்னார். சற்று நேரத்தில் திரும்பிய தம்பி, ‘‘இந்த நேரத்தில் வீட்டில் அன்னம் இல்லை!’’ என்றார். அருணகிரிநாதரோ, ‘‘எனக்குக் கடும் பசி. உப்புமா கிண்டிக் கொடு!’’ என்றார்.

பக்தரின் தம்பி மறுபடியும் வீட்டுக்குப் போய் வந்து ‘‘அரிசி நொய்தான் இருக்கிறதாம். அதில் உப்புமா செய்து கொடுத்தால், ஸ்வாமி சாப்பிடுவாரா என்று அம்மா கேட்டு வரச் சொன்னார்!’’ என்றார். அதைக் கேட்ட அருணகிரிநாதர், பக்தரிடம், ‘‘உன் கையால் ஏதாவது தா… என் பசி தீரும்!’’ என்றார்.

‘அருணகிரிநாதருக்கு சரிவர நைவேத்தியம் ஆகவில்லை போலும். ஆகவே, அவரின் நைவேத்தியத்துக்கு ஏதாவது, நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும்!’ எனத் தீர்மானித்தார் பக்தர். பின்பு சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து, இரண்டு ஆண்டுகளில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி, அதை அருணகிரிநாதர் பெயரிலேயே பதிவும் செய்தார். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் இன்றும் அருணகிரிநாதருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, அது பல ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த முருக பக்தர் வேறு யாருமல்ல… திருமுருக கிருபானந்த வாரி யார் சுவாமிகள்தான்!

அருணகிரிநாதரின் காலம் கி.பி. 15&ஆம் நூற்றாண்டு. 14&ஆம் நூற்றாண்டு என்றும் சொல்வர். சந்தக்கவி, தளமாலையின் முதல்வர், பன்னிருகை வேலவனைப் பாடியதில் முதல் இடம் பெற்றவர். முருகனை நேரில் தரிசித்தவர். எனினும், அசடர்களும் அறிவிலிகளு மான சிலர் அருணகிரிநாதரைப் பழித்தனர். ஒரு முறை… திருத்தணிகையில் அடியார்கள் சூழ, ஆறுமுகனை துதித்துத் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியபடி, மலையை வலம் வந்து கொண்டிருந்தார் அருணகிரிநாதர்.

அங்கிருந்த சிலர், ‘‘ஆளப் பார்றா! நெத்தியில சுண்ணாம்பு, உடம்புல காவிப் புடவை, கழுத்துல என்னவோ தொங்குது, கேட்டா ருத்ராட்சம்னு சொல்லுவானுக. கால்கால்னு கத்திக்கிட்டு, மலையைச் சுத்தறாங்களாம். தொல்லை குடுக்கறானுங்கப்பா!’’ என்று பழித்துப் பேசினார்கள்.

அவர்களது வம்பு ஒரு கட்டத்தில் எல்லை மீறியது. அருணகிரிநாதர் மனம் வருந்தினார்.

‘‘முருகா! உன் திருப்புகழையும், அதைப் பாடும் இந்த உத்தமர்களையும் இப்படிப் பழித்துப் பேசுகிறார்களே! இவர்களை எரிக்க, தனியாக நெருப்பா வேண்டும்! திருப்புகழே நெருப்பாக மாறி இவர்களை எரித்து விடாதா?’’ என்று முறையிட்டு, ‘சினத்தவர் முடிக்கும்’ என்ற ‘திருப்புகழ்’ பாடலைப் பாடினார். இகழ்ந்தவர் அனைவரும் அப்போதே சாம்பலாகினர். அதைக் கண்ட அருணகிரிநாதர், அதிகம் மனம் வருந்தி முருகனிடம் முறையிட்டார். அதற்கு முருகன் செவி சாய்த்தான். சாம்பலானவர்கள் அனைவரும் மீண்டும் உயிருடன் எழுந்தனர்.

அருணகிரிநாதரின் கால்களில் விழுந்து வணங்கிய அவர்கள், ‘‘ஐயா! தங்களை இகழ்ந்த எங்களுக்கும் உயிர்ப் பிச்சை அளித்தீர்களே… எங்களை மன்னித்து, அடியார் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்!’’ என வேண்டினர். அந்த வேண்டுதலை அருணகிரிநாதர் நிறைவேற்றினார்.

ஒரு நாள், அருணகிரிநாதரின் எதிரில் புலவர்கள் சிலர் வந்தனர். ஆர்வத்தோடு அவர்களைப் பார்த்தவர் திடுக்கிட்டார். ஏனெனில், அந்தப் புலவர்கள் அனைவரும் காதுகளை இழந்திருந்தனர். காரணம் கேட்டபோது, ‘‘நாங்கள் பாடிய பாடல்களில் குற்றம் கண்டுபிடித்து வில்லிப்புத்தூரார் இவ்வாறு தண்டித்தார்!’’ என்றனர்.

அவர்களை வில்லிப்புத்தூராரிடம் அழைத்துப் போனார். அங்கே, வில்லிப்புத்தூராருக்கும் அருணகிரி நாதருக்கும் புலமைப் போட்டி ஆரம்பமானது.

அருணகிரிநாதரின் பாடல்களுக்கு வில்லிப் புத்தூரார் பொருள் சொல்ல வேண்டும். சொல்லா விட்டால் வில்லிப்புத்தூரார் தோற்றுப் போவார். வில்லிப்புத்தூரார் தனது வழக்கப்படி வாளாயுதத்தை அருணகிரிநாதரின் காதில் மாட்டிப் பிடித்துக் கொண்டார். அருணகிரிநாதர் தோற்று விட்டால், அவர் காதை அறுப்பது வில்லிப்புத்தூராரின் எண் ணம்.

அருணகிரிநாதரும் அதே போல வாளாயுதம் ஒன்றை வில்லிப்புத்தூராரின் காதில் மாட்டிப் பிடித்துக் கொண்டார். போட்டி ஆரம்பமானது. அருணகிரிநாதர் தடையில்லாமல் பாடல்கள் பாடினார். வில்லிப்புத்தூராரும் தடையின்றிப் பொருள் சொல்லி வந்தார்.

இப்படி ஐம்பத்துநாலாவதாக, ‘திதத் தத்தத்’ என்று தொடங்கும் பாடல் வெளியானது.

திதத் தத்தத் தித்தத் திதிதாதை
தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்ததி தித்திதத்த
தேதுத்து தித்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை
தாததீ தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித் திதீதீ
திதி துதி தீ தொத்ததே

‘இந்தப் பாடலை வில்லிப்புத்தூரார் திரும்பவும் சொல்லலாம் அல்லது பதவுரையோ கருத்துரையோ கூடச் சொல்லலாம்’ என்று வில்லிப்புத் தூராருக்கு விளக்கப்பட்டது. ஆனால், அவரோ, ‘‘என்னால் முடியாது!’’ என்று தன்னிடமிருந்த வாளாயுதத்தை வீசி எறிந்து, ‘‘அருணகிரிநாதரே! நான் தோற்று விட்டேன். என் காதுகளை அறுத்து விடுங்கள்!’’ என்றார்.

தன்னிடம் இருந்த வாளாயுதத்தையும் வீசி எறிந்த அருணகிரிநாதர், ‘‘புலவரே! நடந்து கொண்டே இருந்தால் காலும், பார்த்துக் கொண்டே இருந்தால் கண்ணும், பேசிக் கொண்டே இருந்தால் வாயும் வலிக்கும். ஆனால், கேட்டுக் கொண்டே இருந்தால் காது வலிக்காது. ஆகவே, நல்லதைக் கேளுங்கள்! நாலு பேருக்குச் சொல்லி வழிகாட்டி வாழ வையுங்கள்!’’ என்று கருணையோடு சொன்னார்.

அதன் பின், பாடலுக்கு அருணகிரிநாதரே பொருள் சொல்லி, வில்லிப்புத்தூராரின் வேண்டுதலின் பேரில், மேலும் 46 பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

அருணகிரிநாதரின் அருள் உள்ளத்தை வெளிப் படுத்தும் இந்த பாடல்கள், ‘கந்தரந்தாதி’ எனும் பெயரில் வில்லிப்புத்தூராரின் உரையோடு இப்போதும் கிடைக்கிறது. அதில் தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அருளை முழுமையாகப் பெற்ற அருணகிரிநாதரின் அருந்தமிழை அறிந்து, உணர்ந்து, தோய்ந்து நாமும் முருகன் அருளை அடையலாம்!

– ஜூன் 2007

Print Friendly, PDF & Email

2 thoughts on “பசியால் வாடிய அருணகிரிநாதர்!

  1. அருணகிரிநாதன் பற்றிய பக்திச்சுவையுடன் அழகாக வாரியார் பற்றிக் குறிப்பிட்டிருக்கீறீர்கள். மேலும் அருணகிரிநாதர் நற்செயலையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள்தொண்டு பாராட்டுக்குரியது .அருணகிரிநாதர் ஆசி எப்போது உங்களுக்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *