மல்லிகா அக்கா

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 74,622 
 

“டீச்சர்… நான் சொல்றதை யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. சத்தியமா உண்மையைத்தான் சொல்றேன். எங்கம்மா எப்பவுமே உண்மைதான் பேசணும்னு சொல்லி இருக்காங்க. நீங்க இதுவரைக்கும் பொய்யே பேசலைன்னாதான் நான் சொல்றத நம்புவீங்க.

அய்யம்பேட்டைதான் எங்க ஊரு. குடமுருட்டி ஆத்துல சுழிச்சுக்கிட்டு ஓடுற தண்ணி, படித்துறை அரச மரத்தடிப் பிள்ளையாரு, அவரு தலைல எப்பவுமே இருக்குற மஞ்ச கலர் ஊதாங்குழல் பூ, சுடுகாட்டுக்குப் போற பாதை ஓரத்துல வேலிக் கொடியில தொங்கற கோவக்கா, செவப்பா தாமரையும் வெள்ளையா அல்லியும் பூத்திருக்குற மொதலைக் குளம்… இதல்லாம் நீங்க பாத்தீங்கன்னா, ஒங்களுக்கும் எங்க ஊரை ரொம்பப் புடிக்கும்.

மல்லிகா அக்காநானு, அம்மா, அப்பா மூணு பேர் மட்டும்தான். அப்பாவுக்குப் பொடவை வியாபாரம். அய்யம்பேட்டையைச் சுத்தி இருக்குற ஊருகள்ல பொடவை நெய்யறவங்க நெறையப் பேர் இருக்காங்க. அப்பா அவங்ககிட்ட போய், புதுசு புதுசாப் பொடவை வாங்கிட்டு வந்து, சென்னைக்கும் மதுரைக்கும் எடுத்துட்டுப்போய் வித்துட்டு வருவாரு.

அப்பா சைடுல ஒறவுக்காரங்க இல்ல. அம்மா சைடுலயும் மாமா மட்டும்தான். மாமாவும் அய்யம்பேட்டைலதான் இருந்தாரு. மாமா அப்பப்ப என்னைப் பாக்க வீட்டுக்கு வருவாரு. தஞ்சாவூருக்குக் கூட்டிட் டுப் போய் ரோஸ் மில்க், மவுத் ஆர்கன்லாம் வாங்கித் தருவாரு.

எங்க வீடு மேட்டுத் தெருவுல இருந்தது. வாசல் திண்ணைல உக்காந்து போற வர்ற வண்டிங்களை வேடிக்கை பார்ப்பேன். திண்ணைக்கு அப்புறம் நடை. வீட்டுக்குள்ள பெரிய கூடம். கூடத்தை ஒட்டுனா மாதிரி முத்தம் இருக்கும். கூடத்து நெழல்ல உக்காந்துக்கிட்டு வானத்துல ‘கா… கா’னு கத்திட்டே எங்க வீட்டைத் தாண்டிப் போற காக்காவைப் பாக்கலாம். ஒண்ணு மேல ஒண்ணா இடிச்சிட்டுப் போற மேகங்களைப் பாக்கலாம். கும்பலாக் கொக்குக் கூட்டம் பறந்து போறதைப் பாக்கலாம். கொக்குங்களைப் பாத்தா நான் ஒடனே கை நகங்களை ஒண்ணோட ஒண்ணாத் தேச்சிக்கிட்டு, ‘கொக் கொக் பாலாட, கோழிக் குஞ்சுப் பாலாட… எங்க வூட்ல பூப்போடு, அடுத்த வூட்ல கல் போடு…’னு சொல்லிட்டே இருப்பேன். கை நகங்கள்ல ஒண்ணுத்துலயாவது கொக்குங்க வெள்ளையா பூவைப் போட்டுட்டுப் போயிருக்கும்.

ஒரு நாள் அம்மா நான் சொல்றதக் கேட்டுட்டாங்க. ‘ராஜு… அதென்னாது… அடுத்த வீட்ல கல்லைப் போடுனு சொல்லிட்டு. தப்புப்பா. அடுத்த வூட்லயும் பூவைப் போடச் சொல்லு…’னு சொன்னாங்க.

‘ஃப்ரெண்ட்ஸ் இப்படித்தான் சொல்லித் தந்தாங்கம்மா. இனிமே, அடுத்த வூட்லயும் பூப் போடச் சொல்றேன்’னேன். அம்மா கன்னத்துல தட்டிக் கொடுத்தாங்க.

எங்க வீட்டுப் பூஜை ரூம்லதான் அந்த விஷயம் நடந்தது. பூஜை ரூம்ல நான்தான் வெளக்கு ஏத்துவேன். அம்மா அந்த நேரத்துல கூடத்துல பட்டு நூல்ல சிக்கெடுத்துட்டு இருப்பாங்க.

தெனம் சாயங்காலம் வெளையாடிட்டு வீட்டுக்கு வருவேன். முத்தத்துல கை, காலைக் கழுவிக்கிட்டு சமையல் மேடைல அம்மா போட்டுவெச்சிருக்கிற காபியைக் குடிச்சிட்டு, பூஜை ரூமுக்குப் போவேன். அதுக்கு உள் பக்கமாத் தொறக்கற மாதிரி ரெட்டைக் கதவு இருக்கும். நேர் எதிர்ல மாடத்துல சாமி படம். பக்கத்துல அகல், ஊதுவத்தி பாக்கெட், சாம்பிராணி, கற்பூரம் போட்டு வெச்சிருக்கிற டப்பா எல்லாம் இருக்கும்.

அகல்ல எண்ணெய் ஊத்துவேன். திரியைச் சுத்தம் பண்ணுவேன். தீக்குச்சில ‘சிர்ரக்’ங்கிற சத்தத்தோட நெருப்பு வந்தவுடனே, இவ்ளோ நேரம் அந்தக் குச்சில ஒளிஞ்சிட்டு இருந்த நெருப்பை அதிசயமாப் பாத்தபடி வெளக்கை ஏத்துவேன். அன்னைக்கும் அப்படித்தான்.

வெளக்கை ஏத்திட்டு சாமி கும்பிட்டேன். திரும்புனேன். சோத்துக் கைக் கதவுக்குப் பின்னால சுவர் ஓரமா இருட்ல அந்த அக்கா கன்னங்கரேல்னு நின்னுட்டு இருந்தது. கறுப்பா, நீளமா முடி முன்னால வந்து விழுந்திருந்தது. அக்கா உடம்புல துணியே இல்ல… ஷேம் ஷேமா நின்னுட்டு இருந்தது. அகலமா வெள்ளை வெளேர்னு கண்ணு. அதுல கறுப்புப் பளிங்கி. அந்தப் பளபள கண்ல ஆசையோட என்னைப் பாத்தது. அக்கா ஒடம்பு முழுக்க அங்கங்கே தடித்தடியா தோல் வீங்கியிருந்தது.

‘ராஜு… வாடா… கண்ணா வாடா. அக்காகிட்ட வாடா’னு கூப்புட்டது.

‘நீ ஏன் ஷேம் ஷேமா நிக்கறே?’

‘துணி பட்டா ஒடம்பெல்லாம் எரியுதுடா கண்ணா… ஒனக்கொரு முத்தம் குடுக்கணும்போல இருக்கு. வாடா ராஜா…’னு அக்கா கையை நீட்டிச்சி.

மல்லிகா அக்கா2‘ம்ஹூம்… அம்மா திட்டுவாங்க’னு சொல்லிட்டே அக்கா கைக்கு ஆப்புடாம வளைஞ்சி வெளியே ஓடி வந்துட்டேன். அக்காவைத் தாண்டி வர்றப்ப கும்முனு மல்லிப்பூ வாசனை. அந்த மாதிரி வாசனையை நான் அதுவரைக்கும் மோந்ததே இல்ல.

வெளிய வந்தவுடனே அம்மாகிட்ட, அக்காவைப் பத்திச் சொன்னேன். அம்மாவோட மூஞ்சில பயம்.

‘எங்க… வா போய்ப் பாக்கலாம்.’

அம்மாவும் நானும் பூஜை ரூமுக்குள்ள போனோம். அம்மா ‘கொள்ளிவாய்ப் பேய்களும் குரளைப் பிசாசுகளும், பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட’னு முணுமுணுத்துட்டே வந்தாங்க.

கதவுக்குப் பின்னால அக்கா இல்ல. மல்லிப்பூ வாசனைதான் இருந்தது. அம்மாவுக்கு அந்த வாசனைகூடத் தெரியல.

அதுக்கப்புறம் அக்கா ரெண்டு மூணு தடவை என் கண்ல பட்டாங்க. ஒரு தடவை வீட்டுக்குப் பூசாரி வந்தாரு.

‘அடடா… இந்த வீட்டுக்காம்மா வாடகைக்கு வந்தீங்க? இங்க மின்னால, பன்னெண்டு வயசுல மல்லிகானு ஒரு வேலக்காரப் பொண்ணு வேல பாத்துச்சு. தீரா சரும நோவு வந்து, திடீர்னு ஒரு நா உத்தரத்துல கயித்தை மாட்டித் தொங்கிட்டது. ப்ச்… தம்பி… ராஜு… அடுத்த தடவை அக்கா ஒன் கண்ல பட்டா நான் சொல்லிக் குடுக்கற சேதியை அதுங்கிட்ட கேக்கறியா?’

‘அக்கா… ஒனக்கு என்ன வேணும்? என்ன பண்ணா நீ இங்கேர்ந்து போவே?’

அக்கா கொஞ்ச நேரம் அழுதது.

‘நீயே வந்து கேக்கறதால போறேன்டா. நாட்டுக் கோழிக் கொழம்பும், சோறும், ஆத்து மீன் வறுவலும் பண்ணி என்னை அடக்கம் பண்ண எடத்துல வந்து படைக்கச் சொல்லுடா…’னு கண்ல தண்ணியோட சொல்லிச்சி.

எனக்கும் கண்ல தண்ணி வந்தது. அக்காகிட்ட பயமில்லாமப் போனேன்.

‘முத்தம் குடுக்கணும்னு ஆசைப்பட்டியே. குடுக்கா…’

அக்கா என்னை வாரி எடுத்து கன்னத்துல முத்தம் குடுத்தது.

சுடுகாட்டுல அக்காவைப் பொதைச்ச எடத்துல மேடா இருந்தது. அதும் முன்னால பெரிய வாழை எலை போட்டு எல்லாம் படைச்சோம்.

அதுக்கப்புறம் அக்கா கண்ல படலை. கொஞ்சம் கஷ்டமாக்கூட இருந்தது. எவ்ளோ நல்ல அக்கா. அதைப் போய் இந்த வீட்டைவிட்டுப் போகச் சொல்லிட்டோமேனு இருந்தது.

ஒரு நாளு அப்பாவும் அம்மாவும் தஞ்சாவூர்ல நெலம் வாங்கறதுக்காகக் கௌம்புனாங்க.

பள்ளிக்கூடம் முடிஞ்சவுடனே மாமா வீட்டுக் குப் போய் இருக்கச் சொன்னாங்க. சரின்னேன். மாமாவோட பசங்க சுகந்தியும் குமாரும் ஃபிரண்ட்ஸ்! கண்ணாமூச்சி ஆடுவோம். ஒளிச்சி வச்சி ட்ரெஷர் ஹன்ட் ஆடுவோம்.

அன்னிக்கும் அப்படித்தான் வெளையாடிட்டு இருந்தோம். திடீர்னு மாமா ஓடி வந்து அழுதாரு. அத்தையும் ‘ஐயோ… ஐயோ’னு அழுதாங்க. ‘என்ன மாமா..? என்ன மாமா?”னு கேட்டுட்டு நானும் அழுதேன்.

”அப்பாவும் அம்மாவும் போன பஸ்ஸு ஆக்ஸிடென்ட் ஆயி…’

அப்புறம் மாமா வீட்லதான் சோறு சாப்புட ஆரம்பிச்சேன். அப்பாவும் அம்மாவும் சாமிகிட்ட போனப்புறம், மாமா கும்பகோணம்,

தஞ்சாவூர்னு போனா எனக்காக அல்வால்லாம் வாங்கிட்டு வருவாரு. நான் கிள்ளிக் கிள்ளிச் சாப்பிடறதை அழுதுட்டே பாப்பாரு.

‘ஏன் மாமா அழறீங்க?’னு கேப்பேன். ‘ஒண்ணுமில்ல கண்ணு… சாப்புடு’ம்பாரு.

ஆனா, மாமாவுக்கும் வயசாய்டுச்சி போலருக்கு. திடீர்னு ஒரு நாள் படுத்துட்டாரு. ப்ரெயின் ஃபீவர்னு ஏதோ அட்டாக் பண்ணியிருக்கறதாச் சொன்னாங்க.

அத்தை ரொம்ப மோசம். மாமாவுக்கு மருந்துகூட சரியாக் குடுக்க மாட்டாங்க. ஸ்டூல் மேல டொக்குனு வெப்பாங்க.

‘மருந்தைக் கொட்டிக்கறது’னு சொல்லிட்டுப் போவாங்க. நான் ஸ்கூல் விட்டவுடனே மாமா ரூமுக்குப் போய்டுவேன். பக்கத்திலேயே உக்கார்ந்திருப்பேன். டயத்துக்கு மருந்து எடுத்துக் கொடுப்பேன். ராத்திரி சாப்பாடுகூட மிஸ் ஆயிடும். போனாப் போவுதுனு விட்டுடுவேன். வயித்தை எலி சுரண்டற மாதிரி இருக்கும்.

ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சிடுவேன். அப்படித்தான் ஒரு ராத்திரி தண்ணி குடிச்சிட்டு இருந்தேன். ‘ராஜு’னு யாரோ கூப்பிடற மாதிரி இருந்தது. பயந்துட்டேன். அப்புறம் பாத்தா மாமாதான் கூப்பிட்டிருக்காரு.

‘என்ன மாமா?’னு கேட்டா, பதில் சொல்லாம என்னைப் பாத்து சின்னப் பிள்ளைங்க மாதிரி தேம்பித் தேம்பி அழுதாரு.

‘சொல்லுங்க மாமா… எனக்கும் அழ வந்துடும்”னேன். கண்ல தண்ணி வந்திடுச்சி.

”நான் சாமிகிட்ட போப்போறேன் கண்ணா… அப்பா, அம்மாவை எல்லாம் பாக்கப் போறேன். நீ சின்னப் பையன். நீ வந்தா சாமி வேண்டாம்னு சொல்லிடுவாரு. அத்தை அடிச்சா அழாதே. மாமா பக்கத்திலயே இருக்கேன்னு நெனைச்சுக்கோ. ராத்திரி நீ சாப்பிடலை இல்லே?’

‘மறந்துட்டேன் மாமா…’

‘ராட்சஸி!’ – மாமா பல்லைக் கடிக்கற சத்தம் மட்டும் கேட்டுது.

அன்னைக்கு ராத்திரி பேசினதுதான் கடைசி. அப்புறம் அத்தை அழுதாங்க. இன்னும் யார் யாரோ வந்து அழுதாங்க.

பத்து நாள் கழிச்சி நாங்க மறுபடி ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சோம். சுகந்தியையும் குமாரையும் ஸ்கூல் பஸ் வந்து ஏத்திக்கிட்டுப் போவும்.

நான் பக்கத்திலேயே வேற ஸ்கூலுக்குப் போவேன். நானும் முதல்ல சுகந்தியும் குமாரும் படிச்ச ஸ்கூல்லதான் படிச்சேன். ஆனா, அத்தைதான் என்னை இங்கே கொண்டுவந்து சேத்துட்டாங்க.

‘போனாப் போவுது போ. இங்க மத்தியானம் சாப்பாடு வேற கெடைக்குது. இங்கேயே இருந்துடலாம்’னு சமாதானப்படுத்திக்கிட்டேன்.

அப்பா, அம்மா, மாமா யாருமே இல்லைனு ஆனப்புறம் அத்தை ரொம்ப மோசமா மாறிட்டாங்க.

காலைல வீடு பெருக்கச் சொல்லுவாங்க. பாத்திரம்எல்லாம் தேய்க்கச் சொல்லுவாங்க. சுகந்தியும் குமாரும் குளிச்சப்புறம் அவங்களுக்கு டிரெஸ்லாம் எடுத்துக் கொடுக்கணும். டைனிங் டேபிள்ல தட்டு வெச்சி டிபன் போடணும்.

எல்லா வேலையும் முடிச்சிட்டு ஆறிப்போன டிபன் மிச்சம் இருந்தா சாப்டுட்டு ஸ்கூலுக்குப் போயிடுவேன். என் பழைய யூனிஃபார்ம்ல முட்டிக்குக் கீழே நூல் நூலாப் பிரிஞ்சுபோய் இருந்தது. அத்தைகிட்ட சொல்லலை. பயமாயிருந்தது.

ஒரு நாள்… சுகந்தியும் குமாரும் வெளையாடப் போனாங்க. எனக்குக்கூட முன்ன மாதிரி அவங்ககூட சேர்ந்து வெளையாடணும்னு ஆசை.

‘டேய் குமார்… நானும் வரேன்டா. என்னையும் சேத்துக்குங்கடா’ன்னேன்.

குமார் திரும்பி மொறைச்சான். கிடுகிடுனு ஓடி வந்தான்.

‘இன்னொரு தடவை ‘டேய்… கீய்…’னு சொன்னே… பல்லைப் பேத்துடுவேன்!’னு கன்னத்துல கிள்ளினான். ரெண்டு நகமும் விழுந்து சதை பேந்துடிச்சி. ரத்தம் வந்தது.

‘என்ன மாமா, இப்படி எல்லாரும் விட்டுட்டுப் போயிட்டீங்களே… என்னை இப்படி அடிக்கறாங்களே மாமா… கிள்றாங்களே மாமா… என்னைக் காப்பாத்துங்க மாமா’னு அன்னைக்குச் சாயங்காலம் அழுதேன்.

எங்கே போய் அழுதேங்கறீங்க?

சுடுகாட்டுல மாமாவோட ஒடம்பை எரிச்ச எடத்துக்குப் போய் அழுதேன். சுடுகாடு மாமா வீட்லேர்ந்து கிட்டக்க இருந்தது. அங்கதான் மல்லிகா அக்காவை அடக்கம் பண்ண எடமும் இருந்தது.

அப்ப இருட்ட ஆரம்பிச்சிருந்தது. காத்து வேற அடிச்சது. மரத்துல இருக்கிற வயசான இலைங்க எல்லாம் சாமிகிட்ட போறதுக்காக, கீழ விழுந்துக்கிட்டே இருந்தது. எங்கயோ ஒரு நரி ஊளையிட்டது. வானத்திலேர்ந்து ஒரு கழுகு கீழ எறங்கி வந்து மல்லிகா அக்காவோட சமாதி மேல உக்காந்து என்னைப் பாத்தது. தூரத்தில் ‘டமடமடமா’னு ஒரு இடி, அப்புறம் கண்ணு கூசற மாதிரி ஒரு மின்னல். கண்ணை மூடித் தொறந்தேன்.

நம்புனா நம்புங்க… நம்பாட்டிப் போங்க. சமாதிக்கு மேல மல்லிகா அக்கா உக்காந்துட்டு இருந்துச்சு. முன்ன மாதிரியே அம்மணக்கட்டியா. மல்லிப்பூ வாசம் காத்துல மெதந்து வந்து என் நெஞ்சுல நிரம்பி வழிஞ்சது. அக்காவோட கண்ல அதே பளபளப்பு. சிரிச்சது.

‘ராஜு… வீட்டுக்குப் போ. உங்க மாமா என்கிட்ட ஒன்னைப் பத்தி சொன்னாரு. எனக்கு முத்தம் குடுத்த ராஜா இல்ல நீ. நான் வரேன். ஒனக்குத் தொணையா இருப்பேன். இங்க இருக்காதே… எங்கூட கெட்டவங் களும் இருக்காங்க’னு சொல்லிச்சி.

ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன். வீட்டுக்கு வரும்போது மழையில நல்லா நனைஞ்சிட்டேன். மனசு சந்தோஷத்துல நனைஞ்சிருந்ததால எனக்குக் குளிரும் தெரியல; ஒண்ணும் தெரியல.

ராத்திரி ஒடம்பு சூடாயிடிச்சி. ரெண்டு நாள் ஜொரம். பாயைவிட்டு எழுந்திருக்கவே இல்ல.

வேல செய்ற மாமிதான் யாருக்கும் தெரியாமக் கஞ்சி போட்டுக் கொடுத்தாங்க. மூணாம் நாள் பழையபடியே எல்லா வேலையும் செய்ய ஆரம்பிச்சிட்டேன்.

அன்னையிலேர்ந்து என்னை யார் திட்டினாலும் அடிச்சாலும் அழறதே இல்ல. அக்காதான் வரப்போவுதே.

ஒரு ஞாயித்துக் கெழம. ஸ்கூல் இல்லங்கறதால குமாரும் சுகந்தியும் பாண்டித்துரை வீட்டுக்குப் போய்ட்டாங்க.

நான் துணியெல்லாம் மடிச்சி வெச்சிட்டு, படிக்கற துக்கு ஏதாவது புஸ்தகம் இருக்கான்னு பாத்தேன். எனக்குத்தான் புக்கே வாங்கித் தரலையே. குமாரோட புக் ஒண்ணு, ஹால்ல குப்பையோட குப்பையா இருந்தது.

அதை எடுத்துட்டுப் போய் ஜன்னல் மாடத்துல உக்காந்தேன். ஜன்னல் பக்கமா உக்காந்து சுடுகாட்டு வேலில கலர் கலரா பூத்திருக்கிற பூவை எல்லாம் பாக்கறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

மெதுவா தூறல் போட ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்துல சடபட… சடபடனு பெரிய மழை.

கூடத்துல குமார், சுகந்தி குரல் கேட்டது.

”எங்கே இந்த ராஜுக் கொரங்கு? மழையில நனையப் போயிட்டானா? மறுபடியும் ஃபீவர்ல படுத்து நம்ம உயிரை எடுக்கப்போறானா? ராஜு… எங்கடா தொலைஞ்சே?”

எங்கேயாவது ஒளிஞ்சுக்கலாம்னு நெனைச்சேன். சுகந்தி பாத்துட்டா.

”அதோடா… சுடுகாட்டு ரூம் ஜன்னல் கிட்டக்க…’

என் கைல இருந்த புஸ்தகத்தை குமார் பாத்துட்டான். வெடுக்குனு பிடுங்கினான்.

”என்ன தைரியம் இருந்தா என் புக்கைத் தொடுவே நீ?”

செவுத்துல கொண்டுபோய் என் தலையை இடிச்சான். வலி பொறுக்க முடியல.

‘விடுடா, பொறுக்கி ராஸ்கல்!’னு கத்திட்டேன். நான் கத்தக் கத்த… ரெண்டு பேருமாச் சேர்ந்து என்னை அடிச்சாங்க.

‘அநாதை நாயே’னு குமார் மூக்கிலேயே குத்தினான். ரத்தம் வந்து தரைல சிவப்பாக் கொட்டிச்சு. சுகந்தி நான் திமிறாமப் பிடிச் சுக்கிட்டா.

ரெண்டு பேரும் என்னை அடிக்கறதைப் பாத்து உள்ளேருந்து அத்தை நிதானமா வந்தாங்க.

‘என்னடா?’னு கேட்டாங்க.

”கொலைகாரப் பாவி, பொறுக்கி ராஸ்கல், கூஸ்… அது இதுனு திட்டறாம்மா எங்களை…’

‘அப்படியா சொன்னான்? நாக்கை இழுத்துவெச்சி அறுக்கறதுதானே? விடுங்க அவனை. நான் பாத்துக்கறேன்’னு அத்தை எம் மயிரைக் கொத்தாப் புடிச்சாங்க.

”நீ அந்த கோடி ரூம்லதான் இருக்கணும்”னாங்க.

எனக்கு எலும்புல யாரோ ஊசியால குத்தறா மாதிரி இருந்தது. கோடி ரூம் எப்பவுமே பூட்டியிருக்கும். யாருமே அங்க போறது கெடையாது.

‘வேண்டாம் அத்தை’னு கெஞ்சுனேன்.

‘ரெண்டு நாளு பட்டினியாக் கெடந்தாத்தான் திமிர் அடங்கும்.’

‘க்க்யீங்க்’னு கோடி ரூம் கதவு தெறந்துக்கிச்சி. உள்ள புடிச்சித் தள்ளிவிட்டாங்க. ஒட்டடைஎல்லாம் எம் மூஞ்சில வந்து ஒட்டிக்கிச்சி. கதவை வெளியே தாப்பாப் போடற சத்தம் கேட்டது.

தலைல வலிச்சது. ரத்தம் வந்த எடம் காய்ஞ்சு போய் இருந்துச்சு. ரூம் நடுவுல ஒரு பெரிய கட்டில் இருந்தது. அதுக்குப் பக்கத்துல அந்தக் காலத்து நாற்காலி ஒண்ணு. ரூம் நெறைய ஜன்னலுங்க. எல்லாத்தையும் கண்ணாடி போட்ட கதவால மூடியிருந்தாங்க.

சொவர்ல ஒரு மொகம் பார்க்கிற கண்ணாடி இருந்தது. அதுல பார்த்தேன். மூஞ்சி அங்கங்க வீங்கிப்போய், பாக்கறதுக்கே பயமா இருந் தது.

கட்டில்ல படுத்துட்டேன்… எப்ப தூங்கினேன்னு தெரியல. திடீர்னு முழிப்பு வந்தது. ரூம் எல்லாம் ஒரே ஜில்லுனு இருந்தது. வெளிய ஜோனு மழை. இருட்டா இருந்தது. செவுத்துல கைய வெச்சித் தடவி சுவிட்சைப் போட்டேன். லைட் எரியல. ஜன்னல்ல கண்ணை வெச்சி வெளியில பாத்தேன். கொஞ்ச தூரத்துக்கு அந்தப் பக்கம் மல்லிகா அக்காவோட சமாதி தெரிஞ்சது.

”அக்கா… என்னைக் காப்பாத்துக்கா!”

வெளியே தடதடனு ஜன்னல் அடிச்சுக்கற சத்தம் கேட்டது. டமடமனு தோட்டத்துல ஒரு மரம் முறிஞ்சி விழுந்தது. ‘ப்ளிச்’னு ஒரு லைட் அடிச்சது. மின்னலா என்னன்னு தெரியல. மின்னல் இல்ல. அக்காவாத்தான் இருக்கணும். அந்த லைட் என் மேல அடிச்சி, செவுத்துல அடிச்சி, கண்ணாடியில போய் அடிச்சது. கண்ணை மூடியிருந்த மயிரை வெலக்கிக் கண்ணாடியப் பாத்தேன். பாத்தா… அதுல மல்லிகா அக்கா தெரிஞ்சுது. பயமாவும் இருந்தது: சந்தோஷமாவும் இருந்தது.

என் ஒடம்புல யாரோ புகுந்துக்கற மாதிரி இருந்தது. என்னப் புடிச்சி இழுக்கற மாதிரி இருந்தது. மூச்சு தெணறிச்சி. ஓடினேன்.

கதவப் புடிச்சி டமால் டமால்னு அறைஞ்சேன். ஓங்கி ஒரு குத்து குத்தினேன். கதவு ஆடிச்சி.

‘என்னடா… மாய்மாலம் பண்றே!’னு அத்தை கதவைத் திறந்தாங்க. என்னைப் பார்த்தாங்க. ‘என்னடா சத்தம்?’னு மெரட்டினாங்க.

நான் பதில் பேசலை. பளார்னு அத்தை கன்னத்தில் எம்பி ஒண்ணு விட்டேன்.

‘ஏய்… ராட்சஸி! என்னைத் தெரியல… மல்லிகாடி. நீ திருட்டுத்தனமாப் பெத்துக்கிட்டு குப்பை மேட்ல எறிஞ்சிட்டுப் போனியே. ஞாபகம் இருக்கா? இனிமே ராஜுவைத் தொட்டாத் தெரியும் சேதி!’

நானா சொன்னேன்? அக்காதான் என்னை அப்படிச் சொல்ல வெச்சது. என்னை அடிக்க வெச்சது. ‘பளார்’னு இன்னொரு அறை விட்டேன்.

அத்தைக்குப் பின்னால சுகந்தியும் குமாரும் நின்னுட்டு இருந்தாங்க. அத்தை பயத்தோட ”ஐயோ”னு கத்துனாங்க. என்னைத் தாண்டி பின்னால பாத்தாங்க.

ஜன்னல் கண்ணாடில பெரிய பூதம் மாதிரி அக்கா தெரிஞ்சது.

அத்தை கண்ணு முழியெல்லாம் பெரிசாய்டிச்சி. அக்காவைப் பாத்து பயந்துட்டாங்க.

‘இல்லை. இனிமே எதுவும் செய்ய மாட்டேன். ராஜுவை என் கண்ல வெச்சுக் காப்பாத்தறேன்… போய்டு… நீ போய்டு’னு கத்துனாங்க.

சுகந்தியும் குமாரும் ‘பேய்… பேய்…’னு கத்திட்டு ஓடுனாங்க. அத்தை அப்படியே தரைல மயக்கமா விழுந்துட்டாங்க.

அடுத்த நாளு நான் அத்தையைக் கொல்லப் பாத்தேன்னு என்னை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய் கம்ப்ளெயின்ட் குடுத்தாங்க.

என்னை கோர்ட்ல நிக்க வெச்சி, கேள்விலாம் கேட்டு, கடைசில இந்த ஆதரவற்றோர் இல்லத்துல கொண்டுவந்து விட்டுட்டாங்க.

இதான் டீச்சர் நடந்தது. நம்பலதானே நீங்க?

டீச்சரோட கண்ல தண்ணி. அழுதுட்டே என் பக்கத்துல மண்டி போட்டு உக்காந்தாங்க.

‘நான் நம்பறேன்டா கண்ணா. இந்த ஆறு மாசத்துல. வெளில நடந்ததெல்லாம் ஒனக்குத் தெரியாது. உங்க அத்தைக்குக் குஷ்டரோகம் வந்து சித்தம் கலங்கிப்போச்சி. ஒடம்பெல்லாம் எரியுதுனு துணியே போட்டுக்காம இருந்தாங்க. திடீர்னு ஒடம்புல மண்ணெண்ணெய் ஊத்திப் பத்த வச்சிக்கிட்டு மல்லிகாவோட சமாதிக்குப் பக்கத்துல கரிக்கட்டையா கெடந்தாங்க. குமாரும் சுகந்தியும் இங்கதான் இருக்காங்க. மூணு பேரும் படிச்சிப் பெரியவங்களா ஆனதுக்கு அப்புறம் வெளில போலாம் என்ன?’

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ‘அவங்க எங்க?’னு கேட்டேன்.

‘ஒன்னைப் பாக்கப் பயமா இருக்காம்… வர மாட்டேங்கறாங்க.’

‘இல்ல டீச்சர். அவங்கள நான் ஃப்ரெண்ட்ஸாதான் நெனைக்கறேன். என்னை அவங்ககிட்ட கூட்டிட்டுப் போங்க டீச்சர்.’

டீச்சர் கையை நீட்னாங்க. நான் அவங்க வெரலைப் புடிச்சிக்கிட்டு எழுந்தேன்.

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

1 thought on “மல்லிகா அக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *