பேய்க்கதை

 

இரவு 7 மணி. வானம் சிறு தூறலால் நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது. மின்சாரம் வேறு நிறுத்தப்பட்டிருந்தது. கதவு சாத்தப்பட்டு நான் அப்பாவோடு பழையதும் புதியதும் பற்றி கதைத்துக்கொண்டிருந்தேன். பெரியவனா ஆனப்பிறகு அப்பாவுக்கு நேரம் ஒதுக்கி பேசுவதே தனி மகிழ்ச்சிதான். எங்கள் முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றி என்னுடைய அப்பா சுவாரஸ்யமான நிகழ்வுகளை கூறிக்கொண்டிருந்தார். நானும் மனதை அலையவிடாமல் அப்படியே கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பா பேச ஆரம்மிச்சார்ன்னா பேசிக்கொண்டே இருப்பார். அவர் எதைச்சொன்னாலும் அப்படியே நம்புகிற பையன்தான் நான். அப்பாவும் உண்மையோடு தன்னோட கற்பனையையும் சேர்த்து உண்மைச் சம்பவம் போல் சொல்லுவதில் கைத்தேர்ந்தவர். அப்படித்தான் அன்றும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அச்சமயத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. டொக்… டொக்… டொக்… நாங்கள் அச்சத்தத்தைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் எங்களின் உரையாடலில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தோம். விளக்கு வெளிச்சத்தில் சமையலில் இருந்த அம்மாதான் கதவைத் திறக்கப்போனாள். ஆனால் வாயில் மொனகிக் கொண்டே சென்றாள். கண்டிப்பாக அது எங்களைப் பற்றித்தான் என்பது நன்றாகப் புரிந்தது. வாசலில் அத்தை, “வாம்மா… மாமா எப்படி இருக்கிறாரு… பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா…” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போனார். “எல்லாரும் சுகம்தான் அண்ணே!” என்கிற வார்த்தை மட்டும் வந்தது. எனக்கு தூரத்து அத்தை ஒருத்தி வந்திருக்கிறாள். எங்க அப்பாவுக்கு தங்கை முறை வேணும். நானும் “வாங்க அத்தை…” என்றேன். அம்மா கொடுத்த துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டே “என்னப்பா நல்லாயிருக்கியா… சின்ன வயசுல பாத்தது. நெடுநெடுன்னு பெரியவனா வளந்துட்ட…” என்றாள் கிருஷ்ணவேணி அத்தை. வெட்கம் வந்தவனாய் தலைகுனிந்து மெளனமாய் புன்னகைத்துக்கொண்டேன். அம்மாவும் அத்தையும் சிரித்துக் கொண்டார்கள். அம்மா பாய்ப் போட மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டாள் அத்தை.

“என்னாம்மா இந்த நேரத்துல…”அப்பா கேட்டார். நம்ம கிழக்கத்தியாரு இருக்காருல்ல… அவரோட மருமகப்பிள்ளை நடேசன் செத்துப்போயிட்டாரு. அவருக்கு நாளை காலையில காரியம். அதான் போகிற வழியில அண்ணனைப் பாத்திட்டு போலாம்முன்னு வந்தேன். “நீ ஏன்னா எழவுக்கு வரல்ல” என்றாள் அத்தை. “எனக்கு தகவல் தெரியாது. யாருமே சொல்லல பாத்திங்களா! நல்ல மனுஷன். இப்பத்தான வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தாரு… என்னாச்சும்மா!” என்று கேட்டுக்கொண்டிருந்தார் அப்பா. ஆமாண்ணா அந்தச்சேதி உங்களுக்குத் தெரியாதா? அவரு பேயப்பார்த்து பயந்துபோய் செத்துட்டார்ன்னு சொல்றாங்கண்ணா! என்றாள் அத்தை. இருட்டில் கொஞ்சமான வெளிச்சத்தில் நான் காதை தீட்டிக்கொண்டு அத்தைக் கூறும் விஷயத்தைக் கேட்கத் தயாரானேன். இனி அத்தை சொல்லுகிற மாதிரி கதை போகும்.

வெளிநாட்டுல இருந்து துணிமணி, சென்ட், ரேடியோ, டார்ச் லைட்டுன்னு நிறைய வாங்கிட்டு வந்தாரு. அக்கா தங்கச்சின்னு எல்லாத்துக்குமே கொடுத்தாரு. புள்ளைங்க நல்லா படிக்கனும் என்பதற்காக லேப்டாப் கூட வாங்கி வந்திருக்கிறாரு. ஒருவாரம் வீட்டிலேயே மனைவி புள்ளையங்களோட சந்தோஷமாதான் இருந்திருக்கிறாரு. அவரோட மனைவிதான் எப்பவும் மாட்டுல பால் கரந்து சொஷைட்டில ஊத்திட்டு வருவாங்க. அன்னிக்கு வெள்ளிக்கிழமை. அந்தம்மா பால பீச்சிட்டு சொஷைட்டுக்குக் கிளம்ப தயாரா இருந்தாங்க. “இன்னிக்கு நான் போய் ஊத்திட்டு வரேன்டி… நானும் வந்ததிலேருந்து வீட்டிலேயே அடைந்து கிடக்குறன். கொஞ்சம் ரோட்டுப் பக்கம் போய் நண்பர்களையெல்லாம் பாத்திட்டு வந்திர்ரனே…” என்றார் நடேசன். “சரி போய்ட்டு சீக்கிரம் வந்துருங்க” என்கிறாள் நடேசனின் மனைவி. பால் கேனை சைக்கிளில் மாட்டிக்கிட்டு சொஷைட்டுக்குக் கிளம்புகிறார் நடேசன். அவரு இருக்கிற தெருவுக்குப் பக்கத்துல சுடுகாடு. சுடுகாட்டத் தாண்டிதான் ரோட்டுக்குப் போகணும். நடேச அண்ணனும் ரோட்டுக்குப் போயி பால ஊத்திட்டு நண்பர்களோட நல்லா பேசிட்டு இருட்டுற சமயத்துல வீட்டுக்குப் போலாம்முன்னு கிளம்புகிறார்.

அப்ப மணி ஆறுல இருந்து ஆறரைகுள்ள இருக்கும். பகல் மறைஞ்சி இரவு வர்ர நேரம். இருட்டும் பகலும் கலந்ததொரு மத்திமகாலம். நடேச அண்ணனும் ரோட்டுல இருந்து கிளம்பி சுடுகாட்டு நுழைவாயில நுழைகிறார். அப்ப அந்த நுழைவாயில்ல ஒரு பொண்ணு தன்னந்தனியா நின்னிட்டு இருக்கு. கழுத்த நிறைய நகைகள். புன்னகை ததும்பும் உதடுகள். கண்களுக்கு மை இட்டிருக்கிறாள். சைக்கிள்ள போனவரு கொஞ்சம் நிறுத்தி, தலையைத் திருப்பி “என்னம்மா நீ ராமசாமி வாத்தியாரு மகதான… இந்த நேரத்துல இங்க ஏன் நின்னுட்டு இருக்கிற… அதுவும் சுடுகாடு வேற..” என்கிறார் நடேசன். “எங்க வீட்டுக்காரரு மல்லி வாங்கி வர்ரன்னு போயிருக்கார்ண்ணா…” என்றாள் அந்தப்பெண். “சரிம்மா… உன் புருஷன் வர்ர அப்ப வரட்டும். நீ தனியா இந்த சுடுகாட்டுல நிக்க வேண்டாம். வா… நான் ஊருக்குள்ளதான் போறேன். சைக்கிள்ள வந்து உட்காரு உன்ன வீட்டுல போய் விட்டுறேன்” என்கிறார் நடேசன். “நான் இங்க இல்லன்னா வீட்டுகாரரு தேடுவாரு… நீங்க போங்கண்ணா நான் அவரு கூடவே வர்ரேன்” என்றாள் அப்பெண். “சொன்னா கேளும்மா.. உம்புருஷன் என்ன சின்ன பையனா? நீ வா… அவன் வீட்டுக்கு வந்திருவான்” என்று வலுக்கட்டாயமாக அழைக்கின்றார் நடேசன். அந்தப் பெண்ணும் வேறுவழியின்றி சைக்கிளில் பின்னால் ஏறி உட்கார்ந்து கொள்கிறாள். சைக்கிள் கனமாக இல்லாமல் காத்தாக மிதந்து கொண்டிருந்தது.

போகிற வழியில் நடேசன் விசாரித்துக் கொண்டே செல்கிறார். அவளும் எந்தவித தயக்கமுமின்றி கேட்கிற கேள்விகளுக்குப் பதில் தருகிறாள். நான் என் மாமா மேல உசிரா இருக்கிறதாகவும், அவரு எப்பவும் என்கூடத்தான் இருக்கணும் என்றும் அந்தப் பெண் நடேசனிடம் கூறுகிறாள். நடேசனும் “புருஷன் மேல இப்படி அன்பா இருக்கிறது நல்லதுதான். பரவாயில்ல வாத்தியாரு நல்ல பிள்ளையாப் பாத்து உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காரு… பரவாயில்லா… மாமனார் மாமியார் எல்லாம் எப்படி?” என்று கேட்டுக் கொண்டே சுடுகாட்டின் எல்லையைத் தாண்டுகிறார் நடேசன். எல்லையைத் தாண்டி கொஞ்ச தூரம் சைக்கிளை மிதித்துக்கொண்டே சென்ற நடேசன் என்னம்மா சத்தத்தையே காணும் என்று சைக்கிளை நிறுத்தி பின்னால் திரும்பிப் பார்க்கின்றார். திரும்பிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. அந்தப் பெண் சைக்கிள் கேரியரில் இல்லை. “என்னாடா இது! எப்போது இறங்கிக் கொண்டாள். சொல்லிக்கொள்ளாமலே இறங்கிக் கொண்டாளே… எங்கு இறங்கியிருப்பாள். கணவன் மேல அம்புட்டு பாசம். சரி நாம வீட்டுக்குப் போவோம்” என்று சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார் நடேசன்.

வீட்டுக்கு வந்தவுடன் பால்கேனை தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில் வைத்து விட்டு தன்னோட கைக்கால்களை அலும்புகிறார் நடேசன். ஈரத்துடன் வீட்டிற்குள்ளேச் சென்று துண்டு எடுத்து துவட்டுகிறார். மூக்கின் வழியே நெத்திலி மீன் வாசம் பிடிக்க, வாசனையின் வழியில் தன்னோட மனைவியைத் தேடி சமயற்கட்டிற்குச் செல்லுகிறார்.

மீன் வாசம் மூக்கத் துளைக்குது போ…

கொஞ்சம் பொறுங்க எல்லோரும் சாப்பிட்டுடலாம்.

“சரி, சுடுகாட்டு நுழைவாயில்கிட்ட அந்த ராமசாமி வாத்தியாரு மகளைப் பாத்தன். கழுத்துல நகையைப் பொட்டுக்கிட்டு அவ புருஷங்காரன் ரோட்டுக்கு மல்லி வாங்கியாரப் போயிருக்கானாம். அதுக்காக அந்த இடத்துல பயமே இல்லாம நின்னுட்டு இருக்கா! நான்தான் வாம்மா வீட்டுல போய் உட்டுறன்னு சொல்லி சைக்கிள்ள ஏத்திட்டு வந்தன். சுடுகாட்டுக்குத் தாண்டி வரப்ப நான் மாட்டுக்கும் பேசிட்டே வரேன் அந்தப் பொண்ணு சத்தமே இல்லாம இருந்துச்சி. திரும்பிப் பார்த்தா அந்தப் பொண்ணக் காணும். சொல்லாம கொல்லாம இறங்கிட்டா” என்றார் நடேசன்

என்னங்க சொல்லுறீங்க… அந்தப்பொண்ணு செத்துப்போயி மூணுமாசம் ஆகுது.

சும்மா விளையாடாதா! அந்தப்பொண்ண நான் என்னோட சைக்கிள்ள உட்காரவச்சிட்டு வந்தன் தெரியுமா?

நான் எதுக்குக்குங்க உங்ககிட்ட விளையாடப்போறேன். உண்மையாலுமே அந்தப் பொண்ணு செத்துப்போச்சு! நீங்க கனவு கண்டிருப்பிங்க. அத உண்மைன்னு நம்பி என்கிட்ட கேட்கிறீங்க…

எப்படி செத்துபோச்சு அந்தப் பொண்ணு?

அவுங்க புருஷன் வீட்டுக்குடும்பம் கஞ்சக்குடும்பமாம். எதுக்கும் நையாப் பைசா செலவு பண்ணமாட்டாங்களாம். இந்தப் பொண்ணு அங்க போயி ரெண்டு வாரம் ஒழுங்காத்தான் போயிட்டிருந்ததாம். அதன்பிறகு, உங்க அப்பா வீட்டுல அத கொண்டு வா இத கொண்டு வான்னு அடிச்சிருக்காங்க.. இவளும் முடிஞ்சவரை அப்பாக்கிட்ட இருந்து பணம் நகை எல்லாம் வாங்கி கொடுத்திருக்கா… கர்ப்பமா இருக்கிறவள கூட உதச்சி கீழ தள்ளி கருவ கலச்சிட்டாங்களாம் பாவிங்க! பொறுத்து பொறுத்து பாத்தா அடி தாங்க முடியல! அவங்களோட கொடுமையும் எல்லை மீறிடிச்சு! ஒருநாளு தூக்குல தொங்கிட்டா! என்ன பன்றது. நல்ல பொண்ணு! அவ தலஎழுத்து அப்படி… சரி வாங்க சாப்பிடலாம் என்றாள் நடேசனின் மனைவி.

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?

ஊருக்கே தெரியும்! வாத்தியாருவுட்டு அம்மா அந்தப் பொண்ணு செத்து பிணமா கிடந்தபோது தலையிலையும் மார்லயும் அடிச்சிகிட்டு இதெல்லாம் சொல்லி அழுவனாங்க…

மனைவி சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நடேசனின் இதயம் ஒரு நொடி நின்றேப் போனது. அன்று ஏதோ வயித்துக்காக சாப்பிட்டுவிட்டு தூங்கப் போனான். படுக்கையில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். நினைவுகள் முழுவதும் அந்தப் பெண்ணைப் பற்றித்தான். உயிரோடுப் பார்த்தப் பெண். செத்துப்போனவளையா நான் பார்த்து இருக்கிறேன். அப்போ! அப்போ! அது பேயா! பேயா! திடுக்கென்று தூக்கிப்போட்டது நடேசனுக்கு. மனதில் ஏதோதோ நினைத்தும் பயனில்லாமல் அப்பெண்ணின் உருவமே தோன்றியது. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான். பயம் தெளிய தன்னுடைய மனைவியின் மேல் ஒற்றைக் காலை தூக்கிப் போட்டுக்கொண்டான்.

ரம்மியமான சுடுகாடு. பிணம் எரிந்ததனால் ஆங்காங்கு புகை மண்டலம். சைக்கிளில் நடேசன். பால் கேனை வண்டியில் மாட்டிக்கொண்டு வீட்டுக்கு விரைந்து கொண்டிருந்தான். சிறுவயதிலிருந்தே பார்த்த சுடுகாடுதான். ஓடியாடி விளையாண்ட சுடுகாடுதான். எத்தனையோ முறை வீட்டில் கோபித்துக் கொண்டு அந்தச் சுடுகாட்டில் படுத்து உறங்கியிருக்கிறான். அப்பொழுதெல்லாம் இல்லாத ஒரு சுகம் இன்றைக்கு. ரோஜா இதழ்களும் சாமந்தி மலர்களும் தூவிய பஞ்சு மெத்தை ஒன்று அவனுக்கு தென்பட்டது. இவையெல்லாம் பார்த்துக்கொண்டே கொஞ்ச தூரம் சைக்கிளை ஓட்டிச்சென்றான். மீண்டும் அதேப்பெண். முகம் கடுத்தவனாய் அப்பெண்ணைப் பாராமல் சைக்கிளை விரைவாக மிதிக்கின்றான். “அண்ணா… நில்லுங்கள்! என் கணவர் வந்துவிட்டார். இதோ பாருங்கள் அண்ணா” என்று தலையில் சூடிய மலர்களை காண்பிக்கின்றாள்.

நீ பெண்ணல்ல பேய்… என்னை அழைக்காதே போ.. போ… போ… என்கிறார் நடேசன்.

அண்ணா ஆ…ஆ… வா… வா… வா… வா… வா… என கையசைத்து கூப்பிடுகிறாள் அப்பெண்.

நான் வரமாட்டேன் போ… நான் வரமாட்டேன்… நான் வரமாட்டேன்…

என்னங்க… என்னங்க… என்று நடேசனின் உடம்பைக் குலுக்கி அவனை எழுப்பிவிட்டாள். தூக்கத்துல இப்படி கத்திறீங்க… பாருங்க குழந்தைங்க கூட முழிச்சிட்டாங்க… ஏதோ பாத்து பயந்திருக்கிங்க போல காலையில உங்களுக்கு மசூதிக்குப் போயி பாடம் போடனும்.

நடேசனுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. காலையில் ஒரே காய்ச்சல். பாடம் போட்டும் பயனில்லை. ஒருவாரம் காய்ச்சல் நீடித்தது. அப்போ அப்போ தூக்கித்தூக்கிப் போட்டது. அப்புறம் கத்துவார். நான் வரமாட்டேன் போடி என்பார். அவ என்ன கைக்காட்டி கூப்பிடுறா என்பாராம் தன் மனைவியிடம். போனவாரம்தான் செத்து போனாரு என்று சொல்லி முடித்தாள் கிருஷ்ணவேணி அத்தை.

தூறல் நின்றபாடில்லை. மின்சாரமும் வந்தபாடில்லை. என் மனசு முழுவதும் அந்தப்பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது. “சரி எல்லாரும் கை கழுவுங்க சாப்பிடலாம்” என்று அம்மா சமயலறைக்குள் நுழைத்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
வாசலில் ஆண்களும் பெண்களுமாய் செருப்புகளை வரிசையாக விடப்பட்டிருந்தார்கள். இராமன் சீதையைக் கண்டுபிடித்தான். சீதை இராமனுக்காகக் காந்திருந்தாள். சொந்த பந்தங்கள் கூடி திருமணம் பொருத்தம் பார்க்க அங்கே குழுமி இருந்தார்கள். அக்கூட்டத்தின் நடுவே தலை நிமிராமல் மாப்பிள்ளை நடேசனும் உட்காந்திருந்தான். ஆள் கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாட்டில் இராஜா ஒருவன் தன்னுடைய மக்களுக்கு நல்லாச்சியைக் கொடுத்து வந்தான். திடிரென்று சில மாதங்களாக அந்த நாட்டில் மழைவளம் குன்றி போயிருந்தது. என்னவாயிருக்கும் என்று யோசனை செய்தபோது, அந்த நாட்டில் உள்ள காளிக்கோயில் அடைப்பட்டுக் கிடந்ததை அறிந்தான். அந்தக் கோவிலைத் திறந்து ...
மேலும் கதையை படிக்க...
மத்தியான நேரம். உச்சி வெயில் மண்டையப் பிளந்தது. ரெங்கநாயகி கிழவி வேகவேகமாய் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தாள். மனதிலே இறுக்கம். தளர்ந்த நடை. தோலெல்லாம் சுருங்கிப்போய் கூன் விழுந்திருந்தது. மூக்கு நுனி கண்ணாடி கீழே விழாத படிக்கு ...
மேலும் கதையை படிக்க...
(குறிப்பு: இது தன்னைத்தானே உயிரை மாய்த்து(suicide) கொள்ளும் ஒருவருடைய கதை, இந்த வகை கதைகளை படிக்க விரும்பாதவர்கள் வேறு கதைக்கு செல்லவும்) சுட்ட செங்கற்களால் வரிசையாக வைத்து கட்டப்பட்ட நான்கு பக்கச்சுவர். சுவரின் மேற்பரப்பில் ஆரங்களாகப் பனைமரத்தைச் சேர்த்துக் கட்டிய விள்ளைவீட்டில்தான் ராமமூர்த்தி ...
மேலும் கதையை படிக்க...
உடுக்கைச் சத்தம் அங்கிருப்பவர்களை ஆட செய்தது. மேளமும் உறுமியும் மாக்கிழவன் கோவில் உற்வசத்தை பறைச்சாற்றியது. கோடிமலையைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மாட்டு வண்டியில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். இன்னும் சிலர் இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரில் ஏழு அண்ணன்மார்களும் ஒரு தங்கையும் சந்தோசமாக வாழ்ந்த வந்தார்கள். அண்ணன்கள் ஏழு பேரும் காட்டிற்கு வேலைக்குப் போவார்கள். அவர்களுக்கு தங்கைதான் சாப்பாடு கொண்டு செல்வாள். மூத்த ஆறு அண்ணன்களும் சட்டியில் இருக்கும் சாப்பாட்டை வழித்து வழித்து உண்பார்கள். ஏழாவது அண்ணன் ...
மேலும் கதையை படிக்க...
பழைய ஊர். கட்டுப்பாடுகள் அதிகம். சண்டைகளும் கலவரங்களும் சக்கரைப் பொங்கல் மாதிரி அப்பப்ப வந்து தெவட்டும். முனுசாமி அதிகாரி பொம்பளைங்க விஷியத்துல கொஞ்சம் அப்படி இப்படி. அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. ரெண்டு பொண்டாட்டிக்கும் ஆளுக்கொரு ஒரு ஆண் பிள்ளைங்க. ஊரே தன்னோட ...
மேலும் கதையை படிக்க...
பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போனது. கோவிந்தன் ரெண்டு கிளாஸ் பட்டைச் சாராயத்தை ஊத்திக்கொண்டு ஆடுபவரின் ஆட்டத்திற்கு தகுந்தார் போல் மேளத்தைத் தட்டிக் கொண்டிருந்தான். கையிலே பறை மேளத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கமாய் தலைச்சாய்த்து கொட்டு அடிப்பதில் கோவிந்தனுக்கு அலாதி பிரியம்தான். ...
மேலும் கதையை படிக்க...
“அம்மா பேஸ்ட் பிரஷ், சோப்பு ஷாம்பு துண்டெல்லாம் எடுத்து வச்சிட்டியா…” என்றான் கதிர். “எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆமாம்! நீ ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனையாட்டம் குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருக்க. ஒரு இடத்துல போயி உட்காருடா” என்றாள் கதிரின் ...
மேலும் கதையை படிக்க...
ஆண்டு-1960. படிப்பறிவு இல்லாத கிராமம். பண்ணையார் முதல்கொண்டு தலையாரி வரை பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற ஊர். அந்த ஊரில் எல்லோரும் அறிவாளிகள். ராத்திரி ஊருசனமெல்லாம் தூங்கிட்டாங்க. எல்லாம் அடங்கி இருட்டாய் இருந்தது அந்த ஊர். நடுசாமத்து வாக்குல மூணு மாசமா இழுத்துக்கிட்ட கிடந்த ...
மேலும் கதையை படிக்க...
தூரிகை
அணையா விளக்கு – ஒரு பக்க கதை
இதயம் பேசுகிறது!
மகன் தந்த பரிசு
மாக்கிழவன் கோவில்
ஏழு அண்ணன்களும் ஒரு தங்கையும்!
கிணத்துக்கடை
தோட்டியின் பிள்ளை
கழிவறையின் கதவு
சைக்கிளுக்கு ஒரு ரூபாய் வாடகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)