கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 8,738 
 

“அம்மா! அப்பா வந்துட்டாரு” கத்திக் கொண்டே வாசலுக்கு ஓடினாள் முருகன். வாயிலைத் தாண்டி நின்று காலணிகளைக் கழற்ற முயற்சித்த கேசவன் தோளில் தாவினான். “இருடா ஷூவ கழட்ட விடு”, சிரித்தபடி தன் முயற்சியை கைவிட்டு முருகனைத் தூக்கி தோளில் தூக்கி தட்டாமாலை சுற்றினான். சத்தம் கேட்டு பக்கத்து போர்ஷன் அன்னம்மா பாட்டி வெளியே வந்தாள்.

“என்னப்பா கேசவா, மாசமா இருக்குற பொண்ணு, ரெண்டுகெட்டான் வயசுல புள்ள, ரெண்டு பேரையும் விட்டு இப்படி நாள் கணக்கா வேலை வேலைனு அலையுற. அதுக்கு வலி எடுத்தா என்ன செய்யும். எந்நேரமும் பிரசவம் ஆகலாம்னு டாக்டர் அம்மா சொல்லி இருக்காங்க. வயித்த தூக்கிட்டு அது தனியா படர பாடு பாக்க முடியல”

“மகனை கீழே இறக்கினான். அவன் கையில் இருந்த பையைப் பறித்துக் கொண்டு உள்ளே ஓடினான் முருகன்.

“என்ன செய்ய பாட்டி ? எலெக்க்ஷன் நேரம். இன்னும் ரெண்டு நாள் தான். அப்புறம் பிரச்சாரம் நிறுத்திருவாங்க. அப்புறம் ரெண்டு நாள் எலெக்சன் .ஒண்ணும் பிரச்சனை இல்லாம முடிஞ்சா ஒரு வாரத்துல இந்த கெடுபிடி எல்லாம் முடிஞ்சுரும். எனக்கு மட்டும் ஆசையா, இப்புடி போக. பொழப்பு அப்புடி”,

பெருத்து சரிந்த வயிற்றை ஒரு கையால் பிடித்தபடி சாந்தி வெளியே வந்தாள். சோர்ந்து கிடந்த கண்களில் கேசவனைப் பார்த்ததில் ஒரு மின்னல்.

“நீங்க பக்கத்துல இருக்குற தைரியம் தான் பாட்டி. எதாவது ஒண்ணுன்னா நீங்க பாத்துக்க மாடீங்களா ?” சிரித்தபடி அன்னம்மாவை கேட்டான் கேசவன்.

“என்னப்பா இப்படி கேட்டுபுட்டே. அப்பன் ஆத்தா இல்லாத பொண்ணு. உன்னையே நம்பி இருக்குது. நாங்க எத்தனை பெரு பக்கத்துல இருந்தாலும் உன் ஒருத்தன் துணை மாதிரி வருமா? உம்மேல உசுரையே வெச்சு இருக்கு அந்த பொண்ணு”,

“போதும் பாட்டி வந்த புருஷன வாசலோட விரட்டி விட்டுறாத. எனக்கு தெரியும் அவர் வேலை முடிஞ்சு வர வரைக்கும் நான் பெத்துக்க மாட்டேன்”, சாந்தி மெதுவாக வாசலைத் தாண்டி வந்தாள்.

பையில் இருந்த ஸ்வீட் பொட்டலத்தை எடுத்தபடி ஓடி வந்தான் முருகன். “இது எனக்கா அப்பா?’

கேட்ட மகனை அணைத்து முத்தமிட்ட கேசவன்,”அதல இருக்குற எல்லாமே உனக்குத் தான்” என்றபடி உள்ளே நுழைந்தான்.

“ஏய் முருகா, இந்த பாட்டிக்கு கொஞ்சம் குடுடா, என் கூட வா. ஒரு பொம்மை நான் தரேன்” என்றபடி முருகன் கைப்பற்றி தன் போர்ஷனுக்குள் அழைத்துச் சென்றாள் அன்னம்மா.

பத்துக்கு பத்து அறை. அதன் மூலையில் ஒரு கட்டில். பக்கவாட்டில் ஒரு பீரோ. அதை தாண்டி சென்றால் ஒரு சின்ன சமையலறை. பின்புறத்தில் ஒரு பாத்ரூம். கட்டிலில் உக்கார்ந்த கேசவன் உள்ளே போக முயன்ற சாந்தியின் கையைப் பற்றினான்.

“அந்த கிழவிக்கு இருக்கற புத்தி உனக்கு இல்ல. நாள் கழிச்சு வந்த புருஷனோட ஆசையா நீ இருக்கணும்னு புள்ளைய உள்ளே கூட்டிட்டு போய்டுச்சு. நீ என்னடானா உள்ள போற. அவன் வரதுக்குள்ள ஒரு முத்தமாவது தா”.

சிரித்தாள் சாந்தி. மெதுவாகக் குனிந்து அவன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள்.

“இன்னும் ஒரு வாரம் தாங்குமான்னு தெரியலைங்க.பயமா இருக்கு. உங்களுக்கு இப்போ லீவு கிடைக்காதா?’,

கொஞ்ச நேரம் அமைதி. “போலீசுக்காரன் பொண்டாட்டி. நீ பயப்படலாமா? அக்கம் பக்கம் ஆளுங்க இருக்காங்க. நம்ம கோவிந்தன் கிட்ட சொல்லி வெச்சுஇருக்கேன். ராத்திரி நேரத்துல நம்ம காம்பௌண்ட் பக்கத்துல தான் ஆட்டோ நிறுத்தி படுத்துக்கறான். அவசரம்னா அவன் இருக்கான். எனக்கு டூட்டி மாத்திக் கொடுக்க மாட்டாங்க. ஏற்கனவே நான் நெறைய விஷயத்துல ஒத்து போகலைனு சில பேருக்கு வருத்தம். அதுனால நான் கேக்குற விஷயம் கிடைக்கறது கஷ்டம். நேர்மை நியாயம்னு இருக்கிறோம். நமக்கு நல்லது தான் நடக்கும்”.

“இருங்க சாப்பாடு எடுத்து வெக்குறேன்”, பெருமூச்சு விட்டபடி எழுந்து நகர்ந்தாள். முருகன் ஓடி வந்தான்.

“எத்தனை திருடன பிடிச்ச அப்பா”, ஆர்வமாக கேட்டவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான். போலீஸ் வேலைனா திருடனை புடிக்கறது மட்டும் இல்ல. இன்னும் நெறைய இருக்கு. இப்போ அப்பா போறது மக்களுக்கு பாதுகாப்பு குடுக்க”,

ஆறு வயது முருகன் புருவம் சுருக்கி பார்த்தான், ” பாதுகாப்புனா என்னப்பா?”,

“காப்பாத்தறது”, கேசவன் அவன் தலைமுடியைக் கலைத்து சிரித்தான். “இன்னும் கொஞ்சம் பெரிய புள்ளையா

ஆனா உனக்கே புரியும்”.

பள்ளிகூடக் கதைகள் பேசியபடி இருந்த முருகன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான் கேசவன்.

“ரெண்டு பெரும் வாங்க சாப்புட ” சாந்தி கூப்பிட குரலுக்கு இருவரும் எழுந்து சாப்பிட சென்றார்கள்.

வாய் ஓயாமல் பேசி, சாப்பிட்டு, பின் தன் அருகில் கழுத்தைக் கட்டிக் கொண்டு தூங்கிய மகனை அணைத்து முத்தமிட்டான்.

“ஒழுங்கா படிக்கிறானா ?, இந்த மாசத்துக்கு அப்புறம் எனக்கு செங்கல்பட்டு வேலை இல்லை. இந்த பக்கத்துல போய் வந்தா போதும். இந்த எலெக்ஷனால நாள் கணக்கா அந்த ஊர்ல தங்க வேண்டி வந்துச்சு. ரொம்ப பிரச்சனை இருக்குற இடம். எவன் எவன் வெட்டிக்கிட்டு சாவான்னு தெரியாது. பிரச்சாரத்துக்கு வர தலைவருங்க பாதுகாப்பு, அங்க வர கூட்டத்திற்கு பாதுகாப்பு, என்னத்த சொல்ல, தூங்கி நாள் பத்தாகுது”.

சாந்தி அவனை மெதுவாக அணைத்தாள். “பரவா இல்லீங்க. என்னைப் பத்தி இப்போ கவலை உங்களுக்கு வேண்டாம். வேலை முக்கியம். சமயத்துல போலீஸுனு சொன்ன உடனே, அப்போ கைல நேரிய காசு புழங்கும்னு கேலியா பேசற இந்த காலனி ஆளுங்க சில பேரை உங்க கூட அனுப்பி வைக்கணும்னு தோணும்”,

சிரித்தான் கேசவன். “ஆளுங்க அடையாளம் காட்டு நான் கூட்டிட்டு போறேன்”,

“நீ படு சாந்தி. எனக்கு காலைல ஏழு மணிக்கு கிளம்பணும். துணி மணி பாக் பண்ணிட்டு நானும் படுக்கறேன். எப்புடியம் எலெக்ஷன் முடிஞ்சு தான் வருவேன். எதாவது அவசரம்னா போன் பண்ணு. கண்டிப்பா கிளம்பி வந்துருவேன்”.

அரை மணி நேரத்தில் தனக்கு வேண்டியது எடுத்து வைத்தவன், படுத்த ஐந்தாவது நிமிடத்தில் உறங்கிப் போனான்.

போன் சிணுங்கியது. கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்த கேசவன் மணியைப் பார்த்தான். மணி மூன்று.

“ஹலோ”

“கேசவன், நான் மணி பேசறேன். நேத்து நைட் கூட்டம் முடிஞ்சு போகைல பருந்துக் கட்சி ஆள எவனோ போட்டுத் தள்ளிட்டான் . இங்க ஒரே கலவரமா ஆகிப்போச்சு. இப்போ இங்க 144 போட்டு இருக்காங்க. காலைல பிரச்சனை வரும்னு எதிர்பாக்குறோம். வீட்டுக்கு போன எல்லாருக்கும் ஆர்டர் , உடனே டூட்டிக்கு வரக் சொல்லி. நீ கிளம்பி வா. பி 5 ஸ்டக்ஷன்ல இன்னும் அரை மணி நேரத்துல ரிப்போர்ட் பண்ணிடு. ஜீப் அங்கிருந்து கிளம்புது”.

கேசவன் அவசரமாக எழுந்தான். சாந்தி அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.

மனசு கனத்தது. மெதுவாக அவளை எழுப்பினான். “விடிஞ்சுருச்சா ? குழப்பமாய் கேட்டாள் “.

“இல்ல சாந்தி. அவசரமா போன். நான் உடனே கிளம்பனும். கோவிந்தனை ஸ்டேஷன்ல என்ன விட்டுற சொல்றேன். கதவை பூட்டிக்கோ “.

கண் கலங்கியது அவளுக்கு. “காலைல எழுந்த உடனே அப்பா எங்கன்னு தான் கேப்பான். அவன் கிட்ட சொல்லாம கிளம்புறீங்க”..

“அவனை எழுப்பாத இப்போ. தூக்கத்துல எழுந்து அழுதா எனக்கு தாங்காது. நீ தான் சமாதானப்படுத்த கஷ்டப்படணும். காலைல எதாவது சொல்லி சமாளி. இன்னும் ஒரு வாரம். பொறுத்துக்கோ”, சொல்லியபடி கிளம்பினான்.

***

“நான் பெரியவனா ஆன பிறகு போலீஸ் வேலைக்கு போவேன்”, சாந்தி தலையை ஆட்டியபடி மகன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

காலையில் தகப்பனைக் காணாமல் அவன் அரை மணி நேரம் அழுதது மனது வலித்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு அவன் அம்மாவைக் கட்டிக்கொண்டு ” அப்பா எல்லாரையும் காப்பாத்த போயிருக்காரா?’

சின்ன விசும்பலோடு வந்தது அவன் குரல். அதன் அர்த்தம் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அப்பா ஏதோ முக்கியமான ஒன்றிற்காக போக வேண்டி வந்தது என்பது மட்டும் புரிந்தது.

“இல்லீனா என் கிட்ட சொல்லாம போகவே மாட்டாரு .” மகனை அணைத்தாள்.

“நீ ஸ்கூலுக்கு கிளம்பு. இந்த வாரம் சனிக்கிழமை அப்பா வந்துருவாரு

காலையில் இருந்து டிவி நியூஸ் ஓடிக் கொண்டு இருந்தது. செங்கல்பட்டுத் தாண்டி இருந்த ஒரு சின்ன ஊரில் தொடங்கிய கலவரம் மெதுவாகப் பரவுவதை காண பயமாக இருந்தது. கையில் லத்தியோடு காணப்பட்ட போலீஸ் கூட்டத்தில் கணவன் முகம் தெரிகிறதா என்று தேடிக்கொண்டே பொழுது கழிந்தது. சமைக்க மனமில்லை. மகனுக்கு பக்கத்துக்கு ஓட்டலில் இருந்து தோசை வாங்கி கொடுத்தாள். காலனி குழந்தைகளோடு அவன் பள்ளியில் இருந்து வந்த பிறகு விளையாடிக் கொண்டு இருந்தான்.

“இந்த பொண்ணு. இந்த கஞ்சியாவது குடி. புள்ள வயித்துக்குள்ள பசியோடு கெடக்கும். அந்த டிவி பொட்டிய கொஞ்ச நேரம் நிறுத்தி வை”. அன்னம்மா கட்டாயப்படுத்தி அவளை கஞ்சிக் குடிக்க வைத்தாள்.

எல்லா செய்தி சானெல்களும் கலவர பகுதியில் போலீசார் மக்களை விரட்ட லத்தி எடுத்து அடிப்பதைக் காட்டிக்கொண்டே இருந்தார்கள். ஒரே காட்சி திரும்ப திரும்ப ஓடிக்கொண்டு இருந்தது.

நாள் முழுக்க எதோ அடிதடி நடப்பது போல ஒரு உணர்வு.

“சாந்தி, உன் புருஷன் போன் பண்ணுறான்”, அன்னம்மா கையில் கைபேசி.

“என்ன சாந்தி. போன் சார்ஜ் பண்ணலியா? எத்தனை தடவ போன் பண்றது? நல்லா இருக்கியா? முருகன் எங்க?’, வரிசையாகக் கேள்வி.

பேச்சு வரவில்லை சாந்திக்கு, “என்னங்க. டிவில என்னன்னவோ ஓடுது. பயம்மா இருக்குங்க. நீங்க எப்படி இருக்கேங்க?’

“அதேல்லாம் பயம் ஒண்ணும் இல்ல, நீ கண்டதையும் பாக்காத. பாதி நேரம் அவங்க பழைய நியூஸ் எடுத்து போடுவாங்க. நான் நல்லா தான் இருக்கேன். எலெக்ஷன் அன்னிக்கி எனக்கு லீவ் கொடுத்துட்டாங்க. இன்னும் ரெண்டு நாள். வீட்டுக்கு வந்துருவேன். அது சொல்லத் தான் போன் பண்ணினேன்”.

சாந்திக்கு நிம்மதியாக இருந்தது.

இன்னிக்கி பூரா டிவி பாக்க கூடாது. ஒரு முடிவுடன் வேலையை தொடங்கினாள் சாந்தி. மகனுக்குப் பிடித்த பூரி கிழங்கு செய்து விட்டு வீடு பெருக்கி துடைத்து, குளித்து மகனை பள்ளிக்குச் செல்ல ஆட்டோவில் ஏற்றி அனுப்பிய பிறகு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போனாள். அரை மணி நேரம் கண் மூடி இருந்தவள், வீட்டிற்கு வந்து பூரி சாப்பிட்டு கட்டிலில் படுத்தாள். ரெண்டு நாளாக தூங்காத அசதி அடித்துப் போட கண் தானாக மூடியது.

கேசவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு இருந்தான். “நமக்கு பொம்பள புள்ள பொறந்து இருக்கு”, சிரித்தபடி கூறியவன் கையில் ரோஜாபோன்ற சின்ன மலர். சிணுங்கி சிரித்தது. தட தடா வென சத்தம். கேசவன் எழுந்து போக முயற்சிக்கையில் அவன் கையில் இருந்த குழந்தை தவறி கீழ விழ, திடுக்கிட்டு எழுந்தாள் சாந்தி.

கனவு.

அனால் சத்தம் நிஜம். கதவை யாரோ தட்டிக் கொண்டு இருந்தார்கள். நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள் . மணி மூன்று.

எழுந்து நிற்க முயற்சிக்கையில் கால் தடுக்கியது. சுதாரித்து நின்றாள். ஒரு அடி எடுத்து வைக்கையில் சுரீரென வலி.. கதவு தட்டும் ஓசை நிற்கவில்லை. பல்கலைக் கடித்துக் கொண்டு மெதுவாக நகர்ந்து கதவைத் திறந்தாள். அன்னம்மா>

“என்ன பொண்ணுமா நீ. எவ்ளோ நேரமா தட்டுறேன். பயந்து போய்ட்டேன் நான்”.

“தூங்கி போய்ட்டேன் பாட்டி” அடுத்த வலி. வயிற்றைப் பிடித்து கொண்டு சரிந்தாள். உள்ளாடையில் ஈரம்.

பனிக்குடம் உடைந்து தரையில் ஈரம்.

அன்னம்மா அவசரமாக அவளைப் பிடித்து அமரத்தினாள்.

வாசலுக்கு ஓடி கோவிந்தனை வரச் சொன்னாள்.

முருகன் வீட்டிற்கு வரும் பொழுது வீடு பூட்டி இருந்தது. குழப்பமாக பார்த்தான். அன்னம்மாவின் மகள் அவனை கூப்பிட்டாள். “முருகா அம்மா ஆஸ்பத்திரி போயிருக்காங்க. இங்க வா. என் கூட இன்னிக்கி ஒரு நாள் இரு, உனக்கு தங்கச்சி பாப்பா வர போகுது”, முருகனுக்கு அழுகை வந்தது. நேத்திக்கி முழிக்கும் போது அப்பா இல்லை. இன்னிக்கி வீட்டுல அம்மாவும் இல்லை. துக்கம் அடைத்தது.

வாசலில் கோவிந்தன் வந்து நின்றான். “முருகா வா. அம்மா உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க” அன்னம்மாவின் மகள் அவனுக்கு சாப்பிட பரோட்டா கொண்டு வந்தாள். “இரு கோவிந்தா புள்ள ஒரு வாய் சாப்பிடட்டும். அப்புறம் கூட்டிட்டு போ”. முருகனுக்கு பசித்தது. ஆனாலும் அம்மா இல்லாமல் சாப்பிட பிடிக்கவில்லை.

“எனக்கு வேணாம் அக்கா. எனக்கு அம்மா வேணும்”, கண்ணீர் துளிர்த்தது.

“டேய். உங்க அப்பா என்ன சொல்லிட்டு போனாரு. நீ தான் அம்மாவையும் பாப்பாவையும் நான் வர வரைக்கும் பாத்துக்கணும்னு சொன்னாரா இல்லையா? சாப்புடாம போனா நீ டையர்டு ஆய்டுவ அப்புறம் உங்கம்மாவை பாத்துக்க முடியாது”, மிரட்டினாள் .

முருகன் கண்ணீரை முழுங்கி கொண்டு அவள் கையில் இருந்த தட்டை வாங்கி சாப்பிட தொடங்கினான்.

ஆஸ்பத்திரியில் அன்னம்மாவைப் பார்த்து ஓடினான். “அம்மா எங்க பாட்டி?’

“அம்மா உள்ளாரா இருக்காங்க பாப்பா பொறக்க போகுது. இங்க உக்காரு”

கேசவனுக்கு மறுபடியும் போன் செய்தாள். அணைக்கப்பட்டு இருந்தது. அவளுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. அவர்கள் சொந்தக்காரர்கள் வேறு யாரும் இங்கு இருப்பதாக தெரியவில்லை.

முருகன் தூங்கி விழ ஆரம்பித்தான். பாவம் புள்ள. வேகமாக வந்த நர்ஸ் அன்னம்மா அருகில் வந்து நின்றாள்.

“சாந்தி பேஷண்ட் கூட வந்தது நீங்க தான?”

‘அமாம் மா. புள்ள பொறந்துச்சா?”, அன்னம்மா கவலையுடன் கேட்டாள் . இல்லமா வலி இருக்கு. தல வராம கால் வெளிய வந்துருச்சு. எவ்ளோ நேரம் போராடியும் அது நேர் செய்ய முடியல. ஆபரேஷன் செய்யணும் கையெழுத்து போடணும் அதுக்குத் தான் கேக்குறோம்”

என்ன செய்ய தெரியவில்லை அன்னமாவிற்கு. “அம்மா அவங்க புருஷன் இல்ல. அவரு வர ரெண்டு நாள் ஆகும்”, இழுத்துப் பேசினாள்.

“கையெழுத்து இல்லாம ஆப்ரேஷன் செய்ய மாட்டாங்க. ரெண்டு உயிருக்கும் ஆபத்தா போகும். நீங்க கொஞ்சம் போட்டு கொடுங்க. இது சும்மா பார்மாலிட்டி தான். எங்க டாக்டர் இது மாதிரி நெறைய கேஸ் பாத்து இருக்காங்க. கவலை படாதீங்க”, மெதுவாக பேசி கையெழுத்து வாங்கிக் கொண்டு நகர்ந்தாள் நர்ஸ்.

குல தெய்வத்திற்கும் இஷ்ட தெய்வத்திற்கும் பிரார்த்தனை செய்தபடி காத்திருந்தாள் அன்னம்மா.

மூன்று மணி நேர காத்திருப்பு. கேசவனின் நண்பர் ராமனை கோவிந்தன் அழைத்து வந்தான். போலீஸ் ஐடி காண்பித்து சாந்திக்கு ஒரு தனியறை ஏற்பாடு செய்து கொடுத்தார். பெண் குழந்தை. கேசவனைப் போலவே.

அன்னம்மா அவரிடம்,”கேசவனுக்கு தகவல் சொல்ல முடியல போன் அணைச்சே வெச்சுருக்கு. என்ன செய்ய?”.

“நீங்க கவலைப்படாதீங்க. நாங்க தகவல் அனுப்பி சொல்லுவோம். நாளைக்கு எப்படியும் அவன் வந்துருவான்

எதாவது உதவி வேணும்னா கோவிந்தன் கிட்ட சொல்லி அனுப்புங்க” சொல்லிவிட்டு சென்றார் ராமன்.

அடுத்த நாள் காலை வரை கேசவனிடம் இருந்து தகவல் இல்லை.

அன்னம்மாவின் மகளும் அன்னம்மாவும் மாற்றி மாற்றி ஆஸ்பத்திரியில் இருந்து சாந்தியைப் பார்த்துக் கொண்டனர். முருகனை பள்ளிக்கு அனுப்பவில்லை.

ஆஸ்பத்திரி டிவியில் செங்கல்பட்டு வன்முறை பற்றி செய்திகள் ஓடிக் கொண்டே இருந்தது. சாந்தி மெளனமாக காத்திருந்தாள். பலரும் போலீஸ் பொது மக்கள் மேல் வன்முறை ஏவி விட்டு செய்யும் அராஜகம் பற்றி பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தனர். சாந்திக்கு தலை வலித்தது.

கேசவன் இருக்கும் இடம் அன்று இரவு வரைத் தெரியவில்லை. ராமனும் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. மாலையில் வந்த கோவிந்தன் அன்னமாவிடம் கிசு கிசுவென்று எதோ பேசிக்கொண்டு இருந்தான். அன்னம்மா கண்ணைக் கசக்கிக் கொண்டே சாந்தியை திரும்பிப் பார்த்தாள் . சாந்தி அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“என்ன பாட்டி அவரு கிட்டேர்ந்து ஏதாச்சும் தகவல் வந்துச்சா?’

அன்னம்மா தலையை ஆட்டினாள். வார்த்தை வரவில்லை.

அறையின் வெளியே சென்று கோவிந்தனிடம் ,” என்னடா சொல்லுற? கேசவன் எங்க?’

“பாட்டி அந்த ஊர்ல பெரிய தகராறு. நாலஞ்சு பேர போலீஸ் சுட்டு கொன்னுடதா நியூஸ்ல போடுறாங்க. நான் ஸ்டேஷன்ல போயி விசாரிச்சேன். அந்த நியூஸ் உண்மை தான். ஆனா போலீஸ் பக்கம் ஏதோ சேதம் இருக்கு அது பத்தி நியூஸ்ல வரல. கொஞ்சம் போலீஸ் ஆளுங்கள காணும்னு சொல்றாங்க. நம்ம கேசவனை சேர்த்து அஞ்சு பேரு காணும். அந்த ராமன் ஐயா அங்க போயி இருக்காரு,. ஒண்ணும் தெரியல”.

அன்னம்மா குலை நடுங்கிக் கிடந்தாள். இந்த பெண்ணிடம் எப்படி சொல்லுவது?

“கோவிந்தா, இப்போ ஒண்ணும் பேச வேண்டாம். நீ கொஞ்சம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணு டாக்டர் நாளைக்கு வீட்டுக்கு கூட்டிகிட்டு போலாம்னு சொல்லி இருக்காரு. சாயங்காலம் வண்டி எடுத்துக்கிட்டு வா. இப்போ முருகனை என் பொண்ணு கிட்ட விட்டுட்டு அவளை பாத்துக்க சொல்லு.அப்புறம் பேசிக்கலாம். அதுக்குள்ள அந்த ராமன் ஐயா கிட்ட பேசி பாரு”.

முருகனை அவனோடு அனுப்பி விட்டு அந்த அறையில் பேசாமல் இருந்தாள்.

சாந்திக்கு மனதிற்குள் ஒரு திகில் தொற்றிக் கொண்டது. என்னவோ நடந்து இருக்கு. இந்த பாட்டி கேக்குற கேள்விக்கு கண்ணு பாத்து பதில் சொல்லமாட்டேங்குது. அருகில் கிடந்த மகளை பார்த்துக் கண்ணீர் பொங்கியது.

***

வீட்டு வாசலில் கோலம் இட்டு இருந்தாள் அன்னம்மாவின் மகள். ஆட்டோவில் இருந்து இறங்கிய சாந்தியும் குழந்தையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தாள். வீட்டின் உள் சென்றவள் தனது செல்போனைத் தேடினாள்.

சார்ஜ் இல்லை. அதை சார்ஜில் போட்டு விட்டு டீவியை ஆன் செய்தாள். கலவர பூமியில் இருந்து கார்த்திகேயன் என்று யாரோ ஒருவன் பேசிக் கொண்டு இருந்தான். அவன் பின்னால் காயங்களுடன் பலர் ஓடிக் கொண்டு இருந்தனர். சில வாகனங்கள் எரிந்து கொண்டு இருந்தனர். சில போலீஸ்காரர்கள் அங்கு இருந்தவர்களைத் துரத்திக் கொண்டு இருந்தனர்.

டீவியை அணைத்தாள். குழந்தை அழுதது. முருகன் அருகில் வந்து நின்றான்.

“அம்மா பாப்பா அழுது. அப்பா வேணுமாம். எனக்கும் தான். எப்போமா வருவாரு?’

மூன்று நாட்களுக்கு எந்த தகவலும் இல்லை.நான்காம் நாள் காலை. வாயிலில் ஆட்டோ சத்தம். கதவு தட்டும் ஓசைக் கேட்டு முருகன் ஓடினான். கையிலும் தலையிலும் கட்டுடன் கேசவன்.

சாந்தி கண்ணில் கரகரவென்று நீர்.

உள்ளே வந்தவன், கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த மகளைப் பார்த்தான். ஒரு கையால் அவள் கன்னத்தைத் தடவி முத்தம் இட்டான். சாந்தி அவன் அருகில் வந்தாள்.

அவள் கண்ணீரைத் துடைத்தான். “அதான் வந்துட்டேன்ல. அழாத. போன் தொலைஞ்சு போச்சு. ஒரு இடத்துல தனியா மாட்டிகிட்டேன். நாலு பேரா சேர்ந்து அடிச்சு, ஒரு புதர்ல தூக்கி போட்டுட்டு போய்ட்டானுங்க. மண்டைல ஆடி பட்டதுல நினைவு தப்பி ரெண்டு நாளு ஆஸ்பத்திரில கெடந்து இருக்கேன். இங்க ராமனுக்கு சொல்லி அனுப்பிச்சாங்க. உன் நிலைமை பார்த்து அவன் உங்க யார் கிட்டேயும் எதுவும் சொல்லல. எனக்கு உயிருக்கு ஆபத்து இல்லனு கொஞ்சம் வெயிட் பண்ணி கூட்டிட்டு வந்தான். இனிமே ஒரு மாசம் ரெஸ்ட். உன் கூடவே யிருப்பேன்.

முருகன் டீவியை ஆன் செய்தான்.அதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற ஒருவன் ஆத்திரத்துடன் பேசிக் கொண்டு இருந்தான். “காசுக்கு மாறடிக்கற கூட்டம் இவங்க. காசு வாங்கிட்டு என்ன வேணா செய்வாங்க. குடும்பம் குட்டின்னு இருக்கற எங்க கஷ்டம் இவனுங்களுக்கு தெரியாது”.

“நான் பெரியவனா ஆன பிறகு போலீஸ் வேலைக்கு போவேன்”,

முருகன் தன் தங்கையுடன் பேசிக் கொண்டு இருந்தான்.

சாந்தி கேசவனைப் பார்த்தாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “144

  1. உயிரோட்டமும் உணர்வுகளும் பிணைந்த அருமையுடன்
    எழுதப் பட்ட கதை.வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *