அன்புள்ள அமானுஷ்யம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 60,853 
 

இராமநாதபுரம் மாவட்டத்தின் நகர்ப்புற பகுதி என் தெரு. அந்த அக்காவின் பெயர் சாயா. அவங்க ரொம்ப பாசமானவங்க, யாரு மேலயும் கோபத்தைக் காட்டி கூட நான் பார்த்ததில்லை. அவங்க அம்மா ஒரு பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். கடைக்கு வரும் அனைவரிடமும் சாயா அக்கா இன்முகத்தோடு நலம் விசாரிப்பாங்க, பார்க்கவும் அழகான தோற்றம் கொண்டவங்க.

நான் சிறுவயதில் ஜவ்வு மிட்டாய், கல்கொனா, கொக்கோச்சி, கடலை மிட்டாய், தேன் மிட்டாய், அலாவுதீன் மிட்டாய் மற்றும் பன்னீர் சோடா என எது வாங்க வேண்டுமானாலும் அங்கு தான் செல்வேன். மேலும் அவங்க நமக்கு சொந்தக்காரங்க என்பதால் சில நேரங்களில் அம்மா பிறகு காசு தருவார் என்று கடன் கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இப்படி சிறுவயதில் வாங்கித்தின்ன செலவுக்கு கொடுக்கப்படும் சில்லரைகளில் பல அந்த கடையைத் தான் சென்றடையும்.

அந்த கடையின் எதிர்ப்புறம் இரண்டாவது வீடு என் பெரியப்பா வீடு. பொதுவாகவே நான் ஞாயிறு மற்றும் பிற பள்ளி விடுமுறை நாட்களில் என் பெரியப்பா வீட்டிற்கு காலையில் செல்வதுண்டு. அங்கு சென்று என் அக்காவுடன் எதாவது விளையாடுவேன் அல்லது பேசிக்கொண்டிருப்பேன். சில சமயங்களில் என் அண்ணனும் என் சித்தப்பா பசங்களும் அங்கு விடுமுறை நாட்களில் வருவது வழக்கம். என் வீட்டிற்கும் என் பெரியப்பா வீட்டிற்கும் பெரிய தொலைவு ஒன்றும் இல்லை. ஒரு 100 மீட்டர் தொலைவு தான்.

வழக்கமாய் வரும் இனிய ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு கொடிய மற்றும் கரிய ஞாயிற்றுக்கிழமை ஆகிவிடும் என்று நினைக்காமல் வழக்கம்போல் காலையில் தலைக்கு குளித்துவிட்டு காலை உணவை முடித்துவிட்டு என் பெரியப்பா வீட்டிற்கு சென்றேன்.

நான் ஒரு பெருந்தீனி என்பதால் கடையை கடக்கும் போதெல்லாம் எதாவது சுவைக்க வாங்காமல் செல்வதில்லை. சரி ஒரு ரூபாய்க்கு நான்கு சிறிய தேன்மிட்டாய் வாங்கலாம் என்று காசைக் கொடுத்துவிட்டு, நமக்கு மூன்று அக்கா உஷாவிற்கு ஒன்று என்று மனக்கணக்கெல்லாம் போட்டுக்கொண்டு இருந்தேன். அந்த நேரம் வழக்கமாய் அந்த கடைக்கு பன்னீர் சோடா போடும் அண்ணன் கடையில் காலி பாட்டிலை எண்ணி எடுத்துக்கொண்டு புதிய பாட்டிலை ஐஸ் பெட்டியினுள் வைத்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் அக்கா உங்கள் வீட்டின் பின்புறம் ஏதோ புகை வருவது போலத் தெரிகிறது என்று கூறினார், அதே நேரத்தில் நான் 4 தேன்மிட்டாய்களையும் கையில் வாங்கிக்கொண்டு எதிர்புறம் இருந்த பெரியம்மா வீட்டிற்குள் நுழைந்தேன். நான் நுழைந்த அந்த நேரமும் அந்த சாயா அக்கா உடம்பில் நெருப்புடன் அவர்களது வீட்டினுள் இருந்து வெளியே வந்த நேரமும் ஒன்று.

சிறிது நேரத்தில் என் பெரியப்பா வீட்டிற்க்குள் வந்தவர் கண்ணீருடன் தரையில் வீழ்ந்து அழுகிறார் யார் என்று கூட அறியாமல். அதே நேரத்தில் என் அப்பா காலை உணவிற்காக கடையில் என் அண்ணனை வைத்துவிட்டு அந்த தெருவின் சாலையில் வந்து கொண்டிருக்கிறார். எரிந்து வெளியே வந்த சாயா அக்கா மாமா காப்பாத்துங்க என்று என் தந்தையை அழைத்தும் வேதனையில் நெருப்புடன் துடித்திருக்கிறார். சிறிது நேரத்தில் சாக்கைக் கொண்டு சுற்றி நெருப்பை அனைத்து கனல் தின்ற அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

சிறிது உயிருடன் சாயா அக்கா பட்ட கடைசி வேதனை எல்லாம் ஐயோ பிரபு அண்ணன் வந்தா என்னைய திட்டுமே என்பது தான். பிரபு என்பவர் சாயா அக்காவின் அண்ணன். அன்றே மதியம் அக்காவின் “உடல் மட்டும்” இவ்வுலகை பிரிந்தது.

என் பெரியப்பா வீட்டிற்கும் என் வீட்டிற்கும். குறுக்குப்புற ஒரு சிறிய சந்தின் வழியே செல்லவும் ஒரு வழி உள்ளது அது குறுகியது சில சமயங்களில் அது மிக மோசமான குறுக்கம் என்பதால் இரவு நேரங்களில் யாரும் அதை பெரிதளவு உபயோகிக்காமல் பகலில் மட்டும் உபயோகிப்பது உண்டு. அதன் வழியே வந்து என் அம்மா விபத்து நடந்த அக்கணமே என் தலையில் அம்மாவின் சேலையைக் கொண்டு மூடி என்னை அந்தக் குறுக்குசந்தின் வழியே என் வீட்டிற்க்கு அழைத்துச் சென்றார், காரணம் அந்த அக்கா எரிந்த பகுதியை நான் பார்த்து பயந்துவிடக் கூடாது என்பது தான்.

நான் வீட்டிற்க்கு சென்ற பின்பே மேலே நான் கூறிய விஷயங்களை அம்மாவிடம் கேட்டு அறிந்தேன். என் பெரியம்மா வீட்டில் இருந்தவரை நான் என்ன நடந்தது? யாருக்கு நடந்தது? என்பதை அறியாமலே இருந்தேன்.

பிறகு இதற்கு காரணம் என்ன என்பதை நான் விசாரித்தேன். சாயா அக்கா மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், சரியாக உணவு அருந்துவதில்லை அதனால் தான் இப்படி வியாதி எல்லாம் வருகிறதென்று அக்காவின் பெற்றோர்கள் சிறிது பேச்சில் கண்டித்ததாலும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பை பற்ற வைத்துக்கொண்டதாக தகவல் என் காதை எட்டியது. பிறகு இந்தப் பேச்சுதான் ஊரில் ஒரு வாரத்திற்கு உலவியது, இது வழக்கமாய் எல்லா ஊரிலும் நடப்பது தான். பிறகு தெரு இயல்பு நிலை அடைந்தது. அப்படியே நகர்ந்த நாட்கள் வெகு தொலைவை அடையவில்லை.

என் பெரியப்பா வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு செல்ல எதிர்ப்புறம் இருக்கும் குறுகிய சந்து போல பெரியப்பா வீட்டின் பக்கத்து வீட்டிலும் அவர்களது வீட்டின் பின்புறம் செல்ல ஒரு சந்து உண்டு. பக்கத்து வீட்டுக்கார அத்தை மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கழிவறை செல்ல அந்த சந்தின் வழியே தான் பின்புறம் செல்ல வேண்டும்.

அப்படி ஒருநாள் நள்ளிரவில் அத்தையின் மகன் பாண்டி வழக்கம்போல கழிவறை செல்லும் வழியில் சாயா அக்காவின் உருவம் கண்டு பயந்து அடித்துக்கொண்டு வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளார். இந்த நிகழ்வு ஊரெல்லாம் பரவ ஒரளவு ஊரே மிரள ஆரம்பித்தது. சரி ஏதாவது பிரம்மையாக இருக்கும் என்று சில மக்கள் நம்பிக்கையோடு இருந்தனர். அது ஒன்றும் அதிகநாள் நீடிக்கவில்லை.

மற்றொரு நாள் இரவில் பாண்டி அண்ணனின் சித்தப்பா பையன் கார்த்தியை சாயா அக்கா அழைத்துள்ளார், அவரும் அக்காவின் உருவம் கண்டு மிரண்டுபோய் வீட்டிற்குள் பயந்து சென்றுவிட்டார். ஊரெங்கும் இந்தப் பேச்சு மேலோங்கியது. பாண்டி அண்ணனின் வீடு, கார்த்தி அண்ணனின் வீடு, என் பெரியப்பா வீடு, சாயா அக்காவின் வீடு அனைத்தும் ஒரு 100 மீட்டர் பரப்பில் அமைந்த வீடுகள் தான். சாயா அக்கா எரிந்த அந்த இடம் தெருவின் மைய நேர் சாலை மற்றும் ஒரு பிரிவு சாலை சந்திக்கும் ஒரு முச்சந்தி, அது மிகவும் ஆபத்தான இடமாக தெருவில் கருதப்பட்டது.

அடுத்து எங்கள் தெருவின் கடைசியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் இருந்த ஜெசிமா என்ற அக்கா கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாயிருக்கிறார். திடீரென இரவில் அவர் கதவை அடைத்துக்கொண்டு ஐயோ எனக்கு உடம்பெல்லாம் எரிகிறதே என்று கதறியுள்ளார். சாயா அக்காவின் ஆன்மா அவரைத் தழுவியதாக ஊரெல்லாம் நம்பப்பட்டது.

பிறகு என் உறவு முறையில் ஒரு அக்காவிற்கு திடீரென ஒரு நோய். அவரை எங்கெல்லாமோ பல மருத்துவமனைகளில் காட்டியும் கூட சரிவர குணப்படுத்த முடியாமல் இறுதியாக சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த பொழுது சாயா அக்காவின் உடன்பிறந்த மூத்த அக்கா உறவினர் முறையில் சந்திக்க வந்த பொழுது மிகவும் கோபப்பட்டுள்ளார் அந்த அக்கா எந்த காரணமுமில்லாமல். வந்த அக்கா பயந்து சரியாக கூட நலம் விசாரிக்காமல் ஊருக்கு திரும்பினார். பிறகு அங்கு அருகே இருந்த படுக்கையின் உறவினர் ஒருவர் பள்ளிவாசலில் தொழுகை செய்த நீரை அவர் மீது தெளிக்க அவர் உடல் சிலிர்ப்புற்றதாகவும் சிறிது நாட்களிலேயே அவர்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றமும் காணப்பட்டது, இவரது விஷயத்திலும் சாயா அக்காவின் ஆன்மாவே பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

சரி எல்லாம் சிறிது காலத்தில் மறந்தே போனது. அதன் பிறகு யாரிடத்தும் சாயா அக்கா பற்றி எந்த பேச்சும் இல்லை. எல்லாம் இயல்பானது.

அப்படியிருக்க ஒருமுறை பொழுது சாய்ந்த வேளையில் நான் என் நண்பர்களுடன் அந்த முச்சந்தியில் கோலிக்குண்டு ஆடிக்கொண்டிருந்தேன். அதை நான் ஒரு பொருட்டாக எடுக்கவே இல்லை. ஏனென்றால் என் தெருவில் சீச்சாங்கல்லு, கோலிக்குண்டு, பம்பரம் மற்றும் தெருவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் என அத்தனையும் நடைபெறும் இடம் அந்த முச்சந்திதான்.

அன்று விளையாடி இரவு வீட்டிற்க்கு வந்த எனக்கு அன்றைய இரவு என்ன நடந்தது? ஏது நடந்தது? என்று இன்றுவரை எனக்கே முழுமையாக தெரியாது. என் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் என் அம்மா பயந்து என் அண்ணனை அனுப்பி என் சித்தியை எங்கள் வீட்டிற்க்கு அழைத்து வரச் சொல்லியுள்ளார். அத்தனை தூரம் மோசமான நிலையில் நான் இருந்துள்ளேன். எனக்கு நினைவு தெரிந்தவரை என் தலையினுள் ஏதோ ஒரு பாறை உருண்டதைப் போல மட்டுமே நான் உணர்ந்தேன்.

பிறகு காலை வழக்கமாக செல்லும் மருத்துவரிடம் என்னை அழைத்துச் சென்றனர் அங்கு முகப்பில் இருந்த செவிலியர் என் உடல் வெப்பநிலை 108F என்பதைக் கண்டு மிரண்டு உடனே என் பெற்றோரை சிறிது கடிந்து கொண்டு எனக்கு ஒரு மாத்திரை கொடுத்து பின் படுக்கையில் சேர்த்தனர். அத்தனை ஆய்வுகளும் மேற்கொண்டு இறுதியில் அனைத்து முடிவுகளும் எதிர்மறையாக வெறும் வைரல் காய்ச்சல் என்று 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றி பின் 2 வது நாளில் என்னை வீட்டிற்கு அனுப்பினர்.

இதன் பின் பலமுறை சாயங்கால வேளையில் நான் விளையாட செல்லும்போது என்றும் இல்லாத அளவிற்கு என் அம்மா என்னை போகக் கூடாது என்று கண்டித்தது எனக்கு வியப்பாகவும் புதிதாகவும் தோன்றியது.

இது நடந்து ஒரு 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நானும் என் அம்மாவும் பேசிக்கொண்டிருந்த வேளையில் ஏதோ ஒரு பேச்சில் இந்த நிகழ்வு அடிபட அன்று தான் என் அம்மா கூறினார் நான் உன்னை மருத்துவமனையில் சேர்த்து மறுபுறம் உன் ஜாதகத்தை ஒரு இடத்தில் காட்டி விசாரிக்கையில் உங்கள் மகன் பொழுது சாய்ந்த வேளையில் விளையாட சென்ற இடத்தில் ஒரு எரிந்த கன்னி அவனை தழுவிச் சென்றுள்ளது என்று கூறியுள்ளார்.

எனக்கு ஒட்டுமொத்தமாக தூக்கி வாரிப்போட்டது. இதை ஏன் அம்மா அன்றே என்னிடம் கூறவில்லை என்று கேட்டேன்.

நீ அடிக்கடி பயணிக்கும் இடமல்லவா அதனால் இதை அன்றே கூறியிருந்தால் உனக்கு நாள்தோறும் ஒரு பயம் தொற்றும் என்று பக்குவமாக கூறினார்.

மேலே கூறப்பட்ட அத்தனை நிகழ்வின் காரணங்களும் உண்மையானாலும் சரி, பொய்யானாலும் சரி, என்றும் உங்கள் தூய்மையான ஆன்மாவிற்கு இந்த தம்பியின் மனமார்ந்த தூபாஞ்சலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *