நெற்றிக் கண்

 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[ஓம்! பூர்வ கதையில், பகவானானவர், பவித்ரனான தம்மை பழித்துக்கொண்டு, ஆணவம் பிடித்து அலையும் தாருகாவனத்து ரிஷிகளைப் பங்கப்படுத்துவதற்குப் புறப்பட்டார்.]

பனிமலையில், சதா யோக நித்திரையிலேயே விறைத் திருந்த அவ்வுள்ளத்தில், பூவுலகின் ரஸ்மி புகுந்ததும், அது இளகிப் புளகித்தது. நடைவழியிலேயே, அவனது சிருஷ்டி யின் சிறப்பு அவனையே பிரமிக்கச் செய்தது. வண்டுகள் தேனைப் பூக்கிண்ணங்களினின்று வாரி வாரிக் குடித்து விட்டு, அவனது காதருகே சென்று. ரீங்காரம் செய்தன. அத்துடன் புட்களின் கானமும் சேர்ந்து இழைந்தது, ஆநிரைகள் அமைதியாய், பச்சைகளை மேய்ந்தன. வேளை யின் வெறியில், மான்குட்டிகள் துள்ளி விளையாடின. சர்வம் சௌந்தர்யம். ஈதெல்லாம் அவன் செயல். உள்ளம் உவகை பூத்தது. விருப்பு வெறுப்பற்ற அந்த மனத்தின் பரந்த வெளியில், பூமியின் உன்மத்தம் பற்றியதும், எடுத்த காரியம் பிடித்த காரியமாயிற்று.

பொன் வெயில் தான், அவனது மண் ஓட்டில் தன் பொன் கிரணத்தை முதற் பிச்சையாயிட்டது. அந்த மகிமையில் ஓடு பொன்னாய் மாறியதும், அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

இதோ அக்ரஹாரம்.

“தாயே தேஹி -”

உள்ளிருந்து மெட்டிச் சப்தம் அணுகியது. அவனது முகத்தில் முறுவல் அரும்பியது. தன் அற்புதமான அழகின் முள்ளை, தன் குரலினிமையால் மறைத்தான்….

வந்தாள். வந்து வாசலில் நின்றவள் தான். அவனுடய கண்கள், மெதுவாய் உயர்ந்து, அவளைக் காலினின்று தலை வரைக்கும் கணித்து, சட்டென அவளுடைய கண்களைச் சந்தித்து, கனிந்த விஷத்தைக் கக்கின. காமனைப் பழித்த அம் மாபெரும் அழகிலும் அதிக வேதனையுமுண்டோ? அவளுடைய மானமும் உள்ளமும் கழன்று. அவனது ஓட்டில் விழுந்தன. புன்னகை புரிந்தவண்ணம், கபாலி, மறு வாசலை நோக்கி நடந்தான்.

அன்று அவன் வாங்கிய பிச்சையே வினோதம். வளையும் பவித்ரமும், செவியினின்றி கழலும் குழையும், கண்டத்தினின்று சரிந்த சரமும் பிரம்ம கபாலத்தில் குவிந்தன. வீட்டுக்கு வீடு அந்தப் பிரம்மசாரி இழைத்த அலங்கோலத்துக்கு அளவு இல்லை!

கண்டதும் கல்லாய்ச் சமைந்தவர் எத்தனைபேர்! அவன் கையைப் பிடித்திழுப்பவர் எத்தனைபேர்! அவனைப் பங்கிட ஒருத்தரோடொருவர் பூனை போல் பிறாண்டிச் சண்டையிடு பவர் எத்தனையோ? அவசரமாய், வற்கலமும் புடவையும் இடையினின்று நெகிழ, மெய்ம்மறந்து மயங்கி நிற்பவர் எத் தனை பேர்? அந்தக் காட்சி அவனுக்குத்தான் அற்புதம். சகல ஆசாரங்களுக்கும் உறைவிடமாயிருந்த அவ்வாசிரமம், சடுதி நேரத்தில் ஆபாசம் நிறைந்த அனங்கனின் போர்க்கள் மாயிற்று.

இன்னும் ஒரு வீடு தான். அத்துடன் அவனது வெற்றி யும் முழுமை பெற்றுவிடும்.

“பிச்சை….!” அது என்ன பிச்சைக் குரலாகவாயிருக்கிறது? மெட்டி குலுங்க, ஓட்டமற்று, நிதானமான நடையோசை.

அவனது குனிந்த புருவம். ஆச்சரியத்தால் உயர்ந்தது. முதன் முதலாய், கபாலத்தில், அரிசி விழுந்தது. பொறுக்குப் பொறுக்காய், ஒரு அள்ளு அரிசி.

அவன் தலை நிமிர, பார்வை அவள் மேல் பாய்ந்தது. ஆனால் முப்புரத்தையும் எரித்த அது ஆகாயத்தில் எய்த அம்புபோல், பயனற்று, நிஷ்களங்கமான அவளுடைய கண்களைச் சந்தித்துக் கீழே விழுந்தது. அவனது மனதில் களங்கம் புகுந்தது. என்ன இருந்தால் தான் என்ன நர உருவம் எடுத்தால், அதன் நச்சு விடுமோ?

ரிஷிபத்தினியே ஆயினும், ராஜ் லட்சணங்கள் அவளு டைய முகத்தில் பிரகாசித்தன. தாருகாவன ரிஷிகளுக்குள் ளேயே, மஹா கொடியவன் வல்லபன். எந்தச் சமண ராஜனிடம் எந்த உபகாரத்துக்கு ஈடாய் இவளைப் பெற்றானோ? ஆனால், அதிலும் தான் என்ன விந்தை! நச்சுமிக்க நாகத்திடம் தானே, மாணிக்கம் உறைகிறது?

அவளது இதயத்தின் விசாலம், அவனுடைய கண்களுக்கு நேர். மயிரின் இருள். அவனது மனதில் புகுந்த் இருளுக்கு இணை. அவளுடைய அங்கங்களை அத்தனை அளவுடனும் உருவுடனும் கடைய, அவள் அப்பன் தொழும் அருகன், எத்தனை நாள் உழைத்தானோ!

அவளது முகத்தில், இவ்வுலகம் பிறந்து, அதில் ஜீவன் அவஸ்தையுறுமுன்னே தேங்கிய அகண்ட அமைதி நிலவியது. அதைக் கண்டதும், அவனது உள்ளம் நடுங்கிற்று; உடல் நடுங்கிற்று; கையில் பிடித்த ஓடும் நடுங்கியது. அவளது உருவம் பதிந்து கனத்த நினைவுடன், அவன் அவ்விடம் விட்டு அகன்றான். நீந்துபவனை நீர்ச்சுழல் இழுப்பது போன்று, அவன் சென்ற காரியத்துக்கு அவனே பலியானான்.

காமன் தன் கறுமைத் தீர்த்துக்கொண்டு விட்டான்.

கிள்ளைகள், முகத்துடன் முகம் சேர்த்து, கொஞ்சி மொழியாடின, கொம்பும் கொடியும் நாணிக் குழைந்து பிணைந்தன. பட்டு பூச்சிகள் ஒன்றுடனொன்று ஒட்டிப் பறந்தன. அதோ, அந்த மரத்தின் மறைவில், கலைமான். பேடையைத் துரத்துவதேன்? வானமே, வையத்தைப் புல்லி அதன் மேல் கவிந்து குவிந்து குலவியது. இப்புலவியின் பெரு மிதத்தில் பூமி, பூவும் பச்சையுமாய்ப் பொங்கி வழிந்தது. இது அத்தனையும் பொய்யா? ஏ கடவுளே, இத்தனையும் உன் செயல்தானே? எல்லாம் பொய்யென்று போதித்து விட்டு கையில் ஓடும் எடுத்துவிட்டாயே? இப்போது என்ன செய்வாய்?

அடிபட்ட சிங்கம் போன்று, பகவான் மூச்சு வாங்கிய வண்ணம், ஓர் அரச மரத்தடியில் விழுந்தான். அவனது சிருஷ்டி அவனை ஏளனம் செய்தது.

முட்புதரில், ஸ்பரிச வேதனையே படாது, மலர்ந்து வெற்றியுடன் நகைக்கும் ரோஜாவை யொத்து, அவள் கை கெட்டாது புஷபித்திருந்தாள். அவளது நினைவில் கமழ்ந்த மணத்தின் இன்பம் தாங்கமுடியவில்லை. அவளைப் பறித்து முகராத ஒவ்வொரு விநாடியும் தாள முடியவில்லை. மூர்க்க வெறி அவ்வாண்டியைப் பிடித்து அலட்டியது. அவன் மயக்கு அவளிடம் பலியாத்தில், அவனது வேதனை அதிகரித்தது. தான் வந்த காரியத்தை மறந்தான்; தன்னை மறந்தான்.

கட்செவி உணர்வது போன்று, அவள் அங்கே வருவதை அவன் எப்படியோ உணர்ந்தான்.

ஆம், அவள் தான்; இடுப்பில் குடத்தை யூன்றி சரிந்து. நடந்து அவனிடம் நடந்து வரவில்லை. அவனைப் பார்க்கவுமில்லை. குடத்தைக் கரையில் வைத்து விட்டு, தடாகத்தில் இறங்கினாள். அவள் புனர் ஸனானம் செய்வானேன்?

அவளைத் தரிசிக்கும் ஆவலும் அவசியமும் தூண்ட, பகவானும் எழுந்து, ஆடையைக் களைந்து, கௌபீன தாரியாக மறுபுறம் வந்து ஜலத்தில் இறங்கினான். அவனைக் கண்டு நடு நடுங்கி புனலும் சலசலத்தது.

அவள் அவனைக் கண்டாள், அவனது உள்ளம் துள்ளிய துள்ளலில், உடலைவிட்டே வெளி வந்துவிடும் போலிருந்தது. அவளுடைய கரங்கள் குவிந்து, தலைகுனிந்து வணங்கி நிமிர்ந்தது. அக்கண்களில், எள்ளளவும் சஞ்சலமேனும் இருக்க வேண்டுமே! அலைகளுக்கப்பால், சப்தமற்றுத் தூங்கும் கடல் நீலம் போல, தன்னுள் தானே நிறைந்து. அவள் உள்ளத்தே அமைதி அசைவற்று நின்றது. அவனது உடல் மறுபடியும் நடுங்கியது. அவளையோ, சாந்தமே கவசமாய்க் கவிந்திருந்தது.

“சூர்ய கதி உயர்ந்துவிட்டாற் போலும்!” – என்றான், ஏதாவது பேசியாக வேண்டுமே, அதற்காக. அவள் வாய் வார்த்தையில் சொரியும் தேனுக்கு ஏங்கி அலைவுற்றது. மனம்.

“ஆம்” என்னும் முறையில், அவள் தலையை அசைத்தாள்.

பேச மாட்டாளா? வாயில் கொழுக்கட்டையா?

“தண்டகாரண்யம் இங்கிருந்து இன்னும் எவ்வளவு தூரம்?”

“சுவாமி, நான் அறியேன். வேணுமானால், இங்கிருந்து கிழக்காய்ப் போனீர்களானால், ரிஷிகளின் யாகசாலை இருக்கிறது. அங்கே விசாரியுங்கள் -”

ஆச்சு, அத்துடன் பேச்சும் முடிந்தது. அவனது உள்ளம் வெள்ளையாயிருந்தால், பேச்சும் வெள்ளமாய் வரும். ஆனால், அதில் தான் கள்ளத்தனம் புகுந்துவிட்டதே!

அவள் ஈரச் சேலையுடன், நிறை குடத்தைத் தாங்கிய வண்ணம் – அக்ரஹாரத்துக்குப் போகவில்லை – அதோ தெரிந்த மூங்கிற் காட்டை நோக்கிச் சென்று, புதர்களிடை மறைந்தாள்.

சேலையைச் சரிப்படுத்திக் கொள்ளவோ?

அவனது நெற்றியில் வியர்வை அரும்பிப் பொட்டுப் பொட்டாய் நின்றது. மேலுதட்டைக் கீழ்ப் பல்லால், இழுத்துக் கடித்துக் கொண்டு நின்றான். அவளது உடலின் விறுவிறுப்பும், நடையின் துள்ளலும் அவனது மனத்தில் புகுந்து துடிக்க ஆரம்பித்துவிட்டன. வேதனை சஹிக்க முடியவில்லை. அவளை -

மதம் பிடித்த களிறு ஆகிவிட்டான் கடவுள். அவனுடைய நடையின் வீச்சும் கடிய நேரத்தில், வாவிக்கும் வேய்க் காட்டுக்கும் உள்ள இடைவெளியைக் கடந்தது.

சலசலப்புக் கேட்டு, அவள் சட்டென்று திரும்பினாள். புதர்களை இரண்டு கைகளாலும் விலக்கிக் கொண்டு, கால்களை அகல விரித்து. அழுந்த ஊன்றிய வண்ணம், தலை நிமிர்ந்து, ஆஜானுபாகுவாய் கோவணாண்டியாய் நின்றானவன். புஜங்களிலும் மார்பிலும் தொடைகளிலும், நரம்புகள் புடைத்து விம்மியெழுந்தன. ஒரே சௌரிய உருவாய் விளங்கினான் கடவுள். அவனுடைய இரு கண்களும் நெருப்பாய் ஜ்வலித்தன. முதன் முதலாய், அவளது மனதில், அவனது நோக்கிலும் அவன் நின்ற நிலையிலையும் சந்தேகம் பிறந்தது. சாந்தக் கடல்களான, அவளுடைய கண்களில் கொந்தளிப்பு உண்டாகிவிட்டது.

ஓர் அணுவளவு நேரத்தில், துணுக்களவு நேரம், உலக இறுதியின் நிசப்தம்.

‘கீச் கீச் – கீச்’

எங்கோ ஒரு குருவி அலறியது. அவள் காதில் ஒரு பயங்கர வெள்ளம் இரைந்தது.

“நீ எவ்வளவு சுந்தரமாய் இருக்கிறாய்!”

“சுவாமி, நீங்கள் இப்படிப் பேசுவது உங்களுக்குத் தகாது. கையிலே ஓடு தாங்கி, இடையில் காஷாயம் பூண்டிருக்கிறீர்கள்,”

“பாதகமில்லை” அவள் பக்கத்தில் அவன் நெருங்கினான். அவனது அனல் மூச்சு, அவளுடைய முகத்தைச் சிவக்கச் செய்தது. “உனக்கு என்னைப் பார்த்தால் என் காஷாயம் தானா தெரிகிறது? வேறொன்றும் தெரிய வில்லையா?”

“தெரிகிறது. காஷாயம் உமக்கு வேஷமென்று. தயவு செய்து ஒதுங்கும். தனிமையாயிருக்கும் ஒரு ஸ்திரீயிடம் உமக்கு என்ன வேலை?”

“உன்னிடம் தான் எனக்கு எவ்வளவோ வேலை. உனக்கு இன்னும் புரியவில்லையா? பெண்ணே. எல்லோரையும் போலல்ல நான் – நான் – நான்.”

“ஐயா, நான் பரஸ்திரீ; பரத்தையல்ல. உம் பேச்சு உம் கோலத்துக்குத் தகாது. தர்ம சாஸ்திரத்துக்குத் தகாது”

“ஓஹோ! தாருகா வனத்தவர்க்குத் தரும சாஸ்திரமு முண்டோ? பெண்ணே ஊடாதே. எதற்கும் சமயாசமயமுண்டு – வா”

“அட பாவி – விட்டுவிட்டா – என்னைத் தொடாதே – தொடாதே”

அவளது அலறலைக் கேட்டு, பட்சிகள் பயந்து கதறின; மிருகங்கள் மிரண்டோடின; காற்றும் அஞ்சி அலைந்தது. ஆனால். அவன் செவியில் எது ஏறும்? முகத்தில் வெறி நகைக்க, அவன் அவளைத் தொடர்ந்தான். அவளைத் துரத்தத் துரத்த, வேய்க்காடு, அவர்களைச் சுற்றி அடர்ந்தது.

காட்டின் மத்தியில் ஓங்கி வளர்ந்ததோர் ஆலமரத்தை நோக்கி அவள் ஓடினாள்.

ஒரு பக்கம் ஆத்திரம் பொங்கியெழுந்தது. அவனுடைய கால்கட்டை விரலின் அழுந்தலில், அஷ்ட குலாசலங்களும் குலையுமே! அவனுடைய ஆற்றொணா ஆற்றலைக் கேவலம் ஒரு பெண் குலைப்பதா?

ஓடும் வேகத்தில், அவளது ஆடை புதர்களில் சிக்குண்டு கிழிந்தது. அவளது வெண்தொடை பளீரென மின்னிற்று.

“ஆணை! ஆணை!! – நான் தொழும் தெய்வத்தின் மேல் ஆணை! – தொடாதே – ஐயோ!”

வேர் தடுக்கிற்று என்னத்தையோ அணைப்பது போன்று, கைகளை வீசி, குப்புற வீழ்ந்து மூர்ச்சையானாள். தூரத்திலிருந்து அவளை நெருங்குகையிலே, அம்மரத்தடியில் வீற்றிருக்கும் ஒரு மணல் லிங்கத்தை அவளுடைய கரங்கள் தழுவியிருப்பதைக் கண்டான்.

அவள் தொழும் தெய்வம்!

அவள் அதை அந்தரங்கத்துடன் நம்பிக் கதறிய அபயத்தின் வேகம், அவனது வேஷத்தை, அவனையறியாமலே உரித்துவிட்டது. அவன் வந்து அவளண்டை நின்ற பொழுது. ஜடையும் கங்கையும் சூலமும், மானும் மழுவும், பாம்பும் தாங்கி, பரமசிவனாய் நின்றான். அவன் மனதில், ஆச்சரியம் வெட்கம், துயரம் இன்னும் பல்வேறு உணர்ச்சிகள் பொங்கி யெழுந்தன.

அவன் அவளை அழித்தான்; நெற்றிக் கண்ணால் சுட்டு எரித்தான். வேறு வழியில்லை?

சர்வ ஜீவராசிகளும் வாழ்க்கையில் சறுக்கி விழுந்தும், தட்டுத்தடுமாறிச் சேரமுயலும் லட்சியத்தின் சிகரம் அவன், அந்த லட்சியத்தின் தோல்வியாய் அவன் இப்பொழுது நின்றான். ஆதலின், அந்த நினைவை அழிக்க, அவளை, அழிப்பது தவிர வேறு வழியேது? நெற்றிக் கண்ணைத் திறந்து அவளைச் சுட்டெரிந்தான்.

சகலமும் அவனுக்கு அடக்கம்; அவன் அவனது நெற்றிக் கண்ணுக்கு அடக்கம். தன்னுடன் சமரிட்ட மாறனை எரிக்கவோ, வாதில் வென்ற கீரனை ஒறுக்கவோ, தான் கட்டுக் கடங்காது தெறிக்க முயலும் பொழுது, அதை அழிக்கவோ எதற்கும் திறப்பது அந்த நெற்றிக் கண்தான். அது, அவனுடைய தோல்வியற்ற வெற்றியின் சின்னம்.

ஆகையால், அவன் அவளைச் சுட்டெரித்தான். கல்லையே வெல்லப் பாகாய் உருக்கிய, அந்தக் கண்ணின் வீட்சண்யத்துக்கு, மாந்தளிர் போன்ற அவளது சரீரம் எம்மாத்திரம்? இமைப் பொழுதில் அவள் விழுந்த இடத்தில், ஒரு சாம்பற் குவியல் கிடந்தது. அதில் விழுந்து புரண்டு எழுந்தான் பெருமான். அவனுடைய கண்களினின்று, இரண்டு எரி நீர்த்துளிகள் கிளம்பி, கன்னத்தில் வழிந்து, முகவாய்க் கட்டையினின்று உதிர்ந்து, கீழே விழுந்து புகைந்து, தீ காட்டைப் பற்றியது.

ஸ்னானத்துக்குச் சென்ற மங்களமுகி வேய்ங்காட்டுத் தீயில் மறைந்தாள் என்று வதந்தி சொல்லிற்று.

[பூர்வ கதையில், பகவானானவர், பவித்திரனான தம்மைப் பழித்துக்கொண்டு, ஆணவம் பிடித்தலையும் தாருகா வனத்து ரிஷிகளை, அவர்களுடைய மனைவிமாரின் கற்பையழித்துப் பங்கப்படுத்தி, அவர்களின் செருக்கை அடக்கி, பிறகு அவர்களை ஆட்கொண்டார். ஓம்..]

- அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
பரதேசிக் கோலம் படி தாண்டிவிட்டது. அப்புறம் அவளுக்குத் தாளவில்லை. சின்னம்மாவைக் கூப்பிட்டுச் சாய்வு நாற்காலியை எடுத்துவரச் சொன்னாள். "என்னம்மா பண்ணப்போறே?" "கீழே வரப்போறேன்; மங்களத்தையும் கூப்பிடு. பக்கத் திலே ரெண்டுபேரும் வந்து என்னைத் தாங்கிக்கோங்கோ." திறந்த வாய்மேல் சின்னம்மா இருகைகளையும் பொத்திக் கொண்டாள். "என்னம்மா சொல்றே? ஐயா ...
மேலும் கதையை படிக்க...
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜகதா லந்துட்டா. வேறே அத்தாட்சியே வேண்டாம். இன்னிக்குக் காலையிலிருந்து வீடு நிர்த்தூளியாறதே. போதாதா? கபாலி டப்பா மாதிரி வீட்டையே தலைகீழாக் கொட்டித்தட்டியாறது. ஈசல்மாதிரி மூலைக்கு மூலைக்கு. ...
மேலும் கதையை படிக்க...
மூங்கில் பாலத்தின் மேல் மூவரின் கனம் அழுத்தியதும் பாலம் க்ரீச் க்ரீச்சென்று தொட்டிலாடிற்று. பாலம் ஆடவும் பையனுக்கு ஒரே குஷி. அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு தொப்புத் தொப்பெனக் குதித்தான். பாலம் ஐயோ ஐயோவெனச் செல்லமாய் ஓலமிட்டது. "வா, வா போகலாம்." இரு அம்மா ...
மேலும் கதையை படிக்க...
அபிராமி. அன்றொரு நாள், கிணற்றில் குடி ஜலம் மொள்ள வந்தாயே, நினைவிருக்கிறதா? எத்தனையோ முறை வந்திருக்கிறாய்? ஆனால் நான் குறிப்பிடுவது அந்த ஒரு நாளைத்தான். உன் திருமணத்தன்று, உன் கடைசிப் பிரயாணத்தில் உன் வீட்டுக் கிணற்றடிக்கு நீ போகும் வழியில் என்னைப் ...
மேலும் கதையை படிக்க...
மணையில் சேர்ந்தாற்போல் பத்து நிமிஷம் :சாவித்ரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேரத்திற்கு ஒரு முறை மாடிக்கும் கீழுக்குமாய் நடமாடிக்கொண் டிருந்தாள். கல்யாணத்தில் ஆயிரம் ஜோலி இருக்கையில், இந்தச் சாஸ்திரிகளுக்கு என்ன வேலை? சமையல்காரன் சாம்பாரை என்ன பண்ணிண்டிருக்கானோ தெரியவில்லை. (அண்டா ஈயம் போதாதென்று ...
மேலும் கதையை படிக்க...
முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு. உடல் மேல் ...
மேலும் கதையை படிக்க...
வாழ்க்கையின் சிக்கலே போன்று தண்டவாளங்கள் பின்னியும் பிரிந்தும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், அதற்கு அப்பாலும் ஒடுகின்றன. அங்கங்கே ஆப்பு அறைந்தாற் போன்று தந்திக் கம்பங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இரு மருங்கிலும் வயல்களும், குன்றுகளும், மரங்களும், பாய்ந்து சுழன்று செல்கின்றன. ஒருசமயம் ...
மேலும் கதையை படிக்க...
இப்பொழுது அவள் என் கனவில் வந்தாள். ஏளனம் செய்யும் அவள் புன்னகையுடன் என் பின்னால் வந்து என் பேரை என் காதண்டை சொல்லி, என் தோளைத் தொட்ட மாதிரி இருந்தது. ‘பூர்வா!’ என்று அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தேன். என்னைச் சுற்றி இருட்டுத்தான். கண்ணைத் ...
மேலும் கதையை படிக்க...
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பொல பொலவெனப் பொழுது புலரும் வேளை. கூக்குரல். ஒரே அமர்க்களம். விழித்துக் கொண்டேன். படுக்கையினின்று எழுந்து அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினேன். எதிர்வீட்டு மேலண்டை சுவரின் அருகே சந்தில் ...
மேலும் கதையை படிக்க...
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஏறுமயி லேறிவிளை யாடுமுகமொன்றே!” "சபாஷ்!" “மாறுபடு சூரரை வதைத்தமுகமொன்றே!” "சபாஷ்!" "கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகமொன்றே!" "சபாஷ்!" "குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றே!" "சபாஷ்!" "சூரனே, சூரனைப் புறங்காட்டும் சுப்ரமண்ய தீரனே!” "சபாஷ்!" ஜல்! ஜல்!! ஜல்!!! ஜல்!!!! எட்டுப் பேருக்கும் கடைசியில் முற்றுப்புள்ளி வைத்தாற் ...
மேலும் கதையை படிக்க...
கொட்டு மேளம்
இதழ்கள்
தாக்ஷாயணி
ராக் த்ரோக்: நம்பி
சாவித்ரி
பச்சைக் கனவு
ரயில்
பூர்வா
தெறிகள்
சூரம்சம்ஹாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)