விசும்பு

 

எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையை பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின் பெயர் டாக்டர் நஞ்சுண்ட ராவ். மெளனமாக உயிரை வாங்கிய தெய்வம் அவர் அப்பா டாக்டர் கருணாகர ராவ்.

என் மூக்கு இன்றுகடைந்த மோரையும் நேற்று கடைந்த மோரையும் அடையாளம் காணும். முளைக்கீரைக் கூட்டையும் அரைக்கீரைக் கூட்டையும் பிரித்தறியும். ஆனால் பறவை எச்சம் என் மூக்குக்கு எட்டாது. சுசீந்திரம் வலது மண்டபத்தில் டன் கணக்கான வவ்வால் எச்சம் மத்தியில் நின்று என் மாமா மூக்கைப்பொத்திய போது ‘ நாத்தமா ?அனுமாருக்கு சாத்தற வெண்ணை மக்கிப்போச்சு போல ‘ என்று சொல்லி பித்துக்குளிப் பட்டம் வாங்கியவன். நான் வேலைபார்க்கும் இடம் அப்படி . வந்தவை, செல்பவை, வாழ்பவை என எப்படியும் ஒரு ஐம்பதாயிரம் பறவைகள் உள்ள இடம் அது.

கருணாகர ராவ் தொழில்முறை டாக்டர். பாதியில் விட்டுவிட்டு பறவை ஆய்வாளரானார். அவரது அப்பா திருவிதாங்கூர் திவானாக இருந்தபோது ஏலமலைப் பகுதியில் கடலோரமாகக் கிடைத்த அறுநூறு ஏக்கர் நிலத்தை அப்படியே பறவை ஆய்வகமாக மாற்றிவிட்டார். எங்கள் ஆய்வகத்துக்குள் மொத்தம் மூன்று பெரிய குளங்கள் இருந்தன. அடர்ந்த காடும் புதர்க்காடுகளும் இருந்தன. காடு சரிந்திறங்கி சேறும் புற்கள் மண்டிய கடற்கரைக்கு சென்று நாற்றமாக நாறி கடலலைகளில் இணையும். இம்மாதிரி நிலப்பகுதிதான் பறவை வாழ்விடத்துக்கு மிகமிகச் சிறந்த இடம் . இதை எஸ்டுவரி [estuary] என்பார்கள். .பறவை வளர்ப்புக் கூண்டுகள் ஏழாயிரம். வலைபோட்ட குளங்கள் ஐந்து .முப்பது வேலையாட்கள் . நான் மானேஜர். ஆனால் கருணாகர ராவ் அவருக்கு காலையில் எனிமாகூட நான் தான் கொடுக்கவேண்டும் என்று சொல்வார்.

நஞ்சுண்ட ராவ் பிறந்ததே அவர் அம்மா [மறைந்த] பார்வதிபாய் பறவைகளை பார்க்கக் காத்திருந்தபோது மரத்தின் மீதிருந்த மாடத்தில் காக்காக்கள் மத்தியில்தான் என்பார்கள். அவருக்கு வேறு உலகமே இல்லை. எல்லா பறவையிலாளர்களையும் கவர்ந்த, கிராக்குகளை மேலும் கிராக்குகள் ஆக்கிய , விஷயம்தான் நஞ்சுண்ட ராவையும் கவர்ந்து இழுத்து, இருபது வருடங்களாக உள்ளே வைத்திருந்தது. பறவைகள் வலசை போகும் ரகசியம். எங்கள் கேரளநிலப்பகுதிக்கு வலசை வரும் நீண்டதூரப்பறவைகள் மொத்தம் 44. பல பெயர்கள் எனக்கு சினிமாநடிகர்களை விடப் பழக்கம், மாஸ்க்ட் பூபி என்றால் ஏதோ வில்லன் என்று எண்ண வேண்டாம் . இது இலேசான பசும்வெண்மை நிறம்கொண்ட, வாத்து போல உடல்கொண்ட, வலசைப் பறவை. சிறகின் பின்பக்கம் கரிய தீட்டல். கடலில் வாழும். எச்சமிடவும் கிராகிரா என்று சத்தம் போடவும் மட்டும் கரைக்கு வரும் என்று நினைக்கிறேன். வெள்ளை கறுப்பு ஸ்டார்க்குகள், நீல வால் டால்கள் , மங்கோலிய சேண்ட் ப்ளோவர்கள் , கரியவால் காட்விட்டுகள், டெரக்குகள் என்று பல வகை வலசைபறவைகள் .

அப்பா ராவுக்கு பறவைகள் வழிபடு தெய்வங்கள் மட்டுமே. சேவை செய்வதோடு சரி. ஆய்வு போன்ற உபத்திரவங்கள் இல்லை. முப்பது வருடம் முன்பு அவர் , முக்கியமானதென அவர் இப்போதும் நம்பும் , ஓர் ஆய்வை செய்து அது பொருட்படுத்தப்படாத துக்கத்தில் இருந்தார். ஒருவாரத்துக்குள் பிராயமுள்ள கோழிக்குஞ்சுகள் மணிநேரத்தில் சராசரியாக எத்தனை முறை கியா கியா சொல்கின்றன என்ற அவரது ஆய்வு [3859 தடவை] நூலாக அவராலேயே பிரசுரிக்கப்பட்டு, கொல்லையில் கட்டுக் கட்டாக உள்ளது.

நஞ்சுண்ட ராவின் மனைவி ஆணாபெண்ணா என நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. மீசை உண்டு. சோடாபுட்டிக் கண்ணாடி. நாகரத்னம் என்ற பேர், கட்டைக்குரல், ஜீன்ஸ்-ஷர்ட் உடை என்று எல்லாம் சேர்ந்து என்னை குழப்பி அவளை நான் அடிக்கடி சார் என்று கூப்பிட்டு பிரச்சினைக்குள்ளாவேன். அவள் ஏதோ மீன் சம்பந்தமான ஆராய்ச்சியாளர். விழிஞ்ஞம், தூத்துக்குடி இன்னபிற பகுதிகளிலிருந்து அடிக்கடி ஃபோன் செய்வாள். மாதமிருமுறை வந்து அவள் ஒருமூலையில் மீன்களைப்பற்றிய தலையணைகளையும் இவர் ஒரு பக்கம் பறவைகளைப்பற்றியும் படித்துக் கொண்டிருப்பார்கள் .இக்காரணத்தால்தான் என நினைகிறேன் , அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

எனக்கும் பறவையியலுக்கும் சம்பந்தமில்லை. நான் படித்தது தமிழ் எம் ஏ. இந்த அத்துவானக் காட்டில் வேறு வேலைகிடைக்கவில்லை. ‘ உள்ளான், காடை என்பதெல்லாம் அதனதன் எச்சத்தால் காணப்படும் ‘ என்று புது சூத்திரங்கள் வகுத்துக் கொண்டு சாத்தியமான வரை மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இந்தசூழலில்தான் நஞ்சுண்ட ராவ் ஒரு சித்திரை பத்தாம் நாள் தன் மகத்தான கண்டுபிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டிருப்பைதை என்னிடம் சொன்னார். அதற்குமுன் உலக அளவில் ஏறத்தாழ எல்லா பறவையியலாளர்களுக்கும் சொல்லியிருந்தார்.

கிழ ராவ் அந்த ஆய்வை ஆரம்பத்திலேயே பொருட்படுத்தவில்லை . ‘பறவைகள் வலசை போவதை மனிதன் அறிந்துகொள்ள முடியுமா ? புராதன காலம் முதல் மனிதன் அதைப்பற்றிக் கனவுகள் கண்டிருக்கிறான். கவிதைகள் பாடியிருக்கிறான். பறவைகள் எப்படி சரியான திசை கண்டுபிடிக்கின்றன ? அதற்கு மொத்தவானத்தையே நீ அறிய வேண்டும். வானம் என்றால் விசும்பு. மேலே விரிந்து கிடக்கும் வெளி. அங்கே உலவும் காற்றுக்கள், ஒளி, எல்லாம். உன்னால் முடியுமா ? நம்மாழ்வார் ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்! ‘ என்று வியந்தார். ‘புவனங்களையெல்லாம் ஆள்வது பறவை. விசும்பின் துளி அது ‘ என்றார்.

‘இது அறிவியல். உங்கள் பக்திக் காளைச்சாணம் அல்ல ‘என்றார் மகன்.

என் சிற்றறிவுக்கு பறவைகள் வலசைபோகும் ரகசியத்தை பொதுமொழியில் நஞ்சுண்ட ராவ் சொன்னார். பறவைகள் வலசை போகும்போது எப்படி சரியாகத் திசையறிகின்றன ? சைபீரியாவிலிருந்து சைபீரியநாரை நேராக வந்து எங்கள் குளத்தில் இறங்கிவிடுகிறது. பூமிக்குமேலே மிக உயரத்தில் அவை பறக்கின்றன. இரவிலும், திசையடையாளங்கள் இல்லாத கடல்வெளிமேலும் பறக்கின்றன. எப்படிஎன்பது இன்றைய அறிவியலின் பெரிய புதிர்களுள் ஒன்று. நட்சத்திரங்களை வைத்து அடையாளம் காண்கின்றன என்றும் , காற்றுவீசும் திசைகளின் அடிப்படையில் வந்து விடுகின்றன என்றும்,பூமியின் காந்தப்புலத்தை ஏதோ ஒரு புலனால் தொட்டறிவதன் மூலம் திசையறிகின்றன என்றும் பல கொள்கைகள் உண்டு. பறவைகளுக்கு நுண்கதிர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து நிறைய ஆராய்ச்சிகள் வந்துவிட்டன. வலசைக்கு ஆர்ட்டிக் டென் போன்ற சில பறவைகள் புற ஊதாக் கதிர்களை பயன்படுத்துவதும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் நஞ்சுண்டராவுக்கும் ஆரம்பம் முதலே சில ஊகங்கள் இருந்தன.

‘சிட்டுக்குருவிகள் செல்ஃபோனின் நுண்ணலைகளால் பாதிக்கப்படுவதைப்பற்றி இப்போது நிறையக் கட்டுரைகள் வருகின்றன… ‘என்றேன்.

‘ஆம் ,பரவாயில்லை நீ கூட படிக்கிறாய் ‘ என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ்

வலசைப் பறவைகளின் காதுக்குப்பின்னால் மூளையின் ஒரு அபூர்வ அமைப்பு உள்ளது என்றார் நஞ்சுண்ட ராவ் . அது என்ன என்று நரம்பியல் நிபுணர்கள்தான் சொல்லவேண்டும். அதன் மூலம் அவை குற்றலை புற ஊதாக் கதிர்களை வாங்கும் சக்தி கொண்டிருகின்றன. பூமியை பலவிதமான புற ஊதா ,புறச்சிவப்பு கதிர்கள் சூழ்ந்திருக்கின்றன. பூமியின் ஒவ்வொரு இடத்துக்கும் அவற்றின் அதிர்வுகள் மாறுபடுகின்றன. அவ்வதிர்வுகள் மூலம் இப்பறவைகள் பூமியைப்பற்றி ஒரு மனவரைபடத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளன. அதாவது வெளவால்கள் கேளாஒலியலைகள்மூலம் பார்ப்பது போல அவை பூமியைப்பற்றி வேறு ஒரு பார்வையையும் அடைகின்றன. பூமியைச் சுற்றியுள்ள புறஊதா நெடுஞ்சாலைகளில்தான் அவை பறக்கின்றன. தூரத்தால் , தூசிப்புகை மற்றும் மேகங்களால் தடுக்கப்படாத ஒரு பாதை வரைபடம் அது .

டாக்டர் நஞ்சுண்டராவ் அதை தன் சோதனைச்சாலையில் பலவிதமான கதிர்களைக் கொண்டு இருபதுவருடங்களாக ஆய்வு செய்தார். பறவைகள் அறியும் அதே அலைவரிசையை அவர் வரையறை செய்து விட்டார். அதே அலைவரிசையை அனுப்பி ஓர் கறுப்புவால் காட்விட்டை சென்னைக்கு போகச்செய்தார். ஒரு டன்லின் பறவையை ராஜஸ்தானிலிருந்து வரவழைத்தார். இனி அதை உலகளாவிய முறையில் நிரூபிக்க வேண்டும். அதற்கான மாபெரும் செயல்திட்டமொன்றை டாக்டர் நஞ்சுண்டராவ் வகுத்து விட்டிருந்தார் . அதன்படி சீனாவுக்கு மேற்கே மங்கோலியாவிலிருந்து இங்கே அக்டோபர் இறுதியில் கிளம்பி நவம்பர் முதல்வாரத்துக்குள் வலசை வரும் மங்கோலிய சேண்ட் ப்ளோவர் [Mongolian Sand Plover ] பறவை தேர்வு செய்யப்பட்டது . பறவையியல் பெயர் Charadrius mongolus.

டாக்டர் கருணாகர ராவின் கணக்குப்படி ப்ளோவர் இனத்தில் மட்டும் 67 வகைகள்.[ புத்தகங்களில் இருப்பதைவிட ஆறு வகைகள் கூட என்கிறார்] ‘ஏறத்தாழ முந்நூறு வகை பறவைகள் பூமியின் வடபகுதியில்ருந்து தெற்குநோக்கி பூமத்தியரேகை நாடுகளுக்கு வருகின்றன. நீண்டகாலமாக இந்த வலசைபோக்கு நிகழ்வதனால் அவற்றுக்கும் காற்றின் திசைமாற்றங்களுக்கும் இடையே ஓர் ஒத்திசைவு ஏற்பட்டுள்ளது. அந்தத் தகவல்கள் அவற்றின் உள்ளுணர்வாக மாறி மூளையிலும் மரபணுக்களிலும் பதிந்தும் விட்டன. இவை அவற்றின் உயிர்வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்கள், அவ்வளவுதான் ‘ என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ்

திட்டப்படி டாக்டர் நஞ்சுண்டராவ் குழுவினர் மங்கோலியாவுக்கு நேராகச் சென்று நூற்றுக்கணக்கான சேண்ட் ப்ளோவர் பறவைகளைப்பிடித்து அவற்றுக்கு ஓரு மின்னணுத் தொப்பி அணிவிக்கிறார்கள் . அது பறவைகள் அறியும் புற ஊதா கதிர்களை முற்றாக தடுத்துவிடும் . இவர்கள் அனுப்பும் வேறு கதிர்களை புற ஊதா குற்றலைகளாக மாற்றி அவற்றுக்கு அளிக்கும். அதன் வழியாக பறவைகளுக்கு இவர்கள் விரும்பும் தகவல்களை அளிப்பார்கள் . ‘ ஒரு சேண்ட் ப்ளோவர் பறவைக்கூட்டத்தை திசைமாற்றி அப்படியே எகிப்துக்குக் கொண்டுபோவதுதான் திட்டம் ‘ என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ்.

‘போடா டேய் ‘என்றார் டாக்டர் கருணாகர ராவ். அவரது தலை தனியாக ஆடியது. ‘பறவை என்ன விமானம் போல எந்திரமா ?அது பெருவெளியின் ஒரு துளி . நீ இப்போது கண்டுபிடித்திருப்பது பறவைகளின் ஓர் இயல்பை மட்டும்தான் . இது சம்பந்தமான மற்ற விஷயங்களை காண மறுத்ததால்தான் அது உன் கண்ணுக்கு பட்டது. பறவைகள் வலசை போவதே இதனால்தான் என்று நீ இன்று சொல்வாய் .நீ விட்டுவிட்ட விஷயங்களை கண்டுபிடித்து உனக்குப் பிறகு வருபவர்கள் உன்னை மறுப்பார்கள். அப்படியே அது போனபடியே இருக்கும். உங்களால் ஒரு பூச்சியைக்கூட முழுக்க அறிந்துவிட முடியாது. அறிவியல் என்றால் வானத்தை முழம்போடும் கலை. நீ கண்டுபிடித்த விஷயத்தினால் ஏதாவது நடைமுறைப் பயன் இருந்தால் அதைச்சொல். அதைவிட்டுவிட்டு பறவையின் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாய் புலம்பாதே ‘

‘ஏன் பயன் இல்லை ? இனிமேல் பறவைகளை நாம் நம் விருப்பபடி கட்டுப்படுத்தலாம். விரும்பும் இடத்துக்கு அனுப்பலாம். அதன் பயன்கள் ஏராளம் … ‘

‘டேய் பறவை என்பது வானம் .அது பூமிக்கு ஒருநாளும் கட்டுப்பட்டதல்ல ‘

‘நீங்கள் உங்கள் காளைச்சாணத்தை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் ‘ என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ்

‘ உன் அறிதல்முறை பதினெட்டாம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸிஸ் பேக்கன் உருவாக்கியது.அது எதையும் உடைத்து, பிரித்து ஆராய்வது. அதைத்தான் நீ அறிவியல் என்கிறாய். அதை வைத்து இந்தப் பிரபஞ்சத்தின் துளிகளையே அறிய முடியும். முழுமையை நிராகரித்தால் தான் துளிகள் நம் கண்ணிலேயே படும். பிரபஞ்சம் என்பது ஓரு முழுமை .அதை முழுமையுடன் அறிய முயற்சி செய் ‘ என்றார் கருணாகர ராவ் ‘ யோசித்துப் பார்டா முட்டாள். விண்ணில் கோடிக்கணக்கில் பறவைகள். ஒருபறவைக்கும் மற்ற பறவைகளுக்கும் இடையேயான உறவு என்ன ? விசும்பின் மற்ற பறவைகளுக்கும் அப்பறவைக்கூட்டத்துக்குமான உறவென்ன ? பூமியில் உள்ள மற்ற உயிரினங்களுக்கும் பறவைகளுக்குமான உறவென்ன ? உன்னால் அந்த பிரம்மாண்டமான ரகசியத்தை எப்படிப் புரிந்துகொள்ள முடியும் ? அங்கே சைபீரியப்பறவைகள் கிளம்பும்போது இங்கே அவற்றுக்கு உணவாகும் பூச்சிகளும் மீன்களும் முட்டைபோட ஆரம்பித்துவிடுகின்றன…. புழுக்கள் பல்கிப்பெருகுகின்றன. பிரபஞ்சம் ஒரு முழுமை. பூமி அதன் துளியான ஒரு முழுமை. இதை மறக்காதே… ‘

‘ஓம் , ஈசோ வாஸ்யம் இதம் சர்வம் .நமோ நமஹ! போதுமா ? ஆளைவிடுங்கள் ‘என்று டாக்டர் நஞ்சுண்டராவ் கிளம்பிவிட்டர்.

மஞ்சூரியாவிலிருந்து டாக்டரின் ஃபோன் வந்தது. பறவைகளுக்கு குல்லா போடும்வேலை மும்முரமாக நடக்கிறது என்றார். ஆயிரக்கணக்கான பறவைகளை பிடித்து குல்லா போட்டுவிட்டதாக அவர் உற்சாகமாகச் சொன்னபோது எனக்கு ஏனோ சற்று வயிற்றைக் கலக்கியது. டாக்டரின் தொடர்பு வலையைச்சேர்ந்த சீனப் பறவையியலாளர்கள் அதில் உற்சாகமாக ஈடுபட்டார்கள். அது பறவையியலில் ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணப்போகிறது என்றார் டாக்டர்.

டாக்டர் நஞ்சுண்டராவின் மனைவிக்கு தகவலே சொல்லவில்லை போலிருக்கிறது. அந்த அம்மாள் மூன்றாம் நாள் என்னைக் கூப்பிட்டு டாக்டர் இருக்கிறாரா என்றுகேட்டாள். இல்லை என்றேன். காரணம் சொன்னபோது அவளும் ‘காளைச்சாணம் ‘ என்றுதான் சொன்னாள். பறவை எச்சக்குவியலில் வாழ்பவனுக்கு காளைச்சாணம் என்பது தூய நறுமணப்பொருள்தான் என்று எண்ணிக் கொண்டேன். அதிலும் வலசைப்பருவத்தில் நான் மிதித்து நடப்பது சைபீரிய ,மங்கோலிய எச்சம்.

பறவைகள் கிளம்பிவிட்ட செய்தியை டாக்டர் என் தொலைபேசியில் வெடித்து சொன்னார். சீனப் பறவையியலாளர் ஏதோ ஒரு ஹோ தலைமையில் ஒரு குழு ரேடியோ அலைகள் மூலம் அதன் புற ஊதா கதிர் செய்தித் தொடர்பை வழி நடத்தியது .மறுநாள் டாக்டர் நஞ்சுண்டராவ் என் தொலைபேசியில் பயங்கரமாக ஆர்ப்பரித்தார். தகவல்கள் சொல்லி தன் தந்தையை பாதிப்படையசெய்வதுதான் அவரது நோக்கம் என்று எனக்கு புரியாமலில்லை. பறவைகள் திசை மாறிவிட்டன என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ். டாக்டர் கருணாகர ராவ் அதில் அதிக ஆர்வம் காட்டாதது போல முகத்தை வைத்துக் கொண்டாலும் எல்லாச் செய்திகளையும் கேட்டறிந்தார் .

பறவைகள் சீனாவிட்டு திசைமாறி ஆஃப்கன் எல்லைக்குள் சென்றன. எனக்கு பயமாக இருந்தது. இந்தப் பறவைகளை எனக்கு தெரியும். சிறிய அழகான குருவிபோன்ற பறவைகள். கரிய கூரிய அலகு, மணிக்கண்கள் , சிலவற்றுக்கு நல்ல செங்காவி நிற முதுகு. சிலவற்றுக்கு இளஞ்சிவப்பு. அடிவயிறு வெள்ளை .எகிப்தில் போய் இறங்கி அது என்ன செய்யப்போகிறது ? நைல்நதிக்கரையில் எங்கள் குளத்தைதேடி முழிக்கப்போகிறது .

டாக்டர் கருணாகர ராவ் என்ன சொன்னார் என்று டாக்டர் நஞ்சுண்டராவ் கேட்டார். அவர் தகவல்களை வெறுமே கேட்டுக் கொண்டார் என்றேன். கூண்டில் வாழ்ந்த ஒரு தீக்கோழிக்கு மலச்சிக்கல். அதில் அவர் முழுமையாக ஈடுபட்டதனால் அவருக்கே கடும் மலச்சிக்கல் என்ற உண்மையை சொல்லவில்லை.

பத்தாம் நாள் பறவைகள் கடும்வெயிலில் தளராமல் அரேபியப் பாலைவனத்தை தாண்டிச்சென்றன. இருபதுநாட்கள் அவை பறந்தன. கெய்ரோவில் இறங்கிய அவை அங்கே ஒரு வயலில் கீக் கீக் என்று தடுமாறி சுற்றிவந்தபோது டாக்டர் நஞ்சுண்டராவ் என்னை கூப்பிட்டார் ‘ ‘டேய் அந்தக் கிழத்தை கெட்டியாக பிடித்துக்கொள். அதன் வாயைத்திற. அரைக்கிலோ சீனியை அதற்குள் கொட்டு. பிறகு சொல்லு, இன்று மானுட அறிவியலில் ஒரு திருப்புமுனை நாள் என்று ‘ என்றார் .

மறுநாள் மீண்டும் ஃபோன் . ‘கிழம் என்ன சொல்கிறது ? இது உலக சாதனை என்று அவரிடம் சொல். .உலகசாதனை! ‘ என்று வீரிட்டார்.

நான் சொல்ல ஒரு தகவல் வைத்திருந்தேன் ‘ டாக்டர் இங்கே ஒரு புதிய பறவை வந்து இறங்கியிருக்கிறது. ‘

‘புதிய பறவையா ? ‘

‘ஆமாம். இதுவரை வராத பறவை. வெளிநாட்டுப்பறவை ‘

‘எப்படி இருக்கிறது ? ‘

‘ சின்னப் பறவை. அகலமான அலகு. கொண்டை இருக்கிறது. வாலும் நீளம். பறந்து பூச்சிகளைப்பிடித்து சாப்பிடுகிறது. ‘

‘கால் எப்படி ? ‘

‘பலவீனமான, சின்ன கால்… ‘

‘ஏதோ ஃப்ளைகேச்சர். மின்னஞ்சலில் படம் அனுப்பு ‘

நான் அப்போதே புகைப்படம் எடுத்து அனுப்பினேன் .

உடனே டாக்டர் நஞ்சுண்ட ராவ் போனில் கூவினார் ‘அது ஸ்வானிசன் ஃப்ளைகேச்சர் . ‘ டாக்டர் அதன் பறவையியல்பேரை கெட்டவார்த்தையை சொல்வது போலச் சொன்னார். [Swainson 's Flycatcher /Myiarchus s. swainsoni]

‘அது எங்கே அங்கே வந்தது ? அது தென்னமேரிக்கப் பறவை . தெற்கு தென்னமேரிக்காவிலிருந்து வடக்கு தென்னமேரிக்கா போக வேண்டியது… ‘

‘தெரியவில்லையே டாக்டர் . ஆனால் அது மாலத்தீவுக்கும் கேரளாவுக்கும் வேடந்தாங்கலுக்குமெல்லாம் நிறைய வந்திருக்கிறது. இதைப்பற்றி உங்களுக்கு மொத்தம் எண்பது மின்னஞ்சல் வந்திருக்கிறது… ‘

‘முட்டாள் ‘என்றபடி டாக்டர் நஞ்சுண்டராவ் ஃபோனை வைத்தார். யாரைச்சொன்னார் என்று புரியவில்லை.

மறுநாள் டாக்டர் நஞ்சுண்டராவ் ஃபோன் செய்வதாக சொன்னார், செய்யவில்லை. அவர் மனைவியின் மின்னஞ்சல் வந்தது. அதை அவருக்கு அனுப்பி வைத்தேன். அவளுக்கும் ஏதோ பிரச்சினை. மலேசியக் கடற்கரையில் ஒரு புதுவகை மீன் குஞ்சுபொரிக்க கூட்டம் கூட்டமாக வந்திருக்கிறதாம். இது ஓர் அபூர்வ சம்பவமாம். உலக மீன் ஆய்வாளர்கள் அத்தனைப்பேரும் அங்கே கூடியிருக்கிறார்கள், இந்தம்மாவும் போயாக வேண்டும். வர நாளாகுமாம்.

எனக்கு ஏனோ ஒரு மனநிறைவு ஏற்பட்டது ‘ என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் ‘ என்று பாடியபடி தீவனத்தை அள்ளினேன்

தீக்கோழிக்கு மலச்சிக்கல் சரியாகிவிட்டது என்று டாக்டர் கருணாகர ராவ் வாசனையுடன் வந்து சொன்னார். 

தொடர்புடைய சிறுகதைகள்
மெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு . ஒருமுறை திறந்தபோது இருவரும் முகத்தோடுமுகம் சந்தித்து திகைத்து நின்றோம். ‘ஹாய் ‘ என்றார். அது உயர்குடிகள் ‘யாரடா நீ ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். வாசலில் நின்றிருந்தவர் ‘உள்ள வாங்கோ…இருக்கார்’ என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘வணக்கம்’ என்றபடி செருப்பை கழட்டினேன். அவர் செருப்பை தன் கையில் எடுத்துக்கொண்டார். ’வெளியே போட்டா நாய் தூக்கிட்டு போய்டுது சார்… உள்ளே போங்கோ’ அகலமான கல் வேய்ந்த திண்ணைக்கு ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். அவிசுவாசி என்று ஆனபிறகு மீண்டும் இங்கு திரும்பிவந்திருக்கிறேன். விசுவாசத்தைப் பற்றி அதிகமாகப் பேசவிரும்பவில்லை. பத்து வருடங்கள் ஒரு இளைஞனின் வாழ்வில் அத்தனை சிறிதல்ல பாருங்கள். என்றுமே நான் அவிசுவாசிதான் போலிருக்கிறது .ஆனால் அதுதான் இயல்பான நிலை என்று தெரிந்துகொள்ள ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன் காரை நிறுத்திவிட்டு முன்மதியவெயிலில் கண்கூச இறங்கி கோயிலை நோக்கி நடந்து சென்று கற்கள் எழுந்துகிடந்த செம்மண் சாலையில் நின்று கண்களின் மீது கைவைத்து கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான். சுதைச்சிற்பங்கள் தங்கள் காலடியில் நிழல் சிந்த ஒன்றுமீது ஒன்று ...
மேலும் கதையை படிக்க...
கடவுள் நம்பிக்கை உண்டா என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப் படுகிறது. “தெரியவில்லையே” என்ற பதில் தான் மிக வசதியானது என்று அனுபவத்தால் உணர்ந்திருக்கிறேன். அதுவே மிகப் பொருத்தமான பதிலும் கூட. சின்ன வயது நினைவுகள் சில வருகின்றன. என் ஊரின் பயங்கர ...
மேலும் கதையை படிக்க...
பூர்ணம்
அறம்
போதி
மன்மதன்
அவதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)