சிவப்பு பக்கங்கள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 46,972 
 

“இந்த விருது கிடைக்கும்னு நினைச்சிங்களா…..?”

“இந்த விருதுன்னு இல்ல… ஏதோ ஒரு விருது கிடைக்கும்னு நினைச்சேன்……”

“இன்னொரு கேள்வி….”

“கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டீங்க.. அதுல என்ன இன்னொரு கேள்வி.. எல்லாமே கேள்வி தானே…”

“உங்க எழுத்து மாதிரியேதான் சார் இருக்கு.. உங்க பதிலும்…”

“நன்றினு சொல்லிட்டு உங்கள கடந்து போகத்தான் நினைக்கறேன்… ரெண்டுமே முடியல…”

(சிறு புன்னகை இரண்டு பக்கமும்…)

“அதென்ன சார்… எழுத்தாளன் அப்டினாவே… ஒரு மாதிரி கோபமா.. முரட்டுத்தனமா இருக்கனுமா என்ன…?”

“அப்படி எல்லாம் இல்லையே… என்ன மாதிரி தாடி வச்சிட்டு குடுமி கூட வெச்சுக்கலாமே…”

(சிறு மௌனம் இரண்டு பக்கமும்) -(சில கிளிக்ஸ்…..)

“கடைசி கேள்வி…..”

“அப்போ… வில்லங்கம்தான்…”

“ஹ ஹ ஹா….”

“சிலை சிரிக்கற மாதிரி…(மைண்ட் வாய்ஸ்)….ம்ம்ம்ம்

“அது ஏன் உங்க எல்லாக் கதைகளும்,…. ஒரு மாதிரி அமானுஷ்யங்களாவே இருக்கு…..”

அறைக்குள் அங்கும் இங்கும் அலைந்தான் பிரான்சிஸ் எடின் பாரோ…அந்தக் கேள்வி நீரலையாய்… வெப்பச் சலனமாய், வேகத் தடையாய் மூளைக்குள் ஒளிந்து கொண்டும்… ஓடிக் கொண்டும் இருந்தது….. சரியான கேள்விதான்….எல்லா கேள்விக்கும் பதில் வேண்டுமா என்ன…? ஏன் அப்படிக் கேட்டாள்…! அதுவும் உண்மை தானே.. இது வரை எழுதிய 65 சிறுகதைகளிலும்… அமானுஷ்யங்கள்தானே கிளைமேக்ஸாக இருக்கிறது… சரி இருந்தால் என்ன…? சிலருக்கு காதல் பாணி.. சிலருக்கு காமம்.. சிலருக்கு கொலை.. சிலருக்கு கடவுள். சிலருக்கு வன்முறை… அவனுக்கு பேய் ஆவி.. பூதம்…. எத்தனை சொன்னாலும் இந்த மனம் மட்டும் சமாதானம் ஆவதே இல்லை.. இல்லாத தொடர்புக்கு, இருப்பது போல ஒரு கூட்டு முறை பிராத்தனையை இறக்கிக் கொண்டே துளி துளியாய், பின் மொத்தமாய் கயிறாய் விட்டு விடும் மாய யதார்த்தமாக… அவனுக்குள் இறங்கிக் கொண்டே இருந்தது கேள்வி… இதே கேள்வியை அம்மு கூட ஒரு முறை கேட்டதுண்டு….அவன் சொன்ன பதிலில் அவளின் பதில்கள் கேள்விகளானது வேறு விஷயம்…

அம்முகூட ஒரு கதையின் கதாபாத்திரமாகத்தான் அவனுக்கு அறிமுகம் ஆனாள்…….. கதைகளின் வாயிலாக அவனுக்கென்று ஒரு உலகை சிருஸ்டித்துக் கொண்ட கதவற்ற புத்தகம்தான் எடின்….இரவைத் தூங்குவதற்கு என்று எவன் சொன்னது.. அது கொண்டாடுவதற்கு… இரவின் கண்களுக்குள் நீ தெரியும் நாளில்தான் பூமியின் மறுபக்கம் உனக்குள் பிரவேசிக்கும் என்பது அவனின் சித்தாந்தம்… சித்தாந்த தத்துவங்களில் அடிக் கோடிட்ட வரியாக இருப்பதே அவனின் பேனாவின் வலிமை…. உன் பேனாவில் மட்டும் வலி’மை’யை ஊற்றி எழுதுகிறாய் என்று அம்மு அடிக்கடி சொல்வது, அவனுக்குள் ஊற்றெடுத்த பெருவாகம் என்பது விதி.. விதி என்பது மேலே கையைக் காட்டும் தலை கீழ் விகிதமல்ல.. அது காலச் சூத்திரம்…

திறந்திருந்த ஜன்னலில் இரவின் நீலம்…….. தொலைந்து கொண்டே போனதை, முடிந்தவரையில் பார்த்தவனுக்கு அந்தக் கேள்வி மட்டும் பெரும் சித்துகளை கொட்டிக் கொண்டேயிருந்தது…. இருப்பதும் ஒன்றுதான்.. இல்லாமல் போவதும் ஒன்றுதான்… மாற்றி யோசித்த கணங்களை பின்னோக்கி, வாரிய மண் புதையலாய், சூடு பனியாகி கொண்ட வெள்ளோட்டக் கரையில் வழிந்திட்ட நிழல் யாருடையது என்பதுபோல அந்தக் கேள்வி.. கேள்வியின் நாயகன் அல்ல.. நாயகி… இப்படி ஒரு கேள்வியை ஏன் கேட்டாள்.. கேட்கத்தானே கேள்வி… என்று மீண்டும் மீண்டும் யோசிக்கத் தொடங்கினான்.. தொடக்கத்தைப் போல சோம்பல் எதுவும் இல்லை… மதுவுக்குள் முகம் பிரகாசித்தது..அவனை அவனே இப்போது கேட்டுக் கொண்டான்..

ஏன்… நீ ….. ஏன் அமானுஷ்யக் கதைகளையே எழுதுகிறாய்…?….. பிடித்திருக்கிறது என்று சொல்லி நழுவிச் செல்ல தோன்றவில்லை…

போதை ஏற
புத்தி மாறுவதில்லை
எழுதுபவனுக்கு…

வாய் கிழியப்
பேசும் நாளில்
போதையே இருப்பதில்லை…

இருப்பது போதையாக
இருப்பினும் அது
இரவுக்குள் இருப்பதால் திறக்கப்படவில்லை……

அட கவிதை கொட்டும் கணங்களிலும் கனத்துக் கிடக்கும் கேள்வியை என்ன செய்வது…..?

அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது… இரவுகளில்….வீட்டில் மின்சாரம் உபயோகிப்பது இல்லை…எப்போதும் இருள் சூழ்ந்த சூழலே அவனுக்கு வெளிச்சம்……. வீட்டுக்குள் எங்கு, என்ன இருக்கிறது என்று அவனுக்கு நன்றாக தெரியும்….. இருட்டுக்குள் நடந்து கொண்டே ஒரு பேயைப் போல இருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுவார்கள், ஏதோ பேய் கூட குடும்பம் நடத்தியது போல…… அவன் நிழலைக் கண்டுதான் பின் வீட்டுத் தாத்தா இறந்து போனார் என்பது காலத்தால் அழிக்க முடியாத குற்றச்சாட்டு….

அதற்கு அவன் கூறிய பதில்-

“இறப்பவன் நிழல் பார்க்காமல் கூட இறப்பான்..” என்பது.

தலையை பிடித்துக் கொண்ட இன்னொரு பாட்டி இன்னும் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்… வெறும் தகவல்களை அவன் ஒருபோதும் உள் வாங்குவதேயில்லை… கூடு விட்டு கூடு பாயும் சிந்தனைகளை ஒன்று குவிக்கவே, இருள் என்பது கொஞ்ச வெளிச்சம் என்பான் பாரதியைப் போலவே… இங்கு எல்லாமே மாதிரிதான்.. போலதான்.. என்பது…அறிவின் கூட்டு சதி…

அவன் யோசித்தான்…. இன்னும் ஒரு போத்தல் வோல்கா தேசம் உள்ளே போனது…. அறை சுற்றத் தொடங்கியது கேள்வியாக…

“ஏன் அமானுஷ்யக் கதைகளையே எழுதுகிறேன்…….? நான் எங்கு எழுதுகிறேன்…..(!)” என்று உள்ளுக்குள் இருந்து ஒரு பதில் அன்று முதன் முதலாக தூண்டில் போட்டது. அகப்பட்டவன் போல…… கண்ணாடி முன் நின்று பார்த்தான். கண்ணாடியும் கருப்பாக கொஞ்சம் வெளிச்சத்தில் அவனைப் போலவே பார்த்தது…. நன்றாக நினைவுக் கிண்ணங்கள் உருளத் தொடங்கின…… எந்தக் கேள்விக்குள் அவன் போக தயங்கினானோ அந்தக் கேள்வி அவனைக் கை பிடித்து கால் பிடித்து இழுத்துப் போனது… இதுவரை எழுதிய கதைகளின் தலைப்பை ஒவ்வொன்றாக யோசித்தான்….. ஜன்னலுக்குள் ஒரு வால் நட்சத்திரம் சிதறி விழுந்தது போல இருக்க ஜன்னல் தன் அளவைக் குறுக்கிக் கொண்டு நட்சத்திரத்துக்கு வழி விட்டதாக ஒரு காட்சி… வாராமலே போனது….

“நியந்தாவின் வண்ணங்கள், குடைக்குள் மழை, 1984 டிச 28, யாதுமாகிய நிவ்யா, தசையினை தீ சுடினும், ஜிப்ரானின் செல்மா, குருதி சொட்டும் கழுகின் வட்டங்கள், யாரது இடைவிடாமல் இசைப்பது”- இப்படி எல்லாக் கதைகளுமே அமானுஷ்யங்களோடு முடிந்தவைதான் …. அவனுக்குள் ஒரு கிணறு மூடிக் கொண்டே வருவது போல… ஒரு வகை அதீத சப்தம்…. புகை போல கிளம்பிக் கொண்டே இருந்தது….. அவன் உணரத் தொடங்கினான்… உயரப் பறப்பது போல.. உலகின் சிறகை வெட்டிக் கொண்டே வெளி எங்கும் பால்வீதி தூவிக் கொண்டே ஒரு புள்ளிக்குள் கவனம் சிதைக்கிறான்… ஆம்.. அந்த கதைகளை அவன் எழுதத் துவங்கும் போது இருந்த கரு, மெல்ல மெல்ல ஒரு அமானுஷ்யக் கதைக்குள், கருவுக்குள், முடிவுக்குள் சென்று விடுவதை உணர முடிந்தது.. திக் என்று வியர்த்துக் கொட்டியது… சூடு…

எழுதும் போது இருந்த மன நிலை… உடல் நிலை.. அறை சூழல் என்று ஒவ்வொன்றாக நினைவு படுத்தி பார்த்தான்…..ம்ஹும்…. ஒன்றும்… நினைவுக்கு வரவில்லை…..

“அது எப்படி, நான் எழுத நினைத்த கதை தானாக ஒரு அமானுஷ்யக் கதையாக மாறும்….?”-

முதன் முதலாக ஒரு நடுக்கம் தோன்றியது… முதன் முதலாக இருட்டுக்குள் ஒரு புள்ளி அவன் கண்களுக்குள் சுழன்றது.. அது தீவிர தோட்டாவின் வேகம் போல வெளி துளைத்துப் போய்க் கொண்டேயிருந்தது…மெழுகுவர்த்தி பற்ற வைத்தான்… அது பயந்து கொண்டே அழுவது போல இருந்தது… கீற்று வெளிச்சம், இரவைக் கீறிய வெளிச்சம்….

இரவைக் கெடுக்கும் எதையும் அவன் விரும்புவதில்லை… ஆனாலும் சோதனை முயற்சிக்காக அவன் அதை செய்தான்…. அது எப்படி… தானாக கதை மாறும்…..?

!!!! அப்படி என்றால்… என்னோடு யாரோ இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்..”-அவன் நெற்றி சுருக்கி யோசித்தான்…

அவன் எழுதிய அனைத்து கதைகளுமே இதே அறையில் வைத்து அதிகாலை வெளிச்சத்தில் எழுதுதவைகள் தானே… இரவுகளில் எழுதுவது அவனுக்கு பிடிக்காது… எழுதுவதற்கா இரவுகள்…? இரவுகள் இரவுகளுக்காக… “அயோ…………………………”

அவன் தலையை பிடித்துக் கொண்டான்… இழுத்துக் கொண்டே செல்லும் கற்பனைக் கரப்பான் பூச்சிகளின் மெல்லசைவில் கூச்செறியும் மயிர்களின் புல்லரிப்பில் கட்டுப் படுத்திக் கொண்டே… எழுதத் தொடங்கினான்…

ஒரு சாதாரண எழுத்தாளனின் கதை…

“ஒரு எழுத்தாளன் கஷ்டப் பட்டு எழுதி ஒரு நாவலை முடிக்கிறான்…. அதை பிரசுரிக்க முடியாமல் அவனுக்கு பைத்தியம் பிடிக்கிறது….” இதுதான் ஒன் லைன்… …. இதுல அமானுஷ்யம் எங்கேயும் இல்லை… பார்க்கலாம்… இப்படிதானே அவன் எல்லாக் கதைகளையும் ஆரம்பிக்கிறான்…. ஆனால் எழுதி முடித்து அச்சாகி வரும் போது.. அது அமானுஷ்யக் கதையாக முடிந்து, பலத்த ஆதரவையும் பெற்று விடுவதன் முடிச்சை இன்று எப்படியாவது அவிழ்ந்து விட வேண்டும் என்றுதான் இதோ எழுதிக் கொண்டிருக்கிறான்….

அவன் எழுத எழுத அந்த அறை ஒரு வித இளஞ்சிவப்புக்குள் இருந்து கொண்டிருப்பது போன்ற ஒரு நொடிநேரப் பயணங்களை உணர முடிந்தது…..முன் அறையில் யாரோ இருப்பது போல தோன்றும் நிமிடங்கள் வரத் தொடங்கியது…. கண்டிப்பாக தெரியும்…. தெரிவது போல ஒரு கண்டிப்பும் இருக்கத்தான் செய்தது….. மனமெங்கும்.. மூளையெங்கும்… அறையெங்கும்… சொட்டு சொட்டாய் கொட்டிக் கொண்டேயிருக்கும் இருளின் ஊடாக.. நிழலற்ற ஒன்றாய் ஏதோ நடப்பதும், இருப்பதும்… அமர்வதும்..என்று சூழல் சூழ்ந்து கொண்டேயிருந்தது….. அவன் விரல்களில் எழுதுகோல், நாட்டியம் ஆடுவதைக் கண்டு கொண்டே யாரோ கை தட்டுவது போல… மூச்சடைத்த காற்றின் வேகம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வேகமாய் சுழலத் தொடங்கியது…..

கதையை முடித்து விட்டு… தலை நிமிர்ந்தான்….. அதுவரை அவனை யாரோ பார்த்து கொண்டு நின்றுது போல ஏதோ ஒன்று சட்டென மறையத் தொடங்கியது… மறைவதும் தோன்றுவதும் என்ன வகை கட்சி பிழைகள் என்று யோசித்துக் கொண்டே படிக்கத் தொடங்கினான் எழுதிய கதையை… திக் திக் நொடிகளுக்குள் பக் பக்.. பட படப்புடன்…. அப்படி எதுவும் இருந்து விடக் கூடாது.. என்ற பயத்துடன் படிக்கத் தொடங்கினான்……. கதை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது……

“தமிழ்நாட்டில் எழுத்தாளனாய் இருப்பதை போல ஒரு சாபம் வேறொன்றுமில்லை……. அயல் தேசத்தார் எழுத்தாளனைக் கொண்டாடுகிறார்கள்.. இங்கோ.. ‘ஏன் நல்ல படிக்க மாட்டியா…….(?) எழுத போய்ட்ட’ என்கிறார்கள்.. அட முட்டாள்களே… எழுதுபவன்… ஆக சிறந்த படிப்பாளியாகத்தான் இருக்க முடியும்.. படிப்பு என்பதே பள்ளி, கல்லூரி, முனைவர் பட்டம் என்று நினைக்கும் கூமுட்டைகளுக்கு எங்கு இருந்து கதையை ஆரம்பிப்பது….?”

படிக்க படிக்கவே அவ்வப்போது திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டான்… அவன் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்.. இருளுக்குள் ஒரு வெளிச்சம் இடம் மாறிக் கொண்டே இருப்பதை உணர முடிந்தது…. நன்றாக தெரிந்தது, முதுகுக்கு பின்னால் யாரோ அமர்ந்திருப்பது…!!!!

விட்ட இடத்திலிருந்து மீண்டும்.. படிக்கத் தொடங்கினான்… அவன் கண்கள் இன்னும் கூரானது….

“இல்லை இது நான் எழுதவில்லை…. நான் எழுதவில்லை…நான் எழுதவே இல்லை… ஒரு வேளை எழுதியிருப்பேனோ…?” அவன் யோசித்தான்..

சற்று கடந்து விட்ட கணங்களை பின்னோக்கி வலுக்கட்டாயமாக இழுத்து வந்து பிரித்துப் பார்த்தான்.. இல்லை.. அவன் எழுத வந்தது… “நாவல் பிரசுரம் ஆகாத மனநிலை, மெல்ல மெல்ல மனப் பிறழ்வுக்குள் போவது பற்றி ..” ஆனால் எழுதி இருப்பது……, அவன் கோபத்தில் தன் தலையை சுவற்றில் ஓங்கி ஓங்கி முட்டுகிறான்…. அவனோடு.. யாரோ இருக்கிறார்கள்.. அவனை ‘போ..போ.. போய்.. தூக்கில் தொங்கு, தொங்கு’ என்று கொக்கரிக்கிறார்கள்.. அந்த அறையே மெழுகுவர்த்திகளால் நிறைந்து காணப் படுகிறது ..

‘மரணத்தைப் போல ஒரு ஜோதி எங்கும் இல்லை.. போ.. உன் மரணத்தை நடத்து..அது ஒரு கொண்டாட்டம்.. விழா எடு… அழகான உயர் தர கயிறு கொண்டு உன் கழுத்தில் சுருக்கு போட்டுக் கொள்…மிக மிக மென்மையாக சுருக்கில் தொங்கு.. கால்களை பட படவென உராயாதே… கழுத்து இறுகும் போது, நுண்ணிய நரம்புகள் அறுபட அறுபட அதை அனுபவி… உணர்… மரணத்தை உள் வாங்கு.. பயப்படாதே.. “காலா சற்றே என் காலடியில் வாடா.. சற்றே உன்னை மிதிக்கிறேன்..” என்பது போல.. மிதி… சிரி.. கண்கள் வெளியே தள்ளும்… விடாதே.. நாக்கு வெளியே வரும் விடாதே… அற்புதமான கணங்களை கடந்து செல்… உன் சுதந்திரம் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது….. போ…”- சொல்வது சாத்தனா கடவுளா.. என்று திரும்பிப் பார்க்கையில்… நடுக்கம்,உடம்பு, மூளை, மனம் எங்கும்……

அந்த அறையில் நீண்ட நெடிய இரைச்சல் ஓங்காரமிடத் தொடங்கியது……… கதை முடிந்த இடத்தில்… ‘பிரான்சிஸ் எடின் பாரோ” என்று கையொப்பம் இட்டு… 20 10 1870 என்று எழுதி இருந்தது…. இன்னும் தூக்கி வாரிப் போட்டது… எதிரே இருந்த கேலண்டரில் 20 10 2014 என்று இருந்தது….. தலை சுற்றியது…… எழுதிய கதையில் பாதியை அவன் எழுதவேயில்லை… என்று உணர உணரவே…….

யாரோ கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது….

திறந்து கொண்டு கையில் விருதோடு உள்ளே வந்த பிரான்சிஸ் எடின் பாரோ.. … இருட்டு வீட்டுக்குள் ஜன்னல் வழியே தெரிந்த வெளிச்சத்தில் கிடந்த காகிதங்களைக் கண்டான்……

“இன்னைக்கு எழுதி பார்த்து, ஏன் எல்லாமே அமானுஷ்யக் கதைகளா ஆகுதுன்னு கண்டு பிடிச்சிடனும்” என்று முணங்கிக் கொண்டே எழுதத் தொடங்கினான்…..

காகிதத்தில் ஏற்கனவே பதிந்திருந்த எழுத்துகள் உயிர் பெறத் தொடங்கின….அவன் பின்னால் யாரோ அவனைப் பார்த்துக் கொண்டே நிற்கிறார்கள்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *