சற்றே இளைப்பாற

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 41,747 
 

பந்தலடியில் இருந்து காந்தி ரோடில் வடக்கு நோக்கித் திரும்பி கொஞ்சதூரம்தான் நடந்திருப்பேன். சட்டென்று மின்விளக்குகள் அணைந்து தெருவே இருளில் மூழ்கியது. யாரோ ஒரு அம்மா “நாசமாப் போக, இப்படி சொல்லாம கொள்ளாம கரண்ட்ட எடுத்து உயிர வாங்குரானுவோ, புள்ளைங்க பரிட்சைக்குப் படிக்கிறதா வேணாமா?” என்று தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விட்ட சாபம் அசரீரியாகக் கேட்டது.

இரண்டு நாளில் வரும் தோழி வீட்டுத் திருமணத்தைப் பற்றி எண்ணிக்கொண்டே வந்ததால் சரியாக எங்கிருக்கிறோம் என்று கவனிக்கவில்லை. வாணக்கார வீதி பக்கத்தில் வந்திருக்கலாம் எனத் தோன்றியது. எதிர்பாராமல் இருட்டைப் பார்த்ததும் ஆபத்து என்றால் உதவிக்குக் கூப்பிட வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் எச்சரிக்கையாகக் கையில் கைபேசியை எடுத்துக் கொண்டேன். கைபேசி மணி மாலை 7:33 எனக் காட்டியது. தெரு முழுவதும் மங்கலாகத் தெரிந்தது. யாரோ இரண்டு இளவட்டங்கள் நாளைக்கு வெளியாகப் போகும் படம் ஒன்றைப் பற்றிய தீவிர விவாதத்தில் இருந்தவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைப் பார்த்ததும் சிறிது நிதானித்துத் திரும்பி திரும்பிப் பார்த்துவிட்டு, குரலைத் தாழ்த்திப் பேசிவிட்டு, மீண்டும் திரும்பிப் பார்த்தார்கள். கொஞ்ச தூரம் போனவுடன் நின்றுவிட்டார்கள்.

தனியாக வரும் ஆள் என்பதால் கொள்ளை அடிக்கலாம் எனத் திட்டம் போடுகிறார்களோ? எதிர்பாராமல் இருளை சந்திக்க நேர்ந்ததால் நானும் அச்சத்தில் என் பங்குக்கு மின்சார வாரியத்தை மனதில் திட்டினேன். என்னையறியாமல் என் கை தோள்பையின் கைப்பிடியை இறுகப் பற்றியது. மேற்கொண்டு நடந்தால் அவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் நல்லவர்களா? அல்லது இருளைப் பார்த்ததும் அவர்களுக்கு மனதில் கெட்ட எண்ணம் எதுவும் துவங்கி விட்டிருக்குமோ? என எண்ணி என் நடையில் தயக்கம் ஏற்பட்டது.

அப்பொழுது “எங்கம்மா போறீங்க?” என்ற ஆண் குரல் பின்னாலிருந்து கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. அதிர்ச்சியுடன் திரும்பியபொழுது பின்னால் ஒருவர் லைட்டரை க்ளிக் செய்து சிகரட்டைப் பற்ற வைத்தபடி இருப்பது தெரிந்தது. லைட்டர் வெளிச்சத்தில் அவர் மிக வயதானவர் என்று தெரிந்தது. வெள்ளெழுத்து கண்ணாடியும், முற்றிலும் நரைத்த முடியுமாக, வெட வெட என்று ஒடிசலாக, உயரமாக இருந்தார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, கையில் ஒரு கைத்தடி, தோளிலும் ஒரு துண்டு. வயது அறுபத்தி ஐந்து அல்லது அதற்கு மேலும் இருக்கலாம், புகையை மெதுவாக உள்ளிழுத்தார்.

மற்ற நேரத்தில் நான் எங்கே போகிறேன் என்பது உங்களுக்கு அநாவசியம் என்றோ, இல்லை முறைத்துப் பார்த்து விட்டோ போகும் எனக்கு அவர் துணையாக வருவாரா என்ற ஆசையில் “இங்கே உள்ளூர் காலேஜ்ல லெக்ச்சரரா இருக்காங்க சித்ரான்னு ஒருத்தங்க, அவங்க வீட்டுக்குப் போறேன், திருப்பாற்கடல் தெருவில், லக்ஷ்மி நாராயணா கோயில்தாண்டி கொஞ்ச தூரம் தள்ளி வீடு” என்றேன்.

“அட நம்ம வீட்டு பக்கந்தானா? அப்போ, வாங்க நாம பேசிக்கிட்டே போகலாம்” என்றார். இருவரும் சேர்ந்து அந்த இளவட்டங்களைத் தாண்டி நடந்தோம். இருளில் இளவட்டங்களின் முகபாவம் சரியாகத் தெரியவில்லை. என்னைத் தாக்கலாம் என்று எண்ணியிருந்திருந்தால் அவர்கள் எண்ணத்தில் மண் விழுந்து ஏமாந்து போயிருப்பார்களோ?

தாத்தா மீண்டும் புகையை உள்ளிழுத்தார். “யார் வீடும்மா நீங்க? நான் உங்கள இந்தப் பக்கம் பார்த்ததே இல்லியே” என்றார்.

“நான் சென்னையிலிருந்து வரேன் சார். நீடாமங்கலத்தில என் ஃப்ரெண்ட் வீட்டு கல்யாணம், அவ எனக்கு ஒருவகையில தூரத்து சொந்தம். அவளும், நானும், இங்க திருப்பாற்கடல் தெருவில இருக்கிற சித்ராவும் ஒண்ணாவே காலேஜ் வரை படிச்சோம். அதான் இவளும் நானும் சேர்ந்து அவ வீட்டுக் கல்யாணத்திற்கு போலாம்னு ஒரு பிளான்.”

“என்னம்மா வெளியூர்க்காரங்க நீங்க, இப்படி புது ஊருக்கு இருட்டுல தனியா வரலாமா? வண்டி ஏதாச்சும் புடிச்சாவது வரலாமில்ல, வீட்டு அட்ரெஸ் ஆவது சரியாத் தெரியுமா?”

“இல்லேங்க, வண்டி ஏதும் கிடைக்கல, காத்திருக்கிறதுக்குப் பதில் இருபது நிமிஷம்தானே நடந்திடலாம்னு நினைச்சேன். அத்தோட பஸ்ல வந்தப்ப கால ஒரே இடத்தில வச்சி நோவுது, நடந்தா கொஞ்சம் நல்லா இருக்குமேன்னு தோணிச்சு. எனக்கு ஊரு புதுசில்லீங்க, நான் இந்த ஊர்ல கொஞ்ச வருஷம் இருந்திருக்கேன், கான்வெண்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். அப்பதான் சித்ரா ஃப்ரெண்ட்டானா. அப்பாவுக்கு கான்பூர்ல மாற்றலாகிப் போனதும் நானும் அண்ணனும் இங்கே பெரியப்பா வீட்ல தங்கி கொஞ்சநாள் படிச்சோம்.”

“அண்ணனா? அவர் எந்த ஸ்கூல்மா? ஃபின்லே ஸ்கூல்லா?”

“இல்ல சார், நேஷனல் ஸ்கூல், பங்குனி தேர்த் திருவிழால ஸ்கூல் பிள்ளைங்களோட தேரெல்லாம் இழுத்திருக்கான்”

“ஆமாம் அந்த ஸ்கூல் பிள்ளைங்க தேர் இழுக்கிறது வழக்கம்தான், ஏம்மா நீங்க உங்க பெரியப்பா வீட்ல போய் தங்கலியா? அவங்க வீடு எங்கிருக்கு?”

“பெரியப்பா போனதற்கு அப்புறம் பெரியம்மா குடும்பத்தோட அவங்க சொந்த ஊர் திருத்துறைப்பூண்டிக்குப் போய்ட்டாங்க, இப்போ இங்கே யாருமில்ல. காசுக்கார செட்டித் தெருல ஒரு பெரிய வீட்ல இருந்தோம். வீட்டு வாசல் இருக்கிறது ஒரு தெருன்னா, கொல்லைபக்கம் இருக்கிறது பின்புறத் தெரு. பின்னாடி கதவ திறந்தா அப்படியே கல்கி தியேட்டருக்குப் படம் பார்க்கப் போய்டலாம்”

“இப்ப கல்கி தியேட்டருக்குப் பதில் அங்க பெட்ரோல் பங்க்தான் இருக்கு. உங்க கான்வெண்ட் ஸ்கூல் ஒரு காலத்தில அங்க பின்புறத் தெருவில் இருக்கிற பழனி ஆண்டவர் தீர்த்த குளம் பக்கம்தான் ஒரு சின்னக் கட்டடித்தில இருந்திச்சு, அது ஐம்பதுகளில். அப்புறம்தான் பஸ் ஸ்டாண்ட் பக்கம் போய்ட்டாங்க.”

“ஆமாம் சார் கேள்விப் பட்டிருக்கிறேன்”

பேசிக்கொண்டே யானை வாகன மண்டபம் தாண்டி, கோவிலையும் தாண்டி வந்து விட்டோம். தாத்தா மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து, லைட்டரை கிளுக்கினார். சங்கிலித் தொடராக தொடர்ந்து புகைக்கும் பழக்கம் போலிருக்கிறது. மீண்டும் லைட்டர் வெளிச்சத்தில் அவர் முகம் தெரிந்தது. அவர் மூக்கு கருடாழ்வார் மூக்கு போலிருந்தது. எங்கேயோ பார்த்த சாயலும் இருந்தது. அவர் லைட்டர் புராதனக் கலைப் பொருள் போல அலங்காரத்துடன் இருந்தது. வெள்ளியில் செய்ததாக இருக்கலாம். நான் பார்ப்பதை அவரும் கவனித்தார்.

“என்னம்மா பாக்கறீங்க, சற்றே இளைப்பாற” என்று அந்தக்கால ‘சார்மினார் சிகரெட்’ விளம்பரம் போல் தன் கையை ஸ்டைலாக ஆட்டி சொன்னார்.

இப்பொழுது என் கண்கள் கோவில் வரிசையில் இருந்த இருளில் மூழ்கியிருந்த வீடுகளைப் பார்க்க ஆரம்பித்தது.

“என்ன பாக்கறீங்க? உங்க சித்ரா வீடு இங்க இல்லை”

“ஆமாம் சார், இன்னம் கொஞ்சம் தூரம் போகணும்” மீண்டும் என் கண்கள் அந்த பக்கமே போனது.

“என்ன? அப்புறம் என்னம்மா பாக்கறீங்க அங்கே?”

“வந்து …இந்த வீடுங்களுக்குப் பின்னாடிதான பாமினி ஆறு ஓடுது?”

“ஆமாம்”

“சின்ன வயசில ஸ்கூல்ல பேசிப்பாங்க, இங்க ராத்திரில பேய் துணி தோய்க்கிற சத்தம் கேக்கும்னு,” மெதுவாகத் திக்கி திக்கி சொன்னேன்.

தாத்தா சத்தமாகச் சிரித்தார். “என்னம்மா பேய்க்கு வேற வேலையில்லையா? துணி தோய்க்கிறதுதான் வேலையா? படிச்சவங்க நீங்க இப்படி பேய்க்கு பயப்படலாமா? இப்ப என்னோட வர்றீங்கல்ல, அப்புறம் பாருங்க பேய் பிசாசுக்கெல்லாம் பயப்படலாமா? கூடாதான்னு? உங்களுக்கே நல்லாப் புரியும்”, என்று சொன்னவர் அவர் கைத்தடியை உயர்த்தி ஒரு வீட்டை சுட்டிக் காட்டி இதுதான் நீங்க சொன்ன வீடு இல்லையா?” என்றார்.

அவர் கைத்தடியை உயர்த்தவும் மந்திரம் போட்டது போல் மின்சாரம் வந்து, எங்கும் விளக்குகள் எரிந்து ஒளி வரவும் சரியாக இருந்தது. அவர் கைத்தடியும் மயில்தலை போன்ற முகப்பு வைத்து அழகாக இருந்தது. அவருக்கு நன்றியும், குட் நைட்டும் சொல்லிவிட்டு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்து அழைப்பு மனியணியை அழுத்தினேன்.

“வா, உமா, வா, வா, நீதான் கரெண்ட் கொண்டு வந்த மகராசியா? ஏன் இவ்வளவு லேட்டு? எதுக்கு நடந்து வர்ற?” என்று மூச்சு விடாமல் கேள்வி கேட்டாள் சித்ரா. அவள் பெண் செல்வியும், கணவரும் கரெண்ட் வந்ததும் டி. வி. பார்க்க ஓடிவிட்டார்கள். கேம் என்ன ஆயிற்றோ என்ற கவலை அவர்களுக்கு. சித்ராவின் கணவர் சின்னத் திரையில் இருந்து பார்வையைத் திருப்பாமலே “வாங்க” என்றார். அவர் வரவேற்றது என்னையா? அல்லது டி. வியில் தோன்றிய கிரிக்கெட் வீரர்களையா என்று குழப்பமாக இருந்தது.

அந்த வீடு மிகப் பழைய வீடு. சித்ராவிற்கு அவள் பாட்டியிடம் இருந்து பூர்வீக சொத்தாகக் கிடைத்தது. எப்பொழுதோ பள்ளி நாட்களில் அவள் வீட்டிற்கு வந்த பொழுது பார்த்தது போலவே இப்பொழுதும் இருந்தது. நான் பெரியப்பா வீட்டில் தங்கி படித்து போல், அவள் தன் பாட்டியின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தாள். அவள் பெற்றோர்கள் துபாய்க்குப் போய்விட்டிருந்தார்கள். எங்கள் இருவருக்கும் இருந்த வளர்ப்பு சூழலின் ஒற்றுமை எங்கள் நட்பை வளர்த்து, கல்லூரி வரை தொடர்ந்து பலப் படுத்தியிருந்தது. சித்ராவின் தங்கையையும், பாட்டியையையும் தவிர இதுவரை யாரும் அவள் குடும்பத்தில் எனக்குப் பரிச்சயமில்லை. தாத்தா, பாட்டி மறைவுக்குப் பிறகு, இதே ஊர்க்காரருடன் திருமணமானதால் பாட்டியின் அதே பழங்காலத்து வீட்டினில் நவீன வசதிகள் செய்து குடியிருக்கிறாள்.

சமையலறையில் அவள் சுட்டுக் கொடுத்த தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, என்னுடன் அரட்டை அடித்தவண்ணம் நான் வழியில் வாங்கி வந்த இனிப்புகளை சித்ரா சுவைத்துக் கொண்டிருந்தாள்.

அரட்டை போதும் தூங்கலாம் என முடிவெடுத்தவுடன், பாத்ரூம் எங்கிருக்கிறது எனக் காட்டிவிட்டு, கூடத்திற்கு பக்கத்திலிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு ஒற்றைப் படுக்கையுடன், அது ஒரு அலுவலக அறை போலவோ, படிக்கும் அறை போலவோ அல்லது நூலகம் போலவோ இருந்தது.

“செல்வி இன்னைக்கு எங்களோட படுத்துப்பா, இது அவளோட ரூம், நீ இங்கேயே படுத்துக்கோ, நைட்டி ஏதும் வேணுமா?”

“நானே கொண்டு வந்திருக்கிறேன்”.

என் தோள் பையை மேஜை மேல் வைத்து நைட்டி ஒன்றை உருவி நாற்காலியில் போட்ட பொழுது மேஜை மேல் பேழை போன்றிருந்த ஒரு மரப் பெட்டியில் அந்த வெள்ளி லைட்டரை மீண்டும் பார்த்தேன். உடனே கையில் எடுத்தேன்.

துணைக்கு வந்த தாத்தா வைத்திருந்தது போலவே இருந்தது. “சித்ரா இந்த லைட்டர் ….” என்று ஆரம்பிக்குமுன், சித்ரா அதை வாங்கி “இது வேலை செய்யாது, பழசு, தாத்தாவோடது, அவருக்கு யாரோ பரிசா கொடுத்தது, அவரோட ஃப்பேவரிட் லைட்டர்” என்று சொல்லியதுடன் நிற்காமல் அதை கிளிக் செய்து சிகரட் பற்ற வைப்பதுபோல் பாவனை செய்து “சற்றே இளைப்பாற” என்று ஸ்டைலாக சொன்னாள். உடனே மகள் ஏதும் தன் செய்கையை பார்த்து விட்டிருப்பாளோ என்று அவசரமாகக் கூடத்தையும் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். அவள் பார்வையைத் தொடர்ந்து சென்ற என் பார்வை கூடத்திற்கு போகும் வாசல் கதவின் மேல் மாட்டியிருந்த அந்த படத்தைப் பார்த்ததும் நிலை குத்தி நின்றது.

அங்கே அந்த துணைக்கு வந்த தாத்தாவின் படம் நெட்டி மாலை போட்டு, குங்குமப் பொட்டு வைத்து மாட்டப் பட்டிருந்தது. பக்கத்தில் அந்த மயில்தலை முகப்பு வைத்த கைத்தடியும் அலங்காரமாக வைக்கப் பட்டிருந்தது.

“சித்ரா இது…இது..யார் படம்?” என்றேன் உதறும் கைகளை கட்டுப் படுத்த முடியாமல். “செத்துப்போன என் தாத்தா படம், அவர் இருந்த பொழுது இது அவர் ரூம்தான்” என்றாள், அதே கருடாழ்வார் மூக்கு சாயலை உடைய சித்ரா.

“இப்ப என்னோட வர்றீங்கல்ல, அப்புறம் பாருங்க பேய் பிசாசுக்கெல்லாம் பயப்படலாமா? கூடாதான்னு? உங்களுக்கே நல்லாப் புரியும்,” என்று தாத்தா சொன்னது மீண்டும் காதில் ஒலிக்க, “பே..பே..பேய்….பே..பே..பேய்” என்று உடல் உதறலுடன், வாயும் உளற ஆரம்பித்தது எனக்கு.

“ஏய் …ஏய் என்னாச்சு உனக்கு, என்ன சொல்றே?” என்று சித்ரா என்னை உலுக்கினாள்.

“அம்மாடி, இந்தால பாரு… என்னாச்சு… என்னாச்சு?” என்று பக்கத்திலிருந்த வயதான அம்மா உலுக்கவும் கண்விழித்தேன். அப்பொழுதான் இன்னமும் பஸ்சில் இருப்பதும், தூங்கியிருப்பதும் புரிந்தது. தோழி வீட்டுக் கல்யாணத்திற்கு வந்த வழியில் உள்ள ஊர்மக்கள் திடீரென போராட்டம் நடத்தி பேருந்துகளை நிறுத்திவிட்டார்கள். வால் போன்று நீண்டிருந்த பேருந்துகள் வரிசையில் கடைசியாக நின்றிருந்த எங்கள் வண்டிக்கும் பின்னே, இன்னமும் வால் வளர்ந்து விட்டது போல் மேலும் பல வண்டிகள் இப்பொழுது நிறுத்தப் பட்டிருந்தது. வாகாக ஒரு மரத்து நிழலில் வண்டி நின்றதால், சிலு சிலுவென்று வீசிய காற்றில் தூங்கியதுடன் நிறுத்தாமல் கனவு வரை போய் உளறி இப்பொழுது மானம் போகிறது.

மணி என்ன இருக்கும் என கைபேசியை எடுத்து நேரம் பார்த்தேன். இந்நேரம் ஊர் போய் சேர்ந்திருக்க வேண்டும். இன்னமும் எவ்வளவு நேரம் ஆகுமோ என்ற தவிப்பு வந்தது. பக்கத்தில் இருந்த அம்மா நான் உளறியதைப் பார்த்து சிரிக்கிறாரோ என்ற சந்தேகத்தில் கைபேசியை மெதுவாக திருப்பி அதில் அவர் பிரதிபலிப்பை பார்த்தேன். அவர் ஏதோ புத்தகம் படிப்பதில் மூழ்கியிருந்தார்.

யார் யாரோ பெரிய தலைகள் வந்து, ஊர்மக்களை சமாதனம் செய்து, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவாதாக வாக்குறுதி கொடுத்து ஒரு வழியாகப் போராட்டம் கைவிடப் பட்டது. வண்டி மெல்லக் கிளம்பி ஊர் வந்து சேரும் பொழுது சூரியன் மறைந்து தெரு விளக்குகள் ஒளிர ஆரம்பித்தது. நின்றிருந்த ஒன்றிரண்டு வண்டிகளையும் மற்றவர்கள் பிடித்துவிட, மற்ற ஆட்டோவோ, ரிக்க்ஷாவோ எதுவும் கண்ணில் படவில்லை.

சித்ரா வீட்டிற்கு போகும் வழியில் அவளுக்கு பெரியக்கடைத்தெருவில் இருக்கும் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடையில் இருந்து பக்கோடா, பலகாரம் எல்லாம் வாங்கிக் கொண்டு பிறகு வண்டி பிடித்துக் கொள்ளலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். பலகாரமும் வாங்கியாகிவிட்டது, ஆனால் வழியில் வண்டி எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து நடந்து பந்தலடியும் தாண்டி காந்தி ரோட்டில் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். சட்டென்று மின்சாரம் நின்றுபோய் விளக்குகள் அணைந்து தெரு இருளில் மூழ்கியது.

குறிப்பு:
இக்கதை “வகுப்பறை” தளத்தில் வெளியிடப்பட்டது

Print Friendly, PDF & Email

3 thoughts on “சற்றே இளைப்பாற

  1. தங்கள் கதை மிக இயல்பாய் எழுதப்பட்டுள்ளது.நல்ல திருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *