எலி மூஞ்சி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 22,283 
 

புதுச்சட்டம் வந்தபோது எல்லோரும் கூடிக்கூடி அது பற்றியே பேசினார்கள். ‘இது மனித அடிப்படை உரிமை. அரசு எப்படி இதில் தலையிடலாம். வேற்று நாடுகளில் இப்படியான புதுச்சட்டம் கிடையாதே? அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது பின்னோக்கிச் செல்கிறது. நாங்கள் போராட வேண்டும் என்றாள்’ ஒரு மாணவி. அவளுக்கு வயது பத்து. ‘நான் என்னுடைய வலைப்பூவில் எழுதுவேன்’ என்றான் ஒரு பையன். ‘ஆஹா! உன் பெயரைத் தெருவுக்குச் சூட்டுவார்கள்.’ எல்லோரும் சிரித்தார்கள். இறுதியில் நானோபேசியின் மூலம் இந்த அநியாயத்தை உலகம் முழுவதும் பரப்புவது, பேசுவது, அறிக்கைவிடுவது என்று முடிவானது. அமெரிக்க அரசு நிச்சயம் பணிந்துவிடும்.

சமந்தா இது பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை. 2029ஆம் ஆண்டு முடிய இன்னும் ஐந்தே நாட்கள் இருந்தன. அன்று அவளுக்கு 12 வயது தொடங்குகிறது. அவள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படப்போகும் நாள். இந்தச் சட்டம் அவளை ஒன்றும் செய்யாது. பார்க்கப்போனால் இது மோசமான சட்டம் என்றும் சொல்ல முடியாது. ஒருவர் தன் வாழ்நாளில் மூன்று தடவைக்கு மேல் பால் மாறக் கூடாது. அவ்வளவுதான். சமந்தாவுக்கு இரண்டு அம்மாமார். அதிலே அவளைப் பெறாத அம்மா முன்பு ஆணாக இருந்தவர். அப்போதுதான் சமந்தா பிறந்தாள். அதன் பின்னர் பெண்ணாக மாறிவிட்டார். அவளுக்கு இரண்டு அம்மா கிடைத்தது அப்படித்தான். 2029 கடைசி நாளன்று அவளைப் பெற்ற அம்மா ஆணாக மாறிவிடுவதாக அவளுக்கு வாக்கு கொடுத்திருந்தார். இரண்டு அம்மாக்களைச் சமாளித்து அவளுக்கு அலுத்துவிட்டது. 2030 பிறக்கும்போது அவளுக்கு ஒரு அப்பா, ஒரு அம்மா கிடைத்துவிடுவார்கள். ‘அப்பா அப்பா அப்பா’ என்று பலமுறை வாய்க்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.

இதற்குக் காரணம் அவளுடைய உயிர்ச் சிநேகிதி மார்ட்டிதான். வகுப்பிலே அவளுக்குப் பக்கத்தில்தான் சமந்தா உட்கார்ந்திருப்பாள். தூங்கும் நேரம் தவிர மீதி நேரமெல்லாம் அவளுடன் நானோபேசியில் தொடர்பில் இருப்பதுதான் வேலை. மார்ட்டி மிக அழகாக இருப்பாள். காலை, மதியம், மாலை நிறம் மாறும் ஆடைகளையே அணிவாள். சமந்தா மார்ட்டிபோல அழகல்ல. அவளுடைய முகம் கொஞ்சம் முன்னுக்கு நீண்டு போயிருக்கும். ஓர் அறையினுள் நுழையும்போது அவள் முகம்தான் முதலில் நுழையும். மார்ட்டியுடைய அப்பா அம்மாவின் படம் அவளுடைய நனோபேசி முகப்பை அலங்கரிக்கும். மார்ட்டியின் அப்பா மணமுடிக்கு முன்னர் ஆணாக இருந்தவர். அவருக்கு ஒரு மகவைப் பெற வேண்டும், அந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை. ஆகவே பெண்ணாக மாறி, இலவச விந்தணுத் திட்டத்தில் கருவுற்று, மார்ட்டியைப் பெற்றுவிட்டு மறுபடியும் ஆணாக மாறிவிட்டார். மார்ட்டியின் அம்மா பேருக்குத்தான் அம்மா. அவருக்குக் கர்ப்பமாவதிலோ குழந்தை பெறுவதிலோ எந்த ஆர்வமும் கிடையாது.

சமந்தாவின் ஆசிரியருடைய பெயர் ரொபர்ட்டோ. அவருக்கு ஒரு காலத்தில் எந்திரன் காதலி இருந்ததாகப் பேச்சு அடிபட்டது. இந்த உலகத்தில் பிறக்கும் ஆணோ பெண்ணோ ஒருமுறையாவது எதிர்பாலுக்கு மாற வேண்டும் என்று அவர் சொல்லுவார். அப்போதுதான் எதிர்பால் பற்றிய உண்மையான அறிவு உண்டாகும். இருவரின் உணர்வுகளும் எதிர் எதிரானவை. உலக இயல்பை முற்றிலும் உணர வேண்டுமானால் பால் மாறினால் தான் முடியும் என்பார். அவர் சொன்ன மாதிரி ஒரு நாள் திடீரென்று பெண்ணாக மாறி வகுப்புக்கு வந்தார். அவர் நடந்தபோது அவருடைய நீலநிற ஆடையும் தனியாக உயிர் பெற்றதுபோல அசைந்தது. தன் பெயர் ரிபெக்கா என்றார். என்ன அழகு? அவருடைய ஒடுங்கிய இடுப்பும் முடியும் விரிந்த தோளும் கண்வெட்டும் மாணவிகளைப் பொறாமைப்பட வைத்தன. வகுப்பிலே வாக்கெடுப்பு நடத்தியபோது 30 மாணவ மாணவிகளில் 26 பேர் அவர் பெண்ணாகவே தொடர வேண்டும் என வாக்களித்தார்கள்.

சமந்தாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும் பள்ளிக்கூடம் நடைபெற்றால் மகிழ்ச்சிதான். அவள் அம்மா காலத்தில் அப்படித்தான் இருந்ததாம். ஆனால் வாரத்தில் மூன்று நாட்கள்தான் பள்ளிக்கூடம். இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தபடியே படிக்கலாம். கணினிமூலம் ஆசிரியை பாடம் நடத்துவார். கேள்விகள் கேட்பார். பரீட்சை வைப்பார். அதிலே அவளுக்கு ஆர்வம் கிடையாது. ஆசிரியைக்குக் குறுஞ்செய்தி அனுப்புவாள். என்ன மதிப்பெண்? பதில் வரும். பேச்சு முடிந்த பின்னர்தான் கைதட்டல் எதிர்பார்க்க வேண்டும்.

அம்மா இன்னொன்றும் சொன்னார். அவர் காலத்தில் காரோட்டும் லைசென்சுக்கு 16 வயது வரை காத்திருக்க வேண்டும். இப்பொழுது 12 வயதிலேயே கிடைத்துவிடும். காரை ஓட்டவே தேவை இல்லை. போக வேண்டிய முகவரியைச் சொன்னால் அது தானாகவே கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். 2030 முதல்நாள் அவளுக்கு சூரியக் கார் கிடைக்கும்.

அவளுடைய வகுப்பில் பலரிடம் சூரியக் கார் இருந்தது. எரிபொருள் பிரச்சினை இல்லை. சுற்றுச்சூழல் மாசும் கிடையாது. சமந்தா பள்ளி தொடங்கும் நாளை எதிர்பார்த்திருந்தாள். ஆனால் அதற்கிடையில் இடிபோல ஒரு செய்தி நனோபேசியில் உலகம் எங்கும் பரவிக்கொண்டிருந்தது. தற்செயலாக அன்று காலை அதைப் பார்த்து சமந்தா திடுக்கிட்டுப் போனாள்.

அவளுடைய வகுப்பில் அவளுக்கு ஓர் எதிரி இருந்தான். அவனுக்கு இரண்டு அம்மாக்களும் ஒரு அப்பாவும். அதில் பெருமை வேறு அவனுக்கு. அவன் பெயர் நோவா. ஜலப்பிரளயம் வந்தபோது உயிர்களைக் கப்பலில் ஏற்றிக் காப்பாற்றியவன் என்று பைபிளில் ஒரு பெயர் வருமே, அதுதான். ஆனால் இவனுக்கு உயிர்களை வதைப்பதுதான் பொழுதுபோக்கு. கணிதத்தில் அவன் எப்போதும் முதலாவதாகத்தான் வந்தான். பிராந்திய அளவில் நடந்த போட்டியில் சமந்தாவும் எழுதினாள். பெண்டுலத்தின் நீளத்தைக் குறைத்தால் நேரத்துக்கு என்ன ஆகும் என அவளுக்குத் தெரிந்திருந்தது. அவனுக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான். அவளே திகைக்கும் அளவுக்கு முதலாவதாய் வெற்றி பெற்றிருந்தாள். அவன் இரண்டாவது. அவளுடைய நீண்ட முகத்தைப் பற்றிப் பையன்கள் பின்னால் கேலிசெய்வது அவளுக்குச் சாடைமாடையாகத் தெரியும். நனோபேசியில் நோவா அனுப்பிய செய்தி இதுதான். ‘பந்தயத்தில் முதலாவதாக வந்தாலும் எலி எலிதான்.’ அவளுக்கு எலும்பெல்லாம் எரிந்தது. மார்ட்டியைக் கட்டிப்பிடித்து அழ வேண்டும் போலத் தோன்றியது.

2030ஆம் ஆண்டு தொடங்கு முன்னர் தலைமையாசிரியர் தன் உரையை நனோபேசி மூலம் அனுப்பியிருந்தார். அவருடைய உரையில் பாதி அவளுக்குப் பிடித் திருந்தது. ‘பைசிக்கிளில் ஏறி உட் கார்ந்தால் நீங்கள் நகர வேண்டும், இல்லாவிட்டால் விழுந்துவிடுவீர்கள். உங்கள் வேலை நகர்ந்துகொண்டே இருப்பது. அறிவைத்தேடி. பூமி கிழக்குப் பக்கம் சுழல்கிறது. இது அறிவு அல்ல, ஒரு சிறு உண்மை. இதைத் தெரிந்து பிரயோசனமில்லை. பூமி மேற்குப் பக்கம் சுழன்றால் என்ன நடக்கும்? அப்படிச் சிந்திப்பதுதான் அறிவின் நகர்வு. உங்கள் பைசிக்கிள். ஓடிக்கொண்டேயிருக்கட்டும்.’

இதுவரைக்கும் அந்தப் பேச்சு சமந்தாவுக்குப் பிடித்திருந்தது. ஆனால் பிடிக்காதது ‘ஒரு கதவு பூட்டினால் இன்னொரு கதவு திறக்கும்’ என்று அவர் கூறியிருந்தது. இதைத்தான் 18ஆம் நூற்றாண்டிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இன்னொரு கதவு 37ஆம் மாடியில் இருப்பதை ஒருவரும் சொல்வதில்லை. அந்த மாடிக்குப் போகும் மின்தூக்கி பழுதுபட்டுவிட்டது என்ற தகவலையும் மறந்து விடுகிறார்கள். அம்மா சொல்கிறார், ‘புத்தி மட்டும் இருந்தால் பிழைக்க முடியாது. கடின உழைப்பும் அதே அளவுக்குத் தேவை’. மண் புழுவும் கடினமாகத்தான் உழைக்கிறது. கோழியின் வாய்க்குள் போவதற்கு.

நேற்றிரவு அம்மாவுக்குப் பிடித்த டைட்டானிக் திரைப்படத்தை வீட்டுத் திரையில் அம்மாவுடன் சமந்தாவும் பார்த்தாள். எத்தனை குழந்தைத் தனமான படம். கேட் வின்ஸ்லெட் அணிந்த பிரபலமான சிவப்பு ஆடையைப் பார்த்ததும் சிரிப்பு சிரிப்பாக வந்தது. தையல்காரக் குருவிகூட இன்னும் திறமாக ஆடை தைத்திருக்கும். படத்திலே உண்மையான ஆண்களும் பெண்களும் நடித்தார்கள். ஓர் ஆறு வயதுப் பிள்ளை எழுதக்கூடிய திரைக்கதை. இப்போது வெளியாகும் திரைப்படங்களின் கதைகளை ஊகிக்கவே முடியாது. எப்படித் தொடங்கும் எப்படி முடியும் என்பது புதிராகவே இருக்கும். இரண்டாம் தடவை பார்க்கும்போது கதை மாறிவிடும். மறுபடியும் புதுவிதமான முடிவு கிடைக்கும். நடிக நடிகைகள் கிடையாது. அனைத்துத் திரைப்படங்களும் எண் தொழில்நுட்பத்தில் ஒரு சின்ன அறையில் இருந்து சொற்பக் காசுக்குத் தயாரிக்கப்பட்டிருக்கும்.

வகுப்பிலே அவளுக்குப் பிடித்த இன்னொரு சிநேகிதி அனெட். அழுதபடியே இருப்பாள். ஆனால் கையிலே பாதி கடித்த சாண்ட்விச்சும் இருக்கும். அவள் டச்சுக்காரி. அவளுக்கு ஆங்கிலம் ஒரு சொல் தெரியாது. டச்சு மொழியிலேயே படித்தாள். அதிலேயே பதில் கூறினாள். பரீட்சை எழுதினாள். நனோ பேசி எல்லாவற்றையுமே ஆங்கிலத்தில் மாற்றிவிடும். ஐஸ்லாண்டிலிருந்து வந்த பெண்ணுக்கு எல்லாமே ஆச்சர்யம். சூரியனைக்கூடத் தினமும் அதிசயமாகப் பார்த்தாள். போர்ச்சுக்கல் மாணவன் ஒரு நாள் தன் தாயின் பெயரையே மறந்துவிட்டான். பல மொழி மாணவர்களும் படித்தார்கள். புது மொழி படிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் செய்துவிட்டது நனோபேசி. இதனால் பிரெஞ்சு, ஸ்பானிஷ், லத்தீன், கிரேக்கம் படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கெல்லாம் வேலை போய்விட்டது.

வாக்கு கொடுத்தபடியே 2030ஆம் வருடம் பிறந்த அன்று அவளுக்குப் புது அப்பா கிடைத்தார். ஒரு மீசைகூட வளர்ந்திருந்தது. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். அப்பாவும் அம்மாவும் ஒன்றாயிருக்கும் படத்தை நனோபேசியின் முகப்பில் பதிந்திருந்தாள். பள்ளிக்குப் புறப்பட்டபோது அவள் கையிலே புத்தகப் பை, பென்சில், பேனா, பேப்பர், புத்தகம் ஒன்றுமே கிடையாது. கையிலே இருந்ததெல்லாம் நனோபேசிதான். வாசலிலே இரண்டு இருக்கை கொண்ட சூரியக் கார் அவளுக்காகக் காத்திருந்தது. அவள் அணுகியதும் கதவு திறந்தது. ஏறி உட்கார்ந்ததும் பூட்டிக் கொண்டது. இரவு பனி தூவியிருந்தாலும் கார் சரியான வெப்பத்தில் இருந்தது. ’பள்ளிக்கூடம்’ என்று மட்டுமே சொன்னாள். அது ஓடத் தொடங்கியது. ரோட்டில் ஆயிரக்கணக்கான கார்கள் ஒன்றையொன்று துரத்தின. இரண்டு இருக்கைக் கார்கள், நாலு இருக்கைக் கார்கள், ஆறு இருக்கைக் கார்கள். எல்லாமே சூரிய ஒளியில் இயங்குபவைதாம். வேகக்கட்டுப்பாடு கிடையாது. விபத்துகள் கிடையாது. ஆகவே இருக்கைப் பட்டி கிடையாது, காற்றுப் பை கிடையாது. சந்தி விளக்குகள்கூடக் கிடையாது. ஆனால் அவ்வப்போது கார்கள் சொல்லிவைத்ததுபோலத் திடீரென்று நின்று மற்ற கார்களுக்கு வழிவிட்டன.

பாதிப் பயணத்திலே மனத்தை மாற்றி ‘மடேரா கோப்பிக் கூடம்’ என்றாள் சமந்தா. எந்தக் கோப்பிக் கூடம் என்று சொல்லவில்லை. கார் மிக அண்மையில் உள்ள ஓர் கோப்பிக் கூடத்தைத் தேர்வுசெய்து அதற்குள் நுழைந்து நின்றது. மடேரா கோப்பி மூளையைக் கூர்மைப்படுத்தும் என்று ஆராய்ச்சி சொன்னது. எத்தியோப்பியன் ஆடு மேய்க்கும் சிறுவன் 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு செடியில் இருந்த காய்களை ஆடுகள் தின்று துள்ளிவிளையாடியதைக் கண்டான். அவற்றைப் பறித்து வேகவைத்து நீரைக் குடித்த அவனும் மகிழ்ச்சியில் துள்ளினான். அதே செய்முறையில் தயாரித்த கோப்பிதான் மடேரா கோப்பி. இது உற்சாகம் தரக்கூடியது என மருத்துவக் குழு சான்று வழங்கியிருந்தது.

முதலாவது யன்னலில் ‘யூனியர் கோப்பி சுப்பீரியர்’ என்றாள். அடுத்த யன்னலில் காகிதக் குவளையில் கோப்பியைப் பெற்றுக்கொண்டு ‘நன்றி’ என்று மட்டுமே சொன்னாள். அவள் குரல் ரேகையை வைத்து அவள் கணக்கில் இருந்து பணம் அவர்கள் கணக்குக்கு மாறிவிடும். கடன் அட்டை என்பது அம்மாவின் காலத்திலேயே ஒழிந்துவிட்டது. காசுத்தாள் எப்போவோ வழக் கொழிந்துபோனது. மார்ட்டி பாதுகாத்துவைத்திருக்கும் அண்ட்ரூ ஜாக்ஸன் படம் போட்ட 20 டொலர் தாள் ஒன்றை அவள் பார்த்திருக்கிறாள். நனோபேசியில் சமந்தாவின் கைரேகை, கண்ரேகை, குரல்ரேகை, டி என் ஏ இரட்டைச் சுற்று எல்லாமே பதிவாகியிருந்தன. அதை வேறு எவரும் பாவிக்க முடியாது. அவள் குரலோ கைரேகையோ கண் ரேகையோ தான் அதை இயக்க முடியும்.

பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்ததும் கார் குறிப்பிட்ட இடத்தில் நின்றது. கதவு திறந்து அவள் இறங்கியதும் தானாகவே மூடிக்கொண்டது. ‘தரிக்கும் இடத்துக்குப் போ’ எனக் கட்டளையிட்டாள். அது நகர்ந்து தரிக்கும் இடத்துக்குப் போய்த் தன்னை நிறுத்திக்கொண்டது. வகுப்பை நோக்கி நடந்தாள். எதிரே தலைமையாசிரியர் ஜோன்ஸ் நீளக் கறுப்பு மேலங்கியில் தென்பட்டார். ‘வணக்கம்’ என்றாள். அவரும் சொன்னார். ‘அருமையான ஆரம்ப உரை’ என்றாள். அவர் ‘நன்றி’ என்று கூறிவிட்டுச் சிவப்புத் தலைமுடி துள்ள அகன்றார். போனவருடம் பச்சைத் தலைமுடி இருந்தது. இன்னும் இரண்டு மாதத்தில் அவருக்கு 75 வயதாகிறது. ஓய்வுபெற வேண்டும். நல்ல மனிதர். தான் ஓய்வு பெறும்போது பெண்ணாக மாறப்போவதாகச் சொல்லியிருந்தார். ஏன் பெண் என்று பலபேர் கேட்டிருந்தார்கள். தனிமையையும் முதுமையையும் ஒரு பெண்ணால் தான் சாதுர்யமாகக் கடக்க முடியும். ஆணுக்கு அந்தத் திறமையும் கிடையாது. பொறுமையும் இல்லை. ஆனால் பாவம் அவரால் பால் மாற முடியாது. அவர் ஏற்கனவே மூன்று தடவை பால் மாறிவிட்டார். புதுச் சட்டத்தின் பிரகாரம் மீதி நாட்களை ஆணாகவே வாழ்ந்து தொலைக்க வேண்டியதுதான்.

வகுப்பை நோக்கித் தயங்கித் தயங்கி நடந்தபோது கொஞ்சம் பயமும் அதே அளவுக்கு ஆர்வமும் இருந்தது. வயிறு உள்ளுக்கு இழுத்துக்கொண்டுவிட்டது. எலி மூஞ்சி என்று செய்தி பரப்பியவன் அங்கே இருப்பான். ஓர் அருமையான முதல் நாளை இத்தனை மோசமான தாக்கிவிட்டான். வகுப்பின் கதவுக்கு அருகில் நின்றாள். வகுப்பு தொடங்குவதற்குச் சரியாக ஒரு நிமிடம் இருந்ததைக் கதவு மணி காட்டியது. அவளுடைய மோசமான ஆரம்பத்தை மேலும் மோசமாக்கும் சம்பவம் உள்ளே காத்திருந்தது அவளுக்குத் தெரியாது. கதவு அவளுடைய கண் ரேகையைப் படித்துத் திறந்து அவளை உள்ளே விட்டது. மறுபடியும் மூடிக்கொண்டது.

வகுப்பிலே எல்லா ஆசனங்களும் நிரம்பிவிட்டன. தன்னுடைய இருக்கையை நோக்கி நகர்ந்தவள் திடுக்கிட்டு நின்றாள். அமர்வதற்கு முன்னரே ‘நீ யார்? எதற்காக இங்கே உட்கார்ந்திருக்கிறாய். இது மார்ட்டியின் இருக்கை?’ என்றாள்.

வகுப்பு முழுக்க வாய்விட்டு ஒரே குரலில் ஆவென்று சிரித்தது. அவள் முகம் சிவந்து நீண்டு எலியின் மூஞ்சிபோலவே ஆகிவிட்டிருந்தது. அந்தப் பையன் ‘என்னை மார்ட்டி என்று கூப்பிடாதே. நான் இப்போது மார்ட்டின்’ என்றான். ‘துரோகி. இத்தனை நட்பாக இருந்தும் சொல்லவே இல்லை. உனக்குக் காட்டவென்று என் பெற்றோரைப் படம்பிடித்து வந்தேன். நான் முட்டாள். நான் முட்டாள்’ என்று கத்தியபடியே தன் நனோபேசியைச் சுவரை நோக்கி வேகமாக வீசினாள். அது சுவரிலே பட்டுத் தெறித்துச் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. பின்னர் அந்தத் துண்டுகள் தாமாகவே ஒவ்வொன்றாக ஒட்டிக்கொண்டன. அவள் பார்த்துக்கொண்டிருக்க அது மெள்ள மெள்ள அவளை நோக்கி நகர்ந்து வந்தது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “எலி மூஞ்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *