ஆறாவது அறிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,789 
 

கழுத்துப் பட்டையை இறுக்கிக்கொண்டு இன்னொரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தார் டாக்டர் ராம்நாராயண். மோவாயில் நரை தொட்டு அடர்த்தியாகப் படர்ந்திருந்த தாடியையும், கொஞ்சமாக முன் பக்கம் வெற்று மண்டையைக் காட்டிவிட்டுச் சரிந்த கேசத்தையும் வாஞ்சையாகத் தடவினார். மூப்பின் அடையாளங்கள் துவங்கிய, ஆராய்ச்சி, பரிசோதனை என்று கழிந்த சுவாரஸ்யமற்ற வாழ்க்கைச் சுழற்சியில், எந்தப் பெண்ணும் ஆர்வம் காட்டாத அந்த முகத்தின் மேல் திடீரென்று பிரியம் வந்தவர் போல் பராமரித்தார்.

இன்னும் அரை மணியில் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி நிலையங்கள், செய்தி நிறுவனங்கள் என மொய்த்து புகைப்படம் எடுத்துத் தள்ளப்போகும் முகம். அவரைப் போல நரை தாடி, வழுக்கை மண்டை புத்திஜீவிகள் குழுமியிருக்கும் அரங்கங்களில் நுழைந்ததும் கரவொலி ஏற்படுத்தப் போகிற முகம்.

பல வருடங்களாக உழைத்த ஆராய்ச்சி, வெற்றி அடைந்த பரவசத்தில் பிரகாசமாக இருந்தார். அந்த வருடத்தின் மருத்துவக் கண்டுபிடிப்புகளில் முதன்மையானது அது. மூளையின் அமிக்டாலா ஜீன்களில் பொதிந் திருக்கும் ஸ்டாத்மைன் சுரப்பி கள் தூண்டும் பய உணர்வுகளை மழுங்கடித்து, பயம் என்கிற ஆதார உணர்ச்சியை ஆட்கொள்ளப்போகும் மருத் துவக் கண்டுபிடிப்பு. ஃபோபியா, ஸ்னீஸ்நோஃபெர்னியா, பர்சனாலிட்டி டிசார்டர், போஸ்ட் ட்ரௌமாட்டிக் ஸ்ட்ரெஸ் எனப் பயத்தை அடிப்படையாகக்கொண்ட மனித வியாதிகள் அத்தனையையும் களைந்து போடப்போகிற கண்டுபிடிப்பு. அதன் பின்னால், சூத்திரதாரியாய் ராம்நாராயண் என்கிற பெயர் நிற்கும்.

சிவப்புக் கம்பளம் விரிந்து, வரவேற்பு வளையங்கள் வைத்து, பூங்கொத்துகள் விநியோகிக்கப்படத் தயாராக இருந்த முகப்பு அறையைக் கடந்து, ஆராய்ச்சிக்கூடத்தின் உட்புறம் நுழைந்தார் ராம். பின்புறக் கதவைத் திறந்து ”ஹாய் ஸ்வீட்டீஸ்” என்றார், சிம்ப்பியையும் சாம்ப்பியையும் பார்த்து! கோலிக் கண்களும் கொப்பளிக்கும் விஷப் பார்வை யுமாக இரண்டும் காலை மடக்கி வைத்துக்கொண்டு விளையாடும் சுட்டிப் பயல்கள் போல் தோற்ற மளித்தன. அவரைப் பார்த்த உற்சாகத்தில், கூண்டின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு உற் சாகத்தில் குதித்தன. ஊசிக்குத்துகளையும் மின்சாரத் தாக்குதல்களையும் மாதக்கணக்காக உடம்பில் வாங்கிக்கொண்டு தங்களின் குடும்பமே மின்சாரம் தாக்கி இறந்துபோவதைப் பார்த்தபடி, மௌனமாக அவரின் ஆராய்ச்சிக்கு ஒத்துழைத்த சிம்பன்ஸிகள். பத்து வயது!

பயந்திருந்தால் பல்லைக் கடித்துக்கொண்டு, கோபமாக இருந்தால் உதடுகளை அழுத்த மாக வைத்துக்கொள்ளும் அவற் றின் உடம்பு மொழி அத்தனை யும் பழகியிருந்தது அவருக்கு. சந்தோஷமாக இருந்தால் கையைப் பிடித்துக்கொள்ளும். கட்டிப்பிடித்து முத்தம்கூடக் கொடுக்கும். சில சமயம், ஆராய்ச் சிக்கு ஒத்துழைக்காமல் முரண்டு செய்வதைக் கண்டித்தால், கீழ்த் தாடையை அசைத்தபடி வானம் பார்த்து வாயைச் சுழித்து ‘சர்தான் போடா!’ என்கிற மாதிரி வெறுப்பேற்றும். மனிதர்களைப் போலவே பாவங்கள் காட்டும் அழகு பரவசப்படுத்தும். சிலசமயம், அவர் சொல்வதைப் புரிந்துகொண்டாற் போல அவை முகபாவம் மாற்றும்போது, தற்செயலான அந்த நிகழ்வு மிகப் பொருத்தமான பதிலாகத் தோன்றுவதை வியந்திருக்கிறார்.

இரண்டும் தகவல்கள் பரிமாறிக்கொள்ளும் விதம்கூட அலாதியானது. சைகையும் சத்தங்களும் கலந்த விநோத பரிபாஷை! சில சிம்பன்ஸி குரங்குகள் தங்களுக்குள் பிரத்யேக சைகை மொழி கூட உருவாக்கிக்கொள்ளும் என்று படித்திருக்கிறார். 60 லட்சம் வருடங் களுக்கு முன்பு மனிதர்களுக்கும் குரங்கு களுக்கும் ஒரே மூதாதையர்கள் இருந் திருக்கிற சாத்தியத்தை இன்னமும் நிரூபித்துக்கொண்டு இருக்கும் இனம்.

இரண்டையும் சின்னக் குழந்தை களை கைநடத்திச் செல்கிற மாதிரி அழைத்துச் சென்றார். மீடியாக்காரர்கள் முன் இன்னொரு முறை பரிசோதனைக்கு உடன்படப்போகிற குரங்குகள். இன்றைக்குப் பிறகு, இந்தத் தொல்லைகளிலிருந்து அவற்றுக்கு விடுதலை கிடைக்கும்.

நேரம் செல்லச் செல்ல, அந்த இடம் சுறுசுறுப்பானது. சிப்பந்திகள் பரிமாறிய சீமைச் சாராயத்தின் மென்மையான கிறக்கம் கலையாதபடிக்கு சன்னமான சாக்ஸபோன் சங்கீதம் வழிந்தது. ஆராய்ச்சிக்கு உதவிய நிறுவனம் குறித்தும், டாக்டர் ராம்நாராயண் குறித்தும், கண்டுபிடிப்பு பற்றியும் குறிப்புகள் அடங்கிய கையேட்டில் ராம் சிரித்துக்கொண்டு இருந்தார். நிறுவன உயரதிகாரிகள் வந்திறங்கி, ராம்நாராயணை வலிக்க வலிக்கக் கைகுலுக்கி உரையாடினார்கள். டி.வி. கேமராக்கள் கோணம் பார்த்து நின்றன. ராம்நாராயண் எல்லோரிடமும் ஒரே மாதிரியாகப் பதில் சொல்லிக் களைத்திருந்தார். சலசலப்பு ஓய்ந்து நிகழ்ச்சி ஆரம்பித்தது.

”மனித இனத்தின் மனோவியல் நடத்தையையே இந்தக் கண்டுபிடிப்பு மாற்றியமைக்கப்போகிறது. பயம் என்கிற உணர்ச்சி நமது அன்றாட வாழ்க்கை யின் பெரும்பாலான நடவடிக்கைகளைப் பாதிக்கிறது. அப்பா மேல் பயம், ஆசிரியர் மேல் பயம், பரீட்சை பயம், போலீஸ்காரன் மேல் பயம், ரவுடி மேல் பயம், உயர் அதிகாரி மேல் பயம், இவை எல்லாவற்றையும் தாண்டி மரண பயம்! மூளையில் சுரக்கும் ஸ்டாத்மைன் சுரப்பிகளே மனிதனின் ஜீன்களுக்குள் பொதிந் திருக்கும் பயத்துக்குக் கார ணம். இந்தப் பயத்தை மொத்தமாக அழிக்கப்போகிறது இந்த மருந்து!

உயிரினங்களின் ஜீன் களிலேயே பொதிந்திருக்கும் பயங்கள் ஒருவகை. எலிக்குப் பூனை மீதும் மானுக்குப் புலி மீதும் உள்ளது போன்ற ஆதார பயங்கள். அடுத்தது கற்பிக்கப்படுகிற பயங்கள். பேய், பிசாசு பயம், கடவுள் பயம். இவை அத்தனையையும் உருவாக்குவது மூளையின் இடுக்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஸ்டாத்மைன். அந்தச் சுரப்பிகளை வருடக்கணக் கான ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்தது எங்கள் முதல் சாதனை. அந்தச் சுரப்பிகளை முடக்கி பய உணர்ச்சியைப் போக்கும் மருந்தை உருவாக்கியது இரண்டாவது சாதனை. பயத்தின் காரணமாக உருவாகும் வியாதிகள், உடல்நிலை மாற்றங்கள் அத்தனைக்கும் இந்தக் கண்டுபிடிப்பில் உருவாக் கப்படும் மருந்து தீர்வு காணும்!”

மூச்சு வாங்க விளக்கிய பின் ஓய்ந்த ராம்நாரா யணைக் கரவொலி சுவா சப்படுத்தியது. அயனாவரத்தின் குறுகலான சந்துகள் ஒடுங்கியிருந்த நோஞ்சான் வீட்டில் அதிகம் கவனிக்கப்படாத பிரஜையாக ஆரம்பித்து, மருந்து கம்பெனி குமாஸ்தா அப்பாவின் ஆசைப்படி மருத்துவம் படித்து, லண்டன், கொலராடோ, பாஸ்டன், கனடா என்று வெளியூர் பல்கலைக்கழகங்களாகப் பயணித்து, பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், டி.என்.ஏ ரிப்ளிக்கேஷன், ஜீன் தெரபி, மாலிக்குலர் பேதாலஜி என்று ஆராய்ச்சிகளாகத் துரத்திய ஐம்பது வயதைத் தாண்டி, தனியனாக, புத்தகங்களே துணையாய் தொடரும் அயர்வான வாழ்க்கையில் விழுந்த திருப்பம்!

”இதோ, இந்தக் குரங்குகளுக்குப் பயத்தை உண்டுபண்ண நாங்கள் பயன்படுத்தியது மின்சாரத் தாக்குதல். கூண்டில் சிவப்பு ஒளியைப் பரப்பி, அதன் உள்ளே இருக்கும் இரும்புத் தூணில் மிதமாக மின்சாரம் பாய்ச்சுவோம். கூடவே, ஒரு குறிப்பிட்ட ஓசை ஒலிக்கும். ஆரம்பத்தில், மின்சாரம் பாய்ச்சியது தெரியாமல், குரங்குகள் அந்தத் தூணின் மேலே ஏறப்போகையில், மின்சாரம் தாக்கித் தூக்கியெறியப்பட்டன. நாளாக நாளாக, சிவப்பு ஒளியும் குறிப்பிட்ட ஓசையும் மின்சாரத் தாக்குதல் குறித்த பய உணர்வை ஏற்படுத்திவிடுவதால், அதன்பின் அவை அந்தத் தூணுக்கு அரு கிலேயே போகாது. ஆனால், இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள்…”

ராம்நாராயண் சொல்லி முடிக்க, மெல்லிய சிவப்பு ஒளி பரவியது. பீப் பீப் என்கிற இதயத் துடிப்புக்கு இணை யான ஓசை மெள்ள மெள்ள உயர்ந்து, அறையை நிரப்பியது. உற்சாகமாகக் குதித்துக்கொண்டு இருந்த இரண்டு சிம்பன்ஸிகளும் மெள்ள தூணைவிட்டு விலகின. கூண்டின் மூலையில் ஒடுங்கி நின்று, சிவப்பு ஒளி பட்டுச் சிதறும் இரும்புத் தூணை மிரட்சியாகப் பார்த்தபடி நின்றன. சிறிது நேரத்தில் சிவப்பு ஒளி மங்கி, பளிச்சென்ற ஒளியால் கூண்டு சகஜ நிலைக்கு வர, அதற்காகவே காத்திருந்தாற்போல் ஓடிச் சென்று தூணைப் பற்றிச் சரசரவென்று அதன் மேல் ஏறின. துள்ளலாட்டம் மறுபடி தொடர்ந்தது.

ராம் கூட்டத்தைப் பார்த்துத் தொடர்ந்தார்… ”இந்த சிம்பன்ஸிகளுக்கு ஸ்டாத்மைனை முடக்கி மழுங்கடிக்கும் எங்கள் கண்டுபிடிப்பு மருந்து ஊசி மூலம் ஏற்றப்படும். அதன் விளைவைப் பாருங்கள்!”

சிப்பந்திகள் நான்கு பேர் உள்ளே நுழைந்து சிம்பன்ஸிகளைப் பிடித்துக்கொண்டு, அவற்றுக்கு மருந்து ஏற்றுவதைப் பார்வையாளர்கள் ரகசியமாகப் பேசியபடி பார்த்தார்கள். மருந்து வேலை செய்யும் வரை கூட்டத்தினருக்குத் தன் ஆராய்ச்சி குறித்த விவரங்களை எடுத்துச்சொன்னபடி இருந்தார் ராம்.

மருந்து ஏற்றப்பட்ட இரண்டும் வழக்கத்துக்கு மாறான உற்சாகத்துடன் குதித்தன. சிப்பந்திகள் விசையைத் தட்டிவிட, பீப் பீப் ஒலி மெல்லி யதாக ஆரம்பித்து, படிப்படியாக உயர்ந்தது. சிவப்பு விளக்கு பரவியது. ஆனால், அதன் பாதிப்பு துளியும் இன்றி, அவை தங்கள் துள்ளலைத் தொடர்ந்தன. எந்தப் பயமும் இன்றி இரும்புத் தூணைப் பற்றி ஏறி, தாவி கம்பியைப் பிடித்து ஊஞ்சலாடின. கைகளை விடுவித்துக் கீழே விழுந்தன. கரணம் அடித்தன.

”இதனால் ஏற்படப்போகிற பயன்கள் ஏராளம். மனோவியல் கோளாறுகளே நம்முள் இருக்காது. மனிதன் இன்னும் எளிமையாக ஆளப்படக்கூடியவனாக மாறிவிடுவான். விளையாட்டு வீரர்கள் இன்னும் அதிக அளவில் திறம்பட விளையாடுவார்கள். ராணுவ வீரர்கள் இன்னும் துணிச்சலோடு சண்டையிடுவார்கள்!

ஆறு வருட ஆராய்ச்சி. நூலிழை போல ஒரு மருத்துவ உண்மையைப் பற்றிக்கொண்டு அதன் ஆதாரத்தைத் தேடித் தேடிப் பரிசோதனை செய்து, எத்தனையோ தாற்காலிகத் தடைகள், வலிகள், இழப்புகள், தோல்விகள்… அவற்றினிடையே கிடைத்த சின்னச் சின்ன வெற்றி களின் வழித்தடத்தில் அடைந்த இலக்கு!” ராம் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

”டாக்டர், இந்த ஆராய்ச்சிக்காக நீங்கள் மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகளைப் பற்றிச் சொல்லுங்கள்…”

”இந்த மருந்து உடல்ரீதியான விளைவுகளை அளக்கக் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. மனரீதியாக ஏற்படும் விளைவுகளைப் பரி சோதிப்பது. சிம்பன்ஸி குரங்குகள் மனிதனுக்கு இணையானவை. உடல் அமைப்பில் மட்டுமின்றி, மனித மூளைக்கு எட்டும் குணாதிசயங்களை இவை வெளிப்படுத்துகின்றன. சிம்பன்ஸி குரங்குகள் மனிதனுக்கு இணையாண மூளை வளர்ச்சி கொண்டவை என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக்கழகத்தில் குரங்குகளை ஒரு பிரிவாகவும் மாணவர்களை இன்னொரு பிரிவாகவும் வைத்து நடத்திய நினைவாற்றல் சோதனையில், குரங்குகளே அதிக ஞாபகசக்தியுடன் விரைவாக விடைகள் தந்தன. மனிதர்கள் வெளிப்படுத்தும் கோபம், சந்தோஷம், சோகம், பயம் என்பது போன்ற ஆதார உணர்ச்சிகளைக் குரங்குகள் இயல்பாகவும் எளிதாகவும் வெளிப்படுத்துகின்றன. அதனாலேயே நாங்கள் சிம்பன்ஸி குரங்குகளை எங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினோம்…”

”இம்மாதிரி பரிசோதனை களில் விலங்குகள் பல குரூரமாக இறந்துபோவது உண்டே! அதுபோல உங்கள் பரிசோத னையிலும்…” குறுக்கிட்டது அந்தச் சங்கடமான கேள்வி.

”உயிர் இழப்புகள் நடந்தன என்பதை நான் மறுக்கவில்லை. எனினும், இது தவிர்க்க முடியாதது. பரிசோதனைக்கு விலங்குகளை உட்படுத்துவதன் காரணமே அதுதானே? இல்லை எனில் மனிதனையே நேரடியாகப் பரிசோதனைக்கு உள்ளாக்கி விடலாமே?”

”மனிதனுக்கு இணையான குணாதிசயங்களைக்கொண்ட சிம்பன்ஸி குரங்குகளைப் பரிசோத னைக்கு உட்படுத்திக் கொல்வது கூட மனிதர்களையே கொல்வ தற்குச் சமம்தானே?”

”ஆராய்ச்சியின் நம்பகத்தன் மைக்கு அது அவசியமாகிறது.. இந்த உயிர் இழப்புகள் மூலம் எவ்வளவோ மனித உயிர்கள் காப்பாற்றப்படப் போகின்றன. அந்தப் பெரிய நன்மைக்கு ஒரு சிறிய, அத்தியாவசியமான விலை இது. வேறு வழி இல்லை. அதில் யாருக்கும் எந்த இழப்புமில்லை!”

”சரி, உங்கள் பரிசோதனையில் எவ்வளவு குரங்குகள் இறந் தன?” பிடிவாதமாகக் கேள்வி களைத் தொடர்ந்து கேட்ட, கண்ணாடி அணிந்த, பொதுவாக எல்லாவற்றுக்குமே கோபப்படுகிற மாதிரி தெரிந்த அந்தப் பெண்மணியை எல்லோரும் கவனித்தார்கள்.

”நான்கைந்து இருக்கலாம். மூளையில் செல்களின் இயக் கத்தைக் கட்டுப்படுத்தும் நோக் கத்தோடு பரீட்சார்த்த முறையில் தயாரிக்கப்படும் மருந்துக்குச் சில சமயம் எதிர்விளைவுகள் தோன்றும். அப்படி ஒன்றிரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. மென்மையாக ஷாக் ஏற்படுத்துகிற முயற்சியில் ஒன்றிரண்டு முறை தவறுதலாக அதிக மின்சாரம் பாய்ந்து சில குரங்குகள் இறந்துபோயின!”

”என்ன இப்படி அலட்சியமாகச் சொல்கிறீர்கள் டாக்டர்? மனிதர்களுக்குத் தரப்படுகிற சுதந்திரத்தை மிருகங்களுக்கு மட்டும் ஏன் அளிக்க மறுக்கிறீர்கள்? மிருகங்களின் உயிர் என்றால் அத்தனை மலிவா?” கோபமாகக் கேட்ட பெண்மணியை உஷ்ணமாகப் பார்த்தார் ராம்.

”விலங்குகளைப் பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து நிறைய சர்ச்சை இருக்கிறது. அவற்றை விவாதிப்பதற்கு ஏற்ற மேடை அல்ல இது. அந்தத் தார்மிக விவாதத்தில் இறங்கி, இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது!”

தொடர்ந்த மென்மையான கேள்வி களுக்கு, கொஞ்சம் மட்டுப்பட்ட உற்சாகத்துடன் பதில் சொன்னார் ராம். தூக்கி எறியப்பட்டுச் சுவரில் மோதி விழுந்த சிம்பன்ஸி குரங்கின் க்ஷீண முனகலும், மற்ற சிம்பன்ஸி குட்டிகளின் கிறீச்சிடலும் தலைக்குள் ஒலிக்க… கோட்டு சூட்டு கனவான்கள் வரவேற்க, சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து போய், பெருமிதத்தோடு பரிசைப் பெறும் பிம்பமும் மனதில் எழுந்தது.

ஷாம்பெயின் பாட்டில்கள் தீர்ந்தன. கூட்டத்தினர் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்தனர். நிறுவன அதிகாரிகள் வெற்றிக் களிப்பு அடங்கி, லாப நஷ்டக் கணக்கு பேசியபடி காரில் விரைந்தார்கள். தோரணங்களும் பூக்கள் அலங்காரமும் மௌனமாகப் பளிச்சிட்டன. ராம், நிறையச் சிரித்த களைப்போடும் பூரண மன நிறைவோடும் கிளம்ப யத்தனித்தார். அந்தப் பெண்மணி எழுப்பிய கேள்விகள் நெருடலாகப் பின்தொடர, கார் கதவைத் திறந்து பின்னிருக்கையில் சரிந்தார். குளிர் காற்று இதமாகப் பரவ, மெள்ளக் கண்ணயர்ந்தார் ராம்.

ஆராய்ச்சிக்கூடம் ஆர வாரம் அடங்கி, முற்றுமாய் மௌனமானது. சிம்ப்பியும் சாம்ப்பியும் நடுவில் வைக்கப்பட்டிருந்த வாழைப்பழக் கூடையின் இடையில் அமர்ந்திருந்தன.

”மருந்து குடுத்தவுடனே ஷாக் அடிக்கிற பயம் இல்லாதது மாதிரி நடிக்கலாம், கிழவன் ஏமாந்துடுவான்னு சொன்னேனே… சரியாயிடுச்சா?” என்று சிரித்தது சிம்ப்பி.

”ஊரைக் கூட்டிக் கொண்டாடிட்டான். மருந்து வேலை செய்யலைனு வெட்டவெளிச்சமானதும், வகையா கல்லடி வாங்கப் போறான் வழுக்கைத் தலையன்!” தாவிக் குதித்துப் பல்லிளித்தது சாம்ப்பி.

– 12th மார்ச் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *