மந்திரப்பலகை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 30,375 
 

“டேய் தினேஷ்! ஏன்டா லொட்டு லொட்டுன்னு சேனல மாத்திட்டே இருக்க…?” இந்த குரலுக்கு சொந்தக்காரர் தினேஷுடைய அம்மா. தினேஷ் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கும், இல்லை இல்லை மூன்றாம் ஆண்டு வகுப்புக்கு செல்லும் மாணவன்(ஏறக்குறைய எல்லா பாடத்திலும் அரியர் வைத்திருப் பவனை ‘படிக்கும்’ என்று சொல்வது நியாயம் இல்லை அல்லவா!). “காலேஜ் லீவ்னா போதுமே நாள் முழுக்க ரிமோட்டும் கையுமா உக்காரவேண்டியது, இல்லனா லேப்டாப்-அ நோண்ட வேண்டியது வேற என்ன தெரியும் உனக்கு. ஊர்ல உள்ள பசங்கலாம் படிப்பு இல்லனா விளயாட்டு, விளயாட்டு இல்லனா பாட்டு னு சாதிச்சுட்டு இருக்குறப்போ. நீ மட்டும் ஏன்டா தண்டமா இருக்க” என்று சரமாரியான வசவுமழை பொழிந்தார் தினேஷுடைய அப்பா. தம் முன்னோர்கள் (ஆம் முன்னோர்களேதான்..) தன் மகனின் திறமையை கண்டு பாராட்டப்போவது அவருக்கு தெரிந்து இருப்பது உசிதம் இல்லைதானே. “அரம்பிச்சிடாங்கய்யா” என்று வடிவேல் ஸ்டைலில் முணுமுணுத்துவிட்டு, நான்கைந்து இட்லிகளை விழுங்கினான் தினேஷ். எதையும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளாத இளவட்ட வயது அவனுக்கு. எல்லா நாட்களையும் போல இன்றும் அவனுக்கு சாதாரணமான நாளாகவே இருந்தது இதுவரையில். “அம்மா நா, வெளியபோறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான். அது அனுமதி கேட்பது அல்ல தகவல் சொல்வது என்பது, அவன் தாய் அறிந்ததே.

கையில் டேபுடன்(tab) நண்பன் குணாவின் வீடு நோக்கி காதில் ஹெட்போனும் சகிதமுமாய் நடந்தான், அந்த ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில். வேடிக்கை பார்த்து கொண்டு நடந்ததில் “தொப் “, விழுந்தேவிட்டான் வட்டவடிவில் ஒரு ஆள் மட்டும், சற்று தாராளமாகவே நுழையகூடியதான பள்ளத்தில். ஆனால் பள்ளத்தில் விழுந்ததிற்கான விளைவுகள் அவனுக்கு ஏற்படவில்லை, மாறாக ஒரு கம்ப்யூட்டரால் வடிவமைக்கப்பட்ட அறை அல்லது காரின் உள்ளே இருப்பது போல் ஒரே டிஜிட்டல்மயமாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை தினேஷுக்கு. தலை சுற்றியது. ஒருவித அச்சமும் தோன்ற ஏதேதோ யோசித்து, அந்த இயந்திர அறையை விட்டு வெளியேற ஏதேனும் வழி இருக்குமா என எண்ணி அந்த அறையை துழாவ துவங்கினான். சுற்றிமுற்றி பார்த்ததில் ஒரு ஓரத்தில் டிஜிட்டல் கடிகாரம் போன்ற ஒரு பொருளும் அதன் அருகே தொடுபலகையில் 0 முதல் 9 வரையிலான எண்களும் இருந்தன. அதன் அருகே சென்று சற்று நேரம் உற்று பார்த்துவிட்டு கோபத்துடனும் எரிச்சலுடனும் 1234 என்ற எண்களை தொட, ஒரு மாற்றமும் நிகழவில்லை மேலும் கி.மு, கி.பி என்று இருந்ததில் அவை எதை குறிக்கின்றன என்பதை யோசிக்காமலேயே, கி.பி யை தொட்டு விட்டு பச்சைநிற பொத்தானையும் அழுத்தவே, அந்த இயந்திர அறை குலுங்க தொடங்கியது. இப்போது தான் அவனுக்கு, நடப்பது சிறிது விளங்கியது, தான் இருப்பது டைம் மெசின் என்றும் இது காலத்தை கடக்க கூடியது என்றும். அவ்வாறெனில் தான் இப்போது கி.பி.1234 ஆம் ஆண்டுக்கு செல்வதையும் சரியாகவே ஊகித்தான் தினேஷ். “மெஸின் நின்றதும் 2014 கி.பி என்று அழுத்திவிட்டால் நாம வீட்டுக்கு போய்டலாம்” என்று தனக்குள்ளேயே கிசுகிசுத்தான்.

பத்து நிமிடம் கழித்து அதன் ஆட்டம் நின்றது. அதன் கதவு திறக்கப்பட்டதும், இதுவரை அங்கு கதவு ஒன்று இருந்ததிற்கான அடையாளம் தென்படாததை கண்டு வியந்தான். மெதுவாய் தலையை எட்டி பார்த்தான். அங்கு இருட்டாக இருந்தாலும், ஒரு தீவர்த்தியின் ஒளியில் தங்க கட்டிகளும், நவரத்தின ஆபரண குவியல்களும் ஜொலித்தன. அவற்றை கண்டு, தன்னை அறியாமலேயே படியில் காலூன்றி கீழே இறங்கினான். தன் முக்கால் பேண்ட்-ல் டேப் இருப்பது நினைவுவர, அந்த பொக்கிஷங்களை ஒளிப்படமாக கிளிக் செய்தான். ஒருவாறு தேடித்தேடி அந்த பொக்கிஷ நிலவறையின் வாசலை கண்டுபிடித்தான். நாரங்கியை திறக்க முயன்றான், ஆனால் திறக்க முடியவே இல்லை அங்கும் இங்கும் அசைத்ததில் சட்டேன்று அதன் உட்கதவு திறந்தது. வெளியே வந்தான் குளிந்த காற்று அவனை வரவேற்றது, அவன் சோழ மன்னனின் அரண்மனை தோட்டத்தில் நின்றுகொண்டிருந்தான். ஆள் அரவமே இல்லாத அந்த இடத்தைவிட்டு சற்று தூரம் நடந்தான்.

பெரிய பெரிய மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கண்டு வியந்தான், அவற்றை தனது டேப்யிலும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டான். “இதெல்லாம் பேஸ்புக் ல போட்டா, எவ்ளோ லைக்ஸ், கமெண்ட்ஸ் கெடைக்கும்” என்று எண்ணமிட்டான். இன்னும் சற்று தூரம் நடக்கையில் அங்கே ஒரு காட்சியை கண்டான், மாளிகை உப்பரிகையில் போடப்பட்ட சிம்மாசனத்தில் சிங்கமென அமர்தந்திருந்தார் சோழப்பேரரசர். அவர் சினம் கொண்டு சில வார்த்தைகளை மொழிந்துகொண்டிருக்க கீழே மக்கள், சமுத்திரம் போல் நின்று கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த மனிதரிடம் ஆச்சரியம் பொங்க, “அங்க என்ன நடக்குது சார்? ராஜா ஏன் கோவமா பேசறாரு?” என கேட்க, அவனை திரும்பி பர்த்தவனோ, இன்னும் சற்று அதிக ஆச்சரியம் கொண்டவனாய் “நீ யார்? என் இப்படிப்பட்ட ஆடை உடுத்திருக்கிறாய்?” என விசாரித்தான். “அத அப்பறம் சொல்றேன் சார். அங்க என்ன நடக்குது னு சொல்லுங்க.” என்றான் தினேஷ். “நம் மகாராஜா, தனது ஆஸ்தான ஓவியரை தேர்ந்தெடுக்க, நாட்டில் உள்ள சிறந்த ஓவியர்களை எல்லாம் அழைத்து, அவரவர் திறமையை நிரூபிக்கும் படி ஆணையிட்டார். ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் எதுவும் மன்னரை கவரவில்லை. எனவே அரசர் சற்று ஏமாற்றம் கொண்டுள்ளார்” என்றான். “ஓ! அப்டியா!” என குறுநகை புரிந்துவிட்டு தன் டேப்யில் உப்பரிகை மேல் மன்னர் அமர்ந்திருக்கும் காட்சியை ஒளிப்படம் எடுக்க, அதை அருகில் இருந்து பார்த்த ஆசாமி ஆச்சரிய வெள்ளத்தில் திளைத்து பிறகு “ஓவியன்! ஓவியன்!! மாய ஓவியன்! மந்திர ஓவியன்!!” என கூச்சலிட, மன்னரும் தினேஷ் ஐ அழைத்துவர ஆணை பிறப்பித்தார்.

“ஓ இளைஞனே ! நீ யார்? எங்கிருந்து வந்திருக்கிறாய்?” “எனக்கு இந்த ஊர் தான் ஐயா.” என தனித்தமிழ் பேசினான். “இருக்கட்டும். கையில் என்ன பலகை? அதில் ஓவியம் வரைந்துவைத்திருக்கிறாயாமே? அதை காட்டு பார்ப்போம்.” என்று கூறிவிட்டு இடி இடி யென சிரித்தார்அரசர் . தினேஷும் “அவற்றை காட்ட , அவற்றை கண்ட மன்னர் சிலிர்த்துப்போனார். இவ்வளவு இளைய வயதில் இத்தனை திறமைகளா!” என வியந்து பாராட்டினார். தான் எடுத்தவை ஒளிப்படங்கள், ஓவியங்கள் அல்ல என்று கூற முயன்றான் தினேஷ். மன்னர் மந்திரிகள் உட்பட யாரும் அவற்றை செவி சாய்க்கவில்லை. “எங்கே என்னை ஒரு ஓவியம் எழுது.” என்று மன்னர் கூறிவிட்டு ஒரு கம்பீர போஸ்-ம் கொடுக்க, தினேஷும் அவரை கிளிக் செய்தான். ஒரே நொடியில் ஓவியம் எழுதிய தினேஷ் ஐ மன்னர் அதிசயித்தார். மூன்று நாட்களும் அவனுக்கு ராஜ உபச்சாரம் தான். மன்னரும் தன்னை வெவ்வேறு போஸ் களில் ஓவியம் எழுத சொல்ல அவ்வாறே தினேஷும் செய்தான். தன் மனைவிகளுடன் போஸ், தன் மகவுகளுடன் போஸ் என போஸ் பட்டியல் நீள, டேபில் சார்ஜ்வும் குறைந்துகொண்டே வந்தது. அனைவரும், அவனை “மந்திர ஓவியர் தினேஷச்சாரியார்” என்றே அழைத்தனர். தினேஷ் திரும்ப மெசின் க்கு செல்ல வேண்டும் என எண்ணி நகர முயன்றபோதும் பலனில்லை. தன் பெற்றோகள் தன்னை தேடுவார்களே என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றினாலும், தன்னை திறமை இல்லாதவன் என்று திட்டும் அப்பாவுடன் இருப்பதற்கு தன் திறமையை வியக்கும் இந்த காலம், அவனுக்கு பிடித்துதான் இருந்தது.

தினேஷ் எப்போதும் மன்னர் உடனே இருப்பது முதன் மந்திரிக்கு எரிச்சலூட்டியது. மன்னரிடமிருந்து தினேஷை பிரிக்க ஒரு சதி செய்தார், மன்னரிடம் சென்று “மன்னர்மன்னா! நம் நாட்டுக்கு ஒற்றன் ஒருவன் புகுந்திருப்பதாக நம் ஒற்றர் படை தளபதி செய்தி கொண்டு வந்திருக்கிறான்.”
“என்ன? ஒற்றனா! இது போருக்கான காலம் இல்லவே? ” என்று பொருமினர் மன்னர்.

“அவன் மந்திர சக்தி உடையவனாம், தன் அபார சக்தியினால் நம்மை திசை திருப்பி, தக்க சமயத்தில் போர் புரிய பாண்டியனுக்கு அழைப்பு விடுப்பானாம்.” இது மந்திரி.

“அப்படியானால், நீர் தினேஷச்சாரியர் மீது சந்தேகிக்கிறீரோ! அப்படியும் இருக்ககூடுமோ?” என்று சிந்திக்க தொடங்கினார் மன்னர். பின் “சரி, அவனை சிறையில் சிலகாலம் இருக்க செய்யுங்கள்!” என சற்று கவலையுடனே ஆணையிட்டார்.

தான் நினைத்தது நடந்த மகிழ்ச்சியில் வெற்றி சிரிப்பு உதிர்த்தார் மந்திரி.

“ஹ்ம்ம், ராஜாவோட இருந்தப்போவே தப்பிக்க முடில, இப்போ இந்த ஜெயில்லயிருந்து எப்படி தப்பிச்சி போபோறோம், காலம் பூரா இங்கயே கேடக்க வேண்டியது தான்..” என்று சிறையின் உள்ளிருந்தபடியே முணுமுணுத்தான் தினேஷ். “எனக்கு இந்த சிறையில் இருந்து பொக்கிஷ அறை வரை செல்ல சிறிய சுரங்க வழி தெரியும், ஆனால் அங்கிருந்து வெளியே செல்ல முடியாது, பொக்கிஷ அறையில் அகப்பட்டு கழுவேற்றப்பட்டு சாவதற்கு, இங்கேயே கிடக்கலாம்” என்று கூறினான் தினேஷ் அடைக்கபட்டிருக்கும் அறையில் இருந்த ஒருவன். அவன் பார்ப்பதற்கு பைத்தியம் போல இருந்ததினால் அவன் சொல்வதை நம்பலாமா? வேண்டாமா? என்று யோசித்தான். அதன்பின் நம்பும் தோரணையில் “எனக்கு போக்கிஷ அறை வரைக்கும் வழி காட்டு, அப்புறம் நான் வெளியே போய்க்கிறேன்” என்று கூறி மகிழ்ந்தான் தினேஷ். மனதில் அங்கு மெசின் இருக்குமா? என்ற சந்தேகமும் தோன்றியது. தன்னையும் கூடவே வெளியே அழைத்துசெல்ல வேண்டும் என்ற ஒப்பந்தத்தை பைத்தியகார கைதி போட, வேறு வழி இன்றி தினேஷும் ஒப்புக்கொண்டான்.

அன்று இரவு 1 மணி வாக்கில் இரு கைதிகளும் ஒரே ஒரு ஆள் மட்டும் நுழைய கூடியதான சுரங்கம் வழியே, தட்டு தடுமாறி நுழைந்து, ஊர்ந்து, சிராய்த்து பொக்கிஷ நிலவறையை அடைந்தே விட்டனர். தினேஷ் தன் கண்களை நம்பமுடியாதவனாய் திகைத்தான். காரணம் மெசின் அவன் விட்டு சென்றது போல அங்கேயே நின்றுக்கொண்டிருப்பது… “எஸ் !!!” என்று வெற்றிக்குறி செய்துவிட்டு மெசின் ஐ நோக்கி ஓடினான். பைத்தியகார கைதியும் பின்னோடு ஓடினான், தினேஷ் அதில் ஏற, தானும் அவனோடு தான் வருவேன் என்று அடம்பிடித்தான் கைதி.

“சரி வா ” என்று அவனையும் மெசினில் ஏற்றிக்கொண்டு நமட்டுசிரிப்பு சிரித்தான். “2014 கு வந்து டெக்னாலஜி தெரியாம என்ன பாடுபடபோறனோ இவன், காட் இஸ் கிரேட்.” என்று கூறிக்கொண்டே 3014 என்ற எண்களை தன் விரல்கள் தொடுவதை அவன் கவனிக்காமல் கி.பி என்ற பொத்தானை தொட்டுவிட்டு பச்சை நிற ஸ்டார்ட் பொத்தானையும் அழுத்தினான்.

“காட் இஸ் கிரேட்.”

Print Friendly, PDF & Email

1 thought on “மந்திரப்பலகை

  1. மந்திரப் பலகை கதை மிக அருமை. படிக்கப் படிக்க ஆர்வமாக இருந்தது. கிளைமாக்ஸ் சூப்பர். வாழ்த்துக்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *