கடவுள் வைரஸ்

 

புது உலகத்திற்கு முன்பு ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ்ந்ததைப் பற்றிப் படித்திருக்கிறேன். தாய், தந்தை, கணவன், மனைவி என்று போலி உறவுமுறைகளுடன் வாழ்ந்ததாகப் காலச்செய்திப் படங்களில் பார்த்திருக்கிறேன். தொல்கலை நூலகத்தின் முப்பதாவது அடித்தளத்தில் ஒன்றிரண்டு முறை பார்த்த படங்களில், பெண்கள் கருப்பெட்டிகளை வயிற்றில் சுமந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். ‘பெண்களும் ஆண்களும் எப்படி இணைந்து வாழ்ந்தார்கள், எத்தனை பிற்போக்கான வாழ்க்கை நெறி’ என்று மற்ற ஆண்களுடன் அடிக்கடி வியந்திருக்கிறேன். நான் வெளிவந்த இருபத்துமூன்று ஆண்டுகளில், பெண்களை நேரில் பார்த்ததில்லை. உலகப் பொதுவிழா விருந்தின் போது, தடுப்புச்சுவருக்கப்பால் இருக்கும் பெண்கள் கூட்டத்தை ஒளிப்படத்தில் காண்பதோடு சரி. நேரில் சந்திக்கும் வாய்ப்பே கிடையாது.

இருபது நாட்களுக்கு முந்தைய நிகழ்ச்சி, எல்லாவற்றையும் அடியோடு மாற்றிவிட்டது.

தொழிலறையிலிருந்து வெளிவந்தவன், வழக்கம் போல் பொழுதுபோக்குத் திரையைச் சுட்டினேன். கோள் செய்திகள், விளையாட்டு என்று வரிசையாக ஒளியலை மாறிக் கொண்டே வர, ஒன்றும் பிடிக்காமல் நிறுத்தச் சொன்னேன். அணைந்த திரை விழித்துக் கொண்டது. நிறுத்து என்றேன். நின்று அணைந்த திரை, மறுபடி நான் சொல்லாமல் சுட்டாமல், தானாகவே விழித்தது. ஏதோ கோளாறு என்று எழுந்து சுவற்றிலிருந்த விசையை அழுத்தி நிறுத்தியும், திரை தானாகவே விழித்துக் கொண்டது. பழுது மையத்திற்குத் தெரிவிக்க நினைத்தேன்.

“உட்கார்” என்றது, திரையிலிருந்து வந்த குரல். அதிர்ந்து போய் அமர்ந்தேன். திரையில் ஒரு நிழலுருவம்.

“யார் நீ?” என்றேன்.

“என்னைக் கடவுள் என்பார்கள்”

“இது புது உலகம். போ, போ, பக்கத்துக் கோள் எங்காவது போய் நிதி கேட்டுப் பார், கடவுள் தேவையில்லை” என்று ஒளியலை மாற்றச் சொன்னேன். நிதி திரட்டுவோர் தொல்லை தாளவில்லை.

அடுத்த ஒளியலையிலும் தோன்றிய அதே உருவம், “தேவை இருக்கிறது. தேவையை வலியுறுத்தும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது” என்றது.

“நீ யார்? மைய அதிகாரியா? உன் அடையாளம் என்ன, சொல்?” என்றேன் கோபமாக.

“இந்தக் கோள், உலகம், நீ… எல்லாமே என் அடையாளம் தான். நீ எனக்காக ஒரு மகத்தான காரியம் செய்யப் போகிறாய்”

“நானா? என்ன செய்ய வேண்டும்?” சற்றுப் பேச்சு கொடுத்தேன். திசை திருப்ப வேண்டும்.

“இரண்டு நாளில் உலகப் பொதுவிழா வருகிறது அல்லவா? விருந்து முடிந்ததும் நீ அங்கேயே பின்தங்க வேண்டும். அனைவரும் வெளியேறியதும், அறை மூலையில் இருக்கும் தடுப்புச்சுவர்க் கதவை நீ திறக்க வேண்டும்”

“வேண்டாத வம்பு. கதவைத் திறந்து சுவருக்கப்பால் போக எனக்கு அனுமதியில்லை. பூட்டிய கதவை என்னால் திறக்க முடியாது. மேலும், விருந்து முடிந்ததும் நான் தங்கிவிட்டால் தானாகவே செய்தி போய் என்னை வெளியேற்றி விடுவார்கள்”

“பூட்டைப் பற்றிக் கவலைப்படாதே. உன்னைப் பற்றிய செய்தி எதுவும் போகாது”

“எப்படிச் சொல்கிறாய்?”

“சொன்னேனே, நான் கடவுளென்று? எனக்கு சக்தியிருக்கிறது. நீ கதவைத் திறந்தால் போதும், சுவருக்கப்பால் போக வேண்டாம்”

“உனக்கு சக்தியிருக்கிறதென்றால், நீயே கதவையும் திறக்க வேண்டியது தானே?”

“நீ தான் திறக்க வேண்டும். உன்னை ஆட்டுவித்தால் தானே நான் ஆள முடியும்?”

“புரியவில்லையே?”

“புரிந்து கொள்வாய். கதவைத் திறந்தால் போதும். அதுவே மகத்தானது”

“அதிலென்ன மகத்துவம்?”

“திறந்த கதவுகள், மறந்த உண்மைகளுக்கு விடுதலை தரும். அதில் மகத்துவம் வரும்”

“வேறே யாரையாவது கேட்பது தானே?”

“நீ தான் தகுந்தவன்”

“நான் முடியாதென்றால்?”

மையத்திற்குச் செய்தி அனுப்பியதும் உடனே வரச் சொன்னார்கள். நான் கடவுளைச் சந்தித்த விவரமெல்லாம் கேட்டுக் கொண்டு, பரிசோதனைக்குப் பின், என்னை அடித்தளத்தின் நாற்பதாவது நிலையில் மையத்தலைவரைச் சந்திக்கச் சொன்னார்கள். என்னைப் பெயர் சொல்லியழைத்துப் புன்னகை செய்தார் மையத்தலைவர். “கடவுள் கிடையாது என்று உனக்குத் தெரியுமில்லையா?” என்றார் கனிவுடன். “கவலைப்படாதே. கடவுள் சொன்னதை மறைக்காமல், ஒன்று விடாமல் மீண்டும் என்னிடம் சொல்”

“உலகப் பொதுவிழா விருந்து முடிந்ததும் பின்தங்கி, எல்லோரும் வெளியேறிய பின், மூலைக்கதவைத் திறக்க வேண்டும். அவ்வளவு தான்”

“ஏன்?”

“ஏனென்று சொல்லவில்லை. ஆனால் கதவைத் திறப்பது மகத்தான காரியம் என்று…”

“நீ இதையெல்லாம் மறப்பது தான் மகத்தான காரியம்”

“முடியாதென்றால் தொல்லை கொடுப்பேன் என்றதே உருவம்?”

“ஒரு தொல்லையும் கிடையாது. கடவுளுக்கு சக்தியில்லை என்பது எப்பொழுதோ நிரூபிக்கப்பட்டு விட்டது”

கேட்பதா வேண்டாமா என்று தயங்கினேன். “இதற்கு முன், என்னைப் போல் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு யாராவது வந்திருக்கிறார்களா?” என்றேன் மெதுவாக.

என்னை நேராகப் பார்த்த மையத்தலைவர், எதிரிலிருந்த திரையைத் தொட்டார். திரையில் தோன்றிய வரிகளைப் படித்துவிட்டு “வந்திருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களில் நூறு பேர்” என்றவர், எதையோ கவனித்துவிட்டு “உனக்கும் அவர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது” என்றார். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ஒரு வேறுபாடும் இருக்கலாம்” என்றார்.

“என்ன ஒற்றுமை?”

“நூறு பேருக்கும் உன்னுடைய பெயர் தான்”

“எனக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?”

“நீ இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறாய். அவர்கள் எல்லாரும் உடனடியாக உயிர்பிரி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்”

கண்கள் இருண்டு, மூச்சு முட்டி, நான் மீண்டுவரச் சில நொடிகளாயின. “என்னையும் உயிர்பிரி நிலையத்திற்கு அனுப்புவீர்களா?” என்றேன்.

“கடவுளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்றார்.

“ஒன்றும் தெரியாது. கடவுளைப் பற்றி பழங்காலச் சுவடுகளிலும் படங்களிலும் பார்த்திருக்கிறேன். ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் கடவுளுக்கெதிராக நடந்த எழுச்சியில் மக்கள் கடவுளை மறந்துவிட முடிவு செய்தனர் என்று படித்திருக்கிறேன். திரையில் தோன்றிய உருவம்..” என்று சொல்லிக் கொண்டிருந்த என்னை நிறுத்தினார்.

“நிச்சயமாக வைரஸ். புது உலக முறைகளுக்கும் விதிகளுக்கும் இடையில் எங்கோ முடங்கிக்கொண்டு சில நூறு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளிவந்து தொந்தரவு தரும் கிருமி. ஒவ்வொரு முறையும் உன் பெயர் கொண்ட நபரையே அது தாக்குவது தான் வியப்பு. உன்னை வைத்தே அந்தக் கிருமியைக் கண்டுபிடிக்கலாமோ என்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. என்றாலும், இதையெல்லாம் மறந்துவிடு. அதுதான் உனக்கும் நல்லது”

“கதவுக்கப்பால் என்ன இருக்கிறது?” என்று கேட்டேன், நிதானமாக.

சற்று யோசித்து விட்டு, “அனைவருக்கும் தெரிந்தது தானே?” என்றார் மையத்தலைவர்.

“எனக்குத் தெரியாது, சொல்லுங்களேன்?”

“பெண்கள்! பூட்டிய கதவுக்கப்பால் பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ முடியவில்லை என்பதால் புது உலகத் தொடக்கத்திற்கு முன்பே பெண்களை நம் வாழ்விலிருந்து அகற்றிப் பூட்டி விட்டோம் அல்லவா? ஒருவருக்கொருவர் தேவையில்லை என்பது நிரூபிக்கத் தேவையில்லாமல் தெளிவாகி விட்டதே?” என்றார். நிதானித்து, “இந்தக் கேள்விகள் எல்லாம் உன்னை ஆபத்தில் கொண்டு விடும். கடவுள் வைரஸ் உன்னைப் பாதித்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. உன் மூளையிலிருந்து வரும் எண்ண அலைகளை பரிசோதனை செய்து பார்த்து விடுவோமா?”

‘வைரஸ் என்றால் என் மனதிலிருந்ததை அதனால் எப்படிப் படிக்க முடிந்தது?’ என்று கேட்க நினைத்தேன். பயமாக இருந்தது. ஏதாவது கேட்டால் பரிசோதனை என்று தொடங்கி உயிர்பிரி வரை போய்விடப் போகிறதே என்று அமைதியாக எழுந்தேன். “வேண்டாம், நன்றி. நான் வருகிறேன்” என்றேன்.

“பயப்படாதே. நீ இங்கே வந்ததை நான் மறந்து விட்டேன். இங்கு வந்ததை நீயும் மறந்துவிடு” என்றார்.

வெளியேறினேன். வீட்டுக்குள் நுழைகையில் பொறி தட்டியது. நான் பயந்தேன் என்பது மையத்தலைவருக்கு எப்படித் தெரிந்தது?

உலகப் பொதுவிழாவின் போது எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். மற்ற ஆண்களுடன் விளையாட்டிலும் கேளிக்கையிலும் பொழுதைப் போக்கிவிட்டு விருந்துக்குச் சென்றேன். விருந்து முடியும் நேரம் அருகில் இருந்தவனுடன் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென்று “அதோ எதிரில் நிற்கிறாரே, அவர் தான் புது மையத்தலைவர். எனக்குத் தெரிந்தவர்” என்றான்.

“பழைய தலைவர் என்ன ஆனார்?” என்றேன்.

“மையத்திற்கு எதிராக நடந்து கொண்டாரென்று சொல்கிறார்கள். நாளைக்குத் தீர்ப்பாம். அவரை உயிர்பிரி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறார்களாம். இரண்டு நாள் முன்பு அவரைச் சந்தித்த நபர் ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி. கடைசியாகச் சந்தித்த நபர் பற்றிய விவரங்களெல்லாம் முறைப்படி அழிக்கப்பட்டனவாம். என்ன விவரம் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவரை உயிர் பிரிக்கப் போகிறார்களென்றால், தீவிரமாகத்தான் இருக்க வேண்டும்” என்று வரிசையாக விவரங்களைக் கொட்டினான்.

நான் திடுக்கிட்டேன். அவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். “கடைசி நபர் பற்றிய விவரம் தெரிந்தால் மையத்திற்குச் செய்தியனுப்ப வேண்டுமென்று திரையில் செய்தி வந்ததே, தெரியாதா?? சரியான துப்பு கொடுத்தால் ஏழு புதுப்பணம் தருவார்களாம்.”

மையத்தலைவர் கடைசியாகச் சந்தித்த நபர் யார்? நான் தானா? என்னைப் பற்றிச் சொல்லியிருந்தால்? இருக்காது. இத்தனை நேரம் உயிர்பிரி நிலையத்திலிருந்து தேடிக் கொண்டு வந்திருப்பார்களே? ஏன் என்னைப் பற்றிச் சொல்லவில்லை? இங்கு வந்ததை மறந்துவிடு என்றாரே? நான் அங்கே போனதை மறைத்து விட்டாரா? ஏன்? எனக்குள் கேள்விகள் வெடிக்க, எழுந்து அகன்றேன்.

“எங்கே போகிறாய்?” என்றான்.

“இதோ வந்து விடுகிறேன்” என்று அவனிடமிருந்து விடுபட்டு, மெள்ள தடுப்புச் சுவரை நோக்கி நடந்தேன்.

விருந்து முடிந்து, கூட்டம் கலையத் தொடங்கியிருந்தது. நான் இங்குமங்கும் நடந்து கதவருகே வந்துவிட்டேன். கதவை மெதுவாகத் தொட்டேன். கதவை அழுத்திப் பார்த்தேன். அசையவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். அனேகமாக எல்லாருமே வெளியேறி விட்டார்கள். இதான் கதவா? வேறு ஏதாவது இருக்கிறதா? அதிக ஓசை வராதபடி, கதவைத் தட்டினேன். பயனில்லை. அழுத்தித் திறந்து பார்த்து விடுவோமா? எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. சுற்றிலும் பார்த்தேன். யாருமில்லை. என் மனம் முழுவதையும் மூடிய கதவு ஆக்கிரமித்துக் கொள்ள, திறந்தே விடுவது என்று அழுத்தினேன். திறந்தது.

திறந்த கதவில் அழைப்பிருந்தது போல் பட்டது. ‘வேண்டாம், போகாதே. கதவுக்கப்பால் போக வேண்டாம் என்று கடவுள் சொல்லவில்லையா? திரும்பி விடு’ என்றது என்னுள் ஒரு குரல். ‘கதவையோ திறந்தாகி விட்டது. போய்ப் பார்’ என்றது இன்னொரு குரல். புதுமையான அனுபவம். எங்கிருந்து வருகின்றன இந்தக் குரல்கள்?

கதவுக்கு அப்பால் தலையை நுழைத்துப் பார்த்தேன். யாருமில்லை. அடியெடுத்து வைத்தேன். வெட்டவெளி போலிருந்தது. இது தானா மகத்துவம்? போய்விடலாமென்று நினைத்துத் திரும்பிய போது அவளைப் பார்த்தேன். திறந்த கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். முதன் முதலாக ஒரு பெண்ணை நேரில் பார்த்தேன். என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தேன்.

அவள் ஓசையின்றிச் சிரித்தாள். “என்னை இங்கே வரச் சொன்னதும் கடவுள் தான்” என்றாள்.

“நான் ஆடம்” என்றேன்.

“என் பெயர் அதிதி” என்றாள். என் அருகில் வந்தாள். “ஆடம், உன்னைத் தொட்டுப் பார்க்கலாமா?” என்றாள்.

பழங்காலத் திரைப் படங்களில் ஆடை களைந்தப் பெண்களைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவள் ஆடையில்லாமல் எப்படி இருப்பாள் என்று தோன்றியது.

“என்ன சிந்தனை?” என்றாள்.

சொன்னேன்.

“நானும் அந்தப் படங்களைப் பார்த்திருக்கிறேன். நீ நிர்வாண நிலையில் எப்படி இருப்பாய் என்று நானும் யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றாள். என்னைத் தொட்டாள்.

“மையத்திற்கு தெரிந்து விட்டால் ஆபத்து” என்றேன்.

“மையத்திற்கு தெரியாது, பயப்படாதே” என்றாள். என் ஆடையைக் களைந்து விட்டாள்.

“அதையும் கடவுள் சொன்னாரா?”

அவள் பதில் சொல்லவில்லை. தன் ஆடையையும் முழுவதுமாகக் களைந்து விட்டாள். நான் அதுவரை நேரில் பார்த்திராத உடலுறுப்புகளைப் பார்த்துப் பிரமித்தேன். “தொடவா?” என்றேன். தொட்டபோது என்னுள் ஒரு இழப்பை உணர்ந்தேன். ‘வேண்டாம் ஆடம், போய் விடு’ என்றது குரல்.

அதற்குப் பிறகு பலமுறை அவளைச் சந்தித்தேன். கதவருகே வந்து நின்றதும் அவள் சொல்லிவைத்தாற்போல் கதவைத் திறப்பாள். மையத்துக்கு விவரம் தெரியாதது ஏனென்று புரியவில்லை. அச்சமாக இருந்தாலும், அவளைப் பற்றி நினைத்ததுமே அச்சம் மறைந்து அவளைத் தொட்டுச் சேரும் ஆர்வம் வந்து விடும். மையத்தைப் பற்றி அவளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அன்றிரவும் அவளைச் சந்திப்பதாகத் திட்டம். கடவுளிடம் பேசியதாகவும் என்னிடம் அவசரமாக ஏதோ சொல்ல வேண்டுமென்றும் முந்தைய சந்திப்பின் போது சொல்லியிருந்தாள். நான் அவளுடைய உடல் சரிவுகளில் கவனமாக இருந்ததால் அவள் பேச்சைப் பொருட்படுத்தவில்லை. அவளை மறுபடி சந்திக்கத் துடித்தேன். இது ஒரு தொல்லையாகி விட்டது. அவளைச் சந்தித்த போது பிரிய முடியவில்லை. பிரிந்த போது சந்திக்கத் துடித்தேன். எப்பொழுதும் அவள் சிந்தனையாகவே இருந்தது. இது என்ன உணர்ச்சி? இது என்ன வேதனை? இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை. நான் ஏதோ தவறு செய்கிறேனேன்று புரிந்தது. இருந்தாலும் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எல்லாம் கடவுள் கொடுத்த தொல்லை என்று தோன்றியது. அவளை மறக்க எண்ணித் திரையைச் சுட்டினேன். செய்தி, விளையாட்டு என்று ஒளியலை மாற, திடீரென்று திரையில் நான் பார்த்த மையத்தலைவர், “ஆடம்” என்றார். அவர் குரலில் அவசரம் தொனித்தது.

“உன்னை உயிர் பிரித்து விட்டார்கள் என்று சொன்னார்களே?” என்றேன்.

“என்னை உயிர் பிரிக்க முடியாது. நான் கடவுள். நான் உன்னிடம் அவசரமாகப் பேச வேண்டும்”

“நீ பழைய மையத்தலைவர். கடவுள் இல்லை” என்றேன்.

திரையில் மையத்தலைவர் முகம் மறைந்து, நான் முதலில் பார்த்த நிழலுருவம் தோன்றியது. “ஆடம், உனக்கு என்னை எப்படிப் பார்க்க விருப்பமோ அப்படியே பார். ஆனால் நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேள்” என்றார்.

எனக்குப் பெருங்கோபம் வந்தது. “உன் பேச்சைக் கேட்டதால் வந்த தொல்லை போதாதா?. எப்பொழுதும் அவள் நினைவாகவே இருக்கிறது. என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கவலை. எங்களுக்கு என்ன நேரும் என்ற கவலை. கவலையே இல்லாமலிருந்த நாங்கள், இப்போது ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்துக் கொண்டு கலவரப்பட்டு… நில், நீ சொன்ன மகத்துவம் இது தானா?”

பொறுமையாகப் பார்த்துவிட்டு “நான் கதவைத் திறந்தால் போதும் என்றுதான் சொன்னேன். போனது உன்னுடைய செயல்” என்றார்.

“திறந்த கதவில் ஒரு அழைப்பு இருந்தது. என்னையறியாமலேயே அப்பால் போக வேண்டும் என்று தோன்றியது” என்றேன்.

உருவம் சிரித்தது. “அது தான் மகத்துவம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது நிகழ வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தேன்”

“இப்பொழுது என்ன செய்வது? எதற்காக மறுபடி தோன்றினாய்?”

“உனக்கும் அதிதிக்கும் ஆபத்து. ஓடி விடுங்கள், உடனே, உடனே.”

எனக்கு நடுக்கமாக இருந்தது. “ஏன்? என்ன ஆபத்து?”

“எல்லாம் சரியாகி விடும். இன்றிரவே தப்பித்து எங்கேயாவது ஓடிவிடுங்கள்.”

“ஓடாவிட்டால்?”

“உங்களை உயிர்பிரி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள். உங்களிருவரையும் விட, அதிதிக்குப் பிறக்கப் போகும் உங்கள் குழந்தைக்குப் பேராபத்து. பல்லாயிரம் வருடங்களுக்குப் பின் இயற்கையாகப் பிறக்கப் போகும் முதல் மனிதக்குழந்தை. புதுச் சமுதாயம். நான் தேவையென்று நம்பப் போகும் சமுதாயம். நீங்கள் தப்பி ஓடாவிட்டால் எல்லாம் அழிந்து விடும். போ, உடனே போ.” என்றது.

குழந்தையா? கடவுளை நம்பும் புது சமுதாயமா? “நீ பித்தலாட்டக்காரன். உன்னை நம்ப ஒரு சமுதாயம் வேண்டுமென்பதற்காக எங்கள் நிம்மதியைக் குலைப்பதா? ஏன் எங்களைப் பகடையாக்கி விளையாடுகிறாய்?” என்று கோபமாக ஏசினேன். உருவம் உண்மையிலேயே கடவுள் தானா? அது ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, அங்கிருக்கப் பிடிக்காமல் திரையை நிறுத்தாமலே நகர்ந்தேன். ஒதுக்க முடிந்தது வியப்பாக இருந்தது. இதே கடவுளை முதல்முறை சந்தித்த போது என்னால் ஒதுக்க முடியவில்லை என்பது நினைவுக்கு வந்தது. கடவுளை நம்பத் தொடங்கி விட்டேனா? அதனால் தான் ஒதுக்க முடிகிறதா?

மையத்தில் சரணடைந்து விடுவோமா? வெளிவந்த இருபத்து மூன்று வருடங்களுக்குள் உயிர்பிரி என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘கடைசி நபர் இவர் தான்’ என்று அதிதியைப் பற்றிப் அனாமதேயப் புகார் கொடுத்தால் அவளை உயிர் பிரித்து விடுவார்கள். மையத்தலைவரின் உயிர்பிரி முடிந்ததும் எல்லாம் அடங்கி விடும். இதைப் பற்றித் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. பழைய நிலைக்கு வந்து விடலாம். எண்ணங்கள் விகாரமாக ஒன்றை ஒன்று துரத்தின. அதிதியைக் காட்டிக் கொடுத்து நான் தப்புவதா? இல்லை நான் சரணடைவதா? நான் சரணடைந்தாலும் அவள் சிக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?

எனக்கு உடலெங்கும் வலித்தது. என்னால் தானே அவளுக்கு ஆபத்து? அவளும் என்னைப் போல் ஏமாற்றப் பட்டவள் தானே? கடவுள் சொன்னது போல் அதிதியுடன் எங்காவது தப்பித்து ஓடிவிடலாமா? தப்பி ஓடினாலும் எங்கே போவது? எப்படி வாழ்வது? புதுச் சமுதாயமாமே? இதற்கு நானா கிடைத்தேன்? இன்னும் பத்தோ நூறோ ஆண்டுகள் பொறுத்து இன்னொரு ஆடம் கிடைத்தால் பிடித்துக் கொள்ளட்டும். ஒதுக்க நினைத்தாலும், அதிதி நினைவு வந்ததும் வேதனையாக இருந்தது. எல்லாம் சரியாகி விடுமென்றாரே, சரியாகி விடுமா? எதற்காகக் கதவைத் திறந்தேன்? எதற்காக உள்ளே சென்றேன்? என் மேல் ஆத்திரமும் கோபமும் வந்தது. புது உலகின் ஆதார நம்பிக்கைகளை அழித்து விட்டதாகத் தோன்றியது. குழம்பினேன். கடவுள் தேவையா? அதிதி தேவையா? சிக்கலற்ற வாழ்க்கை தேவையா? வெகு நேரம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

மையத்திற்குச் செய்தியனுப்பினேன். “மையத்தலைவர் கடைசியாகச் சந்தித்த நபர் யாரென்று எனக்குத் தெரியும்”. அன்றிரவு நான் அதிதியைச் சந்திக்கப் போகவில்லை. எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள் என்ற நினைவு வாட்டியது. தூங்கத் தொடங்கினேன்.

- 2010/10/01

 

தொடர்புடைய சிறுகதைகள்
மூஷிகவாகனா, முடிஞ்ச வரைக்கும் காப்பாத்துடாப்பா. ஸ்மச்ரம்னா தேவபாஷைலே மீசைனு அர்த்தம். பொம்னாட்டிகளுக்கு அந்தக்காலத்துலே மீசை உண்டாக்கும். மீசைக்குச் சின்னதா பட்டுக் குஞ்சலம் கட்டி அலங்காரம் பண்ணுவா. சர்வமும் ஒரு நா காக்கா ஊஷ்னு காணாமப் போயிடுத்து. ஸ்த்ரீகளுக்கு ஸ்மச்ரம் போன கதைதான் இன்னக்குப் ...
மேலும் கதையை படிக்க...
சுகாதாரப் பிரிவில், பூமிக்குள்ளே நூறடி ஆழத்தில் வேலை பார்த்தான் ருத்ரமூர்த்தி. பெருமை சேர்க்கவில்லை என்றாலும் முக்கியமான வேலை. கழிவு திரட்டும் வேலை. 'ஆச்சு, இந்த ஒரு பீ மூட்டையைத் தூக்கி எறிஞ்சதும் இடம் சுத்தமாயிடும்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, பயோடிக்ரெடபில் கழிவுத்தொட்டியை ...
மேலும் கதையை படிக்க...
கனவுகளின் மகிழ்ச்சியை விட, கனவுகளின் நம்பிக்கையை விட, கனவுகளின் வலி சிலருக்குப் பிடித்திருக்கிறது. என் குரோம்பேட்டை நாட்களின் அதிகம் பழகாத நண்பன் ஸ்ரீரங்கன். ஒன்பதாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் சேர்ந்தான். கரிய நிறம். களையான முகம். சம்மர் கட் என்று அந்த நாளில் ...
மேலும் கதையை படிக்க...
பேயோட்டம் பார்த்தே தீருவது என்று நான், சுரேஷ், வயலின், தேசி நால்வரும் ஓலக்காரிகளுக்குப் பின்னால் உட்கார்ந்தோம். பத்தாம் வகுப்புக் கோடை விடுமுறையின் அந்த விடலைச்செயல், எங்களை வாழ்நாள் முழுதும் துரத்தும் என்று அறியவில்லை. ஓலக்காரிகளுக்கு அப்பால் சிந்தாளம்மன் சன்னதிக்கெதிரே குழி வெட்டியிருந்தது. சுற்றி ...
மேலும் கதையை படிக்க...
வேகமாக நடந்த புங்கவர்மனைத் தொடர்ந்தாள். "மன்னா.. மன்னா" "என்னா?" "நான் சொல்வது காதில் விழாதது போலச் செல்கிறீர்களே? என் கணவருக்கு உறவோ என்று நினைத்துவிட்டேன்.. எனக்கு உதவி செய்வீர்களா?" "பெண்ணே.. அரக்கன் கணவன் காப்பாற்று போன்ற வசனங்களெல்லாம் கூத்துக்குப் பொருந்தும், சோத்துக்குப் பொருந்தாது. ஆளை விடம்மா" "உங்களால் ...
மேலும் கதையை படிக்க...
நியூஜெர்சி அருகே ஸ்டாக்டனில், ஸ்டாப் அன்ட் ஷாப்பில், வேலை பார்க்கிறேன். வாடிக்கை சேவையாளர் என்று வேலைக்கு எடுத்த போது கொடுத்த பதவி, பெயருக்குத் தான். காசாளர் வேலை, பிலாஸ்டிக்கா பேப்பரா என்று கேட்டு பொட்டலம் கட்டுவது, ஸ்டாக் ரூமில் மளிகை அடுக்குவது, காய்கறி ...
மேலும் கதையை படிக்க...
மூஷிராபாத் க்ராசிங்கில் புது அடுக்குமாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். ஒரு படா கம்பெனியின் உள்ளூர் விற்பனை அதிகாரிகளான நானும் வத்சனும் தற்காலிக ரெட்டை நகர வாசிகள். நேன்ஸ், வெங்கட் இருவரும் மெடிகல் அட்வைசர்ஸ் என்பதால் மாதத்தில் பத்து ...
மேலும் கதையை படிக்க...
திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செலவநாயகமும் - ஒரு அறிமுகம்: [+] வேர்கடலைச் சங்கத்தில் அன்றைக்கு மாலை கூட்டம் சீக்கிரமே சேரத் தொடங்கிவிட்டது. கோபன்ஹேகன் அறையில் கூட்டம் குறைவாகத் தான் இருந்தது. ஐ.டி துறையின் சமீபத்திய தேக்கமா என்னவென்று தெரியவில்லை, முப்பது பேர் பிடிக்கும் ...
மேலும் கதையை படிக்க...
ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் ஏ சர்டிபிகேட்டா எசகுபிசகா இருக்கலாம், பால்யருக்கு உசிதமில்லேனு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேனா, செவிட்டுல ரெண்டு ...
மேலும் கதையை படிக்க...
அவளுக்குக் கடந்த காலம் உண்டு; அவனுக்கும். திருமணத்துக்கு முன்னால் எத்தனை உண்மைகளைப் பகிர்ந்து கொள்வது என்பதிலல்ல தயக்கம், எவற்றை மறைப்பது என்பதில் தான். கதவைத் திறந்த விஜி, மகிழ்ச்சியுடன் வியந்தாள். அவனை எதிர்பார்க்கவில்லை. நேற்று இரவு பத்து மணிக்கு வீடு வரை துணை ...
மேலும் கதையை படிக்க...
அதர்மு மாமா
லிக
மன விலங்கு
புகை
வந்தவளை – எங்கள் சவடால் 2K+11
வாலன்டியர்
பெத்தாபுர மலர் – அறிமுகம்
மல்லி கடாட்சம்
தைவாதர்சனம்
பசுமைக்குள் சுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)