Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஞானப் பறவைகளின் கதை

 

மார்கண்டேய புராணம் ஞான பட்சிகளின் கதையோடு ஆரம்பமாகிறது. மகாபாரதக் கதை முழுவதும் வியாச பகவானிடம் கேட்டறிந்த ஜைமினி முனிவருக்கு சில சந்தேகங்கள் மீதமிருந்தன. அவற்றை வியாசரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினாலும் அதற்கான அவகாசம் கிடைக்கவில்லை.

ஒரு முறை ஜைமினி முனிவர் மார்கண்டேய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று “மகரிஷியே! எனக்கு மகாபாரதத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. ரகசியமாக உள்ள சில சாஸ்திர தத்துவங்களை தெரிந்துகொள்வதற்காக உங்களிடம் வந்துள்ளேன். அவற்றை நீங்கள் தீர்க்க வேண்டும்” என்று கேட்டு தன் சந்தேகங்களை வெளியிட்டார்.

நித்திரை, தூங்கி வழிதல், பயம், குரோதம் போன்ற பதினெட்டு தோஷங்களும் அற்றவரான மார்கண்டேயர், ஜைமினி கூறியதைக் கேட்டு இவ்விதம் பகர்ந்தார்.

“ஜைமினி! உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் நியாயமானவையே! ஆனால் எனக்கு சந்தியாவந்தனம் முதலான விதிகளை நிறைவேற்றும் நேரம் இது. உங்கள் வினாக்களுக்கு விரிவாக விளக்கமளிக்க கால அவகாசம் இல்லை. நீங்கள் விந்திய மலைக்குச் சென்று அங்கு வசிக்கும் பிங்காக்ஷன், நிபோதன், சுபத்திரன், சுமுகன் என்ற நான்கு ஞான பட்சிகளைக் கேட்டால் அவை உங்கள் ஐயங்களைத் தீர்க்கும்” என்றார்.

வியப்படைந்த ஜைமினி, “முனிவரே! பக்ஷிகள் பேசுமா? அவை மகா பண்டிதர்களை போல் தர்ம சந்தேகங்களைத் தீர்க்குமா?” என வினவினார்.

மார்க்கண்டேயர் கூறினார்:-

“ஜைமினீ ! ஒரு முறை தேவேந்திரன் அப்சர ஸ்தீரிகளுடன் நந்த வனத்தில் விஹரிக்கையில் அங்கு நாரத மகரிஷி வந்தார். அவரை வரவேற்ற தேவேந்திரன் அவரிடம், ” முனிவரே! இந்த அப்சர பெண்களில் சிறந்த ஒருத்தியை தேர்ந்தேடுத்து அவளை நாட்டியம் ஆடும்படி ஆணையிடுங்கள்” என்றான்.

நாரதர், “அப்சரப் பெண்களே! உங்களில் யார் ரூப லாவண்யங்களில் உயர்ந்தவர் என்று எண்ணுகிறீரோ அவர்கள் நிருத்தியம் செய்யலாம்” என்றார்.

அவர்களில் ஒவ்வொருவரும் தானே சிறந்தவள் என்று வாதிட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். எனவே தேவேந்திரன் அவர்களுள் சிறந்தவளை நாரதரே தீர்மானிக்க வேண்டும் என்றான். நாரதர் அதற்கு ஒரு ஷரத்து கூறினார்.

“ஹிமாலயத்தில் துர்வாச முனிவர் கடுந்தவம் செய்து வருகிறார். உங்களில் யார் அவர் தவத்தைக் கலைத்து உங்களை மோகிக்கும்படி செய்வீர்களா அவர்களே சிறந்தவர் என்று தீர்மானிப்பேன்” என்றார் நாரதர்.

துர்வாசரின் பெயரைக் கேட்டதும் அப்பெண்களுக்கு நடுக்கம் கண்டது. ஆனால் அவர்களுள் அநேக மகரிஷிகளுக்கு விரத பங்கம் ஏற்படுத்திய கர்வத்துடன் ‘வபு’ என்ற பெண் “நான் துர்வாசர் இருக்கும் இடத்திற்குச் சென்று அவருக்கு விரத பங்கத்தை ஏற்படுத்துவேன்” என்று சொல்லி புறப்பட்டாள்.

‘வபு’ தன் ஆடலாலும் பாடலாலும் துர்வாசரின் தவத்தைக் கலைக்க முற்பட்டாள். அதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர், “அப்சரப் பெண்ணே! நீ கழுகாகப் பிறப்பாய்!:” என்று சபித்தார். அவள் துர்வாசரைப் பணிந்து தன் தவறை மன்னித்து சாப விமோச்சனம் அளிக்கும்படி வேண்டினாள்.

கருணை கொண்ட முனிவர், “உனக்கு நான்கு குஞ்சுகள் பிறக்கும். நீ அர்ஜுனனின் அம்பு பாய்ந்து மரணமுற்று நிஜ ரூபத்தை அடைந்து சுவர்கம் செல்வாய்” என்று ஆசீர்வதித்தார்.

வபு கழுகாகப் பிறந்தாள். அப்போது அவள் பெயர் “த்ராக்ஷி”. மந்தபாலன் என்பவனின் மகனான துரோணன் என்பவனை மணந்தாள். அவள் பதினாறு ஆண்டுகள் கழித்து கர்பமுற்றாள்.

அப்போது மகாபாரத யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடந்து கொண்டிருந்தது. அதனைப் பார்க்கச் சென்ற த்ராக்ஷி, மேலே பறந்த படியே யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அர்ஜுனன் விடுத்த ஓர் அம்பு அவள் மேல் பாய்ந்தது. உடனே த்ராக்ஷியின் கர்பத்திலிருந்த நான்கு முட்டைகளும் பூமியில் விழுந்தன. “என் குழந்தைகளை தெய்வம் தான் காக்க வேண்டும்” என்று பிரார்த்தித்து உயிர் துறந்தாள் த்ராக்ஷி.

அச்சமயம் யுத்த பூமியில் பகதத்தன் என்ற வீரனின் வாகனமான சுப்ரதீபம் என்ற யானையின் கழுத்தில் தொங்கிய மணி பாணம் பட்டு அறுந்து சரியாக அந்த முட்டைகளின் மேல் கவிழ்ந்து விழுந்தது. அந்த மணியின் கீழ் முட்டைகள் பாதுகாப்பாகக் கிடந்தன.

பாரத யுத்தம் முடிந்து குருக்ஷேத்திர பூமியில் அமைதி ஏற்பட்ட பின் ஒரு நாள் காலை ‘சமீகர்’ என்ற மகா முனிவர் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தார். மணியின் அடியிலிருந்து பறவைக் குஞ்சுகளின் ‘கீச், கீச்’ எனும் ஒலியைக் கேட்டார். அதை கேட்டு ஆச்சர்யமாய்ந்த முனிவர் மணியைத் தூக்கிப் பார்த்து அங்கு நான்கு பறவைக் குஞ்சுகள் இருக்கக் கண்டார். கருணையோடு அவற்றைத் தன் ஆசிரமத்திற்கு எடுத்து வந்தார்.

அப்போது அக்குஞ்சுகள் அவரிடம், “மகானுபாவரே! எங்களை கோர மரணத்திலிருந்து காத்தருளினீர்கள். எங்களுக்கு நீங்களே தாய் தந்தை குரு ஆவீர்கள். தங்களுக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம். உங்களுக்கு நாங்கள் என்ன சேவை செய்ய வேண்டுமோ கூறியருளுங்கள்” என்றன.

வியப்புற்ற சமீகர், ” ஓ! பறவைக் குஞ்சுகளே! நீங்கள் யார்? எதனால் பக்ஷி ஜென்மத்தை அடைந்தீர்கள்?” என்று கேட்டார்.

“முனிவரே! நாங்கள் நால்வரும் சுக்ருதி எனும் மகா முனிவரின் புதல்வர்களாகப் பிறந்திருந்தோம். சாஸ்திரங்களை நன்றாகக் கற்றறிந்தோம். பெற்றோரைப் பூஜித்து வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் எங்கள் தந்தையின் சத்திய நெறியைச் சோதித்தறிய விரும்பிய தேவேந்திரன், கழுகு உருவில் வந்து தனக்கு நர மாமிசம் வேண்டுமென்று கேட்டார்.

எங்கள் தந்தை எங்களிடம் யாராவது ஒருவர் இந்திரனுக்கு ஆகாரமாகுங்கள் என்று கட்டளை இட்டார். ஆனால் சகல ஜீவிகளுக்கும் தங்கள் உயிரை விட பிரியமான பொருள் வேறு இல்லை அல்லவா? நாங்கள் பயந்து அதனை ஏற்கவில்லை. கோபமடைந்த எங்கள் தந்தை, “துஷ்ட புத்திரர்களா! நான் இந்த பக்ஷி ராஜனுக்கு வாக்களித்து விட்டேன். நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. அதனால் பறவைகளாகப் பிறக்கக் கடவீர். என்று சபித்து விட்டார். பிறகு அவர் தன் உடலையே இந்திரனுக்கு உணவாகச் சமர்ப்பித்தார்.

இந்திரன் எங்கள் தந்தையின் தியாகத்தை மெச்சி, மகிழ்ந்து எங்களிடம், “நீங்கள் விந்திய மலையில் சென்று வசியுங்கள். வியாசரின் சீடரான ஜைமினி உங்களிடம் வந்து சில தர்ம சந்தேகங்களைக் கேட்பார். அவற்றைத் தீர்த்தவுடன் உங்கள் சாபம் விலகும். நீங்கள் பக்ஷிகளாக இருந்தாலும் சகல வேத, தர்ம சாத்திரங்களையும் அறிந்த ஞான பக்ஷிகள், தர்ம பக்ஷிகள் என்று போற்றப் படுவீர்கள் ” என்று அருளினார்”.

பறவைகள் இவ்விதம் தம் பூர்வ ஜென்மக் கதையைக் கூறக் கேட்ட சமீகர், “நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய சேவை எதுவும் இல்லை. உங்கள் விநயம் எனக்கு மகிழ்வளிக்கிறது. நீங்கள் இனி விந்திய பர்வதத்திற்குச் செல்லுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.

அதனால், ஜைமினி முனிவரே! நீங்கள் அந்த பறவைகளைக் கேட்டு உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கேட்பவரின் ஐயத்தைத் தீர்ப்பது மகாத்மாக்களின் லட்சணம்” என்று கூறி மார்க்கண்டேயர் தவமியற்றச் சென்றார்.

ஜைமினி முனிவர், விந்திய பர்வதத்தில் ஞானப் பறவைகளைத் தேடித் சென்ற போது அவை இனிமையாக வேத அத்யயனம் செய்து கொண்டிருந்தன. அவற்றை அணுகி, “ஓ! ஞானப் பறவைகளே! நான் வியாசரின் சீடன். என்னை ஜைமினி என்பார்கள். மார்கண்டேயர் கூறியபடி உங்களிடம் வந்துள்ளேன். என் சந்தேகங்களைத் தீர்த்து எனக்கு மனசாந்தி அளியுங்கள்”. என்றார்.

அப்பறவைகள், “​முனீஸ்வரரே! உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். எங்களுக்குத் தெரிந்த வரை கூறுகிறோம்” என்று பதிலளித்தன.

ஜைமினி தனது சந்தேகங்களைக் கேட்டார்:-

1. ஸ்ரீமன் நாராயணன் துவாபர யுகத்தில் மானுட உடலோடு அவதரித்ததன் காரணம் என்ன?

2. உலகம் வியந்து பார்க்கும்படி திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் எதனால் அமைந்தனர்?

3.கௌரவ பாண்டவ யுத்தத்தின் போது பலராமர் ஏன் தீர்த்த யாத்திரை சென்றார்?

4.திரௌபதிக்குப் பிறந்த ஐந்து உப பாண்டவர்களும் திருமணம் கூட நிகழாமல் திக்கற்றவர் போல் அகால மரணமடையக் காரணம் என்ன?

இவற்றைக் கேட்ட ஞான பக்ஷிகள் இவ்வாறு பதிலளித்தன:-

1. முனிவரே, தர்மம் நசிந்து அதர்மம் மேலோங்கும் போது பூமி பாரத்தைக் குறைக்க ஸ்ரீமன் நாராயணன் அவதாரமெடுப்பார். அக்காரணத்தால் தான் மனிதனாக அவதரித்தார்.

2. முன்பொருமுறை ‘த்வஷ்ட்ரு பிரஜாபதி’ புதல்வனான திரிசூரன் (விஸ்வரூபன்) சிரசாசனத்தில் தவம் செய்துகொண்டிருக்கையில் தேவேந்திரன் அவனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அப்பாவத்தை யமனுக்கும், வாயுவுக்கும், அஸ்வினி தேவதைகளுக்குமாக நான்காகப் பிரித்துக் கொடுத்து அவர்கள் மேல் கருணையோடு தன் அம்சங்களையும் அவர்களிடம் இருத்தி வைத்தான்.

அதனால் எமனின் அம்சமாக தர்ம புத்திரரும், வாயு மூலமாக பீமனும், அஸ்வினி தேவதைகள் மூலம் நகுல சகதேவனும் பிறந்தனர். இந்திரன் தன் அம்சத்தோடு அர்ஜுனனாகப் பிறந்தான். இந்த விஷயத்தை அறிந்த இந்திரனின் மனைவி சசிதேவி, துருபதன் வளர்த்த வேள்வியில் இருந்து திரௌபதியாக உதித்து, இந்திர அம்சத்தோடு பிறந்த பஞ்ச பாண்டவர்களை மணந்தாள்.

3. பலராமர் பாண்டவர்களின் உறவினர். சுபத்திரையை அர்ஜுனனுக்கு மணம் முடித்து சம்பந்தியானவர். துரியோதனனுக்கு கதை யுத்தம் பயிற்றுவித்து குருவானவர். ஸ்ரீகிருஷ்ணரோ பாண்டவர் பக்கம் நிற்பவர். யுத்தத்தில் எந்தப் பக்கம் சேர்ந்தாலும் தனக்குப் பிரியமானவர்களோடு போர் செய்ய வேண்டி வரும் .

அது மட்டுமல்ல. ஒரு முறை பலராமர் நைமிசாரண்யம் சென்ற போது பாகவத கதை சொல்லிக் கொண்டிருந்த சூத முனிவர் தன்னைப் பார்த்தவுடன் எழுந்து நிற்கவில்லை என்ற கோபத்தில் அவரைக் கொன்று விட்டார். அங்கிருந்த மகரிஷிகள் பலராமரைப் பார்த்து வெறுப்புடன், “நீ செய்த பாவத்தை எல்லோரிடமும் சொல்லியபடி பன்னிரண்டு ஆண்டுகள் தீர்த்த யாத்திரை விரதம் அனுசரிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டனர்.

அதனால்தான் தீர்த்த யாத்திரை செல்லும் சாக்கில் பலராமர் யுத்தத்திலிருந்து விலகி நின்றார்.

4. பாண்டவ புத்திரர்களான உப பாண்டவர்கள் விச்வேதேவர்கள்.

ராஜா அரிச்சந்திரனை ராஜியத்தை விட்டு நீக்கி, இம்சிக்கும் விச்வாமித்திரரை, வானத்திலிருந்து பார்த்த விஸ்வேதேவர்கள் ஐந்து பேர் கருணை கொண்டு, “இத்தனை துன்பம் செய்கின்ற இந்த விசுவாமித்திரர் எந்த பாவ உலகிற்குச் செல்வரோ!” என்று தம்மில் தாம் பேசிக் கொண்டனர்.

அவ்வார்த்தைகளைக் கேட்ட விசுவாமித்திரர் ரோஷத்தோடு, “நீங்கள் ஐவரும் மனித உலகில் பிறப்பீராக!” என்று சாபமிட்டார். அப்போது விஸ்வேதேவர்கள் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க சாந்தமடைந்து, ” நீங்கள் மனித ஜென்மமெடுத்தாலும் மனைவி, சந்ததி, காமம், க்ரோதம் போன்றவை இன்றி மீண்டும் தேவர்கள் ஆவீர்கள்” என்று ஆசீர்வதித்தார்.

இந்த ஐந்து விஸ்வேதேவர்களே திரௌபதியின் கர்பத்தில் பிறந்து, விவாகம், பிள்ளைகள் போன்ற பந்தங்களில் சிக்காமல் பிரம்மசாரிகளாகவே அஸ்வத்தாமனின் கையால் மரணமடைந்தனர்.”

ஞான பக்ஷிகளின் பதிலைக் கேட்டு மகிழ்ந்த ஜைமினி, அவைகளிடம் அரிச்சந்திரனின் வரலாற்றை சம்பூர்ணமாகக் கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும், “மஹாத்மாக்களே ! எனக்கு இன்னும் சில ஐயங்கள் உள்ளன. அவற்றையும் தீர்த்து வையுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். பக்ஷிகள் சம்மதித்தன.

“ஜனன மரணங்கள் எதனால் ஏற்படுகின்றன? மிருத்யு என்றால் என்ன? நரகத்தைப் பற்றி விவரமாக எடுத்துரையுங்கள்” என்றிவ்வாறு எத்தனையோ சந்தேகங்களை தர்ம பக்ஷிகளைக் கேட்டு அறிந்து கொண்டார் ஜைமினி.

“பாவ புண்ணியங்கள் என்றால் என்ன?” என்று கேட்டார் ஜைமினி.

“முனிவரே! பாவங்கள் தெரிந்து செய்பவை, தெரியாமல் செய்பவை என இரண்டு வகைப்படும். சின்னச் சின்னப் பாவங்களுக்கு உடனுக்குடன் பலன்கள் கிடைத்து விடும். ஏதோ ஒரு வியாதியின் உருவில் அவை அனுபவிக்கப்பட்டு விடும். பெரிய பாவங்களானால் ஜென்ம ஜென்மமாகத் துரத்தி வரும். தெரித்து செய்த பாவங்களுக்குத் தண்டனை பெரிதாக இருக்கும்.” என்று பதிலளித்தன தர்ம பக்ஷிகள்.

இவ்விதமாக இன்னும் தத்தாத்திரேயரின் கதை, காலயவனனின் கதை, மதாலசா சரித்திரம், கிருஹஸ்தாசிரம தர்மங்கள் போன்ற எத்தனையோ சந்தேகங்களைக் கேட்டார் ஜைமினி. அவற்றுக்கெல்லாம் ஞானப் பறவைகள் தகுந்த விளக்கங்கள் அளித்து அதன் மூலம் சாப விமுக்தி பெற்றன.

சந்தேக நிவ்ருத்தி அடைந்த ஜைமினி ரிஷி, ஞான பட்சிகளின் உருவத்தில் இருந்த முனி குமாரர்களை ஆசீர்வாதித்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.

இவ்வாறு மார்க்கண்டேய புராணம் முழுவதும் ஞான பக்ஷிகள் கூறும் கதைகளும் விளக்கங்களுமாக நிறைந்து படிக்கச் சுவையாக உள்ளது.

-ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் அக்டோபர், 2011ல் பிரசுரமானது. 

தொடர்புடைய சிறுகதைகள்
மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள் மிக உயர்ந்தவர்களாக பெரியோர்களால் போற்றபடுகிறார்கள். யார் அந்த உத்தம தாய்மார்கள்? ராமாயணத்தில் லக்ஷ்மணனின் தாயான சுமித்திரை. பாகவதத்தில் துருவனின் தாய் சுநீதி. மார்கண்டேய புராணத்தில் வரும் இளவரசி மதாலசா. இந்த மூன்று தாய்மார்களும் உலக வழக்கப்படி சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால் ...
மேலும் கதையை படிக்க...
வால்மிகியின் மறு அவதாரமாக துளசிதாசர் கருதப்படுகிறார். பவிஷ்யோத்தர புராணத்தில் பரமசிவன், "வால்மீகி முனிவர் ஹனுமனிடம் வரம் பெற்று கலியுகத்தில் பிறந்து எளிய பேச்சு நடையில் ராமாயணத்தைப் புனைவார்" என பார்வதியிடம் கூறினார். வால்மீகி ராமாயணத்தை போலவே துளசி ராமாயணமான 'ராம சரித மானஸும்' பக்தியுடன் ...
மேலும் கதையை படிக்க...
புகழ் பெற்ற விதேக ராஜ்ஜியத்தின் அரசரான ஜனக மஹாராஜா உண்மை உணர்ந்த ஞானி. மிகப் புலமை வாய்ந்த மன்னரான அவர் அடிக்கடி தம் அரசவையில் தத்துவ விசாரணைகளை நடத்தி தர்க்கங்களையும் வாதங்களையும் ஊக்குவிப்பது வழக்கம். அதில் பங்கேற்கும் பண்டிதர்களுக்கு விலை உயர்ந்த ...
மேலும் கதையை படிக்க...
பாஸ்கரும் அவனுடைய நண்பன் பிரணதார்த்தியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். இருவரும் சேர்ந்து ஜவஹர்லால் நேரு டெக்னலாஜிக்கல் யூனிவர்சிட்டி யில் (JNTU) கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் பி.டெக். படித்துக் கொண்டிருந்தார்கள். பரீட்சை நெருங்கி விட்டது. கொஞ்சம் ஊன்றிப் படிக்க வேண்டுமென்பதால் இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் ...
மேலும் கதையை படிக்க...
​அபிராம் தன் பால்ய நண்பன் 'மஸ்கு' வைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான். மகிழ்ச்சியோடு காட்டு வழியே நடந்தான். அவலும், பொரியும் நிறைந்த ஒரு சிறு துணி முடிச்சும், ஒரு சிறிய கோபால விக்ரஹமும் மட்டுமே அவனுடைய லக்கேஜ். அபிராமுக்குத் தாய் தந்தையர் இல்லை. பாட்டி ...
மேலும் கதையை படிக்க...
மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள்
ராமர்தான் வேண்டும்
ஜனகரின் அவையில் நடந்த சுவையான நிகழ்ச்சி
நாலு சமோசா – ஒரு பக்க கதை
ஒரு பிடி அரிசிச் சோறு

ஞானப் பறவைகளின் கதை மீது 2 கருத்துக்கள்

 1. RajiRagunathan says:

  நன்றி rlk.
  பிரம்மஹத்தி என்பதே சரி. Typing error.
  விசுவாமித்திரர், அரிச்சந்திரனின் சத்திய நிஷ்டையை உலகம் அறியச் செய்வதற்காகவே அவனை சோதிக்கும் விதமாக துன்புறுத்துகிறார்.

 2. rlk says:

  1. பிரஹட்ட்த்தி ஆர் பிரம்மஹத்தி , எது சரி
  2. விஸ்வாமித்ரர் பெற்ற தண்டனை என்ன ஹரிச்சந்திரனை துன்புறுத்தியதற்கு, அந்த கதையும் அப்பலோடு செய்த்தால் நன்றி , எனி way மார்க்கண்டேய புராணம் டு கெட் தி answer for திஸ் பெர் யுவர் லாஸ்ட் லைன் தேங்க்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)